Advertisement

அத்தியாயம் – 10
மறுனாள், ஆதி எட்டு மணிபோல் சாப்பிட வரவும், வீட்டில் யாருமே இல்லை. இவன் வரும் அரவம் கேட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தார் சுப்பு.
“எங்கண்ணா ?, யாரும் காணோம் ?”, என்றான் ஆதி.
“லாயர் அய்யா, போன் ஒண்ணு வரவும், சீக்கிரமே கிளம்பிட்டார் தம்பி.  மதுமாவும் லாயரம்மாவும், பாட்டி புடவைங்களை கொண்டு போய் முதியோர் இல்லத்துல இருக்கறவங்களுக்கு குடுத்துட்டு வர போயிருக்காங்க தம்பி. இப்பதான் ஒரு கால் மணி நேரம் இருக்கும்.”
பாட்டியின் புடவைகளைப் பற்றியெல்லாம் அவன் யோசிக்கவேயில்லை. மதுவின் அக்கறை தாக்கியது. அவன் யோசனை கண்டு, “சாப்பிட வரீங்களா தம்பி, இல்லை காபி குடுக்கட்டுமா ?”, என்றார் சுப்பு.
“டிபன் சாப்பிட்டு அப்பறம் காபி எடுத்துக்கறேன்.”, என்று சாப்பிட அமர்ந்தவன், கைப்பேசியில், ஒரு வேளை மது காரியம் பற்றிய நோட்ஸ் எதுவும் அனுப்பியிருக்கிறாளா என்று பார்த்தான். ஒன்றும் இல்லை. ‘அதானே. சரியான அராத்து. அதுவாவது நான் கேட்டத செய்யறதாவது. அவளுக்கா தோணினாத்தான் உண்டு.”, என்று எண்ணியவாறே, டிபன் பறிமாறிய சுப்புவிடம்.
“என்ன முடிவு செஞ்சாங்க அண்ணா காரியத்துக்கு ? உங்களுக்கு தெரிஞ்சவரை சொல்லுங்க.”
தாத்தாவின் உறவில் ஒருவரைக் கேட்டு,  அவர் சொன்ன சாங்கியங்களை அய்யரிடம் பேசி புக் செய்ததையும், காரியப் பத்திரிக்கையில் போட மது போட்டோ இன்று தந்ததும், ப்ரிண்ட் செய்ய தரவிருப்பது பற்றியும் சொன்னார். அமைதியாகக் கேட்டுக் கொண்டான்.
காப்பியுடன் ஆபிஸ் ரூம் சென்றவன், சபரியை அழைத்தான்.
“டேய், பாட்டி பதினாறாம் நாள் காரியம் வருது, நீ இங்க இருக்க.  கரெக்டா ப்ளான் பண்ணிக்க. சன்டேதான் வருது.”
“ஆமாடா, நேத்து நைட் மது போன் பண்ணுச்சு,  பாட்டிக்கு பிடிச்ச பன்னீர் ரோஜா  பூ மாலை வேணும். ஏற்பாடு பண்ண முடியுமான்னு கேட்டுச்சு. அப்பா கிட்ட சொல்லி எனக்கு தெரிஞ்ச இடத்துல ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்கேன்.”, என்று சபரி சொல்ல, ‘கிராதகி, அப்ப வேணும்னே என்னை மட்டும் அவாய்ட் பண்ணிருக்கா.’, என்று நினைத்தான் ஆதி.
“ஆமாடா. நேத்து நீ எங்க போன ? உன்னை கேட்டா, ஆதி இங்கயில்லைன்னு ஒரே வார்த்தைல முடிச்சிட்டா.”, சபரி கேட்டான்.
“ப்ரியா வந்திருந்தாடா, பாட்டி பத்தி கேட்க. அவளோட வெளிய போனேன். அப்படியே படம் போலாம்னு சொன்னா. ரொம்ப நாளாச்சேன்னு சரின்னு போயிட்டு , டின்னர் முடிச்சி அவளை விட்டு வர நைட் லேட்டாகிடிச்சு. அதுக்குள்ள இந்த ராட்சசி ஃபங்ஷனுக்கு எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டா.”
“எந்த ராட்சசி ?”, சபரி காலையில் சற்று மந்தம்தான்.
“டேய் முழிச்சிக்கடா…. எல்லாம் உன் மண்ணாந்திதான்.”, நற நறத்தான் ஆதி.
“அட ராமா… நீங்க இப்ப கொஞ்சம் ஃப்ரெண்ட்லியா இருக்கீங்கன்னு நெனச்சேன் ? மறுபடியும் புட்டுகிச்சா ?”, சபரி பேசும் தொனியிலேயே, அவன் தலையில் கை வைத்திருப்பான் என்று தெரிந்தது ஆதிக்கு.
“தலையிலருந்து கையை இறக்கு. அவ கூட மனுஷன் ப்ரெண்டா இருப்பானாடா ? சரியான திமிர் புடிச்சவ ? உடம்பு பூரா நக்கலு. ப்ரியாவ என்ன சொன்னா தெரியுமா ?”.
“நான் தலையில கை வெச்சிருக்கறதயே தெரிஞ்சி சொல்லுற, இதையும் நீயே சொல்லு.”, என்றான் சபரி.
“அவ சாதாரணமா, மது நீ டயட்ல இரு, கொஞ்சம் வெயிட் போட்டிருக்கன்னு சொன்னதுக்கு, பாட்டி மாதிரியே என்னா கிண்டல் தெரியுமா ப்ரியாவ ? “
“என்ன, என்ன சொன்னா ப்ரியாவ “, ஆர்வமாய் கேட்டான் சபரி.
“சனிக்கிழமை சாவற மாதிரி இருக்காளாம் ப்ரியா.”, என்று ஆதி சொல்லவும், சபரி கலகலவென்று சிரித்தான்.
“அய்யோ அய்யோ, அந்த அல்டாப்பு முகம் போன போக்க நான் பாக்க குடுத்து வெக்கலியே…”, என்று சபரியும் கிண்டல் செய்ய,
“டேய்…என்னடா ப்ரச்சனை உங்க எல்லாருக்கும் ? நோனா, மது இப்ப நீ, எல்லாரும் அவ மேல எப்பவும் காயரீங்க. கொஞ்சம் அலட்டுவா மத்தபடி நல்ல பொண்ணுதான்டா அவ. “
“ஆமா ஆமா. அவ மதுவ பார்த்து நீ குண்டாயிட்டன்னு சொல்றது தப்பில்லை, மது சொன்னதுதான் தப்பு. நீ பேசுவ ராஜா. அத்து, ஆத்துன்னு நீ சொல்றதுக்கெல்லாம் தாளம் போடறா இல்லையா?  நீ சொல்லுவ. ஆமாம், ஏன் மதுவ உங்க கூட கூட்டிட்டு போகல ?”
“நான் கூப்பிட்டேன். ப்ரியாதான் ரிமைன்ட் பண்ணா, யாரும் விசாரிக்க வந்தா மது இருக்கணும்னு. “
“ஏன், அந்த ரூல் உனக்கில்லையா ?”, சபரி கேட்க, “ மது சொன்னாடா, சரி லன்ச்தானன்னு போனேன். அப்படியே இழுத்துடுச்சு.”, ஆதி ஒப்புக்கொடுத்தான்.
“அந்த காண்டுலதான் மது உன்னை தூக்கி உடப்புல போட்டுட்டு எல்லாத்தையும் அவளே ப்ளான் போட்டுட்டா.”, சபரி சொல்லவும்,
“என்ன காண்டு ? அவளை கூப்பிட்டேன். அவ வரவேண்டியதுதான ? யார் வேண்டாம்னது ?” ஆதி கேட்டான்.
“டேய்…மத்த விஷயத்தில எல்லாம் புலியா இருக்கிறவன், இதுல மட்டும் ஏண்டா வாத்தா இருக்க ?  மதுவுக்கு மான ரோஷம் இல்லையா என்ன ? ப்ரியா அவ வர வேண்டாம்னு ரீசன் சொல்லி, பத்தாததுக்கு குண்டாயிருக்கன்னு வேற சொல்லிருக்கா. நீ என்ன பண்ண ?”, சபரி கேட்டான்.
“மதுவை முறைச்சேன். வீட்டுக்கு வந்திருக்க கெஸ்ட்கிட்ட இப்படிதான் மரியாதையில்லாம நடக்கறதா ?”, ப்ரியாவிற்காக இன்னமும் வாதாடினான் ஆதி.
“மது வீட்டுக்கே வந்து, மதுவை பேசுவா ? அதை நீ தட்டி கேட்க மாட்ட. மதுவை மட்டும் குறை சொல்லு. இத்தனை நாள்ல, ஒரு வாட்டி அவளை கூட்டிட்டு வெளிய போகணும்னு உனக்கு தோணலை. லன்ச் ஐடியா யாருது ?”,
“ம்ம்… நாந்தான் சொன்னேன். கொஞ்சம் வேலை இருக்கு, அதனால லன்ச் போகலாம் ப்ரியான்னு.”, குரல் இரங்கியிருந்தது ஆதிக்கு.
“நினைச்சேன். அதான் மதுவுக்கு ஏறிக்கிச்சு. பத்தாததுக்கு, லன்சுக்கு போன மகராசன் டின்னர் வரைக்கும் ப்ரியாவோட இருந்துட்டு வந்திருக்க. ஏன் மதுவை பார்த்தா எல்லாம், வெளிய கூட்டிட்டு போற ஐடியா வராதா ? “, சபரி கோபம் கொள்ள, ஆதிக்கு இப்போது சற்று புரிந்தார்போல இருந்தது.
“நான் அப்படியெல்லாம் யோசிக்கலைடா.  சரி, இப்ப புரிஞ்சிடுச்சு. அவ வரட்டும். நான் சரி பண்றேன்.”
தெளிவு பெற்றவன், அன்றைய வேலையில் மூழ்கிப்போனான்.
உள்ளே வர அனுமதி கேட்டு கதவு தட்டிய  ஓசையில் அனுமதி கொடுத்தவன், லாப் டாப் திரையிலிருந்து கண்கள் விலக்கவில்லை. சுப்பு என்று நினைத்திருந்த ஆதி, மெல்லிய நறுமணம் நுகர சட்டென்று திரும்ப, அங்கே மது நின்றிருந்தாள்.
கையில் இருந்த நோட்டை மேசையில் வைத்தவள்,
“பாட்டி காரியம் பத்தின டிடெயில் எல்லாம் இதுல இருக்கு. என்ன மாத்தணுமோ அங்கிள் கிட்ட சொல்லிக்கோங்க. நேத்து நைட் கொஞ்சம் எல்லை மீறி பேசிட்டேன். சாரி. இனி உங்க விஷயத்துல தலையிட மாட்டேன்.”, என்று அமைதியாக , அவன் கண் பார்த்து கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் திரும்பி சென்றாள்.
கதவை திறக்கப் போகையில்தான் அவள் சொல்லிச் சென்றது உரைத்தது.
“மது, இரு.”, என ஆதி வேகமாக சொல்ல, அங்கிருந்தே திரும்பிப் பார்த்தாள்.
“என்ன, நீ பாட்டுக்கு வந்த, சாரி கேட்டுட்டு போற ? அதை நான் அக்செப்ட் பண்ண வேண்டாமா ?”, என்றவாறே எழுந்து மேசையில் சாய்ந்து நின்று அவளைப் பார்த்தான்.
எப்போதும் போல தோளைக் குலுக்கியவள், “என் தப்பை ஒத்துகிட்டு நான் மன்னிப்பு கேட்டேன். அதை ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உங்க விருப்பம். “
அவள் முகத்திலிருந்து ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை ஆதியால். “வந்து உக்கார் மது. பேசலாம்.”, என்று அழைத்தான்.
வந்து அவன் எதிரே அமர்ந்தவள், அவள் கொண்டு வந்த புத்தகத்தைக்காட்டி, “எல்லாமே நோனா என்ன இஷ்டப்படுவாங்கன்னு யோசிச்சுதான் முடிவு செய்தேன்.  நீ பார், பார்த்துட்டு எதுவும் கேக்கணும்னா கேளு.”, மீண்டும் ஒருமைக்கு தாவியிருந்தாள்.
“என்னாச்சு ? ப்ரியா மேல உனக்கு என்ன கோவம் ? என்ன இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்திருக்க கெஸ்ட். ஏன் அப்படி நடந்துகிட்ட ?”, கேட்டவன் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.
“என்னவாயிருந்தா என்ன ? முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். அவ இனி வந்தா, நான் அந்த இடத்துலயே இருக்கலை. போதுமா ?”, இலகுவாகவே பதில் சொன்னாள்.
“ம்ஹூம்… நான் கேட்டதுக்கு பதில் இதில்லை. “, மீண்டும் அவளையே பார்க்க, இம்முறை மது அவன் முகம் பார்க்காமல், கோர்த்திருந்த தன் கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஒரு சிறு அமைதி. அதை கலைக்க முற்படாமல் பார்வையை மாற்றாமல் இருந்தான் ஆதி.
ஒரு பெருமூச்சுடன், “ அவ ன்னு இல்லை, அவளை மாதிரி ஆளுங்களைக் கண்டாலே பிடிக்காது.”
“அவளை மாதிரின்னா ? அழகாவா ?”, நிமிர்ந்து ஆதியை ஒரு பார்வை பார்த்தவள்,
“ம்ச்… வெளி அழகு உள்ள இருக்க அழுக்கெல்லாத்தையும் மறைச்சிடுது. எனக்கு உள்ள இருக்கறதுதான் பட்டுத் தொலைக்குது. விடு, எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கணும்னு அவசியம் இல்லை.”, மீண்டும் நழுவப் பார்த்தாள்.
“இல்லைதான். ஆனா நீ அவளை க்ரூப் பண்ற. என்ன மாதிரி ஆளுங்க உனக்கு பிடிக்கறது இல்லை. “, ஆதியும் விடாமல் கேட்க,
“ம்ம் உண்மையா இல்லாம ஒரு இத்துப்போன கவசத்தை மாட்டிகிட்டு சுத்தறவங்களை, தன்ன சுத்திதான் இந்த உலகமே சுத்துதுன்னு நினைசிகிட்டு, சுயனலமே உருவாய்,  வெளி உலகத்துக்காக வேஷம் போடறவங்களைக் கண்டாலே எனக்கு ஆகாது. அப்படி பட்டவங்க அவங்க அதிகாரத்தைக் காட்ட என்னை மட்டம் தட்டினா, வாங்கித்தான் கட்டிக்கணும்.”, கேட்டாயே எடுத்துக்கொள் என்று கொட்டிவிட்டாள்.
அதுவரை இமைகொட்டாமல் அவள் முகத்தில் படிந்த உணர்வுகளைப் படித்தவன், “ ப்ரியா இருந்த அஞ்சு நிமிஷத்துல இவ்வளவையும் கண்டியா ? ஒரு உதாரணம் சொல்லேன் பார்க்கலாம்.”, என்றான், அவள் எண்ண ஓட்டத்தை அறிய எண்ணம்கொண்டு.
“பாட்டி பேரு தெரியாதது தப்பில்லை, அவங்க சோ ஸ்வீட்ன்னு எதுக்கு கொஞ்சணும் ? பாட்டி அவளை தாளிச்சது உனக்கும் தெரியும்தானே ? அவளுக்கு வருத்தம் இல்லை, அப்பறம் எதுக்கு நடிக்கணும் ? உன்னை பார்க்க வந்தா, அதை சொல்றதுக்கு என்ன ? “
“எல்லா ப்ளானும் கான்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்னு அடுத்த பிட்டு. ஏன் ? யார் கேட்டா ? சுப்பு குடுத்த ஜூசை எவ்வளவு அலட்சியமா வேண்டாம்னா ? பார்த்துகிட்டுதான இருந்த ? சோ, அவளுக்கு  கீழ இருக்கவங்க எல்லாம் மனுஷனே கிடையாது, சேவகம் செய்யத்தான் பிறப்பெடுத்திருக்காங்க ?”, பொரிந்தவள்,  “அந்த எரிச்சல்தான். வேற ஒண்ணுமில்லை.”, என்று எழ முற்பட்டாள்.
“இரு மது. இன்னும் ஒரு கேள்வியிருக்கு.”, என்றான்.
“என்னை என்ன வேலைக்கா இன்டெர்வுயூ செய்யற ? ஏதோ கேட்டியேன்னு சொன்னேன். “, என்று எழுந்தே விட்டாள்.
எட்டி அவள் கைபிடித்து நிறுத்தி, “ ஒரு நிமிஷம் உக்கார். நானும் சாரி சொல்லணும்.”, என்றான்.
“அதான் அன்னிக்கே சொல்லிட்டயே.  விடு.”
“உக்கார் ஒரு நிமிஷம். “, என்று அவள் கையை விடவும், மீண்டும் சென்று உட்கார்ந்தாள்.
“இந்த சாரி நான் லேட்டா வந்ததுக்கு இல்லை. இத்தனை நாள்ல, உன்னை எங்கயும் கூட்டிட்டு போகலை. அது தோணவும் இல்லை. சாரி.”
அவனை வினோதமாகப் பார்த்தவள், “நீ எதுக்கு கூட்டிட்டு போகணும் ? எனக்கு வேணும்னா நானே போயிக்குவேன். இது என்ன எனக்கு தெரியாத ஊரா ?”
“அப்போ… நான்…. என் மேல எதுக்கு அவ்ளோ கோவப்பட்ட ?”, சபரி சொன்ன காரணம் இல்லை என்றதும் மீண்டும் குழம்பினான்.
“உன்னோட நேரத்தை மணிக் கணக்கா அவளை மாதிரி ஒரு பொண்ணுகூட ஸ்பெண்ட் பண்ணது எரிச்சலை கிளப்பிவிட்டது. நீ உன்னோட நேரத்தை வீணடிக்கறதே இல்லை, நான் பார்த்த வரையில்.  இப்படி ஒரு நாள் பூரா, அதுவும் பாட்டி பத்தின ஒரு விஷயத்துக்கு வரேன்னு சொல்லிட்டு மறக்கற அளவுக்கு அவ அவ்ளோ வொர்த்தான்னு கோவம், ம்ம்ம் கொஞ்சம் பொறாமை கூட. “, மீண்டும் ஒரு தோள் குலுக்கல்.
“அப்பறம் யோசிச்சப்போ உன் நேரம், நீ யார் கூட எப்படி செலவு செய்யறன்னு கேட்க நான் யாரு ?  அதிகமா ரியாக்ட் பண்ணது தெரிஞ்சது. அதான் சாரி கேட்டேன்.”, அவன் எதிர்பார்த்த தோள் குலுக்கலுடன், இதில் மறைக்க ஒன்றும் இல்லை, இனி என்ன என்ற பாவனையில் கூறினாள்.  
நான் பொறாமைப்பட்டேன் என்பதையும் அமைதியாக ஒத்துக்கொள்ளும் பாங்கு ஆதியை ஈர்த்தது. தன் உணர்வுகளை பாரபட்சமில்லாமல் ஆராய்ந்து முடிவுக்கு வருவதாகட்டும், அதை பகிர்வதாகட்டும், மதுவின் அமைதிக்கும், பக்குவத்திற்கும் அடியில் இருக்கு ஆழத்தை உணர்த்தியது ஆதிக்கு. ‘இருபதுகளின் முன் பாதியில் இருப்பவளுக்கு இவ்வளவு சுய அலசல் வர அவள் கடந்து வந்த நிகழ்வுகள் என்னவாக இருக்கும் ?’, என்று வேகமாய் ஓடியது ஆதியின் சிந்தனை.
அவன் பதில் கூறாமல் தன்னையே பார்த்திருப்பது சற்று உறுத்த, மீண்டும் தோளை குலுக்கி கதவை நோக்கி செல்ல முற்பட்டாள்.
“மது. இரு. ஏன் ஓடற ? நான் இன்னும் முடிக்கலை.”, என்றான் ஆதி.
“உனக்கு வேலை எதுவும் இல்லையா ? இன்னும் என்ன ? அதான் எல்லாம் சொல்லிட்டனே ?”, என்றாள் சற்று சலிப்பாக.
“என் மேல ஒரு குற்றசாட்ட வெச்சிட்டு எனக்கு விளக்கம் சொல்ல ஒரு சான்ஸ் குடுக்காம போறியே, நியாயமா ?”, ஒரு புருவம் தூக்கி வினவ, நெற்றி சுருக்கியவள், “நான் உன்னை என்ன சொன்னேன் ?”, என்று கேட்டாள் மது.
“ப்ரியா கூட அவ்வளவு நேரம் செலவு செய்ய அவ வொர்த்தில்லைன்னு சொன்னியே…”, என்று நிறுத்த,
“அஹ்…ப்ளீஸ். அவ முகத்தைப் பார்த்தாலே நேரம் போறது தெரியாது, அவ கொஞ்சற அழகுல என்னையே தொலச்சிட்டேன்னு டயலாக் சொல்லாத . அப்படி நீ நினைச்சாலும் எனக்கு தெரியவே வேண்டாம். கடுப்பாகிடும்.”, என்றாள் வேகமாக.
கலகலத்துச் சிரித்தவன், “நீ பயப்படுற மாதிரி இல்லை. ரிலாக்ஸ். “, என்றான்.
இப்போது மதுவுக்கு சற்று ஆர்வம் வந்தது. “சரி அப்படி என்னதான் செய்தீங்க ?”
“ப்ரியா மாதிரி பொண்ணுங்க கூட டைம் ஸ்பெண்ட் செய்யறது ஈசி. அவங்க என்ன பேசறாங்கன்னு கேட்க தேவையே இல்லை. அப்பப்ப யா பேபி சொல்லி சிரிச்சா போறும். அவங்களே பேசிக்குவாங்க. ஒரு மாலுக்கு போய் எல்லா பொருளையும் அலசி, பத்து ட்ரெஸ் ட்ரை செஞ்சு காட்டினா, எதாச்சம் நாலு நல்லாருக்குன்னு சொல்லி சிரிச்சா ஒரு ரெண்டு மணி நேரம் ஓடும்.”
கண்கள் விரிய, “போர் அடிச்சு சாக மாட்டியா ?”, என்றாள்.
“ம்ஹூம்…எந்த தொந்தரவும் இல்லாம, ரிலாக்ஸ்டா நான் என் பிசினஸ் ஐடியாக்களை யோசிக்க, இல்ல யோசிச்சத அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகன்னு நிம்மதியா ப்ளான் பண்ண நேரம் கிடைக்கும். ஆபிஸ்ல இருந்தா எதாச்சம் வேலை இருந்துகிட்டே இருக்கும். மத்தவங்க கூட இருக்கும்போது, அவங்க மேல கவனம் இருக்கும். ப்ரியா மாதிரி பொண்ணுகிட்ட அதெல்லாம் தேவையில்லை. சோ அன்னிக்கு ஒரு முழு பிஸ்னஸ் ப்ரபோசலே ப்ளான் செய்துட்டேன் அவ கூட லன்ச், சினிமா, டின்னர் முடிக்கறதுக்குள்ள. “, ஆதி சொல்லி சிரிக்கவும்,
“அடப்பாவி, என்ன ஒரு ஈகோ உனக்கு?  பொண்ணுங்களை இவ்ளோ கிள்ளுகீரையா  யோசிக்கற ! “
“ஹேய்… நான் எல்லா பொண்ணுங்களையும் சொல்லலை அண்ட் ப்ரியா பத்தி கூட நான் தப்பா சொல்லலை. அவளுக்கு வேண்டிய மினிமம் கவனிப்பு குடுத்தா போறும்னுதான் சொல்றேன். எங்கையும் அவளை மதிக்காம இல்லை நான். அதனால நேத்து என் டைம் உருப்படியாத்தான் செலவு செஞ்சேன்.”
உதட்டை சுழித்தவள், “அப்ப நீ எங்கூட நேரம் செலவு பண்ணாம இருக்கறதே நல்லதுதான் போல ?”
“ உன் கூட இருக்கும்போது என் கவனம் உங்கிட்ட இல்லைன்னா, அடுத்த நிமிஷம், ‘என்னாச்சு ? உனக்கு வேற வேலை இருந்தா பாருன்னு கிளம்பிடுவ.’ லேசான புன்னகையோடே கூறினான்.
“அந்தளவுக்கு தெரிஞ்சதே, அதுவே போறும்.”, பதில் புன்னகையுடன் கிளம்பினாள்.
“லன்சல பார்க்கலாம். இன்னிக்கு நேரத்துக்கு வந்துடுவேன். அப்ப காரியத்துக்கு வேண்டியதை பேசிடலாம்.:, என்று விடை கொடுத்தான்.
வெளியே வந்த மது தீவிர சிந்தனையில் இருந்தாள்.
‘தன்னை சஞ்சலப்படுத்துகிறான். அழகாய் இருந்தான், அவனை எப்போதேனும் பார்ப்பதில் தவறில்லை என்று நினைத்திருந்தாள். நேற்று ப்ரியாவுடன் போனது பொறாமையைக் கொடுத்தது. ஆதியிடம் சொன்ன காரணங்கள்தான், அதில் ஒன்றை மட்டுப்படுத்தி சொல்லியிருந்தாள். ஒரு நாள் முழுக்க ஆதியை கட்டி வைத்திருக்கும் அளவு ப்ரியாவின்பால் ஈடுபாடு இருந்ததா என்ற புகைச்சல். அதை மட்டும் சொல்லவில்லை. ஆதியின் பதில் ஒரு வகையில் அவளை குளிர்வித்தது. ஒத்துக்கொண்டாள். அதே நேரம், தனக்கு இது நல்லதில்லை என்றும் புரிந்தது. இதை வளர விட்டால் கண்ணீரில்தான் முடியும் என்பதும் திண்ணம். பார்க்கலாம். இன்னும் மூணு வாரம்தானே. சமாளிக்கலாம்.’, என்று நினைத்தாள்.
 காதல் வயப்பட நொடி நேரம் போதுமாமே , யார் சொல்வது இந்தப் பேதை பெண்ணுக்கு ?

Advertisement