Advertisement

அத்தியாயம் – 19
மறு நாள் காலையில் மழை அடித்துப் பெய்யவும், அதையே சாக்காக சொல்லி, காலையில்  அவனோடு செல்லாமல் தவிர்த்துவிட்டாள். ஆனால், மனம் என்னவோ சுணங்கியது.
கீழே வா, பேசலாம் என்று ஆதி அழைத்தும், தூக்கம் , டையர்ட் என்று காரணம் அடுக்கிவிட்டு படுக்கையில் சோக கீதம் வாசித்துக்கொண்டிருந்தாள்.
“போதுமா? இப்ப திருப்தியா?”, என்று மனசாட்சியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் திட்டிக்கொண்டிருந்தாள்.
எட்டரை மணி போல் கீழே காலை உணவுக்கு செல்ல, நவனீதன், சங்கரியும் இருக்க, பொதுவாய் சென்றது பேச்சு. ஆதியின் பார்வை அவளை அடிக்கடி தொட்டுச் சென்றதை உணர்ந்தவள் நெஞ்சம் குறுகுறுத்தது.
எப்படியும் ஒன்பது மணிக்கெல்லாம் வேலையில் மூழ்கிவிடுவான் என்று புரிந்தவள், பொதுவாக,
“மழை விட்டுடிச்சு ஆன்ட்டி, நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்.”, என்றாள்.
“மதியம் போலாம் மது. நானும் வரேன்.”, என்ற ஆதியை
“இல்ல ஆதி, இப்ப போனாதான் மழையில நினைஞ்சி ஃப்ரெஷா இருக்கும் பார்க்க. நாம நாளைக்கு போலாம்.”, என்று அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் கிளம்பிவிட்டாள்.
ஆதிக்கு குழப்பம்தான் மிஞ்சியது. ‘நேத்து நடந்தது கனவா? எதுக்கு இப்படி யாரோ மாதிரி நடந்துக்கறா? இல்ல நம்மதான் ஓவரா கற்பனை செய்யறோமா?’, என்று யோசித்தபடியே நின்றிருந்தான்.
சங்கரி, “ஆதி, நேத்து ஸ்டூடியோ போனீங்களே? என்ன போட்டோபா எடுத்தீங்க?”, என்று ஆர்வமாய் கேட்டார். அதிலிருந்து எதாவது தெரிந்து கொள்ளலாமே என்று.
கம்ப்யூட்டர் திரையிலிருந்த எடுத்த முதல் புகைப்படத்தைக் காண்பிக்க, சப்பிட்டுப்போனது சங்கரிக்கு.
ஆதி போனதும் மேசையிலிருந்தவற்றை அப்புறப் படுத்த வந்த சுப்புவிடம், “ம்க்கும்.. இது ஒண்ணும் தேறாது போலிருக்கே சுப்பு. அந்த போட்டோலயும் ஆளுக்கு ஒரு பக்கம் வாளை வெச்சிகிட்டு முறைச்சிகிட்டு நிக்குதுங்க ரெண்டும். நாமதான் அவங்க வெளிய சாப்பிடறாங்க, வர லேட்டாகுதுன்னு நினைச்சி ரொம்ப கற்பனை செய்துட்டோம்.”, என்று அங்கலாய்த்தார்.
“இப்ப என்னவோ ஆதி தம்பி மதுமாகூட போகணும்னு பிரியப்பட்ட மாதிரிதான் மா தெரிஞ்சுது. என்னவோ,  தம்பி கூட போகாம, இப்பவே போகணும்னு மதுமாதான் கிளம்பிடுச்சி. திரும்ப எதுவும் சண்டையா தெரியலை.”, சுப்புவும் வருத்தப்பட்டார்.
“என்ன பிள்ளைங்களோ போ. ரெண்டுத்துக்கும் நல்ல பொருத்தம், ஆனா அவங்க கண்ணுக்கு மட்டும் ஏனோ தெரிய மாட்டீங்குது.”,  சலித்தவாறே  எழுந்து சென்றார்.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் இப்படியே சாக்கு போக்கு சொல்லித் தட்டிக் கழிக்க, ஆதிக்கு அவள் தன்னை விலக்குகிறாள் என்று புரிந்தது. அவளை முத்தமிடுவது போலே இரு முறை நெருங்கியதால் விலகுகிறாளோ என்று நினைத்தவன், அதை நேரே கேட்டால் என்ன? ஒன்றும் சொல்லாமல் இப்படி விலகுவது என்றால், என் மேல் நம்பிக்கையில்லாமலா? என்று அவனே விதவிதமாக யோசித்து, அவளை அணுகுவதையே நிறுத்திவிட்டான்.
அன்று காலையில் கிளம்பி வந்த மது ஆதிக்காக சிறிது நேரம் காத்திருந்து பார்த்தாள். இரு நாட்களாய் காலையில் அழைத்தவன், இன்று அழைக்கவும் இல்லை, அவர்கள் வழக்கமான நேரம் தாண்டி பத்து நிமிடம் சென்றும் வரவில்லை.
மதுவிற்கு அவனை கைபேசியில் அழைக்கும் தைரியம் வரவில்லை. இன்று அவன் வரமுடியாது என்று சொன்னால் அழுதுவிடுவாள் போலிருந்தது.  மேலே மாடியையே பார்த்தவள், ‘ வேண்டாம் மது, எல்லாம் அவன் நல்லதுக்குத்தானே. கிளம்பு.’, என்று தேற்றியவாறே வாடிய முகத்துடன் கதவை திறக்க, அங்கே ஆதி நின்றிருந்தான்.
“பத்து நிமிஷமா மாடிய மாடிய பார்த்துகிட்டு இருந்ததுக்கு, எனக்கு போன் செய்யறதுக்கு என்ன?”, ஆதி கேட்கவும்,
“நான் ஒண்ணும் மாடிய மாடிய பார்க்கலை.”, வீம்பாக பதில் சொன்னாள் மது.
“காலையில இவ்ளோ பொய்! நான்தான் ஜன்னல் வழியா பார்த்துகிட்டு இருந்தேனே? போனையும் மாடியையும் மாறி மாறி பார்த்துகிட்டு, அப்பறம் வாடிப்போன முகத்தோட நீ எழுந்து வந்ததை?”
கையும் களவுமாய் பிடிபட்டதில் மௌனமாய் கண்கள் தரையை நோக்க,
“என்ன மது, நானும் பார்த்துகிட்டு இருக்கேன். நீ ரெண்டு நாளாய் என்னை அவாய்ட் பண்ற. நான் எல்லை மீறி நடந்துகிட்டதா நினைக்கிறியா? அப்படின்னா, சாரி. இனி அந்த மாதிரி..”
“சே ..சே… ஆதி, அப்படியெல்லாம் இல்லை. “, அவன் வருந்திப் பேசுவது பிடிக்காமல் இடைமறித்தாள்.
“அப்பறம் என்ன?”
“அது.. அது… “, என்ன சொல்வது என்று தெரியாமல் மது திணற,
“சரி விடு.  நீ தப்பா எதுவும் நினைக்கலைன்னா, எப்பவும் போல பேசு.”, ஆதியே விட்டுக்கொடுத்தான்.
ஒப்புக்கொண்டவள் சந்தோஷமாக பேசியபடியே அவனுடன் நடந்தாள். இரண்டு நாட்களாய் வாடியிருந்த அவள் மனம் மீண்டும் மலர்ந்தது. அகத்தின் மலர்ச்சி முகத்திலும் தெரிய, அவளின் அந்த வித்தியாசத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆதி, ‘அவளுக்கும் பிடிக்குது, ஆனா என்னை மாதிரியே குழப்பிக்கறா போல.  இது போகிறபடி போகட்டும்டா ஆதி. விட்டுப் பிடிப்போம்,’, என்று முடிவு செய்தவனாக, வழக்கமாக வம்பு வளர்ப்பதைத் தொடர்ந்தான்.
அன்றைய பொழுது முழுதுமே மது மகிழ்ச்சியாக இருந்தாள்.போய் மூலையில உக்காரு கொஞ்ச நேரம் என்று மனசாட்சியை தட்டி வைத்திருந்தாள். அவனோட பேசறதாலேயே ஆதிக்கு என் மேல லவ் வந்துடாது.  ஜாக்கிரதையா இருந்துக்கறேன், என்று உடன்படிக்கைப் போட்டிருந்தாள்.
அன்று இரவு டின்னர் முடித்து அனைவரும் படுக்கச் செல்ல, பத்து நிமிடத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு, திறந்தாள் மது.  ஆதி நின்றிருந்தான் ஜீன்ஸ், ஸ்வெட்டர் சகிதம்.
“இப்ப எங்க வெளியே கிளம்புற? “, என்று  ஆச்சரியமாய்க் கேட்டாள் மது.
“நான் மட்டும் இல்லை. நீயும்தான். சீக்கிரம் கிளம்பி வா. ரெண்டு மணி நேரமாவது வெளிய இருக்கணும், குளிருக்கு ஏத்த மாதிரி போட்டுட்டு வா.”
“நானுமா? எங்க போறோம்?”
“ம்ச்… என் கூட வா. ஒரு ஸர்ப்ரைஸ்.”, கண் சிமிட்டி ஆதி புன்னகைக்க, அவனைப் பார்த்து முழித்தவள், “ அஞ்சு நிமிஷம். கீழ வரேன்.”, என்று கதவை சாற்றினாள். உள்ளுக்குள் ஒரு சந்தோஷ ஊற்று.  ஆதி தனக்காக சர்ப்ரைஸ் என்று மெனக்கெடுவது மனதுக்கு மிகவும் பிடித்தது. அதுவே அவளது முகத்திற்கு ஒரு அழகைக் கொடுத்தது.
உற்சாகத்தோடு, அவனைப் போன்றே ஜீன்ஸ் அணிந்து, குளிருக்கு இதமாக டீ-ஷர்ட் அணிந்து, மேலே ஹூடி வைத்த புல் ஓவர் அணிந்து கிளம்பினாள்.  கண்ணாடியைப் பார்க்க, எதுவோ குறையாக இருந்தது. சற்று யோசித்து, தலை முடியை கட்டாமல் அவிழ்த்துவிட்டு தோளின் இரு புறமும் சரிய விட்டு, முன்னால் விழுந்த கேசத்தை காதுபுறம் ஒதுக்கியவள், கண்ணுக்குத் தெரியாத அந்த சிறிய கம்மலைப் பார்த்து புருவம் சுருக்கி, அவற்றை கழட்டினாள். டிராயரில் இருந்த வைட் மெட்டல் வளையங்களை அணிந்து கொண்டாள்.
ஐந்து நிமிட அவகாசம் முடியவிருப்பதை உணர்ந்தவள், ‘என்ன மது இப்படியாகிட்ட? அவன் சும்மா கூப்பிட்டதுக்கே இவ்ளோ ரியாக்ஷனா?’, என்று கேட்ட மனதை அடக்கி, அவசரமாய் ஷூ அணிந்து, மேசையிலிருந்த இருந்த போன், பர்ஸ், நாற்காலியில் மாட்டியிருந்த ஸ்கார்ஃபையும் எடுத்துக் கொண்டு சென்றாள்.
அவள் கையில் இருந்தவற்றைப் பார்த்தவன், “எங்கூட தான வர? எதுக்கு பர்ஸ்?”, என்றான்.
“அது பழக்க தோஷம். பரவாயில்லை கார்ல வெச்சிக்கலாம்.”, என்று  கதவருகே சென்றவள், தயங்கி நின்றாள்.
“ம்ம்..ஆதி, அங்கிளுக்கு ஒரு மெசேஜ் போட்டுடலாமா? சொல்லாம போனா மரியாதையில்லை. நமக்காகத்தானே அவங்க இங்க இருக்காங்க?”, என்று அவன் முகம் பார்த்தாள்.
அவள் பொறுப்பைக்கண்டு உள்ளுக்குள் மெச்சியவன், “நான் முன்னாடியே அங்கிள் கிட்ட சொல்லிட்டேன். போயிட்டு வந்துட்டு, வந்தாச்சுன்னு மெசேஜ் போட்டா போறும்.
“ஓ… நீதான் முன்னேற்பாடு முத்தையாவாச்சே. சூரியனுக்கு டார்ச் அடிக்கறேன் பாரு.”, என்று தலையில் தட்டிக்கொண்டு கதவைத் திறந்தாள்.
பின்னாடி வந்தவன், அவள் தலையில் குட்டி, “வெக்கற பேர கொஞ்சம் நல்லாத்தான் வெய்யேன். “, என்றவாறே காரிடம் சென்றவளைத் தடுத்து மறு புறம் அழைத்துச் சென்றான்.
அங்கே பைக் ஒன்று இருந்தது. இரண்டு ஹெல்மெட்டுகளுடன்.
“ஹே.. யாரோடது இது? நைட் பைக் ரைட் போறோமா?”, மதுவிற்கு குஷியாகியது.
அவள் மகிழ்ச்சியைப் பார்த்து சிரித்தவன், “ம்ம்… உனக்கு பிடிக்கும்னு கெஸ் பண்ணித்தான், ஃப்ரெண்டுகிட்ட பைக் ஏற்பாடு செஞ்சேன். வா போகலாம்.”
போன் பர்ஸ் எல்லாவற்றையும் உள்ளே வைக்க, ஆதி கையில் திணித்தவள், ஸ்கார்பை கழுத்தைச் சுற்றி கட்டி, ஹெல்மெட்டை மாட்டினாள்.
‘ஹ.. தலை முடியவா ஸ்டைல் பண்ண? இப்ப ஹெல்மெட் மாட்டி எடுத்தா எப்படி இருப்படி செல்லம்?’, கிண்டலடித்த மனதை மீண்டும் தலையில் தட்டி  அடக்கியவள், ஆதியின் புறம் திரும்ப, அவனும் ஹெல்மெட் அணிந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய, மது அவன் பின் ஏறி அமர்ந்தாள்.
“ஜாக்கட் அடியில விட்டு என் இடுப்பை பிடி மது. தோளைப் பிடிச்சா கிரிப் இருக்காது. ஊட்டி போகணும், கொஞ்சம் ஸ்பீடா போகலாம்.”, ஆதி சொல்லவும், மறுபடி குத்தாட்டம் போட்டாள் உள்ளுக்குள்.
அவன் சொன்னபடி இருபுறமும் அவன் இடுப்பை பிடித்துக்கொள்ள, சூடாக , அழுத்தமாக இருந்தது. கண்ணாடி வழியாக தன்னைப் பார்க்கிறான் என்ற உணர்வு ஒன்றே அவளின் கண்களை மூடிக்கொள்ளாமல் இருக்கச் செய்தது, கன்னச் சிவப்பை ஹெல்மெட்டும், இருட்டும் மறைத்துக்கொண்டது.
“போலாமா?” என்று ஆதி கேட்கவும், “யா, ரெடி.”, என்றாள். மெதுவாகவே வெளியே வந்து அவர்கள் தெருவைக் கடந்தான்.
இடுப்பின் இரு புறமும் அழுத்தியிருந்த அவள் கைகள், பட்டும் படாமல் அவன் பின் அவள் அம்ர்ந்திருந்தது எல்லாமே ஒரு புது அனுபவமாக இருந்தது ஆதிக்கு. இதற்கு முன்னும் பெண்களை அவனுடன் அழைத்துச் சென்றிருக்கிறான். அவர்கள் இடுப்பைப் பிடித்தாலும், தடுத்து தோளைப் பிடிக்கச் சொல்லுவான்.
அப்படியொன்றும் வழுக்காது டெனிம் ஜாக்கட். ஆனாலும்  வழுக்கும் என்று இவனும் சொல்ல, அவளும் மறுப்பேதும் சொல்லாது இடுப்பை பிடிக்க, ஆதிக்கு ஸ்டெடி ஆக சில நிமிடமாகியது.
வண்டி மலைப் பாதையை அடையவும், வேகம் கூட்டினான். மதுவின் கைகள் இடுப்பை இன்னும் சற்று அழுத்த, “ஓகேதான? ஸ்லோ பண்ணனும்னா சொல்லு.”, என்றான்.
“அவன் பேசுவதைக்கேட்க, இன்னும் நெருங்கி முதுகின் புறம் மது வர, ஹெல்மெட்டிற்குள் ஒரு புன்னகை அரும்பியது ஆதிக்கு. இன்னும் ப்ரேக் அடிக்கறது மட்டும்தான் பாக்கி. அதையிம் செய்டா நல்லவனே என்று நினைத்துக்கொண்டான்.
மது, ஓகே என்று தலையாட்டுவது புரிந்து, பாதையில் கவனம் வைத்தான்.  அடுத்த அரை மணி நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மது காற்றில் மிதந்துகொண்டிருந்தாள்.
இரவில் இப்படி ஒரு பைக் பயணம் ஆதியுடன். நிமிடங்களை அனுபவித்து பொக்கிஷமாக சேர்த்துக்கொண்டிருந்தாள்.  எதிரே எப்போதேனும் வரும் வாகனங்களைத் தவிர அவர்கள் இருவரும் மட்டுமே. வளைந்து  செல்லும் ஊசி முனை வாளைவுகள் கொண்ட பாதைக்கேற்ப வண்டியுடன் அவர்களும் வளைந்து செல்லவதை மௌனமாக அனுபவித்துக்கொண்டிருந்தார்கள் இருவருமே.
அரை மணியில் ஊட்டி ஏரியின் ஒரு புறம் வந்து நின்றிருந்தான். அந்த இருட்டில் வந்து இறங்கியவன், கை பேசியில் யாருக்கோ அழைத்து, “ண்ணா, வந்துட்டோம். வாசல்ல இருக்கோம்.”, என்று வைத்தான்.
“இங்க எதுக்கு வந்திருக்கோம் ஆதி?”, என்று கேட்டாலும் அவளுக்கு ஒரு அனுமானம் வந்திருந்தது. கழட்டிய ஹெல்மெட்டை ஆதியிடம் கொடுத்தவள், வானத்தைப் பார்க்க முழு நிலவு ஓளிர்ந்தது.
“ம்ம்..கண்டு பிடிச்சிட்ட போல?” அவன் புன்னகைக்கு பதில் புன்னகை அளித்தவள், “ம்ம்… பாட்டி நிறைய தரம் சொல்லிருக்காங்க.”, இருட்டின் நிசப்தத்தில மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தவர்களை நோக்கி டார்ச்சுடன் ஒரு மத்திய வயதுடையவர் வந்தார்.
“தம்பி,  கூட வாங்க. எல்லாம் ரெடி.”, என்று அழைத்துச் செல்ல, அவர்களைத் தொடர்ந்து சென்றனர்.
ஏரியின் அருகே செல்ல, அதன் ஓரம் ஒரு துடுப்புப் படகு நிறுத்தப்பட்டு இருந்தது.  ஆதி முதலில் ஏற, மதுவிற்கு அருகில் இருந்த ஒரு கல்லைக் காட்டினார் , “அந்த கல்லுல ஒரு கால் வெச்சு ஏறி தம்பி கை பிடிச்சு படகுக்குள்ள இன்னொரு காலை வெச்சு ஏறிக்கமா.”
அவர் சொல்படி ஏறினாள். படகு ஆடாமல் இருக்க அந்த மனிதர் பிடித்துக்கொள்ள, ஆதியும் பாலன்ஸ் செய்தான். அங்கிருந்த சீட்டில் அவளை அமர வைத்து எதிர் புறம் துடுப்புடன் அவன் நின்றான்,
“சரியா தம்பி. டார்ச் வெச்சிக்கங்க,  அந்த சிவப்பு லைட்ட அடையாளம் வெச்சிக்கங்க, கிட்ட வந்து ஒரு போன் பண்ணுங்க. நான் வந்து டார்ச் அடிச்சு ஸ்பாட் காட்டறேன், அப்பறம் ஓரம் வந்தா போறும். பத்திரமா போயிட்டு வாங்க தம்பி.”, என்றவிட்டு படகை பலம் கொண்டு திருப்பி தள்ளிவிட, ஆதி துடுப்பை அழுத்தி உந்த, படகு முன்னே சென்றது..
அமர்ந்து, இரு துடுப்புகளையும் கொண்டு மெதுவாக செலுத்த ஆரம்பித்தான். அதுவரையிலும் அமைதியாய் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள் மது.
ஆதிக்கு ரிதம் கிடைத்து, படகு சீராக செல்லவும், மதுவைப் பார்க்க, கண்கள் மின்ன அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஹாப்பி?”, என்று ஆதி சின்ன சிரிப்புடன் கேட்க, வேகமாய் தலையாட்டியவள், “ வெரி ஹாப்பி. பௌர்ணமி ராத்திரி நீ பாட்டிய போட்ல கூட்டிட்டு போனதைக் கேட்டு எனக்கு ஒரே பொறாமை பாட்டி மேல. போட்காரன்கிட்ட பத்தாயிரம் குடுத்து ஏமாந்தியாமே, அதைக் கேட்டு கொஞ்சம் பரவாயில்லையாச்சு. “
“அதான, காலேஜ் பையன் நான் அப்ப. ஏதோ ஏமாந்திட்டேன். அதையே சொல்லுங்க பாட்டியும் பேத்தியும். “
“ஆக்ஸ்ஃபொர்ட் ல படிக்கும்போதுதான ரோயிங் கத்துகிட்ட? நோனாக்கு பெருமை சொல்லி மாளல. “, பாட்டியின் ஞாபகத்தில் முகம் கொஞ்சம் வாடியது.
அதை கவனித்தவன், “ மது, என்னை பாரு. நோனாக்கப்பறம் உன்னைத்தான் கூட்டிட்டு வந்திருக்கேன். வரணும்னு தோணிருக்கு. எஞ்ஜாய். அதைத்தான்  நோனா இஷ்டப்படும்.”
தோளைக் குலுக்கியவள், சுற்றுப்புறம் பார்த்து மூச்சை இழுத்துவிட்டவாறு, “யா ரைட்.”,என்றாள்.
இரவின் ஓசைகளை மெதுவாக கவனிக்க ஆரம்பித்தாள். இரவுப் பூச்சிகளின் ரீங்காரச் சத்தம், துடுப்புகளை நீரில் இழுத்துவிட்டு தண்ணீரைத் தட்டும் சீரான டப் டப் ஓசை, உற்றுக்கேட்டால் ஆதியின் சீரான மூச்சு சத்தம் கூட கேட்டது.
முழு நிலவின் ஓளியில், முழங்கை வரை இழுத்துவிட்டிருந்த டீ ஷர்ட் , அதில் தெரிந்த ரோமங்கள் படிந்த அவன் கைகளின் வலிமையை பார்த்தவள், அவனின் நீள விரல்கள் துடுப்பை உறுதியாய்ப் பிடித்திருப்பது கூட அழகாய் பட்டது மதுவின் கண்களுக்கு.
மெல்ல அவன் பரந்த மார்பைத் தாண்டி, ஆதியின் முகம் நோக்கி பார்வையை செலுத்த , ஆதியின் கண்கள்  அவள் முகத்தைத்தான் மொய்த்துக்கொண்டிருந்தது.  நிலவொளியில் அவன் கண்களில் தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்தாள் மது.
ஆதியும் சொக்கித்தான் போயிருந்தான். நிலவொளியில் மதுவின் முகத்தில் வந்து போன மாற்றங்கள் அவன் பார்வையைப் பற்ற வைத்திருந்தது. முதலில் இருந்த ஆர்வம், பாட்டியைப் பற்றி பேசிய போது வந்த வலி, அவன் ஆறுதல் சொல்ல ஏற்றுக்கொண்ட போது வந்த அமைதி, இரவை கவனித்தபோது துளிர்த்த சந்தோஷம், அவன் கைகளைப் பார்த்துக்கொண்டிருந்த போது மெல்ல ஆர்வமாய் மாறியது என்று ஒவ்வொன்றையும் கண்டு கொண்டிருந்தவன், அவள் பார்வை மெல்ல அவனை நோக்கி மேலே ஏற இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது.
பாவையின் கண்ணில் கண்ட வெட்கமும் மயக்கமும் காதலும் கலந்த ஒரு பார்வை, ஆணிற்கு ஏற்படுத்தும் கர்வம் எவ்வளவு என்பதை அன்று உணர்ந்தான் ஆதி. என்ன சமத்துவம் பேசினாலும், இந்த விஷயத்தில் என்னவள், அவளை நான் பாதுகாப்பேன் என்று மார்தட்டி நிக்கத்தான் வைக்கிறது ஆணை.  ஒரு பார்வையிலே வாரிச் சுருட்டிவிட்டாளே என்றுதான் தோன்றியது.
துடுப்பு போடாமல் ஏரியின் மத்தியில் லேசாக ஆடிக்கொண்டிருந்தது படகு.
“மது…”, ஆழ்ந்து வந்தது ஆதியின் குரல்.
அவன் கண்களில் தோன்றிய அந்த கர்வமும், காதலும் காந்தமாய் இழுத்தது அவளை. அவன் முன்னே வர, அவளும் மந்தரித்ததுபோலே அவன் அருகே செல்ல, கண்கள் விலகாது பார்வைகள் கவ்விக்கொண்டிருந்தன. ஆதியின் கைகள் இரண்டும் துடுப்பைப் பிடித்திருந்தன.
“தோளை பிடிச்சுக்கோ.”, என்று சொல்லவும் ஆதியின்  குரலுக்கு கட்டுண்ட மது அப்படியே செய்ய, எட்டி அவள் இதழ்களை உரசியிருந்தான் ஆதி. பெண்ணின் கைகளின் அழுத்தம் கூடியது, கண்கள் மூடியது. ஆனால் இதழ்கள் அவனை நோக்கித்தான் இருந்தது. நிலவொளியில் பாதி முகம் தெரிய கூந்தலின் நிழலில் மீதி முகம் இருக்க, அந்த நொடியை மனதில் படம்பிடித்து வைத்தான்.
மெல்ல மதுவின் விழிகள் திறக்க, “மது…”, என்று அவள் இதழ்களைக் கவ்வியிருந்தான்.
நொடிகளோ, நிமிடங்களோ தெரியவில்லை இருவரும் ஒருவருள் ஒருவர் கரைந்துகொண்டிருந்தனர். இதயத் துடிப்பு அதிகரிக்க, உடலின் மொத்த கவனமும் இதழ்களிடையே அடங்க, மேலும் மேலும் நெருங்க துடிக்க, தன்னையறியாமல் மது இருக்கையை விட்டு ஆதியின் தோளை அழுத்தி அவனருகே வர  படகு லேசாக ஆடவும் நினைவுக்கு வந்தவர்கள் விலகினார்கள். மது உட்கார, படகை லேசாக துடுப்பு கொண்டு நிலை படுத்தினான்.
மதுவைப் பார்க்க, அவளோ மேலே நிலவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். உடலுக்குள் இன்னமும் மின்சாரம் ஓடிக்கொண்டிருந்தது. அவள் காதில் மாட்டியிருந்த வளையம்தான் அவனைப் பார்த்து கண் சிமிட்டியது. கன்னச் சிவப்பு இங்கிருந்தே தெரிந்தது அவளின் நிறத்திற்கு.
அவளை இழுத்து அணைத்துக்கொள்ள முடியாதபடி கைகள் துடுப்பைப் பிடிக்க வேண்டியிருப்பதை எண்ணி நொந்தவன், ‘ஹ்ம்ம் ஒரு வகையில் இதுவும் நல்லதுதான். இல்லாட்டி ரெண்டு பேரும் தண்ணியில விழுந்திருப்போம்.’,என்று நினைத்தவன்,
“போலாமா மது?”, என்று மென்மையாய்க் கேட்க, அவனைப் பார்க்காமலேயே தலையசைத்தாள்.
நடந்த நிகழ்வுகளை இனிமையாக அலசியவாறே , அவ்வப்போது மதுவைப் நோட்டமிட்டபடி படகை செலுத்திக்கொண்டிருந்தான் ஆதி.
அவனைத் தவிர எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள் மது. கனிந்திருந்த அவள் முகமோ, அவளின் மகிழ்ச்சியைக் காட்டிக்கொடுத்தது. கரை அருகே வர, மதுவிடம் ஒரு துடுப்பை பிடிக்கச் சொல்லி, படகுக்காரருக்கு அழைத்தான்.
படகை நிறுத்தி, அவருக்கு காசைக் கொடுத்து நன்றி சொல்லி அவர்கள் பைக் வரும் வரையிலும் அமைதிதான்.
“மது…”.
“ம்ம்ம்…?”
“ஏன் இவ்ளோ அமைதி? நான் … தப்பா?”, அவளைக் கேட்க, நிமிர்ந்து ஆதியின் முகம் பார்த்தவள்,
“சே.. இல்லை ஆதி. அது.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. உள்ள நிறைய எமோஷன்ஸ் போட்டி போடுது. அதுதான்….”, என்று அவன் புஜம் பிடிக்கவும், அவள் கை மேல் கை வைத்து அழுத்தியவன்,
“ரிலாக்ஸ். நீ சொல்லுவியே, இந்த நிமிஷம், இந்த நொடி இந்த ஃபீல் அனுபவிப்போம்.  பார்த்துக்கலாம் சரியா?”, அவள் நாடி பிடித்து முகம் பார்த்து சொல்ல, அவளின் விரிந்த கண்களில் உள்ளே செல்லும் மனதை பிடித்து நிறுத்தி, லேசாய் அணைத்து விடுவித்தவன், “கிளம்பலாம். தனியா இருக்கறது ரொம்ப டெம்ப்ட் செய்யுது.”, என்று புன்னகை சிந்தி, வண்டியைக் கிளப்பினான்.
எப்படி வீடு வந்து சேர்ந்தார்கள் என்பதே தெரியாமல் , அதற்குள் வந்துவிட்டோமா என்றுதான் இருவரது எண்ணமுமே சென்றது.  நேரம் நடு நிசியைத் தாண்டியிருந்தது.
“குட் நைட் மது. மறக்க முடியாத நாள். ஸ்வீட் ட்ரீம்ஸ்.”, என்று சொல்லி, கனிந்த பார்வையோடு, லேசாய் உதடு கடித்து ஆதி மதுவைப் பார்க்க,
காதல் வழியும் விழிகள் அவன் உதடு பார்த்து மயக்கமுற , அவள் கண்களை மறைத்தவன், “ஷ்… நல்ல பிள்ளைன்ற பேரை காப்பாத்த விடு, உன் பேருக்கு ஏத்த மாதிரியே பார்வையிலேயே போதை ஏத்தற.”, கொஞ்சம் புலம்பலாகவே ஆதியின் குரல் வர, கிளுக்கிச் சிரித்தவள்,
“எனக்கும் மறக்க முடியாத நாள்தான். குட் நைட்.”, என்று அவனை விட்டு ஓடினாள்.
அறைக்கு வந்து உடை மாற்றிப் படுத்தவனோ, இன்னும் மகிழ்ச்சியில்தான் மிதந்து கொண்டிருந்தான்.  “நோனா… நீ தான் ஏதோ மாயம் செய்யறயா? இத்தனை நாள் சண்டைக்கோழியா திரிஞ்சிகிட்டு இருந்தோம். இப்ப இந்த கொஞ்ச நாள்ல எப்படி இப்படி?” என்று பாட்டியிடம் பேசியவன் ஒரு சிறிய புன்னகையோடே உறங்கிப் போனான்.
படுக்கையில் விழும் வரை இருந்த உற்சாகம் வடிந்தது மதுவிற்கு. ‘என்னத்தை பார்த்து கிழிச்ச. நாளைக்கு அவன் வந்து ப்ரபோஸ் செய்யப் போறான்.  என்ன சொல்ல போற? கல்யாணம் செய்ய ஒத்துக்குவியா?’, திமிறிக்கொண்டு எழுந்த மனசாட்சி அவளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது.
“ஏன்… ஒத்துக்கிட்டாதான் என்ன?”, சபலப்பட்ட மனது கேட்க,  “வேண்டாம் மது, இந்த விபரீத எண்ணம். ஆதி வாழ்க்கையை நீயே பாழாக்கிடாத.  அவன் திரும்ப ஊருக்கு போனதும் வேலைல மூழ்கிடுவான். அங்க வீட்ல நல்ல எடத்துல நல்ல பொண்ணா பார்த்து கட்டி வெப்பாங்க. சந்தோஷமா வாழட்டும். அதை கெடுக்காதே. நீ அவனை நிஜமாவே விரும்பினா அவன் நல்லா இருக்கணும்னுதான் நினைக்கணும்.’, புத்தி கூறியதை ஏற்றுக்கொண்டாலும், கண்கள் உடைப்பெடுத்தன ஏமாற்றத்திலும், வலியிலும்.

Advertisement