Advertisement

அத்தியாயம் – 14
அது பாஸ்போர்ட் ஃபோட்டோ எடுக்கும் சாதாரண ஸ்டூடியோ இல்லை. ஆர்ட் ஸ்டூடியோ. அவர்களே வித விதமாய் ஆடைகள் வைத்திருப்பார்கள், பல செட்டிங் இருக்கும். ஆர்ட் போட்டோக்ராபி மாதிரி எடுப்பார்கள்.
ரிசப்ஷன் பெண், பாட்டியைப் பார்த்ததும் ஜெர்க்காகி மதுவைப் பார்த்தாள். மது சிரித்துக்கொண்டே, “ஆர்ட் போட்டோ எடுக்கணும், எங்க ரெண்டு பேரும், அப்பறம் மேடம் மட்டும் தனியாவும்.”
“ஷ்யுர் மேம். எங்க ட்ரெஸ் போடுவீங்களா, இல்லை நீங்க கொண்டு வந்திருக்கீங்களா ?”
“என்ன மது, அவங்க ட்ரெஸ்னா ?”, தனம் காதைக் கடித்தார்.
“அங்கிருந்த மாதிரி ஆல்பம் எடுத்துக் காட்டி, இந்த மாதிரி ராஜா ராணி உடுப்பு, சினிமால வர பிரபலமான உடுப்புன்னு நிறைய இருக்கும் டேனி என்று காட்டிக்கொண்டே பக்கங்களை திருப்பியவளை, பாட்டி ஓரிடத்தில்  நிறுத்தினார்.
கண்கள் மின்ன,  “ இது மாதிரி இருக்கான்னு கேளேன். டயானா கல்யாண போட்டோ பார்த்து எனக்கு ஆசை. இந்த வெள்ளைக்காரிங்க கல்யாண கவுன் மாதிரி போட்டா எப்படி இருக்கும்னு. ஒருவாட்டி அந்த கிழத்துகிட்ட சொன்னா, அப்படி சிரிச்சி கடுப்படுச்சுது… அத்தோட அந்த ஆசையை அப்ப விட்டுட்டேன். “
“யாரை திட்டறீங்க ? தாத்தாவையா ? உங்களுக்குப் புடிச்சா ‘அவரு’, இல்லாட்டி கிழமா ?”, மது செல்லமாய் முறைத்தாள்.
“ம்க்கும்… என்னை புடவை தாண்டி , ஒரு சல்வார் போட விட்டதே இங்க ஊட்டி வந்து குளிர் காலத்துல மட்டும்தான். நான் புடவை மட்டும் கட்டணும், அவர் மட்டும் பெல் பாட்டம், ஜீன்ஸ், சஃபாரினு எது வந்தாலும்,  தைச்சி போடுவாரு. “, பழைய ஞாபகத்தில் நொடித்தார் தனம்.
“சரி…உன் ஆசையை இன்னிக்கு நிறைவேத்திடுவோம் விடு.”, ரிசப்ஷனிஸ்ட்டிடம் பேசி முடிவு செய்து, அவளுடன் அறைக்குச் சென்றார்கள்.
இருந்த நான்கு சின்ரெல்லா கவுன்களில், மணப்பெண்கள் போடுவது போல் வெள்ளையில் முத்து, லேஸ் வைத்து, நீண்ட நெட்டட் கைகள் வைத்து, ப வடிவ கழுத்துடன் ஒரு கவுனை ஆசையாய் பார்த்து, “இது மாதிரி மது.” என்றார் .
அதுவே பாட்டிக்கு சரியான அளவில் இருக்க, பாட்டியின் கொண்டையை மறைத்து, குழல் கற்றைகள் கொண்ட  தலையணி , தலைக்கு சிறிய க்ரீடம், அதிலிருந்து, நீளமான லேஸ் என்று வைத்து தனம்  பேரில் மட்டுமில்லாமல் உடையிலும் டேனி ஆகியிருந்தார்.
மதுவிற்கு ஒரு பக்கம் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தாலும், இந்த வயதிலும் பாட்டி வாழ்க்கையை இவ்வளவு ஜாலியாய் வாழ்வது பார்த்து ஆசையாய் இருந்தது. யார் சிரித்தால் என்ன, எனக்கு பிடித்திருக்கிறது, நான் செய்கிறேன் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
போட்டோ செட், ஆங்கிலேயர் காலத்து சோஃபா, டீ செட் , டீ-பாய், பூ ஜாடி என்று இருக்க, பாட்டி அமர்ந்து கையில் டீ-கப்புடன் போஸ். போட்டோகிராபர் மத்திய வயதினராய் இருக்க, இது போன்ற பல அட்டகாசங்களைப் பார்த்திருப்பார் போல. அல்ட்டிக்கொள்ளாமல் ஆங்கிள் பார்த்துவிட்டு, மதுவை நோக்கி, ‘ மேடம் அவங்களுக்கு கொஞ்சம் மேக்கப் கம்மி பண்ணலாமே.”, என்றார்.
“அதுலானாலதான் இந்த போட்டோவே. நீ இப்படியே எடுப்பா. “என்று விட்டார் தனம்.
மதுவும் அது போன்ற ஒரு கவுன் அணிந்து பாட்டியுடன் சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டாள்.
போட்டோகிராபரிடம், ‘ஸர், அவங்களுக்கு குடுக்கறது போக, கொஞ்சம் போட்டோ டச்-சப் பண்ணி பாட்டிய அழகாவும் குடுக்க முடியுமா ? நான் தனியா பே பண்றேன் என்றாள்.
சிரித்தவர், “ சரி மா.. கொஞ்சம் டெஃபினிஷன் குடுத்து, மேக்கப் லைட்டாக்கி, சுருக்கம் தெரியாம செய்யலாம், கொஞ்சம் லைட்டிங் எஃபெக்ட் குடுத்துதான் எடுத்திருக்கேன்.”, என்றார்.
அந்த உடையை கழட்டவே மனசில்லாமல் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி, ‘ம்ம்… வயசு காலத்துல இப்படி எல்லாம் பண்ணி பார்த்துக்க முடியலை. இப்ப வாய்க்கும்போது, வயசும் அழகும் போச்சு.”, என்று பெருமூச்சு விட்டார்.
“என் பாட்டி எப்பவும் அழகுதான். யாருக்கு வரும் உன் மாதிரி டேனி ? உன் வயசுல எல்லாம் ராமாயணம் படிச்சிகிட்டு, அந்த வியாதி இந்த வலின்னு புலம்பிகிட்டு இருப்பாங்க. நீ அதை எல்லாம் விட்டுட்டு, இருக்கற பொழுத ஜாலியா இருக்க பாரு. அது தான் டேனி அழகு.”, கன்னம் பிடித்துக் கொஞ்சினாள்.
அவள் கதை சொல்லி முடித்த நேரம், ஒரு நிமிடம் வாழ்க்கையை அனுபவித்து தன் வழியில் வாழ்ந்த தனம் பாட்டி மீது ப்ரம்மிப்புதான் வந்தது. மௌனத்தை கலைத்த சபரி,
“ஹ்ம்ம், அந்த போட்டோகிராபர் என்ன பண்ணுவார் ? என்ன வித்தை காட்டினாலும் வெள்ளை கவுனில், சிவப்பு மேக்கப்போட பேய் மாதிரிதான்  இருந்தது பாட்டி, கூட நீ  மோகினி பேய் கணக்கா இருந்த !”, என்று சூழ்னிலையை இலகுவாக்கினான்.
குஷினை அவன் மேல் வீசியவள், “உங்களுக்கு அனுப்பினது, டச்-சப் பண்ணாத போட்டோ. அதை பார்த்து ரெண்டு பேரும் காண்டாகணும்னுதான் பாட்டிகிட்ட குடுத்தேன்.”
சபரியோ, “ உனக்னென்னமா, அனுப்பிட்டு நீ பாட்டு உங்க வீட்டுக்கு போயிட்ட. காதுல புகை வர இவன் சிம்மனது, சீறுனதெல்லாம் நாந்தான சமாளிச்சேன். பாட்டி போட்டோ பார்த்து ஒரு பக்கம் கண்ண கட்டுச்சுன்னா, இவன் தீச்சதுல உடம்பே புண்ணாச்சு.”
கல கலவென்று சிரித்த மது, “ ம்ம்.. பாட்டி போன் பண்ணி சொன்னாங்க. அந்த கிழத்துக்கு தப்பாம பொறந்திருக்கான் என் பேரன். திட்டு திட்டுன்னு திட்டினான் மது. சேலை தவிர எதையாச்சம் போட்டு பாரு , உனக்கு மேக்-கப் கேக்குதா இந்த வயசுல. உன் பேத்திக்கு அறிவில்லைன்னா உனக்கெங்க போச்சு.  காமெடி பீஸாக்கி வெச்சிருக்கா உன்னை, நீயிம் ஈன்னு சிரிக்கறன்னு ஓரே திட்டு போல.”, என்று ஆதியைப் பார்த்தாள் ஓரக் கண்ணில்.
“அப்படி காமெடிதான் பண்ணி வெச்சிருந்த. இப்ப நீ சொல்லவும்தான் எல்லாம்  நோனா ஆசைக்குன்னு புரியுது.  எங்க டச்-சப் பண்ண போட்டோ ? இருக்கா ?”,இணக்கமாகவே கேட்டான்.
வேறு ஒரு ஆல்பம் எடுத்துக் கொடுத்தாள். பாட்டி நிஜமாகவே இதில் பார்க்க அழகாய் இருந்தார்.
“வாவ்… பாட்டிக்கு ஒரு இருவது வயசு குறைச்சிட்டாரே. இதை அனுப்பியிருக்கலாமில்ல ?”, சபரியும் பார்த்து வாய் பிளந்தான்.
“அதுல எங்க ஃபன் (fun) ? பாட்டி இந்த அழகு போட்டோவைத்தான் பார்த்துச்சு. இதுதான் உங்களுக்கும் அனுப்பினதா  நெனச்சிட்டு இருந்தது.  அழகா இருந்தும், பேரன் திட்டினான்னு கோவம் அதுக்கு.”
“எனக்கு வில்லியே நீதாண்டி மண்ணாந்தி. ஆனாலும் பாட்டிக்கு என்னைத்தான் பிடிக்கும்”, என்றான் ஆதி.
“வெவ்வவே..”, என்று அழகு காட்டி மது சிரிக்க,
அப்போது அழைப்பு மணி கேட்டு சென்ற சுப்பு, ப்ரியா மற்றும் அவள் தந்தையுடன் வந்தார்.
ஆதியைப் பார்த்து, “வணக்கம் ஆதி தம்பி.”, என்று முகமன் கூற, ப்ரியா அவர் முன் அடக்கமாக “ஹாய்”, என்றாள் பொதுவாக.
அவரை வரவேற்க எழுந்த ஆதி, கை கொடுத்து, “வாங்க  பரதன் அங்கிள். வரதா சொல்லவேயில்லை ப்ரியா. உக்காருங்க.”, என்று அமர்ந்து,
நின்று கொண்டிருந்த, சபரியையும், மதுவையும் அறிமுகப் படுத்தினான். சம்ப்ரதாயமாக சிரித்தவர், “அம்மா இல்லையா தம்பி ?”, எனவும், “நான் போய் கூட்டிட்டு வரேன்.”, என்று இடத்தை காலி செய்தாள் மது.
பின் புறம் தோட்டத்தில் மதிய வெய்யில் இதமாய் இருக்க அமர்ந்திருந்த சங்கரியும், சரஸ்வதியும், மது அழைக்கவும் செல்ல, மது பிறகு வருவதாய் அங்கேயே அமர்ந்து கொண்டாள். போலி விசாரிப்பைப் பார்க்க அவள் விரும்பவில்லை.
சரஸ்வதியும் சங்கரியும் அறிமுகமாகியபின், பொதுவாக தன்னைப் பற்றியும், தன் வியாபாரம் பற்றியும் பேச, சுப்பு பரதன் கேட்ட டீயுடன் வந்தார்.
அதைப் பருகியபடியே சரஸ்வதியை நோக்கி, “ தங்கச்சி, எப்பவும் இந்த மாதிரி துக்கம் முடிஞ்ச சமயத்துல ஒரு நல்ல காரியம் பேசறதும் நல்லதுதான். அதுவும் தனம்மாவோடது கல்யாண சாவு.  ஆதி அப்பாவும் வருவாருன்னு எதிர்பார்த்தேன்.  இல்லைன்னாலும் உங்க கிட்டயே முதல்ல பேசிடுவோம்.  அப்பறம் முறையா பேசிக்கலாம்னுதான் வந்தேன்.”, என்று கூறியபடியே அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தார்.
என்ன சொல்ல வருகிறார் என்று ஒரு நிமிடம் எல்லோரும் முழிக்க, சங்கரிக்குத்தான் முதலில் பல்ப் எரிந்தது. சற்று அதிர்ச்சியாகவே ஆதியைப் பார்த்தார்.
“உங்களுக்கு புரியும்படியாவே சொல்றேனே. ப்ரியாக்கு ஆதி தம்பிய ரொம்ப பிடிச்சிருக்கு. தம்பிக்கும் அப்படித்தான் போல. அதுதான் பேசிட்டு போகலாம்னு…”, என்று அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே,
“யார் சொன்னது, எனக்கும் பிடிச்சிருக்குன்னு ?”, அடக்கப்பட்ட சினத்துடன் அவரை இடைமறித்தான் ஆதி.
“ஆது… நம்ம ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்குதானே ? அதான் அப்பாகிட்ட சொல்லி அடுத்த ஸ்டெப் எடுத்தேன்.”, ப்ரியா அவசரமாய் பதிலளித்தாள்.
“ஸ்டாப் இட் ப்ரியா. ஒரு ஃப்ரெண்டா பழகறதுக்கும் கல்யாணம் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. அப்படி உனக்கு தோணியிருந்தா, நீ முதல்ல எங்கிட்டதானே கேட்டிருக்கணும் ? இப்படித்தான் பெரியவங்களை சங்கடப் படுத்துவியா ?”, அவன் பார்வையில் உள்ளுக்குள் நடுங்கினாலும்,  பெரியவங்க முன்னாடி பெருசா ஒண்ணும் பண்ண மாட்டான் என்று தைரியம் பெற்றவளாக,
“அப்ப, என் கூட இத்தனை நாள் சுத்தினதெல்லாம் சும்மாவா ? உன்னோட ஸ்ட்ரெஸ் எல்லாம் எங்கூட இருக்கும்போது போயிடுதுன்னு சொன்னதெல்லாம் என்ன ?”, கண்ணில் லேசாய் கண்ணீரை வரவழைத்துக் கேட்டாள்.
தாயின் முன்னே இப்படி அவள் கண்ணீர் விடுவதும், பேசுவதும் ஆதியின் கோப அளவை ஏற்றிக்கொண்டே செல்ல, அவன் நிதானத்தை முயன்று வரவழைத்தான். இவள் எதற்கோ அடி போடுகிறாள் என்பது புரிந்தது. பெரியவர்களை அழைத்து அவர்கள் முன் நாடகமாடிக்கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தவுடன், இதை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்பதும் நொடியில் உதித்தது.
“ப்ரியா, நாம ஸ்கூல் படிக்கும் போது ஃப்ரெண்டானோம்.  லீவுக்கு வரும்போது சபரி, மனோஜ் கூட நீயும் ,ஜோவும் எங்களோட சேர்ந்து சுத்துவீங்க. லீவ் முடிஞ்சு போனதுக்கு அப்பறம் உங்களோட நான் டச்ல இருந்தது இல்லை. திரும்ப அடுத்த லீவ்லதான் பார்ப்போம்.”
“இப்ப அந்த கதையெல்லாம் எதுக்கு ?”, இவன் எங்கே செல்கிறான் என்று அனுமானிக்கத் தெரியாதவளாய், ப்ரியா கேட்டாள்.
“இல்ல உன்னோட லவ், அப்பல்லாம் இல்லை. அதுக்கப்பறம் லாஸ்ட் ரெண்டு வருஷம் பார்க்கலை. இப்ப ரெண்டு வாரமாத்தான் பழகறோம். அதுக்குள்ள நாம ரெண்டு பேருக்கும் லவ்ன்னு நீயா எப்படி முடிவு செஞ்சன்னு யோசிக்கறேன் ?”, யோசனையாகவே அவளைப் பார்த்தவன் அவள் தந்தையையும் பார்த்தான்.
பரதனும் அவர் மகளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
முயன்று வெட்க்கப்படுவதுபோல  காட்டிக்கொண்டே, “என்ன ஆதி, இந்த ரெண்டு வாரமும் எவ்ளோ க்ளோசா பழகினோம். எனக்குத் தெரியாதா.”, என்று பார்வையைத் தழைக்க,
பல்லைக்கடித்தவன், “ தினமும் நீதான் என் வீட்டுக்கு வந்த. உன்னைத் தேடி நான் எப்பவும் வரலை. எனக்கு வேலை இருக்கும்போது, வெயிட் பண்ணிட்டு இருந்த, சில நாள் டின்னர் போனோம், அதுவும் பொது இடமாத்தான் போனோம்.  உங்கிட்ட எதுவும் நான் விரும்பற மாதிரி பேசவேயில்லை. நீயா கற்பனை செஞ்சிகிட்டா நான் என்ன செய்ய ? இதை நீ தனியா எங்கிட்ட கேட்டிருந்தா உன்னோட என்னோட போயிருக்கும். இப்படி பேரண்ட்ஸ் முன்னாடி அலசியிருக்க வேண்டியது இல்லை.”
இறுகிக் கிடந்த அவன் தசைகள் சொன்னது சபரிக்கு , எவ்வளவு கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறான் என்று. ப்ரியா இப்படி ஒரு ஸ்டண்ட் அடிப்பாள் என்பது அவனுமே எதிர்பாராதது. ஆதியின் தாயோ டென்னிஸ் மாட்ச் பார்ப்பதைப்போன்று ஒவ்வொரு முகமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். சங்கரியோ ப்ரியாவை மட்டுமே முறைத்துக்கொண்டிருந்தார்.
ப்ரியா கண்களில் கண்ணீர் கொட்ட லேசாய் விசும்ப, சலனமேயில்லாமல், பரதனிடம் திரும்பியவன், “சாரி அங்கிள். எனக்கு ப்ரியா மேல அப்படியெல்லாம் விருப்பம் இல்லை. இப்பத்திக்கு கல்யாணம் பத்தி  யோசிக்கற மூட்லயும் நான் இல்லை.”, எனவும்,
“இப்ப இல்லைன்னாலும், நாம் அப்பறம் கூட பேசலாம் தம்பி.  மக பிடிச்சிருக்குன்னு சொல்றா. உங்களுக்கு வேற யார் மேலையும் விருப்பமில்லைன்னா…”, என்று அவர் சொல்லும்போது, ஏனோ மதுவின் முகம் கண்முன் பளிச்சிட்டது.
“இல்லை, இது பத்தி எப்பவுமே நான் பேச விரும்பலை. ப்ரியாவை அப்படியெல்லாம் நான் யோசிக்கலை, இனி யோசிக்கவும் மாட்டேன். அவளுக்கு என் மேல இப்ப இருக்கறதுகூட ஒரு ஈர்ப்பாதான் இருக்கும்.  அவ படிப்பை முடிக்கட்டும். அவ குணத்துக்கு ஏத்த மாதிரி வேற நல்ல மாப்பிள்ளையா பாருங்க. என் முடிவு மாறாது.”, என்றுவிட்டான் தீர்மானமாக.
மகளை முறைத்தவர், மறு வார்த்தை பேசாமல் ஒரு கும்பிடு போட்டுக் கிளம்பிவிட்டார் ப்ரியாவுடன்.
அலை ஓய்ந்த ஒரு அமைதி.  “ஆதி.”, என்று சரஸ்வதி ஆரம்பிக்க,
“அம்மா, ப்ளீஸ்… கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம் இது பத்தி. “, என்றுவிட்டு அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
சபரிதான், “ஆன்ட்டி, ஆதி எந்த தப்பும் செய்யலை. ப்ரியாதான் ஏதோ கேம் ஆட பார்த்தா.  அவளை ஆதி டிராமா போட விடாம உடனே மடக்கவும், திணறிட்டா. நீங்க எதுவும் யோசிக்காதீங்க.”, என்று ஆறுதல் கூறினான்.
“ஆமாம் சரசு. அந்த பொண்ணுதான் சாயந்திரமானா வந்துகிட்டு இருந்தது, அப்பவும் பாதி நேரம் ஆதி மீட்டிங்ல இருப்பான், கதவை திறந்துதான் வெச்சிருப்பான். இந்த பொண்ணு அங்கனயே உக்கார்ந்து போனை நோண்டிகிட்டு இருக்கும். இதுவா சும்மா இட்டுகட்டி பேசுது.” என்று அவர் பங்குக்கு சாந்தப்படுத்தினார் சங்கரி.
ஆனாலும் சரஸ்வதிக்கு சங்கடமாகவே இருந்தது, “அந்த பொண்ணு மனசுல அப்படி ஒரு எண்ணம் வர ஆதியும் ஒரு வகையில  காரணம்தானே சங்கரி.”, என்று அந்த விஷயத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தார்.
“அய்யையோ, விட்டா இவங்களே ப்ரியாவை ஆதிக்கு கட்டி வெச்சிடுவாங்க போலவே. கடவுளே, இந்த மாதிரி நல்லவங்ககிட்டர்ந்து காப்பாத்துடா உலகத்தை !”, என்று உள்ளுக்குள் அலறினான் சபரி.

Advertisement