Advertisement

அத்தியாயம் -18

ஊட்டியில் ஆர்ட் ஸ்டூடியோவில் அமர்ந்து, ஒவ்வொரு படமாகப் பார்த்துக்கொண்டு வந்தபோது,

“ஹே… இது ஓக்கே எனக்கு. ஜானி டெப் ஜாக் ஸ்பாரோ கெட்டப் .”, ஆதி உற்சாகமாக சொல்லவும்,

“ஹ்ம்ம்… அப்ப நான் ஏஞ்ஜலிக்காவா? இது மட்டும் ஹாப்பி முடிவா ? ஜாக் அவளை ஏமாத்திட்டு  விட்டுட்டுதான போவான்?”

“ஹே, அவ உயிரை எவ்வளவு நேக்கா காப்பாத்துவான்? அதுலயே தெரியலையா அவனுக்கு எவ்வளவு பிடிக்கும்னு? அவனுக்கு எந்த ஒரு பெண்ணோடவும் கல்யாணம் வேண்டாம், அதனாலதான் விட்டுட்டு போயிட்டான். “, ஆதி சமாளித்தான்.

“ஹ்ம்ம்… இந்த ஜோடி மாதிரிதான் நம்மதும் சிக்கலான உறவு. சரியாத்தான் செலக்ட் செஞ்சிருக்கான்.’ என்று நினைத்தவள்,  “சரி , இதுவே எடுத்துக்கலாம்.”, என்று ஒத்துக்கொண்டாள்.

முகேஷ் வந்ததும் காட்டவும், “குட் சர். மூணு போட்டோ வரும் சர். நீங்க ரெண்டு பேரும் ஜோடியா, தனித்தனியாவும் எடுத்துக்கலாம். உங்க சாய்ஸ். என்னோட வந்தா ட்ரெஸ்சிங் ரூம் போகலாம் சர். “, என்று பவ்யமாக அழைத்துக்கொண்டு சென்றான்.

அரை மணி நேரத்தில், கண்மையும், ஒட்டு தாடியும், சடை முடியுமாக ரெடியாகி கையில் வாளுடன் ஆதி வர, அடுத்த ஐந்து  நிமிடங்களில் மதுவும் போட்டோவில் பார்த்தது போலவே உடையணிந்து, வாளுடன் வந்தாள். அவர்கள் கொடுத்த சிகப்பு முடியை தவிர்த்து, தன் முடியையே அதுபோல ஸ்டைல் செய்திருந்தாள்.

அந்த உடையில் வாளுடன் வரும் அவளைப் பார்த்த ஆதி, விசிலடிக்க, மது சிரித்தாள்.

“ஏது, ஜாக் ஸ்பாரோ கெட்டப்போட்டது, அவனை மாதிரியே கலாட்டாவும் வருதோ?” என்றவள்,

“ம்ம்… உனக்கு நல்லா செட் ஆகுது. அவனை மாதிரியே ஒரு வில்லன் லுக்.”, கலாய்த்தாள்.

போட்டோகிராபர் வந்து, பின்னணியில் அதே போன்ற அந்தி சாயும் ஸ்க்ரீன் செட் செய்து, மதுவின் முடி பறக்க மின்விசிறி செட் செய்து, லைடிங் அமைத்து,

“பொசிஷன் ப்ளீஸ். இது ட்ரையல்தான். “, என சொல்லவும்,  அதே போல முறைத்துக்கொண்டு இருவரும் போஸ் கொடுத்தனர்.

இரண்டு சாம்பிள் எடுத்தவர், “ரெண்டு பேருக்கும் நல்லா பொருந்துது. வந்து பாருங்க. “என்று அழைத்துக் காண்பித்து, லைட்டிங் அட்ஜஸ்ட் செய்யப் போனார்.

“அழகா வந்திருக்கு இல்ல? முடி கூட கரெக்ட்டா  பறக்குது.”, என்று மது சொல்ல,

“ஹ்ம்ம்… நல்லாத்தான் இருக்கு, ஆனா நம்ம ரெண்டு பேரும் முறைச்சிகிட்டு இருக்கோமே. அடுத்த போட்டோ ஒரு ஜாலி போஸ் குடுப்போம்.”, என்றான் ஆதி.

போட்டோகிராபர் வந்ததும், இவர்கள் மறுபடி சென்று போஸ் கொடுக்க, சிறு சிறு மாற்றங்களுடன், பத்தே நிமிடங்களில் எடுத்து முடித்தார்.

அனைவருக்கும் திருப்தியானதும், “சர், அடுத்த போஸ், தனியாவா இல்லை…”, என்று நிறுத்த, அதற்குள் மொபைலை நோண்டிக்கொண்டிருந்த ஆதி, “இது செய்யலாமா? “, என்று ஒரு போட்டோவைக் காட்டினான்.

ஆதி காட்டியதைப் பார்த்து , “இவ்வளவு நெருக்கமாவா?’, என்று யோசிக்க, ‘எடுத்துக்குவோம், பின்னாடி இது மட்டும்தான் இருக்கும். ‘,என்று மனது சொல்ல,

“சரி ஆதி.”, என்று சம்மதித்தாள். போட்டோகிராபர் அசிஸ்டென்ட், அதற்கேற்ற ஒரு மர மேசை, லாந்தர் கொண்டு வந்து செட் செய்ய, வாளைப் போட்டுவிட்டு, மது மேசை மேல் சாய, ஜாக் போல அவள் இரு புறமும் கை வைத்து அவளை நெருங்கினான் ஆதி.

டெஸ்ட் போட்டோ பார்த்து, சரி செய்து டேக் சென்றார்கள்.  ஆதியின் நெருக்கம் ஒருவித படபடப்பைக் கொடுத்தாலும் சமாளித்துக்கொண்டாள் மது.

“சர் கண்களை கொஞ்சமா நிமிர்ந்து பாருங்க மேம்.”, என்று சொல்லவும் அவனைப் பார்த்தவள், அதிலேயே மூழ்கிவிட்டாள். என்ன மறைத்தும்  அவள் காதலும், கொஞ்சம் பயம், கொஞ்சம் வெட்க்கம் என்று முகம் காட்டிக்கொடுக்க, ஆதியோ அவள் விரிந்த கண்களில் தன்னை தொலைத்துக்கொண்டிருந்தான். அவனையும் மீறி கண்களோடு அவள் உதடுகளும் காந்தமாய் இழுக்க தன்னை மீறி சற்றி நெருங்கவும், இருவரின் மூச்சுக்காற்றும் கலக்க, அடுத்து உதடுகள் சேரும் முன்,

“டன் சர்.”, என்ற போட்டோகிராபர் குரலில், சுற்றம் உணர்ந்து விலகினார்கள். ‘டேய்.. இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா என்னடா செய்ய இருந்த ? அப்படியா உன்னை மீறி நடப்ப?’, என்று தன்னைத்தானே கடிந்து, சமன் செய்து

அவளை நிமிர்ந்து பார்க்காமல், “வா “, என்று மதுவை அழைத்து சென்றான். அவர்கள்  வருவதற்குள் கம்ப்யூட்டர் திரையில் பெரிதாக்கியிருந்தார் போட்டோகிராபர்.

“ரொம்ப அழகா வந்திருக்கு, ரெண்டு பேருமே நல்லா எமோஷன்ஸ் கொண்டுவந்திருக்கீங்க. கெமிஸ்ட்றி தெரிக்குது “, என்று அந்த மனிதர் அனுபவித்து பேசிக்கொண்டிருக்க, இருவரும் அவரவர் முகத்தில் தெரிந்த  உணர்ச்சிகளைப் பார்த்து அதிர்ந்துதான் நின்றனர்.

ஒருவரை ஒருவர் முழுங்கிவிடுவது போல இருந்தது. காதலும் மோகமும் இருவரிடமும் தெரித்தது.

“அடுத்த ஸ்டில் சர்?”, என்று இப்போது ஆர்வமாய்க் கேட்டார் போட்டோகிராபர். அழகாகவும், காமிரா இருப்பதைப் பற்றி கவலைப்படாமல் உணர்ச்சிபூர்வமாகவும் போஸ் கொடுக்கும் இப்படியான ஜோடிகள் அமைவது எப்போதாவதுதான். அவருடைய போட்டோவின் தரத்தையே ஏற்றிவிட்டார்கள்.

“இல்லை. இதுவே போறும். என்ன மது?”, என்றான் ஆதி. மதுவிற்கு நிமிர்ந்து ஆதியைப் பார்க்கமுடியவில்லை.

“ம்ம்.. நான் போய் ட்ரெஸ் மாத்தறேன். “, என்று சென்றுவிட்டாள்.

“எங்களை மட்டும் ஜூம் செய்து இந்த மாதிரி குடுங்க , மூணாவது போட்டோ. எனக்கு மட்டும். “என்று , மொபைலைக் காட்டினான்.

சரியென்று ஒத்துக்கொண்டவர், “உங்க போட்டோ எங்க காட்லாக்ல போடலாமா சர்?”, என்று கேட்டார்.

“கண்டிப்பா, இது வேண்டாம். மது வரட்டும், அந்த முதல் போட்டோ, அவங்களுக்கு ஓக்கேன்னா யூஸ் செய்துக்கோங்க.  எங்க ப்ரைஸ்ல அப்ப டிஸ்கவுண்ட் 20% வேணும்.”, என்று டீலை சொல்லி அவரை வாய் பிளக்க செய்துவிட்டுச் சென்றான் அந்த தேர்ந்த வியாபாரி.

ரெடியானதும் தனக்கு அழைக்குமாறு தனது கைபேசி எண்ணைக் கொடுத்து, 15% விலையிலும் குறைத்து, கட்டணத்தை செலுத்தி வருவதற்குள் இருட்டியிருந்தது.

“ மது, பசிக்குது.  இங்கயே டின்னர் முடிச்சிடலாமா? வீட்டுக்குப் போறதுக்கு எப்படியும் 8 மணிக்கு மேல ஆகும்.”, ஆதி கேட்டான். அவளோடு இன்னும் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும் போலத் தோண, யோசிக்காமல் மனதின் போக்குக்கு வளைந்து கொடுக்க முடிவு செய்தான்.

“ஹ்ம்ம்… சரி ஆதி. நான் வீட்டுக்கு போன் செய்திடறேன். எங்க  போகலாம் ?”, அவனோடு தனியே ஒரு டின்னர், மனம் குதித்துக்கொண்டிருந்தது மதுவிற்கு.

ஒரு வழியாய் அந்த செட்டிநாட்டு உணவகத்திற்கு வந்தார்கள். கண்டிப்பாக ப்ரியாவுடன் இங்கே வந்திருக்க மாட்டான் என்று தெரிந்து இதை பரிந்துரைத்திருந்தாள் மது.

“இங்க நான் வந்ததில்லை. இடமே நல்லாருக்கு மது.”, என்ற படி, இருவருக்கான ஒரு மேசையில் அமர்ந்தார்கள்.

ஏழு மணிதான் என்பதால் கூட்டம் இல்லாமல் இருந்தது. மெனு ஆர்டர் செய்துவிட்டு, அவளைப் பார்த்தவன்,

“மது அந்த ரெண்டாவது போட்டோ எடுத்த போது…”, என்று ஆரம்பித்தான் ஆதி.

“ஒண்ணும் சொல்ல வேண்டாம் ஆதி. ஜஸ்ட் அந்த கெட்டப் போட்டதும், அந்த காரக்டராவே மாறிட்டோம் கொஞ்ச நேரம். பரவாயில்லை. விடு.”, என்று வேகமாக இடை மறித்தாள்.

ஆதி கொஞ்சம் குழம்பினான் இப்போது. ‘அப்ப அவளுக்கு நெஜமாவே என் மேல விருப்பம் இல்லையா? எனக்குத்தான் அப்படி தோணுதா?  பெருசா அவளை பாதிக்காத மாதிரி சாதாரணமா பேசறா?”, என்று யோசித்தபடியே அவளை கவனித்துக்கொண்டிருந்தான்.

மது கம்ப்யூட்டர் திரையில் அவர்கள் நெருக்கத்தையும் உணர்வுகளை அப்பட்டமாகக் காட்டிய முகத்தையும் பார்த்து, உடை மாற்றும் அறையில் விகித்துப்போய் நின்றது அவளுக்குத்தானே தெரியும். ‘நீ அவனை விரும்பற சரி. ஆனா இப்ப அவனும் உன்னை விரும்பற மாதிரி தெரியுதே? என்ன செய்யப் போற மது? ஆசை காட்டி மோசம் செய்யப் போறியா? அவனை விட்டு விலகப் போறன்னு தெரிஞ்சும், இதை வளர விடலாமா?’, அவள் மனசாட்சி அவளை கேள்வி கேட்டுக் கூறு போட்டது. ‘இல்லை, இதை வளர விடமாட்டேன். இன்னொரு பத்து நாள், முடிஞ்ச வரை அவன் கண்ணுல படாம ஒதுங்கிடறேன்.’, என்று தனக்குத் தானே சமாதானம் செய்து வெளியே வந்தவள், அவன் டின்னர் போகலாம் என்றதும், எடுத்த சபதத்தைக் காற்றில் விட்டு இதோ அவன் முன்னே அமர்ந்திருக்கிறாள்.

உள்ளே காறி துப்பிக்கொண்டிருந்த மனசாட்சியிடம், ‘இந்த ஒரு வாட்டிதான். இனிமே எங்க அவன் கூட தனியா எனக்கு நேரம் கிடைக்கப் போது? நாளையிலிருந்து ஒழுங்கா இருக்கேன். ப்ராமிஸ்.’, என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

“என்ன மது? ஏன் கொஞ்சம் ரெஸ்ட்லஸா இருக்க? என்னாச்சு?”, என்று ஆதி கேட்கவும், “ஹ..ஒண்ணும் இல்லை, ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன். “, என்று அங்கிருந்து அகன்றாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் திரும்ப வரவும், உணவும் வந்திருக்க, இயல்பாய் மீண்டும் பேச ஆரம்பித்தாள். அவர்களையும் மீறி பேச்சு சுவாரஸ்யத்தில் மணியை கவனிக்காமல் ஏதேதோ அரட்டையில் இருக்க, ஒன்பது மணியளவில், சங்கரி அழைப்பில்தான் மது நேரம் பார்த்தாள்.

“சாரி ஆன்ட்டி. பில் பே பண்ணிட்டு கிளம்ப வேண்டியதுதான். வர பத்து மணியாகிடும். நீங்க படுங்க, என் கிட்ட சாவி இருக்கு. நான் மெசேஜ் போடறேன் வந்ததும்.”, என்று சொல்லி வைத்தாள்.

“உன்னோட அரட்டை அடிச்சா, நேரம் போறதே தெரியலை. வா போலாம்.”, என்று ஆதி எழ, “ஹல்லோ… நானும் அதையே சொல்லுவேன். கூட சேர்ந்து அரட்டை அடிச்சிட்டு இப்ப பழி என் மேல மட்டும்தானா?”, என்று பதிலுக்கு ஆதியை வம்பிழுத்துக்கொண்டு சென்றாள்.

வீட்டுக்கு வந்ததும், ‘குட் நைட்’, என்று சொல்லி போக இருந்தவள் கைபிடித்து அருகில் இழுத்தான் ஆதி.

நெஞ்சம் ஒரு நிமிடம் நின்று துடிக்க,  ஆதியின் முகத்தைப் பார்த்தவளின் விரிந்த கண்களை விடிவிளக்கின் ஓளியில் பார்த்த ஆதி,

“இப்படி முழுங்கிடறா மாதிரி பார்த்தா, அப்பறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை மது. “, இடக்கையால் அவளின் கைகளைப் பிடித்திருந்தவன், வலக் கை அவள் கழுத்திலிருந்து மெதுவே முடிக்குள் சென்று அளைய, அவன் கட்டைவிரல் , அவள் காது மடலிலிருந்து மெதுவாய் இதழோரம் வரை பவனி வந்து, நொடிப்பொழுது நின்று திரும்பியது.

ஆதியின் குரல் ஆழ்திருக்க, மது மூச்சு விட மறந்து நின்றாள்.

“இதுவரை எந்த ஒரு டின்னரும் இவ்வளவு எஞ்சாய் பண்ணதில்லை நான். தாங்க்ஸ் மது.  குட்  நைட்.”, என்று ஹஸ்கி வாய்சில் பேசியவன், அவள் முடியை சற்று வலிக்க ஒரு இழு இழுத்துவிட்டு,  இரண்டிரண்டுப் படிகளாக தாவி ஏறிப் போனான் அவன் அறைக்கு.

அவன் முடியை இழுத்த வலியில் மூச்சுக் காற்றை விட்டவள், ஒரு நொடி என்ன நடந்தது, அவன் என்ன கூறிவிட்டுச் சென்றான் என்று யோசித்தாள். நினைவு வந்ததும், முகத்தில் தானாய் ஒரு மலர்ந்த புன்னகை முளைத்தது. அடுத்த நொடி, மனசாட்சி கொட்டிய கொட்டில் வாடியது.

“இன்னும் பத்து நாளை எப்படி சமாளிக்கப் போறேனோ தெரியலையே ஆண்டவா.”, புலம்பியபடியே மெதுவாய்  மாடிக்குச் சென்றாள்.

Advertisement