Advertisement

அத்தியாயம் – 15
சபரி வந்து அழைக்கவும், திரும்பினாள் மது.
“என்ன, விசாரிச்சிட்டு போயிட்டாங்களா? சிவாஜிக்கு மிஞ்சின நடிப்பா இருந்திருக்குமே.”, என்று கேட்டாள் ஒரு ஏளனப் புன்னகையுடன்.
“அப்படியிருந்தா பரவாயில்லையே மது. ப்ரியா அப்பா, ஆதியை ப்ரியாவுக்கு கல்யாணம் செய்ய கேட்டு வந்திருந்தார். இவ என்னவோ ப்ளான்ல இருக்கா.”, சபரி சீரியசாய் சொன்னான்,
“அடேயப்பா, நான் எதிர்பார்த்ததைவிட வேகமாத்தான் இருக்கா.”, புருவம் உயர்த்தி மது சொல்லவும்,
“என்னது, அவ வரப்போறது உனக்கு தெரியுமா? ஆதிகிட்ட சொல்லிருக்கலாமில்ல? கொஞ்சம் அவனும் கவனமா இருந்திருப்பான்.”, சபரி ஆதங்கமய் கேட்க, அதை தலையசைத்து நிராகரித்தவள்,
“ என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்லு.”, என்றாள். நடந்ததை விவரித்தவன், முடிவில்
“அந்த பொண்ணு வாட்டர் டாங்கை திறந்துவிட்டது ஆதிக்கில்லை, அவங்க அம்மாவுக்கான நடிப்புன்னு இப்பதான் தெரியுது. ஆன்ட்டி அவ ஆதி மேல ஆசைப்பட்டதுக்கு ஆதிதான் காரணம்னு சொல்லிகிட்டு இருக்காங்க. விட்டா அவங்களே ஆதியை கட்டாயப்படுத்தி கட்டி வெச்சிடுவாங்க போல.” சபரி புலம்பும் மோடுக்குப் போய்விட்டதை உணர்ந்தவள்,
“ஆதிக்கு ப்ரியா மேல அப்படியெல்லாம் இஷ்டம் இல்லைன்னு ஆன்ட்டிக்குத் தெரியும். நேத்துதான் எங்கிட்ட சொன்னாங்க. வா போய் பேசலாம்.”, என்று உள்ளே எழுந்து சென்றாள். அதற்குள் ஆதி தன் அம்மாவிடம் விளக்க முயற்சித்துக்கொண்டிருந்தான்.
மதுவைப் பார்த்த, சரஸ்வதி, “நீ கூட நேத்து சொன்னதான மது? ப்ரியாவுக்கும் ஆதின்னா இஷ்டம்னு? அப்படி ஒரு நம்பிக்கையை இவந்தானே குடுத்திருக்கணும் ?”, என்று கேட்க, அதுவரை அம்மாவிடம் பொறுமையை இழுத்து வைத்து பேசிக்கொண்டிருந்த ஆதி, அவளைப் பார்த்து கொதித்து விட்டான்.
“உன்னாலதான் இது இவ்ளோ தூரம் வந்து நிக்குது. ஒழுங்கா எங்களோட நீயும் வந்திருக்கலாமில்ல? அவளை பார்த்தாலே ஓடினதுல இப்ப அவ என்னமோ நானுமு அவளும் தினமும் டுயட் பாடின ரேஞ்சுக்கு பேசறா. இவங்களும் பொண்ணு மனச கலைச்ச பாவம் அது இதுன்னு பேசறாங்க.”, எழுந்து அவளிடம் சென்ற தோரணையில் கைகலப்பாகிவிடும் என்று பயந்து சபரி மதுவின் முன் வந்து நின்றான். மதுவோ அசராமல் நின்றிருந்தாள்.
“டேய், பொறுமையா பேசிக்கலாம். புரிய வெச்சிக்கலாம். இருடா.”, என்று ஆதியை கைப்பிடித்து திரும்ப சோஃபாவிற்கு அழைத்துச் சென்றான்.
“ஹூம்.. நீதான் பயப்படுற. அவளைப் பாரு. அசராம நிக்கறா. தள்ளு, ஒண்ணும் பண்ணமாட்டேன் அவளை.”, என்று பொத்தென்று சோஃபாவில் அமர்ந்தான்.
“உங்க ரெண்டு பேருக்கும் இடையில சிக்கின நாந்தாண்டா பயப்படணும். “, என்று சபரி முனக, அவன் பின்னேயே வந்த மது, “மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமா புலம்பற ப்ரோ.”, என்று சொல்லிய படி, சரஸ்வதி அருகில் சென்று அமர்ந்தாள்.
“ஆதி. வந்த முதல் நாள்ளேர்ந்து அவ என்னை கத்தரிச்சுவிட்டா. அப்பறம் நான் எப்படி உங்ககூட சுத்துவேன்?  அட்டை பூச்சி மாதிரி ஒட்டிக்கறான்னு நான் சொன்னபோதும், அவ நல்ல பொண்ணு, கொஞ்சம் அலட்டுவா அவ்ளதான்னு ப்ரியாவுக்கு சப்போர்ட்டா பேசின. அதுக்கு மேல நான் என்ன செய்ய?”, மது நியாயமாகக் கேட்டாள்.
“தினமும் வீட்டுக்கு வரவளை நான் என்ன வராதேன்னா சொல்ல முடியும்? இருக்கற வரை கம்பனி குடுக்கறான்னுதான் நினைச்சேன். இப்படி ஒரு ப்ளான் இருக்கும்னு நான் யோசிக்கலை.“, ஆதி சொல்லவும்,
“அப்ப எதுக்கு அவளை கூட்டிக்கிட்டு டின்னர் போன ஆதி?”, சரஸ்வதி கேட்க,
ஆதியால் உண்மையைக் கூற முடியவில்லை. மதுவுடன் பேசவும், பழகவும் மிகவும் துடித்த மனதைக் கட்டுப் படுத்தவே, மாலைப் பொழுதுகளை ப்ரியாவுடன் அவன் செலவிட்டது. மதுவிற்கு அதில் முதல் நாள் போன்று பொறாமை ஏற்படுமோ என்று ஒரு நப்பாசை, ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை என்றதும், கடந்த சில நாட்களாக ப்ரியாவை வெளியில் அழைத்துச் செல்லவில்லை.
“மா, ரிலாக்ஸ் செய்ய டின்னர் போனேன், அப்பவும் அவளை பத்து மணிக்கு முன்னாடி அவ வீட்ல விட்டுட்டு வந்திருவேன். மிஞ்சி போனா ஒரு நாலு வாட்டி போயிருப்போம்.”, ஆதி சொல்லவும்,
“ஏன் , ரிலாக்ஸ் செய்ய மதுவை கூட்டிகிட்டு போகவேண்டியதுதானே?”, என்ற சரஸ்வதியை எப்படி சமாளிப்பது என்று உள்ளுக்குள் விழித்தான்.
“அத்தை, எதுக்கு இவ்ளோ டென்ஷன். ப்ரியாவுக்கு பிடிச்சிருந்தா ஆதிகிட்ட கேட்டிருக்கணும். அதை விட்டுட்டு நேரா அவ அப்பாவை கூட்டிட்டு வந்து ஆதியை எதுக்கு கார்னர் செய்யணும்? ஆதியை நிறைய பொண்ணுங்களுக்கு பிடிக்கும்தான். அதுக்காக எல்லாரையும் கல்யாணம் செய்துக்க முடியுமா?”
“இல்லை மது, அந்த பொண்ணு கண்ணீர் விட்டதும்…”
“அப்படியே உருகிட்டீங்களாக்கும்?  மூணு மாசத்துக்கு முன்னாடி ரோஹித்கூட காதாலாகி கசிந்துருகி கிடந்தா.  பாக்கறீங்களா? ஆதியைப் பார்த்ததும், அவனை கழட்டிவிட்டுட்டா. இப்ப அவசரமா இந்த கல்யாண பேச்சு கூட, ஆதி கிளம்பி பெங்களூர் போயிட்டா பிடிக்கமுடியாதேன்னுதான்.”, மது பேச பேச,
“மது, அவளும் சின்ன பொண்ணுதான். இப்படியெல்லாம் பேசக் கூடாது.”, என்று சரஸ்வதி கண்டித்தார்.
“அத்தை , உங்களை மாதிரி ரொம்ப நல்லவங்களா இருக்கறதும் இந்த காலத்துல தப்பு. நான் அவளைப் பத்தி தப்பா எதுவுமே சொல்லலை. நீங்களே பாருங்க.”, என்று முகனூல் பக்கம் ஒன்றை தேடிப்பிடித்துக் காட்டினாள்.
கன்னத்தோடு கன்னம் இழைத்துக்கொண்டு ஒருவனோடு இதய வடிவ  பொம்மையை இருவரும் பிடித்துக்கொண்டிருப்பதைப்போல  ப்ரியா சிரித்துக்கொண்டிருந்தாள்.
சபரி எழுந்து வந்து எட்டிப்பார்த்தவன், “ இது போதுமே சாட்சிக்கு. எப்படி மது உனக்குத் தெரியும்?”,  சரஸ்வதியிடமிருந்து வாங்கி சங்கரி பார்த்துக்கொண்டிருந்த போனை எடுத்து ஆதியிடம் காட்டினான்.
“அதுல கொஞ்சம் தள்ளியிருக்க பொண்ணு என் ஃப்ரெண்ட் நந்தினி. அவளை டாக் செய்து இந்த போட்டோ இருக்கவும், நான் பார்த்த போது தெரிஞ்சுது. இங்க ப்ரியாவைப் பார்த்ததும் நந்தினி கிட்ட கேட்டா, கதை கதையா சொன்னா. ரோஹித்தும் கோவைலதான் படிக்கறான். “, மது சொல்லவும்,
“போதுமா அவ லட்சணம்? இனி பெண் பாவம் அது இதுன்னு பேசாதீங்கம்மா. நான் ஹாண்டில் செய்துக்கறேன். இத்தோட இதை விடுங்க.”, என்று ஆதி முற்றுப்புள்ளி வைத்தான்.
சங்கரியும், சரஸ்வதியும் அவர்கள் அறைக்குச் செல்ல, ஹாலில் இருந்தது இவர்கள் மூவர் மட்டுமே.
“இந்த போட்டோவ சேவ் பண்ணிட்டேன்டா ஆதி. இனியும் ப்ரெச்சனை செய்தா  பார்த்துக்கலாம்.”, சபரி சொல்ல,
“இல்லை. அவ அம்மாவை லாக் செய்ய, தற்கொலைக்கு ட்ரை பண்றாமாதிரி கூட நடிப்பா. அதுக்கு சான்ஸ் குடுக்கக் கூடாது. மது, எனக்கு இன்னும் கொஞ்சம் போட்டோ வேணும், முடியுமா?”
மது அவள் தோழியிடம் பேச, சபரி, “டேய் அப்படிகூடவா செய்வா? நீ அந்த போட்டோ வெச்சிகிட்டு என்ன செய்யபோற?”
“அவங்க அப்பாவைப் போய் பார்க்கப்போறேன்.இதயெல்லாம் காட்டி, ஏமாளி நான் இல்லை. இதுக்கும் மேல உங்க பொண்ணு டிராமா போட்டா நான் என்ன செய்வேன்னும் சொல்லிட்டு வருவேன். “, அவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே கைபேசியில் வாட்ஸப் வந்ததுக்கான அதிர்வு தெரிய, திறந்துபார்த்தவன் முகம் சுளித்து, “இதுல ரெண்டு ட்ராக் ஓடுது போல.  சின்ன வயசுலர்ந்து தெரியுமே நல்ல பொண்ணுன்னு நினைச்சேன்டா. ச்சை..” என்றான்.
“ஒவ்வொரு முறையும் காப்பாத்திவிட நான் இருக்க மாட்டேன்.  நீதான் உஷாரா இருக்கணும். “, என்று சொல்லியபடியே மது வந்தாள்.
“ம்ம்… பொண்ணுங்க விஷயத்துல இவன் கொஞ்சம் வாத்துதான் மது. நான் கிட்ட இருந்து பார்த்துக்கறேன்.”, சபரியும் ஒத்து ஊத, “ உங்க நேரம்டா பேசுங்க. ஆனா இனி அவ அப்பாகிட்ட பேசறது என்னோட ஏரியா. எப்படி பேசறன்னு வந்து பார்த்து கத்துக்கோடா. அவர் கடைக்கு போலாம் வா.”, சபரியை இழுத்துக்கொண்டு வாசல்வரை சென்றவன்,
“மது, தாங்க்ஸ். அம்மா சொல்லிருந்தாலும் ப்ரியாவை கல்யாணம் செய்ய சம்மதிச்சிருக்க மாட்டேன். ஆனா அம்மா என்மேல நிறைய வருத்தப்பட்டிருப்பாங்க. அதை உன்னாலதான் ஆரம்பத்துலயே ஈசியா சமாளிக்க முடிஞ்சுது.”
வழக்கமான அவளது தோள் குலுக்கலுடன்  ஒரு சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது. அவர்கள் சென்றதும் தனதறைக்குத் திரும்பியவள் மனம் முழுதும் யோசனைகள்.
‘இப்ப எதுக்கு ஊருக்கு முந்தி அவனை காப்பாத்திவிட்ட? அவனே சமாளிச்சிருப்பாந்தானே? அத்தை திட்டினதும் ஆதி டென்ஷனானதும் உனக்குத் தாங்கலை. எவிடென்ஸ் எடுத்துக் குடுக்கற. நேத்து கூட ஆதியைத் தள்ளி வைக்கணும் வீர சபதம் போட்ட. மதியம் வரைக்கும் கூட தாங்கலை.”, அவள் மனமே சாடியது.
‘உண்மையை சொல்லு. ப்ரியா செஞ்ச சொதப்பல்ல ஒரு பக்கம் குத்தாட்டம் போடறதான? அவங்க டின்னர் போகும்போது மறைஞ்சு பார்க்கறதும், ஆதி வர வரைக்கும் கடிகாரத்தைப் பார்த்துகிட்டு அல்லாடிகிட்டு இருக்கறதும் இனி இல்லை. அப்பாடா.’, மனசாட்சியின்  பேச்சுகளுக்கு விசனப்பட்டாள் மது.
‘இன்னும் ரெண்டு வாரம், அப்பறம் கண் காணாத தூரம் போயிட்டா, இப்படியெல்லாம் தோணாது. கொஞ்ச நாள்ல இந்த நினைப்பையெல்லாம் மூட்டை கட்டி வெச்சிடலாம். அதான் ஏற்கனவே பல நிராசை மூட்டைங்க இருக்கே. கூட இன்னொண்ணு இருந்துட்டு போகட்டும்.’
யோசித்தபடியே கண்ணயர்ந்தவள் கைபேசியின் சத்தம் கேட்டு விழித்தாள்.
அழைப்பது ஆதி என்று தெரிந்து எடுத்தாள், “ ஹலோ…”.
“நாங்க வந்தாச்சு. கீழ வா சாப்பிடலாம்.”,என்று சொல்லி வைத்தான் ஆதி.
அப்போதுதான் மணி பார்த்தவள், மதியம் இரண்டு என்றதும், விரைவாய் முகம் கழுவி, இறங்கி வந்தாள்.
“தூங்கிட்டேன் அத்தை. சாரி ஆன்ட்டி. நீங்க சாப்பிட்டாச்சா?”, என்று கேட்டபடி ஆதியின் எதிரில் அமர்ந்தாள்.
“ஆச்சுமா, நீங்க யாரும் வரதா தெரியலை. இப்பதான் நாங்க முடிச்சோம்.  நான் போடறேன். சாப்பிடுங்க.”, என்ற சரஸ்வதி மூவருக்கும் பரிமாரினார்.
சபரியைப் பார்த்து, “என்னாச்சு?”, என்று மது கேட்க,
“ப்ரியா அப்பாவை பக்காவா ட்யூன் செஞ்சாச்சு. இனி ப்ரியா இவனைப் பார்த்தாலே வேற பக்கம் தெரிச்சு ஓடுவா. அப்படியே எதாச்சம் சூயிசைட் அது இதுன்னு ட்ராமா செஞ்சாலும் செல்லாதபடிக்கு பேசியாச்சு. அதை நான் ரெகார்டும் செஞ்சிட்டேன். ஒரு எவிடென்சுக்கு.”, சபரி திருப்தியாக சொல்லியபடியே சாப்பிட, ஆதி மதுவைத்தான் பார்த்திருந்தான்.
திருமணம் குறித்து ப்ரியாவின் தந்தை பேசியபோது மதுவின் முகம் மனதில் பளிச்சிட்டது அவனை அசைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. ‘தனக்கு அவ்வளவு நெருக்கமாகிவிட்டாளா? இரண்டு வாரத்தில் லவ்வா என்று ப்ரியாவிடம் பேசியது என்ன, இப்போது அதே இரண்டு வாரத்தில் தான் யோசிப்பது என்ன? அவளுக்கும் என்னை இந்த அளவு பிடிக்குமா? கேட்கலாமா இல்லை இன்னும் கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாமா?’
முகத்தில் மாற்றம் எதுவும் காட்டாது அவன்பாட்டிற்கு சாப்பிடவும், மது சரஸ்வதியுடனும் சபரியுடனும் வளவளத்துக்கொண்டிருந்தாள். சங்கரி ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.
சரஸ்வதியின் கவனிப்பில் சற்று நிறையவே சாப்பிட்ட மது, “போதும் அத்தை, வீட்ல நான் சாப்பிட்டேனான்னு கேக்க கூட ஆளிருக்காது. நானும் பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு போவேன். நீங்க இப்படி கவனிக்கவும் அளவு தெரியாம சாப்பிட்டேன்.”, என்று சாதாரணமாக சொல்ல, கேட்டவர்களுக்குத்தான் கஷ்டமாகிப்போனது.
சட்டென்ற அமைதியில், என்ன சொன்னோம் என்று உணர்ந்த மது, தோளைக் குலுக்கி, “அச்சோ, இதுக்கு என்ன ஃபீலிங்? நான் என்ன சின்ன குழந்தையா? கேக்கவும் ஆளில்லாம, சாப்பாட்டுக்கும் கஷ்டபடறவங்க எவ்ளோ பேர் இருக்காங்க. வேணுங்கறதைச் சாப்பிட எந்த கஷ்டமும் இல்லை எனக்கு. அப்பறம் என்ன? மது ஹாப்பிதான்.”, என்று சிரிக்க சபரியும் சட்டென்று பேச்சை மாற்றினான்.
“அஞ்சு மணிக்கு கிளம்பலாம் ஆதி. ட்ராஃபிக் இருந்தாலும் சரியா போயிடலாம். ஏர்போர்ட் பக்கத்துலயே டின்னர் முடிச்சிகிட்டு போயிடலாம் . சரியா இருக்கும். என்ன சொல்றீங்க ஆன்ட்டி?”, என்று கேட்க, அடுத்து சபரியும் சரஸ்வதியும் அன்றிரவு பெங்களூரு செல்வதற்கான ஏற்பாடுகளில் பேச்சு சென்றது.
மாலை நான்கு மணி போல், ஆதி அன்னையைத் தேடி அவர் அறைக்கு வந்தான்.
“அம்மா, பாக் செய்ய எதுவும் ஹெல்ப் வேணுமா?”
“இல்லை ராஜா. கொஞ்சம்தானே, நான் முடிச்சுட்டேன்.  நீ இப்ப ஃப்ரீயா ஆதி?”, அவன் முகம் பார்த்து சற்று தயக்கமாக கேட்கவும்,
“மா… என்ன இது இப்படி கேக்கறீங்க.  வேலை இருந்தாலும் ஃப்ரீ பண்ணிக்கன்னு சொல்லணும். உங்களுக்கில்லாத நேரமா?”, கட்டிலில் சரஸ்வதியருகே அமர்ந்து அவர் கையை பிடித்துக்கொண்டான்.
“அது… உங்க அப்பாவை கேட்குற பழக்க தோஷம். எதாச்சம் வேலையா இருக்கப் போறயோன்னு …”
ஆதிக்கு சுருக்கென்றது. சுதந்திரமாய் கணவன், மகனிடம் பேசக் கூட தயங்குவது வலித்தது. எத்தனை நாட்கள் சொல்ல வந்ததை இவர்களுக்கு நேரமில்லை என்று முழுங்கினாரோ.
“அம்மா… அப்பா பத்தி தெரியாது, ஆனா எங்கிட்ட இந்த தயக்கம் எப்பவும் உங்களுக்கு இருக்கக் கூடாது. என்ன தலை போற வேலைன்னாலும் உங்களுக்கு அப்பறம்தான். எந்த நேரமும் உங்களுக்குத் தோணினா கூப்பிடுங்கமா. தயங்காதீங்க. ப்ளீஸ்.”,  முகம் சுருக்கி ஆதி வருத்தப்படவும், சட்டென்று முகத்தில் புன்னகையை பூசிக்கொண்ட சரஸ்வதி. “எதுவும் முக்கியம்னா, கண்டிப்பா கூப்பிடுவேன் ஆதி. நீ வருத்தப்படாதே.”
:சரி. நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க முதல்ல “, என்று ஆதி ஞாபகப் படுத்தினான்.
“ஹ்ம்.. நேத்து ராத்திரி மது கூட பேசிகிட்டு இருந்தபோது, உன் கல்யாண பேச்சு வந்தது. ஆனா , அவ என் வாயாலேயே, உன்னை மாதிரி ஒரு பிள்ளைக்கு பொண்ணு குடுக்க மாட்டேன்னு சொல்ல வெச்சிட்டாடா. எனக்கு கஷ்டமா போச்சு.”,  தலையும் புரியாமல், வாலும் புரியாமல் சரஸ்வதியைப் பார்த்து முழித்தான் ஆதி.
“புரியற மாதிரி சொல்லுங்கம்மா.”
“உங்களுக்கே ஒரு பொண்ணு இருக்கான்னு வெச்சிக்குவோம் அத்தை. ஆதி மாதிரி எப்பவும் பிசினஸ், டென்ஷன், வேலைன்னு இருக்கற மாப்பிள்ளை, என்னதான் சொத்து இருக்கு, நல்ல பிள்ளைன்னாலும் கட்டிக் குடுப்பீங்களா? உங்க பொண்ணு, புருஷன் இருக்கற கொஞ்ச நேரம் அவர் மூட் பார்த்து நடந்துக்கணும், எல்லா இடத்துக்கும் தனியா போகணும். முக்கால் வாசி நேரம் தனியவே இருக்கணும்னா சம்மதிப்பீங்களான்னு கேட்டதும், அப்படியே என் வாழ்க்கைதான் கண் முன்னே ஓடுச்சு ஆதி.”
“அது கொடுமை ஆதி. அந்த மாதிரி ஒரு வாழ்க்கை உன் மனைவிக்கு நீ தரக்கூடாது.  எனக்கு ப்ராமிஸ் பண்ணு.  மனசுக்குள்ள எவ்வளவு பாசம் இருந்தாலும், அதை உணர்த்த, உணர நேரமில்லைன்னா உபயோகமேயில்லை ஆதி. நீயும் உங்க அப்பா மாதிரியே வேலை, பிஸ்னஸ்னு ஓடிக்கிட்டே இருக்க. எனக்கு பயமா இருக்கு.”
சரஸ்வதி கண்களில் கண்ணீர் திரையிட, “மா, அவதான் எதையாச்சம் கிளப்பிவிட்டா, நீங்களும் ஏம்மா. “, என்று சமாதானம் செய்ய முயல,
“இந்த வெத்து சமாதானமெல்லாம் எனக்கு வேண்டாம் ஆதி. உங்கப்பாகிட்டர்ந்து நிறைய கேட்டு கேட்டு காது புளிச்சி போச்சு.  மது கேட்டது கொஞ்சம் கூட தப்பில்லை. “, சரஸ்வதி கோபமாய் சொல்ல, “ மா..”, என்று சொல்ல வந்தவனை கைகாட்டி நிறுத்தி,
“அவளே எனக்கு மருமகளா, உனக்கு மனைவியா வந்தா சந்தோஷப் படுவேன். ஆனா, நீ இப்படியே காசு பின்னாடி சுத்திகிட்டு இருந்தா, கண்டிப்பா நானே வேண்டாம்னு சொல்லுவேன்.  அந்த பொண்ணு ஏற்கனவே பாசத்துக்கு ஏங்கிப்போயிருக்கு.  கல்யாண வாழ்க்கையாவது மதுவுக்கு நல்லபடியா அமையணும்.”
“சரி , என்ன  செய்யணும் சொல்லுங்க.”, இறங்கி வந்தான் ஆதி.
“நீ உன் வேலை நேரத்தை கம்மி செய்யணும். வேலையை தவிர மத்த விஷயங்களையும் செய். வீட்டுக்கு கொஞ்ச நேரம் ஒதுக்கு. காலைல போனா ராத்திரி பத்து மணிக்கு மேல வர. எப்ப தூங்க போறன்னு தெரியலை. காலைல ஒரு அரை மணி நேரம்  சாப்பிடும்போதுதான் உன்னை பார்க்கறேன். அதுலயும் உங்கப்பா ஆபீஸ் விஷயம் பேச ஆரம்பிச்சிடுவார்.”, என்னவோ அவர் ஆதங்கமெல்லாம் ஒன்றாய் இன்று வெடித்தது ஆதியிடம்.
அவர் தோளை அணைத்தவன், “மா. கண்டிப்பா செய்யறேன் மா.  தினமும் உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண நினைப்பேன், நிறைய நாள் தட்டிப்போகும்.  இனி கவனமா இருக்கேன்மா. நீங்க சொன்னபடி குறைக்கப் பார்க்கறேன். நானுமே இங்க வீட்ல இருந்து வேலை பாக்கறதுல நிறையவே கத்துகிட்டு இருக்கேன்.  இதுக்கு ஒரு வழி செய்யறேன். அப்பாவுக்கும் வீட்ல இருக்க நேரம் ஒதுக்க சொல்றேன் மா.”
“ஹ்ம்ம்… வேண்டாம்டா. அவர் வீட்ல இருந்தாலும் நினைப்பு எல்லாம் ஆபிஸ்லதான் இருக்கும். நான் எதுவும் சொன்னாலும் எரிஞ்சு விழுவார். எனக்கு இப்ப கவலையெல்லாம், உனக்கு வரவளும் இன்னொரு சரஸ்வதியாகிடக்கூடாது.”, வருத்தமாய் சொன்னார் சரஸ்வதி.
“மா… ப்ராமிஸ். அப்படி ஆகாம பார்த்துக்கறேன்.  வொர்ரி பண்ணாதீங்க“, தாயை இவ்வளவு நோகடித்திருக்கிறோம் என்று புரிந்து மனதின் ஓரம் வலித்தது ஆதிக்கு. இதை சரி செய்ய வேண்டும் என்று மனதுக்குள் சபதம் எடுத்துக்கொண்டான்.

Advertisement