Advertisement

அத்தியாயம் – 12
அதன் பின் தினந்தோறும் ஆதி மதுவுடன் காலையில் நடைபயற்சி செய்தான். நிதமும்  ஒரே வழியாகச் செல்லாமல் பல்வேறு பாதைகள் வைத்திருந்தாள். சில நேரம், வழியில் இருக்கும் கிளைப்பாதையை பார்த்து அதில் செல்லுவாள். பொறுமையாக செடி கொடிகள், காளான்கள், பூச்சி, பூ என்று ஒன்றுவிடாமல் பார்ப்பாள். ஏதாவது ஒரு தகவல் விரல் நுனியில் வைத்திருப்பாள் அதைப் பற்றி.
“நீ ஃபாஷன் டெக்னாலஜிக்கு பதிலா பாட்டனி, ஜூவாலஜி எடுத்திருக்கலாம் மது.”, என்று கூட ஒரு முறை ஆதி கூற, “ அதுல டிசெக்ஷன் செய்யச் சொல்லுவாங்களே, அதுக்கு பயந்தே சயன்ஸ் எடுக்கலை நான். செடி கொடிங்க கூட வெட்டி பாகம் குறிக்க எனக்கு பிடிக்கலை.”,
“ பிடிச்சதப் பத்தி தெரிஞ்சிக்க நம்ம ஆர்வமே போறும் ஆதி. அந்த கோர்ஸ் படிச்சிதான் தெரிஞ்சிக்கணும்னு இல்லை.”, என்ற போது ஆதி உள்ளுக்குள் அசந்துதான் போனான்.
உண்மைதானே. சுயமாய், தன்னார்வத்தில் கற்பது எளிது. அதில் மேலோட்டமாக இல்லாமல், ஆழ்ந்து கற்பதும் இயற்கை. பிடிக்காததைத்தான் திணிக்க வேண்டும்.
தினம் ஒரு பரிமாணம் காட்டிக்கொண்டிருந்தாள் மது.  ஆதியின் ஆறிவாற்றலுக்கு எளிதாய் ஈடு கொடுத்தாள். அவன் அறிந்த வரையில் மிகவும் அறிவாளியாய் இருந்த பெண்கள் , பெண்ணீயம் பேசிக்கொண்டு, கர்வமாய், தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று அறிவுஜீவியாக நினைத்துஅலட்டுபவர்களாக இருந்தார்கள், அல்லது ஃபாஷன், டயட், அலங்காரம் , சினிமா தாண்டி அறிய இஷ்டமில்லாதவர்களாக இருந்தார்கள்.   மது அவனுக்கு புதுமையாகத் தெரிந்தாள். அறிவாகவும், எளிமையாகவும் , உலகை நேசிப்பவளாகவும் இருந்த மது அவன் சித்தம் கவர்ந்தாள்.
அவள் சொல்வதை ஆர்வமாகக் கேட்பதும், தெரியாதவற்றை தெரியாது சொல்லித்தா என்று எந்த மேல் பூச்சும் இல்லாமல் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆதியும் மதுவைக் கவர்ந்து கொண்டிருந்தான். அவனோடு தர்க்கம் செய்ய மதுவிற்கு மிகவும் பிடித்தது. உலக பொருளாதாரம், அரசியல், பங்குச் சந்தை , தங்கம் , பெட்ரோல் மார்க்கெட் என்று பலதரப் பட்ட களங்களில் அலசுவார்கள். சில நேரம் நவனீதனும் சேர்ந்துகொள்வார். அவளுக்கு எதுவாவது தெரியவில்லை, புரியவில்லை என்றால், எளிமையாக புரிய வைத்தான்.  அவள் பக்க பாயின்ட் நியாயமாக இருக்கும் பட்சத்தில் எந்த ஈகோவுமின்றி ஒத்துக்கொண்டான்.
இதெல்லாம் மதுவை கட்டி இழுத்தது. அத்தனை பொழுதுகளையும் நினைவுகளையும் பொக்கிஷமாய் சேகரித்தாள்.
சங்கரியும் சுப்புவும் இருவரின் நெருக்கத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போதெல்லாம் சண்டைகள் இல்லை, அப்படியே முட்டிக்கொண்டாலும், உடனே பேசிக்கொண்டார்கள்.
“என்ன சுப்பு? முப்பதுக்குள்ள பாட்டியே ரெண்டு பேர் மனசையும் சேர்த்து வெச்சிடுவாங்க போலருக்கே?”, என்று ஒரு நாள் சங்கரி கேட்க,
“ஆமாம்மா, நானும் அதைத்தான் வேண்டறேன். ஆனா எதுவும் காட்டிக்காதீங்க. நம்ம சொன்னா, அதுக்காகவே முறுக்கிப்பாங்க. எதுவும் அவங்களுக்கா தோணினாத்தான் செய்வாங்க. சின்ன வயசுலேர்ந்து அப்படித்தான். இப்ப ஒரு வாரமாத்தான சுமூகமா போகுது. பார்க்கலாம்.”, என்று சங்கரியின் ஆர்வத்தை அடக்கினார் ஆதி மதுவைப் பற்றி நன்கறிந்த சுப்பு.
“இந்த ப்ரியா பொண்ணு வேற தினமும் வந்துடறா. ஆதியும் அவளோட நல்லாத்தான் பேசறான். சில நாள் சாயந்திரம் ரெண்டும் வெளிய போயிட்டும் வராங்க. அதை பத்தி மது கண்டுக்கறதும் இல்லை. அவங்களோட போறதும் இல்லை. இது ஒண்ணுதான் இடிக்குது சுப்பு.”, சங்கரிக்கு புரியவில்லை.
ப்ரியா வெறும் தோழி மட்டுமென்றால் மதுவும் செல்ல ஒரு தடையும் இல்லை. ஆனால் அவள் செல்வதில்லை.  ஆதிக்கு மதுவை பிடித்திருக்கும் பட்சத்தில் ஏன் ப்ரியாவுடன் செல்கிறான் என்றும் புரியவில்லை. ஆதியும் மதுவும் காலை நேர  நடை பயிற்சியைத் தவிர எங்கும் ஒன்றாகவும் செல்வதில்லை.
சங்கரி ஆன மட்டும் சுப்புவுடன் அலசினாலும் விடை தெரியவில்லை. நவனீதனோ “அவங்க ரெண்டு பேரும் பக்குவமானவங்க. அவங்களா வந்து கல்யாணம் செய்துக்கப் போறோம்னு சொல்ற வரை, நான் எந்த முடிவுக்கும் வர மாட்டேன். நீயும் எதுவும் செய்யக் கூடாது. இந்த பேச்சே கூடாது.” என்று லாயர் அவதாரத்தை விட மறுத்துவிட்டார்.
தனம் பாட்டியின் பதினாறாம் நாள் காரியத்திற்கான வேலைகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆதியும் மதுவும் ஏற்பாடுகளை நவனீதன் துணை கொண்டு கவனித்துக்கொண்டிருந்தார்கள். அழைப்பும் விடுத்தாயிற்று.
காரியத்திற்கு, மதுவின் பெற்றோர் வேலை வர இயலாது என்று சொல்லிவிட்டதால், ஆதியின் அன்னை சரஸ்வதி, சபரியுடன் முதல் நாள் வருவதாய் இருந்தது.
விமானத்தில் பெங்களூருவிலிருந்து கோவை வந்த அன்னையையும், சபரியையும் ஆதியே அழைக்கச் சென்றிருந்தான். உடன் தொற்றிக்கொண்டு பிரியா சென்றிருந்தாள்.
அன்றிரவு, வரவேற்பறையில் மது அமர்ந்து, இரண்டு அலங்கார வாய் அகன்ற பித்தளைப் பாத்திரங்களில் நீர் ஊற்றி, அதில கவனமாய் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்துகொண்டிருந்தாள்.
“என்னம்மா செய்யற?”, என்று கேட்டவாறே சரஸ்வதி அமர்ந்தார்.
“பூ டெகரேஷன் பண்றேன் அத்தை. ஓணத்துக்கு தரையில பூக்கோலம் போடுவாங்க. அதையே பாத்திரத்துல தண்ணி வெச்சி செஞ்சா இன்னும் நிறைய நேரம் வாடாம அழகா இருக்கும். நாளைக்கு பாட்டி போட்டோ முன்னாடி வெக்கறதுக்காக செய்யறேன்.”, கூறியவாரே பன்னீர் ரோஜா இதழ் ஆரஞ்சு, மஞ்சள் வண்ண சாமந்தி, கீற்றுளாக வெட்டிய வெற்றிலை கொண்டு செய்த வடிவத்தில், சம்பங்கிப் பூக்கள் கொண்டு பார்டர் கட்டிக் கொண்டிருந்தாள்..
“அழகா இருக்கு.  இதுக்கு கிளாஸ் எதாச்சம் போனியா என்ன?”
“இல்ல அத்தை, அப்படி பொழுது போகாம, யூ ட்யூப்ல இந்த மாதிரி பார்த்து கத்துக்கிட்டேன். இந்த மாதிரி ஹால்ல கூட செஞ்சு வெக்கலாம். தண்ணில கொஞ்சம் வாசனை ஆயில் கலந்து வெச்சா நல்லா இருக்கும். கண்ணுக்கு குளிர்ச்சி, மனசுக்கு ஒரு சந்தோஷம். “
“இந்த பூங்க அதுபாட்டுக்கு மெதக்குதே. பாரு ஷேப் போயிடுச்சு.”
“ம்ம்.. கொஞ்சம் பொறுமை வேணும். இழுத்து கட்டி ஷேப்ல நிக்க வெக்க, அதுக்குக்தான் இந்த குச்சி வெச்சி பார்டர். அடுக்கினத்துக்கு அப்பறம் குச்சியை எடுத்துடுவேன்.“
அவளின் நிதானமும் பொறுமையும் சரஸ்வதியைக் கவர்ந்தது.  அவரும் தானே வந்ததிலிருந்து பார்க்கிறார். செய்யும் எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி, ஈடுபாடு.
“என்ன அத்தை, என்னையே பார்த்துகிட்டு இருக்கீங்க?”, அடுத்த பாத்திரத்தில் பூவை அடுக்க ஆரம்பித்திருந்தாள்.
“உனக்கு எங்க ஆதிய பிடிச்சிருக்கா மது?”
“உங்க மகனை யாருக்குத்தான் பிடிக்காது அத்தை? “, அவரைப் பார்த்து புன்னகைத்து, மீண்டும் தன் காரியத்தில் கவனமானாள்.
“நான் உன்னைத்தான் கேட்டேன், மத்தவங்களைப் பத்தியில்லை.”, அவளைப் பார்த்துக் கேட்டார் சரஸ்வதி.
“எனக்கும் பிடிக்கும் அத்தை. மொதல்ல அவன் எப்பவும் பரபரப்பா இருக்கறது ஒரு மாதிரி இருக்கும். ஆனா இப்ப பழகிடுச்சு.”, கைகள் தன் போக்கில் பூக்களை அடுக்க மது பதில் சொன்னாள்.”
“என் பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு பிடிக்குமா உனக்கு?” ஆர்வமாய் அவளைப் பார்த்தார்.
அவரைப் பார்த்து நிமிர்ந்தவள், “என்ன அத்தை திடீர்ன்னு? அதுதான் வேணாம்னு ரெண்டு பேருமே அப்பவே சொல்லிட்டமே?”
“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு மது. என் பிள்ளையை நீ நல்லா பார்த்துக்குவன்னு நம்பிக்கை இருக்கு. நான் சொன்னா ஆதி கேட்பான்.”
அவரை பார்த்து தலை அசைத்தவள், மீண்டும் பூக்களை ஒழுங்கு படுத்தியவாறே, “ஏன் அத்தை, இன்னிக்கு பிரியா ஆதி கூட வந்தாளே. அவள் கூட ஆதிக்கு பிரியம்தான். பார்க்க அழகா இருக்கா.”
“அழகாம் அழகு. அவளைக் கட்டிவெச்சா, என் புள்ளதான் அவளைப் பார்த்துக்கணும்.  அவளுக்கு அவளைப் பத்தி மட்டும்தான் கவலை. இன்னிக்கு கார்ல வரதுக்குள்ளயே கடுப்பாகிடுச்சு எனக்கு.  நான் இருக்கேன்னு கூட பார்க்காம, ஆதி கைய பிடிக்கறது, கார்ல ஜிங்குன்னு முன்னாடி போய் உட்காரதும்னு ஓரே அட்டகாசம்.”,  முகச் சுழிப்புடன் சொன்னார் சரஸ்வதி.
“ஆதிக்கு பிடிச்சிருந்தா? அதுதானே முக்கியம்? ”
“அவனுக்கு அவளை அப்படில்லாம் பிடிக்கலை. அவன் முகம் பார்த்தே என்னால சொல்ல முடியும். மதியம் உன்னை உரிமையா பார்த்தான். ஏதோ நீ சொல்ல கோச்சிக்கிட்டான்.  அப்படியெல்லாம் ஆதி அவ்ளோ சீக்கிரம் நெருங்க மாட்டான். உங்கிட்டதான் ஒட்டியிருக்கான்.”
மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் மொட்டு விட, பூவை அடுக்கி முடித்தவள், ஒரு பாத்திரத்தை எடுக்க, சரஸ்வதி மற்றொன்றை எடுத்தார்.
“இப்ப ப்ரிட்ஜ்ல வெச்சிடலாம் அத்தை, காலைல எடுத்து பாட்டி போட்டோ முன்னாடி வெக்கலாம்.”, என்றவாரே உள்ளே வைத்தாள்.
“நீ எனக்கு பதில் சொல்லலை மது.”, சரஸ்வதி ஞாபகப் படுத்தினார்.
“இந்த ரெண்டு வாரமா, பாட்டி பத்தி நிறைய பேசி, கொஞ்சம் நெருக்கமாகிட்டோம் அத்தை. இப்ப ஃப்ரெண்ட்ஸ் . அதுதான் உங்களுக்கு அப்படியிருக்கு.”
“அப்ப உனக்கு ஆதியை பிடிக்கலையா?”, மீண்டும் ஆரம்பத்திற்கே வந்தார் சரஸ்வதி.
இவரே பேசிப் பேசி தேவையில்லாத ஆசையை தூண்டிவிடுவார் என்று நினைத்தவள், இதை முளையிலேயே கிள்ள வேண்டும் என்று முடிவு செய்தவளாக,  “அத்தை, உங்களுக்கு கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கான்னு வெச்சுக்குவோம். அவளுக்கு மாப்பிள்ளை பாக்கறீங்க.  பையன் நல்லாருக்கணும், சொத்திருக்கணும்கறதெல்லாம் சரி. அதோட, மாப்பிள்ளை உங்க பொண்ண நல்லா பார்த்துக்கணும். அவளை சந்தோஷமா  நாலு எடம் கூட்டிட்டு போகணும்னு எதிர்பார்ப்பீங்க. இல்லையா?”
இவள் எங்கே வருகிறாள் என்று புரியாமல் ஆமாம் என்று தலையாட்டினார் சரஸ்வதி.
“அதுவே, என்னேரமும் பிசினஸ், பணம், டென்ஷன்னு இருக்கற மாப்பிள்ளை, அவர் வீட்ல இருக்கற கொஞ்ச நேரத்துல மனம் கோணாம  பார்த்துகிட்டு, எல்லா விசேஷத்துக்கும் தனியா போயி, தனியாவே நாள் பூரா இருக்கணும் உங்க பொண்ணுன்னா, கட்டி குடுக்க யோசிப்பீங்களா மாட்டீங்களா?”, அமைதியாகக் கேட்டாள் மது.
தன்னைப் போல ஒரு வாழ்க்கையா? “இல்லமா கட்டிக்குடுக்க மாட்டேன்.”, என்றார்.
“ஆதி அந்த மாதிரி ஒரு மாப்பிள்ளைதான் அத்தை. எங்கம்மாக்கு இதெல்லாம் யோசிக்கற அளவு நேரமோ, நிதானமோ இல்லை. அப்ப நாந்தானே யோசிக்கணும்? ஆதிக்கு , அவன் வேகத்துக்கு ஏத்த பொண்ணு கிடைப்பா அத்தை. கவலைப்படாதீங்க. “, மது சொன்னதைக்கேட்ட சரஸ்வதிக்கு கண்ணில் நீர் கோர்த்தது. பிள்ளையைப் பற்றி சொன்னதா, இல்லை அவள் தனக்குத்தானே யோசித்துக்கொள்ள வேண்டியிருக்கும் நிலைக்கா என்று பிரித்தறிய முடியவில்லை.
“ஆதிக்கு நல்ல மனைவி அமையணும்னு தினமும் ஆண்டவனை வேண்டறேன் மது. இனி உனக்கும் நல்ல புருஷன் கிடைக்க சேர்த்து வேண்டிக்கறேன்.”, கரகரத்துப் போன குரலில் சொன்னார்.
“ஸ்வீட் அத்தை. நான் சொன்னதுக்கு கோச்சிக்காம, எனக்கும் வேண்டிக்கறேன்னு சொல்லி அசத்திட்டீங்க.”, என்று அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றாள்.
அன்னையைத் தேடி வந்த ஆதி கண்டது , மது முத்தமிட்டுச் செல்லுவதைத்தான். மனதுக்குள் ஒரு சின்ன சாரல் அடித்தது.
“என்னமா, மது முத்தம் குடுத்துட்டு போறா? அவளையும் உங்க கூட சேர்த்துட்டீங்களா?”, என்றவாறே அன்னையிடம் வந்தான்.
“நல்ல பொண்ணுடா. அவங்க அப்பா அம்மாக்கு இவ அருமை தெரியலை.”
“விடுங்கமா. அவ இஷ்டத்துக்கு விட்டுருக்காங்களே. அந்த மட்டுக்கும் நல்லதுதான். “
“ம்ம்… உனக்கு ஒரு நல்ல பொண்ணு அமையணும்னு வேண்டிக்கற மாதிரி அவளுக்கும் ஒரு நல்ல புள்ளை அமையணும்னு வேண்டறதா சொன்னேன். அத்துக்குத்தான் ஸ்வீட் அத்தைன்னு பட்டம் குடுக்கறா. “
“அவ அவங்க அப்பா அம்மாவைப் பார்த்துட்டு,  கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லைன்னு சொல்லிட்டு இருந்தா. இப்ப உங்க வேண்டுதல்லயாவது கல்யாணம் அமையட்டும். “
“உனக்கு பிடிச்சிருக்காடா அவளை?”, என்று மகனைக் கேட்டார்.
“அம்மா, உடனே ஆரம்பிக்காதீங்க, போய் படுங்க நேரமாச்சு.”, என்ற ஆதி, மது சற்றுமுன் முத்தமிட்ட அதே கன்னத்தில், அதே இடத்தில் தானும் சரஸ்வதிக்கு முத்தம் வைத்து, கண்ணடித்துப் புன்னகைத்துச் சென்றான்.
ஆதியின் கண்களில் ஒரு சின்ன வெட்கம் இருந்ததோ? மெதுவாக, இரண்டு முத்தங்கள் பெற்ற தன் வலக் கன்னத்தை வருடிய சரஸ்வதி, இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று யோசித்தவாறே படுக்கச் சென்றார்.
படுக்கையறையில் மதுவோ, “ம்ம்.. நீயே உன் வாயால சமாதி கட்டிட்ட. இனி உங்கிட்ட ஆதிய கல்யாணம் பண்ணிக்கன்னு அத்தை கேட்க மாட்டாங்க. மாமா அப்பாவைக் கொண்டே கிட்ட வர மாட்டார். இவங்களை மீறி ஆதி எதுவும் செய்ய மாட்டான். பரவாயில்லை மது, கிடைச்ச வாய்ப்பை கரெக்டா யூஸ் பண்ணி செல்ஃப் ஆப்பு வெச்சிக்கிட்ட. சூப்பர்.”, என்று பேசிக்கொண்டவளின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.

Advertisement