Advertisement

அத்தியாயம் – 13
பாட்டியின் காரியம் சிறப்பாய் நேற்று முடிந்திருந்தது.
அலுவலக மீட்டிங்கை ஜூம் உதவியுடன் முடித்து வெளியே வந்த சபரியும் ஆதியும், ஹாலில் அமர்ந்து ஆல்பத்தை புரட்டிக்கொண்டிருந்த மதுவின் எதிரில் வந்து அமர்ந்தனர்.
“ஓரு வேலை செய்ய முடியாததுக்கு ஆயிரம் காரணம் சொல்றான். செய்யறத்துக்கு உண்டான ஒரு ஐடியா உருப்படியா சொல்றதில்லை. இவனுங்களையும் கட்டி மேய்ச்சு, உங்க அப்பாவுக்கு சொன்ன நேரத்துல வேலையை முடிக்கணும்.  என் பொழப்பு இப்படியாயிடுச்சேடா…”, என்று சபரி தன்னைப் போல புலம்பிக்கொண்டிருந்தான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்த மது, “அதான் இன்னிக்கு நைட் கிளம்பறல்லை ? போய் பார்த்துக்கோ.  இப்ப ரிலாக்ஸ் சபரி.”, என்றாள்.
“ம்ம்… காலைலர்ந்து ரிலாக்ஸ் பண்ணிகிட்டு இருக்கறவ சொல்றா, கேட்டுகடா.”, சீண்டினான் ஆதி.
“நான் என்ன செய்தேன், அது உருப்படியானதான்னு எனக்கு தெரிஞ்சா போறும். உனக்கு சொல்லணும்னு அவசியமில்லை.”, அவனைப் பார்த்து உதட்டை சுழித்தவள், மறுபடி பார்த்துக்கொண்டிருந்த ஆல்பத்தில் கவனம் செலுத்தினாள்.
“அப்படி என்ன பார்த்துகிட்டு இருக்கிற மது?”, என்று எட்டிப் பார்த்தவன், மறு நொடி, “ஆ…அம்மா இந்த போட்டோவா? கடவுளே, இதை முதல் வாட்டிப் பார்த்து பயந்து ரெண்டு நாள் பேஸ்த் அடிச்சி சுத்திகிட்டு இருந்தேன். அதைப் போய் மறுபடி தோண்டி எடுத்திருக்கயே? “,நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சோஃபாவில் சாய்ந்தான் சபரி.
“என்ன போட்டோடா?”
“அதாண்டா, வெள்ளைக்காரி கவுன் போட்டு, பேய் மாதிரி ஓவர் மேக்கப்போட ஒரு வாட்டி போட்டோ காமிச்சு என் கபாலத்தை காலி பண்ணுச்சே பாட்டி, அதுடா…”,  அவன் சொல்லும் போதே ஆதியின் முகத்தில் சிரிப்பு வந்து செட்டிலாகியது.
“உனக்கு ஏன் இந்த விபரீத ஐடியா வந்துச்சு மது? பாட்டி அதுபாட்டுக்கு கொண்டை, விபூதி, சேலைன்னு மங்களமா இருந்துச்சு. அதைக் காமெடி பீசாக்கிட்ட.”, ஆதி மதுவை ஏறிட்டான் குற்றப்பார்வையுடன்.
“இதையெல்லாம் நான் ப்ளான் பண்ண முடியுமா? எல்லாம் பாட்டி இழுத்து வெச்சதுதான். அன்னைக்கு எத்தனை பேர அழ விட்டுது தெரியுமா?”
சொல்லும்மா, ‘அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்….”, ரோபோ சங்கர் குரலில் சபரி எடுத்துக் குடுக்க,
“து…நல்லாவே இல்லை உன் ஜோக்கு “, என்று துப்பியவள், தொண்டையை கனைத்துக் கொண்டு,
“அன்னைக்கு காலைல பத்து மணிக்கு…”, என்று சபரியைப் பார்த்து கண்ணடித்து, பின் பாவமாய்,
“எனக்கு மேக்கப் சாமான் கொஞ்சம் வாங்கணும் பாட்டி,  பஜார் ரோடு போயிட்டு வரேன்னு சொன்னேன். அதுவரைக்கும் சும்மாயிருந்த பாட்டி, நானும் வரேன் மது, வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்னு சொல்லவும், நம்ம்ம்ம்பி கூட்டிட்டுப் போனேன்.” என்று கதை சொல்லும் பாவத்துக்கு மாறினாள்.
பஜார் ரோடில் மெதுவாய் பாட்டியுடன் நடந்து கொண்டிருந்தாள் மது. அவளின் ஆஸ்தான மேக்கப் கடை வந்ததும், ஒரு ஸ்டூலில் பாட்டியை அமர வைத்துவிட்டு, அவளுக்கு வேண்டியதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதற்கு பின் தான் ஆரம்பித்தது டிராமா.
“மேடம், அப்படி சொல்ல வரலை மேடம்… அது உங்களுக்கு போட முடியாதுன்னு..”, ஒரு பெண்ணின் குரல் கேட்டுத் திரும்பிய மதுவிற்கு, தனம் பாட்டியிடம் , கடைப் பெண் ஒருத்தி அழமாட்டாத குறையாக கெஞ்சிக்கொண்டிருக்கும் காட்சிதான் கண்ணில் பட்டது.  வேகமாக அருகில் சென்றவள், “ என்ன பாட்டி?”, என்று கேட்க…
“நீயும் பாட்டின்னு வெறுப்பேத்தாத. இப்பதான் இந்த பொண்ணை மேடம்னு கூப்பிட சொன்னேன். “, பாட்டி திட்ட, “ஊப்”, என்று ஊதியவள்,
“சரி, என்ன ப்ரச்சனை இப்ப ?”, என்றாள்.
“மேடம்க்கு ஐ – மேக்கப் போட சொல்றாங்கக்கா. எப்படி போடறதுன்னா, சூர்யா படத்துல சரோஜாதேவி போட்டிருந்தாங்களே. அவங்கள விட எனக்கு வயசு கம்மி, எனக்கு போடமாட்டியா? உனக்குப் போட தெரியலை. உன் மானேஜரைக் கூப்பிடுன்னு மிரட்டறாங்க மேடம்.”, கண்ணில் நீர் வர நின்றாள் அந்தப் பெண்.
“டேனி..ஏன் கடையில பிரச்சனை பண்ற?”
“இந்தாடி, இந்தக் குந்தாணிதான் சொன்னா, கஸ்டமர்க்கு மேக்கப் போட்டு காமிப்போம், அவங்களுக்கு பிடிச்சுதுன்னா வாங்கிக்கலாம்னு. அதான் சரின்னு, எனக்கும் அந்த விளம்பர போட்டோல போட்டிருக்க மாதிரி போடு, நானும் வாங்கிக்கறேன்னு சொன்னா, போட முடியாதுங்கறா ?”, கோபமாய் முறைத்தார் தனம்.
அந்த போட்டோவில் ஐஸ்வர்யா ராய் லா’ரியல் ஸ்மோக்கி ஐ மேக்கப்-போட்டிருந்தார். கடைப் பெண் ஜன்னி வருவதுபோல நடுங்குவது ஏன் என்று புரிந்தது.
பாட்டி கண்களைப் பார்த்தாள். கண் சற்று உள்ளே இழுத்து, இமையோரம் வயதின் அடையாளமாக நிறைய சுருக்கங்கள் கொண்டிருந்தது, கண் ரப்பையில் முடி சிறிதே இருக்க, மை போடுவதே கஷ்டம் இதில, மஸ்காரா, செயற்கை ஐ-லாஷ், நினைக்கையிலேயே கண்ணைக் கட்டியது.
“டேனி, உன் கண்ணு சுத்தி சுருக்கம் நிறைய இருக்கு, இதுல போட முடியாது. சொன்னா கேளு.”.
“நீயும் அவ கூட சேர்ந்துட்டியா? உன் தாத்தா என் கண்ணு அழகுன்னு எப்பவும் சொல்லுவாரு தெரியுமா?”, என்று காயப்பட்டு கூற, மதுவின் மனம் இளகியது.
“சரி, கொஞ்சமா போடலாம், அந்த போட்டோமாதிரியெல்லாம் போட முடியாது சரியா என்று ஒரு உடன் படிக்கை செய்து கொண்டு, மேக்கப் பெண்ணிடம், கண்ணைக் காட்ட, அவளும் சரி என்று ஆரம்பித்தாள்.
புருவம் வரையும் வரை எல்லாம் ஒழுங்காக சென்றது. மேல் இமையின் சுருக்கம் பார்த்து, அவள் திணற, மதுவோ,
“ லிக்விட் லைனர் போடும்மா., நான் ஓரத்துல இழுத்துப் பிடிக்கறேன் சுருக்கம் வராம.” ஒரு வாராய் போட்டு , ஊதி காய வைத்து பின் விட்டதுக்கு
‘என்னடி இது, அந்த காலத்துல நாங்க மையில போடுவோம். இப்படி கரைச்சு மாக்கோலம் கணக்கா போட்டு, ஊதி வேற காயவெக்கறீங்க.”,  என்று பேத்தியை கலாய்த்த தனம், கண்ணாடி பார்த்துவிட்டு, “ மீன் வால் மாதிரி ஓரம் இழுத்த விட தெரியாதா பொண்ணே உனக்கு? மொட்டையா விட்டிருக்க?” என்றார்.
“டேனி அதெல்லாம் ஃபாஷன் இல்லை இப்ப.”, பல்லை கடித்து மது சமாளிக்க, அவளை முறைத்த பாட்டி,  அந்த போட்டோல அந்த பொண்ணும் அப்படித்தான் இழுத்து விட்டிருக்கா பாரு. எங்கிட்ட நீ சும்மா சொல்ற.”, என்று எகிறவும்,
“இதெல்லாம் வெவரமா பேசு.  அந்த மாதிரியெல்லாம் உனக்கு செய்ய முடியாதுன்னு சொல்லித்தான ஆரம்பிச்சது? இப்ப போடறதா வேண்டாமா? “
“ம்ம்… போட்டு முடிங்க.”, பெரிய மனது பண்ணி ஒத்துக்கொண்டார் தனம்.
“டேனி, கண்ணை நல்ல விரிய திற, மஸ்காரா போடணும். “, என்று மது சொல்ல, அந்தப் பெண், மஸ்காரா குச்சியைக் கண்ணருகில் கொண்டு வரவும், அவள் கையை தட்டிவிட்ட பாட்டி, “என்னடி, கண்ணை குத்த வரியா?”, என்று கோபமாக கேட்க,
“அச்சோ டேனி, இது கண் ரப்பையில இருக்க முடிக்கு போட, அதுக்குத்தான் கண்ணை விரிய திறன்னேன்.”,
“அவ கை நடுங்கி கண்ணை குத்திடுவாடி.”, தனம் மறுக்க, மஸ்காரா ஸ்டிக்கை கையில் வாங்கிய மது, தன் கண் விரித்துப் போட்டுக் காட்டினாள்.
“இதுல மை அடிச்சி என்ன பெருசா தெரியப்போகுது? சரி சரி, நீயே போட்டு விடு. பார்த்து பத்திரம்.”, என்று மதுவை போடச் சொன்னார் பாட்டி.
பாட்டி கண்ணை விரிக்க, மது ஒரு கையால் கண்ணோரம் இமை விரிக்க இழுத்து, மஸ்காரா ஸ்டிக்கைக் கிட்டே கொண்டு செல்லும் நேரம், படக்கென்று கண் மூடிக்கொண்டது.
மது முறைக்க, “சரி சரி, இந்த வாட்டி சரியா காட்டறேன்.”, என்ற பாட்டி, மறுபடி பயத்தில் கண்ணை மூட, மூன்று முறை முயற்சித்தவள்.
“இதுக்கு நீ சரிப்பட மாட்ட…”, என்று மஸ்காராவை திருப்பிக் கொடுத்துவிட்டு,
“ஐ ஷாடோ மட்டும் போட்டுவிடுமா போறும்”, என்று கடைப் பெண்ணிடம் சொல்லியவள்,
“டேனி, கண்ணை மூடிக்கோ, இமைக்கு மேல மேக்கப் போடுவாங்க.”, எனவும்,
“ஹான். கண்ணை மூடிக்கிட்டு எதுனாலும் சரிதான்.”, என்று காண்பித்தார்.
லைட் ப்ரௌவுன் ஷேடில் உறுத்தாத அளவு போட்ட பின், கண்ணாடியில் பார்த்துவிட்டு,
“கண்ணுக்கே தெரியாம இத்தணூண்டு போட்டிருக்க? நான் வேணா அதை வாங்கிக்கறேன். நல்லா பளிச்சுன்னு சிவப்பு, பிங்க் கலர் இப்படி போடு.”
“அக்கா..”, என்று முழித்துக்கொண்டே மதுவைப் பார்க்க, மஸ்காராவிலேயே ஏகக் கடுப்பில் இருந்தவள், ‘போட்டு விடு”, என்று சைகை  செய்து அவள் வாங்கிய பொருட்களுக்குப் பணம் கட்டச் சென்றாள்.
வந்து பார்த்தால், கண்ணின் மேலே தக்காளி சாஸைத் தடவி விட்டது போல இருந்தது.
“அக்கா, நான் வேலையை விட்டுட்டு எங்கம்மா கூட தேயிலை பறிக்க தோட்டத்துக்கே போயிடறேங்க்கா. தயவு செஞ்சு பாட்டிம்மாவை கூட்டிட்டு போயிருங்க.”, மதுவின் கை பிடித்துக் கெஞ்சினாள் அந்தப் பெண்.
“என்ன மது, இப்பதானே பார்க்கற மாதிரி இருக்கு? நான் மேக்கப் போட்டிருக்கேன் பாருன்னு ஒவ்வொருத்தரையும் பக்கத்துல கூப்பிட்டா காட்டுவாங்க?”
“ம்ம்.. ஆமாம். தெரு முனையிலிருந்தே தெரியும் டேனி. நீ மேக்-கப் போட்டிருக்க அழகு. போலாமா?”, பல்லைக் கடித்துக் கூறினாள்.
“இருடி, உதட்டுக்கும் சாயம் போட்டுக்கலாம். கண் மட்டும் பளிச்சுன்னு இருந்தா ஆச்சா? உதடு தெரியலை பாரு.”, தனம் சீரியசாய் சொல்ல,
“உன்னை நம்பி கூட்டிட்டு வந்தேன் பாரு…”, என்று முணுமுணுத்தவள், “ ‘இன்னைக்கு ஒரு வழியாகப் போறேன்.’, என்று நினைத்தவாறே.
“உன் ஆசையைக் கெடுப்பானேன். போட்டுக்கோ. என்ன கலர் வேணும்?”, என்றாள் மது.
“கண்ணுக்கு மாட்சா, அதே கலர்ல போட சொல்லு.”
“கடவுளே…”, என்று மெல்லிய குரலில் கதறினாலும், செர்ரி ரெட் லிப்ஸ்டிக்கை எடுத்து, பாட்டியின் மெல்லிய உதட்டில் பூசினாள் மேக்கப்-பெண்.
‘இதுக்குப் பிறகு அவ கல்யாணத்துக்குக் கூட மேக்கப் போட்டுக்குவாளோ மாட்டாளோ… பாவம் யார் பெத்த பொண்ணோ.’, என்று மதுவால் பரிதாபப் படத்தான் முடிந்தது.
“நல்லா டார்க்கா பூசு. வீடு போய் சேர வரைக்குமாச்சம் இருக்கட்டும்.”, தனத்திடமிருந்து ஆர்டர் பறந்தது.
ஒரு வழியாய் முடித்து, கண்ணாடி பார்த்து திருப்தியாய், “மது இப்ப சரியா இருக்கா ?” , என்று புன்னகைக்கவும், வெள்ளைத் தாளில் சிகப்பு மார்க்கர் கொண்டு கிழிக்கப்பட்ட கோடுபோல தெரிந்தது மதுவிற்கு.
‘ஆண்டவா, யாருக்கும் தெரியாம காருக்குக் கூட்டிட்டு போயிடணும். ‘, என்று நினைத்தவள், மேக்கப் பெண்ணிடம் இரண்டு நூறு ருபாய்த் தாளை வைத்து அழுத்தி “‘தாங்க்ஸ் மா”, என்றுவிட்டு,
“டேனி, டைம் ஆச்சு, வா போகலாம்.”, என்று கிளப்பி கூட்டிச் சென்றாள். ஒரு ஐம்பது அடி கூட நடந்திருக்க மாட்டார்கள், பாட்டி மறுபடி ப்ரேக் போட்டார்.
“மது கண்ணு, நாம ஒரு போட்டோ எடுத்துக்கலாமா? இந்த மேக்-கப்போட? என் பேரனுக்கு காட்டுவேன்.”, கண்ணில் ஆசையுடன் கேட்கையில், மறுக்க மனசு வரவில்லை மதுவிற்கு. பேரனுக்குக் காட்டுவேன் என்றதும் “மவனே, இருக்குடா உனக்கு.”, என்று மனம் கருவ,
“சரி வா டேனி,”, என்று ஸ்டூடியோவிற்குள் அழைத்துச் சென்றாள்.

Advertisement