Advertisement

அத்தியாயம்  -17

ராமசாமி காலையில் தன் வீட்டிற்குள் நுழையவும், அவர் தம்பி, தாய், தந்தை அனைவரும் கூடத்திற்கு வந்துவிட்டனர்.

அவர் தம்பி கோவிந்தன் அண்ணன் கைப்பிடித்து, “ அண்ணா, ரெண்டு நாள் நான் என் பெண்டாட்டி குழந்தைய பார்த்துட்டு வரதுக்குள்ள என்னன்னவோ நடந்துடுச்சே. நீங்களும் அண்ணியும் வீட்டுக்கு வந்துடுங்கண்ணா. அந்த மங்களம் அத்தையை நான் விரட்டிவிட்டுட்டேன்.”, என்று கெஞ்சியவாறே நாற்காலியில் அமர வைத்தார்.

தாயும் தந்தையையும் ஒரு பார்வை பார்த்தார் ராமசாமி. மகன் கோபம் தணிந்திருக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பில் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் இருவரும்.

தன் தந்தையைப் பார்த்தவர், “ஆள் அனுப்பி வக்கீல வரசொல்லுங்க. கூட ஊர் பெரியதனக்காரங்களையும் சொத்து விவரம்னு சொல்லி வர சொல்லுங்க. “, என்றார் ராமசாமி.

“என்ன, சொத்தை பிரிக்கறதா?  என்னடா , அவ ஓதி அனுப்பிச்சாளா? கொளுத்திக்கறேன்னு நாடகம் செய்து உன்னை பிரிச்சிகிட்டு போனதுமில்லாம, இப்ப சொத்து கேட்டு அனுப்பியிருக்காளா?”, ராமசாமியின் அன்னை பங்கஜம் இரைய,

“அம்மா. தனத்தை பத்தி அபாண்டமா பேசினா, நான் சும்மா இருக்கமாட்டேன். நான் வக்கீலை வர சொன்னது,  உங்க சொத்து எதுவும் எனக்கு வேண்டாம்னு ஊர் பெரியவங்க முன்னாடி எழுதி குடுக்கத்தான். “

“அண்ணா… இதுல  நம்ம தாத்தா காலத்து நிலபுலன் எல்லாம் இருக்கு.  எப்படி நீங்க வேண்டாம்னு சொல்லுவீங்க ? உங்க வாரிசுக்கு போய் சேரணும். அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம்.”, கோவிந்தன் சொல்ல, மறுப்பாக தலையசைத்தார் ராமசாமி.

“அய்யா, எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டு உன் பாட்டுக்கு என்ன செய்ய போற? கொஞ்சம் ஆறப் போடுய்யா. நாங்க உனக்காத்தான் பார்த்தோம். இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கறது ஒண்ணும்  புதுசில்லையேன்னுதான் உங்கம்மா சொன்னதுக்கு நான் சரின்னேன். அதுக்காக தனத்தை விட்டுடப் போறதில்லை.”, ராமசாமியின் தந்தை பேச,

“அப்பா, நிறுத்துங்க. இன்னொரு முறை இரண்டாவது கல்யாணம்னு பேசினீங்க, அவ்வளவுதான்.  ஊர்ல செய்யறானேன்னு என்னையும் செய்ய சொல்லாதீங்க. அவளை எந்தளவுக்கு பேசியிருந்தா கொளுத்திக்க போயிருப்பா? கடைசீ வரைக்கும் காப்பாத்துவேன்னு என்னை நம்பி வந்த பெண்ணை உங்களை நம்பி வீட்ல விட்டுட்டு போக முடியலை. அப்பறம் எப்படி இது என் வீடு, என் சொந்தம்னு நான் சொல்ல ?

இந்த ஜென்மத்துக்கு தனம் மட்டும்தான் என் மனைவி.நான் முடிவு செஞ்சது செஞ்சதுதான். என்னோட முயற்சில தொடங்கின தொழிலையும் விக்க ஏற்பாடு செய்யறேன். அதோட தனத்துக்கு சீரா வந்த சொத்து இருக்கு எங்களுக்கு. அது போறும். நான் சம்பாதிப்பேன்.”, ராமசாமியின் உறுதியைக் கண்டு வேறு எதுவும் செய்ய முடியாமல், அவர் விருப்பப் படியே விடுதலை பத்திரம் பதிவானது.

இரண்டு வாரத்தில வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு, தம்பி கோவிந்தனை மிச்ச வேலையின் பொறுப்பைக் கொடுத்துவிட்டு மனைவியைத் தேடிச் சென்றார்.

அங்கே சென்றவருக்கு அடுத்த சோதனை காத்திருந்தது.  குடும்பத்தை விட்டு கணவனை தனம் பிரித்துவிட்டதாக சொந்தங்களில் அரசல் புரசலாக பேச்சு கிளம்பிவிட்டது. ஏற்கனவே அந்த குற்ற உணர்ச்சியில் இருந்த தனத்திற்கு இது மேலும் கழிவிரக்கத்தைக் கொடுக்க, மேலும் மேலும் ஒடுங்கிவிட்டார். அறைக்குள்ளேயே அடங்கிக் கிடந்த மனைவியைப் பார்த்த ராமசாமி சொந்தங்களைவிட்டு தூர செல்ல முடிவு செய்தார்.

மனைவியை தன்னோடே அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு சென்றவர், தொழில் விற்ற காசில் ஒரு வீட்டை வாங்கி, மாத வருமானத்திற்கு நான்கு கடைகளை வாங்கிப்போட்டார்.

மனைவியை தினமும் வெளியில் அழைத்து செல்லவும், பேசிப் பேசி பொறுமையாக கழிவிரக்கத்திலிருந்து வெளிக்கொணர்ந்தார். தூற்றுபவர்களை எதிர்த்து நன்றாக வாழ்ந்து காட்டினால்தான் அவர்களை வாயடைக்க முடியும் என்று சொல்லி சொல்லி தைரியமளித்தார்.

மதி நிறுத்தவும், “ என்னா ஒரு கட்ஸ் வேணும். ஆசையா தொடங்கின தொழிலை அப்படியே குடுத்துட்டு, வேற புது இடத்துல மனைவிக்காக வாழ்க்கையை அப்படியே ரீசெட் செஞ்சிக்க ? வாவ்.”, ஆதி நிஜமாகவே வியந்து போனான்.

“இப்பதான் ரெண்டு பேரும் லவ் பண்ணாங்களா?

“யா, யார் தொந்தரவும் இல்லாம அவங்க ரெண்டு பேருக்குமான வாழ்க்கை. கல்யாணம் செஞ்சிகிட்டதால இருந்த உரிமையும் நெருக்கமும் ஆத்மார்த்தமா மாறிச்சுன்னு பாட்டி சொல்லும்போது, அது முகத்தை பார்த்திருக்கணும் நீ. “, சிலாகித்து சொல்லிக்கொண்டிருந்தவளின் முகத்தைத் தான் பார்த்திருந்தான் ஆதி.

போட்டோக்களைக் காட்டி, இதுவரை சொன்ன கதையின் மாந்தர்களை சுட்டிக்காட்டினாள் மது. பார்த்துக்கொண்டிருந்தவன், “ஹே… பாட்டி …இதுல ப்ரெக்னன்ட்டா இருக்காங்க?”, ஆச்சரியமாக மதுவைப் பார்க்க,

“ஹ்ம்ம்… ஊட்டிக்கு வந்த ஒரு வருஷத்துல பாட்டி மாசமானாங்க. ரெண்டு பேருக்கும் அவ்வளவு சந்தோஷம். ஏழாம் மாசம் எல்லாரையும் ஊட்டிக்கு வர வெச்சு வளைக்காப்பு நடத்தினார் தாத்தா. கோவைல அவர் வீட்ல வெக்க முடியாதுன்னு சொல்லிட்டார்.  பிரசவமும் ஊட்டிலதான்னு சொல்லிட்டார்.“

“அப்பறம்.. குழந்தை பிறந்துச்சா? என்னாச்சு அதுக்கு?”, ஆதி குழப்பமாகக் கேட்டான். அவன் அறிந்த வரையில் பாட்டிக்கு குழந்தையில்லை என்பதுதான் தெரியும்.

“ஹ்ம்ம்.. சில நேரம் வாழ்க்கை கொடூரமானது ஆதி. ஒன்பதாம் மாசம் பிறந்துச்சு, குழந்தை குறுக்கா இருந்துச்சு, தலை பொசிஷனுக்கு வரலை. இத்தனைக்கும் தாத்தா வலி எடுத்த கொஞ்ச நேரத்துல ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போயிட்டார். நேரம் ஆக ஆக, பாட்டிக்கு பிபி இறங்க ஆரம்பிச்சுது.  டாக்டர்ஸ், ஆப்ரேஷனுக்கு ரெடி செஞ்சாங்க. “, மது நிறுத்த,

“என்ன , என்னாச்சு? சொல்லு.”, ஆதி ஊக்கினான்.

“டாக்டர் தாத்தாவை கூப்பிட்டு, ரெண்டு பேரையும் காப்பாத்த முயற்சி செய்யறோம். ஆனா ஒருத்தரைத்தான் காப்பாத்த முடியும்ன்ற சூழ் நிலை வந்தா, யாரை காப்பாத்தட்டும்?”னு கேட்டிருக்கார்.

“ஷிட்… என்ன ஒரு கொடுமையான சிட்சுவேஷன்?”, கைகளால்  தலையத் தாங்கினான் ஆதி.

“ம்ம்… தாத்தாவோட சாய்ஸ் பாட்டிதான். யோசிக்கவேயில்லையாம். கூட இருந்த பாட்டியோட சித்தி அப்பறம் பாட்டிகிட்ட சொன்னாங்களாம்.”

“கடைசீல குழந்தை வெளிய எடுத்தப்போ இறந்திருந்துச்சு.  பெண் குழந்தையாம்.  ஆனா கொடுமை, வேற ஏதோ காம்ப்ளிகேஷன், பாட்டியோட கருப்பைக்கு டாமேஜ் ஆகிடுச்சு. பாட்டிக்கு என்னன்னு சொல்லத் தெரியலை, ஆனா பொசிஷன் ஏதோ ஆகிடுச்சு, கரு நிக்காதுன்னு சொல்லிட்டாங்களாம்.“

“குழந்தைக்கு அன்னிக்கே ஈமக் காரியம் எல்லாம் முடிச்சிட்டாங்க. பாட்டி மயக்கத்துல இருக்கவும், அவங்க குழந்தை முகத்தைக் கூட பார்க்க முடியலையாம். “, மது வருத்தமாய் சொல்லி முடித்தாள்.

“அப்போ தாத்தாவோட கூட யாரும் இருக்கலையா? “

“அவர் தம்பி கோவிந்தந்தான் கூட இருந்திருக்கார். அவர் அப்பாக்கு உடம்பு முடியலைன்னு தாத்தாவோட அம்மாவும் வர முடியலையாம். பாட்டி சொன்னாங்க.”

“இதெல்லாம் நடக்கும்போது என்ன வயசிருக்கும் நம்ம தாத்தா பாட்டிக்கு?” ஆதி கேட்க,

“ம்ம்.. பதினாறு வயசுல பாட்டிக்கு கல்யாணம், சோ ஒரு இருபது வயசிருக்கும். தாத்தா ஒன்பது வருஷம் பெரியவர், இருபத்தியெட்டு இல்லை இருபத்தியொன்பது இருக்கும்.”

“எவ்வளவு கடந்து வந்திருக்காங்க அந்த சின்ன வயசுலயே. ப்பா.”, ப்ரம்மித்தான் ஆதி.

“ஹ்ம்ம்… அந்த குழந்தை பத்தி எத்தனை கனவு இருந்திருக்கும். அதெல்லாம் கரைஞ்சு போனதுல, பாட்டிக்கு மறுபடி டிப்ரஷன்.   வேற கல்யாணம் செய்துக்கங்கன்னு இந்த முறை பாட்டியே சொல்லிருக்காங்க.  ஆனா தாத்தாவோட முடிவுல மாற்றமேயில்லை. உனக்கு நான் எனக்கு நீ. அவ்வளவுதான்னு சொல்லிட்டாராம். சும்மாயிருந்தா கண்டதும் நினைக்க தோணும்னு அந்த வீட்டை வித்துட்டு, குன்னூர்ல இந்த வீட்டை வாங்கினார். இதுக்குள்ள தாத்தா டீ ஏஜென்சி ஆரம்பிச்சிருந்தார். அதுல அவருக்கு நல்ல லாபம். ஆனாலும் பாட்டிய டீச்சர் வேலைக்கு போக வெச்சார். அதுலதான் பாட்டி தேறி வந்தாங்க. ”

அதற்குள் ஆல்பமும் அவர்கள் குன்னூர் வீட்டின் முன் தாத்தா பாட்டியுடன் நிற்கும் புகைப்படத்துடன் முடிவடைந்ததிருந்தது.

சிறு அமைதிக்குப் பிறகு, “ பாட்டி தாத்தாக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தா, எவ்வளவு அன்பைக் கொட்டி பார்த்துகிட்டு இருப்பாங்க. அவங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கலை. ஆனா அம்மா அப்பாவாகறதுக்கு பக்குவமே இல்லாத எங்கப்பா அம்மாவுக்கு கல்யாணம் முடிஞ்ச ரெண்டு மாசத்துல நான் வந்துட்டேன். ஒரு ப்ரச்சனையும் இல்லாம பிரசவமும் ஆச்சு.  பாட்டிகிட்ட அவங்களோட கதை கேட்டப்பறம், கடவுளே இல்லைன்னு தோணுச்சு.”

“மது… பாட்டியோட அன்பு நிறைய குழந்தைங்களுக்கு கிடைக்கணும்னுதான் அவங்களுக்கு குழந்தையில்லையோ என்னவோ.  நீ இப்படியெல்லாம் யோசிக்காத. “ அவள் கைகளைத் தட்டிக் கொடுத்துத் தேற்றினான்.

“என்ன சொல்லு, ராமசாமி தாத்தா நெஜமாவே காதல் மன்னன்தான்.  என்ன ஒரு லவ் பாட்டி மேல? என்னை ரொம்ப இம்ப்ரெஸ் செய்துட்டார் தாத்தா.“, ஆதி அவளின் வருத்தத்தை போக்கும் விதமாக வியக்க

“ஹ்ம்ம்… அந்த மாதிரியெல்லாம் இனி பார்க்கமுடியுமான்னு தோணலை. எங்கப்பா அம்மா மாதிரி பேருக்கு வாழறவங்கதான் நிறைய இருக்காங்க இப்பல்லாம். இதுக்கு கல்யாணமே செய்யாம இருந்துடலாம்.”, மது வெறுப்பில் பேசுவது தெரிந்து,

“என்ன மது நீ, பாட்டி மாதிரி உனக்கும் டிப்ரஷன் ஒட்டிகிச்சா? சீயர் அப். உன் வாழ்க்கையை நீதான் அமைச்சிக்கணும். அப்பா சரியில்லை, அம்மா சரியில்லைன்னு காரணம் சொல்லக்கூடாது. எதிர்காலம் உனக்காக காத்திருக்கு. அதில் உருப்படியா உனக்கு பிடிச்சதை செய்து மகிழ்ச்சியா இரு.  கல்யாணம் வேணும், வேண்டாம்னு எதுக்கு முன்னாடியே முடிவெடுக்கற?”

ஆதியோடு எதுவும் வாக்குவாதம் செய்யாமல், அவன் சொல்வதற்கு தலையாட்டி, சின்னதாய் ஒரு புன்னகை சிந்தினாள் மது.

“சரி வா லேட்டாயிடுச்சு, சாப்பிட போகலாம்.  இந்த மூட் மாத்திக்கோ, வேற ஹாப்பியா எதாச்சம் செய்யலாம்.”, என்று மாடியிலிருந்து இறங்கினார்கள்.

சாப்பிட அமரும்போது, “பாட்டிக்கு எடுத்த மாதிரி, நாம போட்டோ ஷூட் எடுக்கலாமா? அந்த சின்ரெல்லா ட்ரெஸ் போட்ட நிமிஷம் பாட்டி செம்ம ஹாப்பி தெரியுமா?”, தன்னையும் மீறி மது கேட்கவும்,

“சரி, நீ நாலு மணிக்கு மேல அப்பாயின்ட்மென்ட் போடு. ஒரு மீட்டிங் இருக்கு . மூணு மணி போல முடிஞ்சிரும். அப்பறம் போலாம்.”

“இன்னிக்கேவா? நீ சனிக்கிழமைதான் வருவன்னு நினைச்சேன்! ”, ஆச்சரியமாகக் கேட்டாள்.

“இப்ப சீசன் டைம் இல்லைதான, அப்பாயின்மென்ட் கிடைச்சா போடு.  முக்கியமா செய்யவேண்டியது எதுவும் இல்லை. ரெகுலர் வேலை நைட்கூட பார்த்துக்குவேன்.”

புருவங்களை உயர்த்தி, உதட்டைத் துருத்தி அவள் வியப்பைக்காட்டி, போனை எடுத்துக்கொண்டு சென்றாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்தவள்,  “நாலரைக்கு கிடைச்சிருக்கு. நாமதான் லாஸ்ட் அப்பாயின்ட்மென்ட். “, என்றபடி அம்ர்ந்தாள்.

அப்போதுதான் வந்த சங்கரி, “ என்ன அப்பாயின்ட்மென்ட் மது?”, என்று கேட்டபடி அமர்ந்தார்.  சுப்பு சமைத்தவற்றை அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டே மதுவும், “பாட்டி கூட நான் ஒரு போட்டோ ஷூட் செய்தேன் ஆன்ட்டி. அதைத்தான் ஆதி கூட போய் செய்யப் போறேன். “, என்றாள்.

“நல்லது. போயிட்டு வாங்க இரெண்டு பேரும்.  காரியத்துக்கான வேலை தவிர நீயும் எங்கையும் போகலை மது. ஆதியும் வேலை வேலைன்னு இருந்துடுது.”, மகிழ்ச்சியாகவே கூறினார் சங்கரி.

சரியாக நாலரை மணிக்கு பாட்டியுடன் சில வருடங்களுக்கு முன் சென்ற அதே ஆர்ட் ஸ்டூடியோவிற்குள்  ஆதியுடன் நுழைந்தாள் மது.

“பிசினஸ் நல்லா போகுது போல, அப்பவிட இன்னும் செழிப்பா இருக்கு இடம்.”, என்று முணுமுணுத்தாள் மது.

அவர்களை வரவேற்ற ஒரு இள வயது ஆடவன், “சர், மேடம், நான் முகேஷ். இன்னிக்கு உங்க ஷூட்க்கு உதவி செய்ய அசிஸ்டென்ட். எங்க ட்ரெஸ் கேட்டிருந்தீங்க. என்ன தீம்ல செய்யப் போறீங்கன்னு டிசைட் பண்ணிட்டீங்களா?”, என்றான் பவ்யமாக.

“இல்லை, எந்த ஐடியாவும் இல்லை. உங்க காட்லாக் குடுங்க.”, என்றாள் மது.

அவர்களை அமர வைத்து, ஒரு காட்லாக்கை நீட்டி, “இது கப்பிள்ஸ்கானது . ரோமொயோ, ஜுலியட், லைலா மஜ்னு, டைடானிக் ஜாக் ரோஸ் ரொம்ப பாப்புலர்.”, என்று இவர்கள் காதல் ஜோடி என்று முடிவு செய்தவனாக பேச,

“முகேஷ், என்ன எல்லாம் சோகத்துல முடியற லவ்வர்ஸ் பத்தியே சொல்றீங்க? “, என்று ஆதி கலாய்க்க,

“சர், நிறைய பேரோட சாய்ஸ்ன்னவே சொன்னேன் சார். “, பதறி, “வேற கூட இருக்கு, நீங்க பாருங்க சர். நான் அஞ்சு நிமிஷம் கழிச்சு வரேன்.”, என்று ஓடிப்போனான்.

“என்ன அசிஸ்டென்ட்டோ? ஒரு கேள்வி கேட்டதுக்கே தெரிச்சு ஓடறான்.”, என்று ஆதி நக்கலடிக்க,

“வந்த வேலையை பார்க்கலாம். வா. “, என்று ஒவ்வொரு பக்கமாக திருப்பினாள்.

Advertisement