Advertisement

அத்தியாயம்  -16

காரியம் முடிந்து தனம் பாட்டியின் வீடு மீண்டும் அதன் வழமைக்குத் திரும்பியது.

அன்று நடக்க இருந்த ஒரு மீட்டிங் தள்ளிப் போகவும், நெட்டி முறித்த ஆதி, அவன் ஆபீஸ் அறையை விட்டு வெளியே வந்தான். கண்கள் தானாக மதுவைத் தேடியது.  கீழ் தளத்தில் தட்டுப்படாததால், மேலே சென்றான்.

பாட்டியின் அறையைக் கடக்க, அங்கே கட்டிலில் மது அமர்ந்திருந்தது தெரிய, ஆதியும் உள்ளே சென்றான்.

“என்ன இங்க வந்து உட்கார்ந்திருக்க மது ? என்ன பார்க்கற ?”, என்று வினவியபடி அவளருகில் அமர்ந்தான்.

“பாட்டி, தாத்தாவோட போட்டோஸ் பார்க்கறேன் ஆதி. எப்ப வந்தாலும் இதை ஒரு தரமாச்சம் பார்த்துடுவேன். இந்த வாட்டிதான் தனியா பார்க்கறேன். இல்லைனா நோனா பக்கத்துல உட்கார்ந்து கமெண்ட் அடிச்சிகிட்டு இருக்கும்.”, வாடிய புன்னகை ஒன்று வந்தது மதுவின் முகத்தில்.

“ஹே… ரிலாக்ஸ்.  இந்த முறையும் நீ தனியா பார்க்கவேண்டாம். எனக்கு சொல்லு இதை பத்தி.  இதை நான் பார்த்ததில்லை.”

“பாட்டி அதுக்கு பிடிச்ச போட்டோ எல்லாம் இந்த ஆல்பத்துலதான் வெச்சிருக்கு. இதை, நான் எடுத்துக்கட்டுமா ஆதி, ஒரு காப்பி ப்ரிண்ட் போட்டு வேணா உனக்கு குடுக்கறேன், பட் இது எனக்கு எடுத்துக்கவா ?”,  அவள் கண்ணில் ஒரு தவிப்பு தெரிய, சரி என்று தலையாட்டின ஆதி,

“என்ன ஸ்பெஷல் இதுல. அதை சொல்லேன்.”, என்று ஊக்கினான்.

“இதை முதல் முதலா பார்த்தது ப்ளஸ் 2 லீவுக்கு வந்த போது.  அப்பதான் பாட்டியோட லவ் ஸ்டோரி தெரிஞ்சுது. தாத்தா மாதிரி ஒருத்தர் சான்சே இல்லை. “, மது சொல்லிக்கொண்டே போக,

“இரு இரு, நீ பாட்டு சொல்லிகிட்டே போற ? பாட்டி லவ் மாரேஜா ? அதுவே தெரியாம போச்சே ? எப்ப ? எப்படி ?”, கதை கேட்க ஆர்வமானான்.

“பாட்டிக்கு பெரியவங்க பார்த்து வெச்ச கல்யாணம்தான். முதல் வருஷம் முடிஞ்சும் குழந்தை இல்லைன்னு  பாட்டியை அதோட மாமியார் தொல்லை பண்ண ஆரம்பிச்சாங்க. பாட்டி அழும் போதெல்லாம், தாத்தா, பெரியவங்க ஆதங்கத்துல பேசினா பொறுத்துப் போன்னு இத்துப் போன டயலாக்கேதான் சொல்லிருக்கார். அவர் அம்மா பங்கஜத்தை ஏன்னு ஒரு வார்த்தை கேட்கலை.”

“ அப்ப லவ் மாரேஜ்ன்ன ?”

“ஆஹ்… கல்யாணத்துக்கு முன்னாடி வந்தாதான் லவ்வா ?. இப்ப கதை சொல்லவா இல்லை வெறும் கிளமாக்ஸ் சொல்லவா ?”, மது கடுப்பாகிக் கேட்க,

“கூல்.. கூல். நீ சொல்லு, நான் பொறுமையா கேக்கறேன். மீட்டிங் கான்சல், அப்பறம் லன்ச் டைம். நோ ப்ராப்ளம்.”, ஏதோ ஒரு வகையில் அவள் வருத்தம் விட்டு வேறு மூட் சென்றதே போறும் என்ற திருப்தியில் சமாதானப்படுத்தினான் ஆதி.

“ஹ்ம்ம்ம்… ராமசாமி தாத்தாவுக்கு கல்யாணமான ஒரு வருஷத்துல, அவர் தம்பி கோவிந்தன் , அதான் எங்க தாத்தாவுக்கு கல்யாணமாச்சு. அடுத்த ரெண்டாவது மாசமே பாட்டி மங்களமும் மாசமானாங்க. இது போறாதா மக்களுக்கு. ஆளாளுக்கு தனம் பாட்டியை விசாரிக்க ஆரம்பிச்சாச்சு. ‘இப்பதான் கல்யாணமாச்சு, தோ மங்களம் உண்டாகிட்டா, உனக்கு எதாச்சம் உடம்புல ப்ரெச்சனையா ? இல்லை தெய்வ குத்தமான்னு.’ ”

“ வேலையத்தவங்க. பாவம் பாட்டி. எப்படி சமாளிச்சாங்க ? தாத்தாதான் ஹெல்ப் பண்ணாறா ?”, என்றான் ஆதி.

“இல்லை. அவர் தொழில்ல பிசியா இருந்தார் உன்னாட்டம்.”, ஆதியை விலாவில் இடித்தவாறே ஓட்டினாள். சிரித்த ஆதி, மேலே சொல்லென சைகை காட்ட,

“யார் என்ன கோவில், விரதம்னு சொன்னாலும் தனம் பாட்டிய செய்ய வெச்சாங்க அவங்க மாமியார் பங்கஜம். அதுக்கும் வெட்டி சமாதானம்தான் சொல்லிகிட்டு இருந்தார் நம்ம ராமசாமி தாத்தா.”

“சரி, கோவில் விரதமெல்லாம் சாதாரணம்தானே.”, என்றான் ஆதி.

“ம்ம்.. இங்க விரதம்ன்னா சாமிக்கு படைச்சத தட்டு இலையெல்லாம் இல்லாம வெறும் மண்ல வெச்சு சாப்பிடணும். மண்சோறுன்னு பேரு. வேப்பிலைய மட்டும் ட்ரெஸ் மாதிரி கட்டிகிட்டு தீச்சட்டி எடுக்கணும். தீ மிதிக்கணும். இப்படி நிறைய..”, மது சொல்லவும்,

“என்ன ஒரு  அராஜகம் ? இதுக்கும் ராமசாமி தாத்தா ஒண்ணும் சொல்லலையா ? இதுக்கும் மேல பாட்டி அவரை லவ் பண்ணுச்சா ? வேஸ்ட்.”, ஆதி வெறுப்பில் சொல்ல,

“இரு. இன்னும் கதை முடியலை.  மங்களம் பாட்டிக்கு பிரசவம் பார்க்க  ராமசாமி தாத்தாவோட அத்தை பாக்கியம் வந்திருந்தாங்க.  வீட்டு நிலவரத்தை புரிஞ்சிகிட்டதும்,  ராமசாமித் தாத்தாவுக்கு தன்னோட பொண்ணு தாமரைய ரெண்டாம் தாரமா கட்டி வெக்கணும்னு முடிவு செஞ்சிட்டாங்க.”

“ஹே … நீ தமிழ் சினிமா, சீரியல் கதை சொல்றயா? பல்ப் குடுக்கப் போறியா?”, ஆதி கலாய்க்க,

“அந்த ரேஞ்சுக்குத்தான் நடந்துச்சு. பாட்டி சொல்லும்போது பாவமா இருந்துச்சு. அந்த பாக்கியம் சரியான வில்லி.  பேசி பேசியே ராமசாமி தாத்தாவோட அப்பா அம்மாவை கரைச்சிருக்காங்க. தனம் பாட்டியை தள்ளி வெச்சிட்டு அவங்க பொண்ணை கல்யாணம் செய்து வைக்க. அவங்க ஓகே ஆனதும், தனம் பாட்டிக்கு இன்னும் டார்ச்சர்.”

“இப்படி வளைச்சு வளைச்சு ப்ரஷர் போட்டா, குழந்தை வந்துடுமா? அறிவுகெட்டவங்க.”

“ஹ்ம்ம்… ராமசாமி தாத்தாவுக்கு தெரியாம, தனம் பாட்டி கிட்ட வாரிசு வேணும் என் புள்ளைக்கு, உன் புருஷன கிட்ட, ரெண்டாவது கல்யாணம் செய்துக்க நீ சொல்லுன்னு தாத்தா இல்லாத போதெல்லாம் ப்ரெச்சனை பண்ணிருக்காங்க. ஒரு கட்டத்துல தனம் பாட்டியே தாத்தாகிட்ட அழுதுகிட்டே வேற கல்யாணம் செய்துக்கங்கன்னு சொல்லிடுச்சு.”

“சே … எல்லாரும் போய் சேர்ந்துட்டாங்க. இல்லைன்னா நிக்க வெச்சு கேள்வி கேட்டிருக்கலாம்.”, ஆதி சொல்லவும்,

“அதேதான். பாட்டி சொன்னதை கேட்டதும், தாத்தா துருவி துருவி கேட்டு, அவர் அம்மாவும், அத்தையும்  போட்ட ப்ளான், அதுக்கு அவர் அப்பாவும் உடந்தைன்னு கேட்டதும், சரி நாளைக்கு பேசலாம்னு படுத்திட்டார்.”

“என்ன…சப்புன்னு முடிச்சுட்ட? “

“அதுக்கப்பறம்தான் கதையே ஆரம்பிக்குது.  கேளு. பாட்டி எனக்கு சொன்ன மாதிரியே உனக்கு நான் சொல்றேன்.”, என்றாள்.

மறு நாள் மதியம் போல தன் நண்பனுடன் வீட்டுக்குச் சென்றார் ராமசாமி. வீட்டில் அனைவரும் அந்த நேரம் இருப்பார்கள் என்று தெரியும்.

வரவேற்பரையில் அமர்ந்திருந்த அவர் தந்தையிடம்,

“அப்பா, இவன் என் சினேகிதன் ரெங்கனாதன். திருப்பூர்ல தொழில் செய்யறான்.”, என்று அறிமுகப் படுத்தினார்.

வரவேற்று அமர்ந்ததும்,  உள்ளறையை நோக்கி, “தனம்.”, என்று குரல் கொடுத்தார். வெயில் நேரமென்பதால், தனம் குவளைகளில் மோர் கொண்டு வந்து, விருந்தினருக்கும், கணவருக்கும், மாமனாருக்கும் கொடுத்தார்.

பருகியவாறே, உள்ளே செல்லவிருந்த தனத்தை அழைத்து, “ ரெங்கா, இதுதான் தனம். ரொம்ப நல்ல குணம்.”என்றவர், தனம் புறம் திரும்பி,

“ரெங்கா என் நண்பன். ஒரு பெண் குழந்தையை பெத்து குடுத்துட்டு அவன் மனைவி போன வருஷம் இறந்துட்டாங்க. இப்ப அந்த குழந்தையைப் பார்த்துக்க ரெங்கா வேற கல்யாணம் செய்யறதா முடிவு செய்திருக்கான்.”

கணவர் கூற, “இதையெல்லாம் எதற்கு தன்னிடம் கூறுகிறார் ?”, என்று முழித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் தனம். ராமசாமியின் பெற்றோருக்கும் அதே சந்தேகம்தான்.

“உன்னைத்தான் ரெங்காவுக்கு கல்யாணம் செய்யலாமான்னு பேச வந்திருக்கோம்.”, என்று நிதானமாய் ராமசாமி இடியை இறக்கினார்.

“என்னப்பா சொல்ற ?”

“ராமசாமி… என்ன பேச்சு பேசற ?” என்று அவர் தாய் தந்தை கத்த, அதிர்ச்சியில்  உறைந்து கணவனையே பார்த்துக்கொண்டிருந்தார் தனம்.

“தனம் உனக்கு தெரிஞ்சுதான் நடக்குதா இதெல்லாம் ?”, என்று பங்கஜம் மருமகள் மீது பாய்ந்தார்.

“அம்மா. அவளுக்கு தெரியாது.  அவதான் நேத்து சொன்னா, என்னை தள்ளி வெச்சிட்டு நீங்க வேற கல்யாணம் செய்துக்கங்கன்னு. ”

“சரி. அதுக்கும் நீ செய்யறதுக்கும் என்னடா சம்மந்தம்?”, அவர் தந்தை கேட்க,

“ஹ்ம்ம்… இன்னொரு கல்யாணம் செஞ்சா எனக்கு குழந்தை பிறக்கும்னா, அதே மாதிரி, தனமும் வேற கல்யாணம் செஞ்சா அவளுக்கும் குழந்தை பிறக்கலாம்மில்ல ? மலடின்னு அவபெயரை சுமக்க வேணாமே.”

“கடவுளே…”, முனகிய தனம் காதைப் பொத்தயபடி உள்ளே செல்ல,

“டேய், எந்த ஊர்லடா இந்த அநியாயம் நடக்கும் ?”, பங்கஜம் கோவமாய்க் கேட்டார்.

“இல்லாததை சொல்லலை மா நான். மூணு பொண்டாட்டி கட்டியும் வாரிசில்லாம போன ஈஸ்வரன் மாமா மாதிரி ஆகிடக்கூடாது பாரு. அதனால, ரெங்காவோட சித்தப்பா பொண்ணு கை குழந்தையோட சின்ன வயசுலயே புருஷனை இழந்துட்டு நிக்கறாளாம். ஏற்கனவே குழந்தை பெத்த அவளை நான் கல்யாணம் செய்தா, அப்ப தெரிஞ்சிடும் இல்லையா?”

“ஏன் மருமகனே, என் பொண்ணு தாமரை இருக்க, நீங்க ஏன் இப்படி தாலியறுத்தவளை முடிக்கறீங்க ?”, அத்தை ஆத்தமாட்டாமல் கேட்டுவிட்டார்.

“உங்க பொண்ணுக்கும் குழந்தை பிறக்கலைன்னா? குறை எனக்கா இல்லை உங்க பொண்ணுக்கான்னு தெரியாது பாருங்க? கூட பணம் பணத்தோடதான் சேரும் அத்தை. அதனால், எப்படி பார்த்தாலும், தாமரையை நான் கட்டறதா இல்லை. அந்த கனவை விட்டுட்டு உங்க வேலையை பாருங்க. எங்க வீட்டு விஷயம் நாங்க பார்த்துக்கறோம்.”, வேண்டுமென்றே அவர்கள் ஏழ்மையை குத்திக் காட்டி பேசி ராமசாமி முடிக்க, ஈயாடவில்லை பாக்கியம் அத்தை முகத்தில். தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய்விட்டார்.

அடுத்து யார் என்ன கேள்வி கேட்கப் போகிறீர்கள் என்று  தன் தாய் தந்தையைப் பார்த்தார்.

“வேணாம் ராமா இந்த விபரீத யோசனை. உனக்கும் தனத்துக்கும் சின்ன வயசுதான். இன்னும் கொஞ்ச வருஷம் பார்க்கலாம். “, அவரது தந்தை இறங்கி வரவும்,

“எத்தனை வருஷமானாலும் எனக்கு ரெண்டாவது கல்யாணம் பத்தி பேசினா, முதல்ல தனத்துக்கு ஒரு கல்யாணத்தை செய்து வெச்சிட்டுதான் நான் செஞ்சிக்குவேன். என்னை நம்பி வந்தவளை தனியா விட மாட்டேன். அதை எப்பவும் மனசுல வைங்க.”, அழுத்தம் திருத்தமாய் கூறிவிட்டு நண்பனோடு சென்றுவிட்டார் ராமசாமி.

அவர் சென்றதுதான் தாமதம் என்று பங்கஜமும் மங்களமும் தனத்தை கண்டபடி ஏசிப் பேச, நொறுங்கிப் போனவராய் தனம் சமயலறையில் இருந்த மண்ணெண்ணையை தன் மேல் ஊற்றிக்கொண்டு அடுப்பருகில் செல்ல, அந்த நேரம் உள்ளே வந்த வேலைக்காரப் பெண் பார்த்துவிட்டு , தனத்தை பிடித்துத் வெளியே இழுத்து வந்துவிட்டாள். அவள் போட்ட சத்தத்தில் அவனைவரும் வர, தனம் நின்ற கோலம் பார்த்து அதிர்ந்துவிட்டனர்.

ராமசாமி அப்போதுதான் வீட்டிற்கு வந்தவர், நொடியில் என்ன நடந்திருக்கும் என்று கண்டு கொண்டார். மனைவியை குளிக்க அனுப்பிவிட்டு, குடும்பத்தை வறுத்தெடுத்துவிட்டார். அடுத்த அரை மணி நேரத்தில், ராமசாமியும் தனமும் அவர்கள் உடமைகளுடன் கோவையைவிட்டு கிளம்பிவிட்டனர்.

மது சொல்லி முடிக்க, ஒரு நிமிடம் அமைதி.

“ஹ்ம்ம்… அந்த காலத்துல எவ்வளவு பரந்த சிந்தனை தாத்தாவுக்கு. ஆனா பாட்டி எப்படி இதுக்கு ஒத்துகிட்டு இருந்திருப்பாங்க?” ஆதி கேட்க,

“ பாட்டியும்  கொஞ்ச வருஷம் கழிச்சு இதையே கேட்டிருக்காங்க தாத்தாகிட்ட. ‘என்னை வேற கல்யாணம் செய்ய சொன்னியே, என்னால இன்னொரு பொண்ணை உன் இடத்துல வெக்க முடியும்னா , அப்ப உன்னாலயும் என் இடத்துல வேற ஒருத்தரை வெக்க முடியணும். இல்லை உன்னால முடியாதுன்னு தோணுதுன்னா, என்னால மட்டும் முடியும்னு எப்படி நினைப்ப? ‘ன்னு கேட்டிருக்கார்.  செம்மல்ல?”, மது கேட்கவும்,

“ஹ்ம்ம்.. பாட்டி இதுக்கப்பறம்தான் லவ் பண்ணுச்சா?”

“நீ அதுலயே இரு. “, என்று அவனை கடிந்தவள்,

“இல்லை. அவங்க கிளம்பி ஊட்டிக்கு தாத்தாவோட ஃப்ரெண்டு வீட்டுக்கு வந்துட்டாங்க. ரெண்டு நாள் தனம் பாட்டியோட இருந்துட்டு, அங்கிருந்து, தனம் பாட்டியோட சித்தி வீட்டுக்கு போய் பாட்டியை கொஞ்ச நாள் இருன்னு விட்டிருக்கார். பாட்டிக்கு அம்மா மட்டும்தான், அவங்களும் இவங்க கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச மாசத்துலயே தவறிட்டாங்க. பாட்டியோட  தம்பிக்கு வாய்ச்சவ ,அதான் உங்க பாட்டி, தனம் பாட்டியை தள்ளியே வெச்சிட்டாங்க. அவங்க இறந்த அப்பறம்தான் உங்க அம்மாவோட எல்லாம் பழக ஆரம்பிச்சதாம். அதனால அந்த சித்திதான் தனம் பாட்டிக்கு ஆறுதல்.”

“பாட்டியை அங்க விட்டுட்டு எங்க போனார் தாத்தா ?”

“ கோவைக்கு , அவர் வீட்டுக்குத்தான்.”, மது சொல்லவும் ஆதி முழித்தான்.

Advertisement