Advertisement

சென்னை மாநகரின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் இடமான தாம்பரத்தில் தான் அமைந்துள்ளது பல சிறப்பு வாய்ந்த மருத்துவமனை VSB Multispeciality Hospital. அந்த மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் அறுவை சிகிச்சை செய்யும் ஆயத்த பகுதியிலிருந்து தலையைப் பின்னால் சாய்த்து, வலது கையால் கழுத்தைத் தடவிக் கொண்டு, இடது கையில் கைப்பேசியுடன் வெளியே வந்தான் விபீஷணன்.

அவன் அறுவை சிகிச்சை செய்த நோயாளியின் மனைவியும், பையனும் இவனைப் பார்த்தவுடன் வேகமாக அவனிடம் வந்து எதிர்பார்ப்போடு அவனது முகத்தைப் பார்க்க, அவனோ முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல்,”மூளைல இருக்கிற கட்டியை நாங்க ரீமூவ் பண்ணிட்டோம். ஆப்ரேஷன் சக்சஸ். இன்னும் கொஞ்ச நேரத்துல பேஷன்டை NICU க்கு மாதிடுவோம். அவர் கண் முழிச்சதும் நீங்கப் போய் பார்க்கலாம்.” என்று அவன் கூற,

“ரொம்ப சந்தோஷம் டாக்டர். உங்களுக்கு எங்க நன்றியை எப்படிச் சொல்றதுனே தெரியலை. என்னோட கணவரை மட்டும் நீங்க காப்பாத்தலை என்னோட ஒட்டு மொத்த குடும்பத்தோட ஆணிவேரைத் தான் நீங்க காப்பாத்தி கொடுத்துருக்கீங்க.” உணர்ச்சி பொங்க அந்தப் பெண்மணி கூற,

“நான் என்னோட வேலையைத் தான் செய்தேன்.” மிகவும் சாதாரணமாகக் கூறிவிட்டு, அந்த அறுவை சிகிச்சையில் அவனுக்கு உதவியாக இருந்த அவனுக்குக் கீழ் வேலை செய்யும் மருத்துவருடன் பேசியபடி அங்கிருந்து சென்று விட்டான்.

“அந்த பேஷன்ட் கண் முழிச்சதும் என்னைக் கூப்பிடுங்க. நான் என்னோட ரூம்ல தான் இருப்பேன். அப்புறம் கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க. நான் பார்க்கிறதுக்கு முன்னாடி ஃபேமலி மெம்பர்ஸை பார்க்க அலோவ் பண்ணாதீங்க.” என்று கூறிவிட்டு விபீஷணன் அவனது அறைக்குச் சென்றான்.

விபீஷணன், ஐந்து அடி பதினோர் இன்ச் உயரம், கட்டுமஸ்தான உடம்பு, முறுக்கேறிய புஜம், கோதுமை நிறம் எனப் பார்ப்பதற்குக் சினிமா நடிகர் போல் இருப்பான். முப்பதின் தொடக்கத்தில் இருப்பவன். ஆனால் அப்படி அவனைக் கூறவே முடியாது. அவன் பார்க்கும் தொழிலில் அவனுக்குச் சிறு ஓய்வு கூட இருக்காது. இருந்தாலும் கிடைக்கும் நேரத்தில், அது பத்து நிமிடமாக இருந்தாலும் ஏதாவது உடற்பயிற்சி செய்து விடுவான். அவன் நன்றாக இருந்தால் தான் வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் வழங்க முடியும். அதனால் எப்போதும் அவனது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பான். மின்தூக்கியை அவன் பயன்படுத்தி யாருமே பார்த்தது இல்லை. எப்போதும் மாடிப்படிகளையே பயன்படுத்துவான். அங்கு வேலை செய்யும் பல ஜூனியர் மருத்துவர்களுக்கு இவன் தான் ரோல் மாடல். அதே போல் இவன் மிகவும் புத்திசாலி, அறிவாளி. அதனால் தானோ என்னமோ அந்த மருத்துவமனையில் நரம்பியல் பிரிவின் இளம் சர்ஜனாக வலம் வருகிறான். அவனது பிரிவில் மற்ற சர்ஜன்கள் எல்லாம் நாற்பது வயதைக் கடந்தவர்கள். மருத்துவப் படிப்பை அவன் விரும்பித் தேர்வு செய்து படித்தான். அதனால் மிகுந்த ஈடுபாட்டுடன் படித்ததால் இளம் வயதிலே சர்ஜனாக முடிந்தது அவனால்.

விபீஷணன் அவனது அறைக்கு வர, அவனது கழுத்து வலி பயங்கரமாக இருக்க, அங்கிருக்கும் அவனது மேஜை ட்ராயரை திறந்து அதிலிருக்கும் களிம்பை எடுத்து அவன் கழுத்தில் தேய்க்கப் போக, அப்போது ஒரு கரம் அவனது கரத்தைப் பற்றி,

“அத்து எத்தனைத் தடவை தான் உங்களுக்குச் சொல்றது? கழுத்து வலிக்குதுனா என்கிட்ட சொல்லுங்க நான் மருந்து தடவி தேய்ச்சி விடுறேன்னு!!” என்று குறைபட்டுக் கொண்டே அவனது கையிலிருந்த களிம்பை வாங்கி அதிலிருந்து மருந்தை எடுத்து அவனது கழுத்தில் தேய்த்து உருவ(massage) அவனுக்கு மிகவும் இதமாக இருந்தது. அப்படியே கண்ணை மூடி,

“லட்டு உன் கைல என்ன மேஜிக் வைச்சுருக்கியோ தெரியலை!! நீ ஆயின்மென்ட்டை தேய்ச்சு விடும் போது வலிக்குப் பதிலா சுகமா இருக்கு தெரியுமா? என் வலியைக் குறைத்த அந்தக் கைக்கு நான் பரிசு தர வேண்டாம்.” என்ற விபீஷணன் அவளது கரத்தைப் பிடிக்க அவனது கரத்தைப் பின்னால் எடுத்துப் போக, எதுவும் அவன் கைக்குச் சிக்கவில்லை. புரியாமல் கண்ணை விழித்து அவன் பார்க்க, அப்போது தான் புரிந்தது அவன் இதுவரை கற்பனையில் இருந்திருக்கின்றான் என்று. நிதர்சனத்தை உணர்ந்து கண்ணில் நீர் வழிய, அதைத் துடைத்துக் கொண்டு களிம்பை தேய்க்காமல் அதை அப்படியே மேஜை மேல் வைத்துவிட்டு அங்கிருக்கும் சாய்விருக்கையில் கண்ணை மூடிக் கொண்டு உறங்கினான். அப்படிக் கூற முடியாது உறங்க முயன்றான் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். அவன் நன்றாக நிம்மதியாக உறங்கி ஒரு வருடத்திற்கு மேலாகிறது.

அன்று வெள்ளிக் கிழமை, சீக்கிரம் எழுந்து தலை குளித்து, புது ஆடை அணிந்து வேகமாகத் தயாராகி அவளது அறையை விட்டு வெளியே வந்தாள் நந்திதா.

“என்ன நந்து புடவைக் கட்டி இருக்க இன்னைக்கு? எதுவும் விசேஷமா?” என்று அவளது தோழி பிரியா கேட்க,

“அதெல்லாம் இல்லை பிரியா. இன்னைக்கு வெள்ளிக் கிழமை, அதான் புடவைக் கட்டிக் கோவில் போயிட்டு வரலாம்னு தான். வேற எந்த விசேஷமும் இல்லை.” நந்திதா கூறிக் கொண்டே அவளது பை மற்றும் கார் சாவி என அனைத்தையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

“நான் கோவிலுக்குப் போயிட்டு வந்து சாப்பிட்டுக்கிறேன். நீ சாப்பிட்டு வீட்டைப் பூட்டிட்டு ஆபிஸ் போ பிரியா. என்கிட்ட ஒரு சாவி இருக்கு.” என்று கூறிக் கொண்டே பிரியாவின் பதிலை எதிர்பார்க்காமலே அவள் வேகமாக வெளியே வந்து மின்தூக்கி வழியாகக் கீழே சென்று விட்டாள்.

அவளது காரை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் முத்து மாரியம்மன் கோவிலுக்குச் சென்றாள். அன்று வெள்ளிக் கிழமை அதுவும் மார்கழி மாதம் வேற என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் இடமே இல்லாத அளவுக்குக் கூட்டம் என்று இல்லை. அவளது நேரம் அன்று சிறப்புப் பூஜை எதுவுமில்லாததால் சற்று ஆசுவாசமாகவே கண் குளிர சாமியை நன்றாகத் தரிசித்தாள்.

அர்ச்சகர் தீபாராதனையைச் சாமிக்குக் காட்ட, அவள் வாயில் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க, அவர் தீபாராதனைத் தட்டைக் கொண்டு வரவும், வேகமாக அவளது பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து தட்டில் போட்டு விட்டு கற்பூரத்தைத் தொட்டு வணங்கி விட்டு, விபூதி, குங்குமம் எடுத்து அவளது நெற்றியில் வைத்து விட்டு மீண்டும் ஒரு முறை சாமியைக் கும்பிட்டு விட்டு கோயிலைச் சுற்றி வரச் சென்றாள்.

நந்திதா கோயிலைச் சுற்றி முடித்து விட்டு ஒரு ஓரமாக அமர்ந்தாள். அவளுக்குச் சற்றுத் தள்ளி ஒரு பெண்மணி முகத்தில் அத்தனை சோகத்தைத் தேக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த நந்திதாவுக்குக் கவலையாக இருந்தது. அவரிடம் பேச வேண்டும் போல் இருந்தது, ஆனால் யாரென்றே அறியாதவரிடம் போய் என்ன பேச என்று அமைதியாகி விட்டாள்.

சிறிது நேரத்தில் அந்தப் பெண்மணியும் எழுந்து செல்ல, நந்திதாவும் எழுந்து இரண்டு அடித் தான் எடுத்து வைத்திருப்பாள், அந்தப் பெண்மணி திடீரென மயங்கிக் கீழே விழுகப் போக, நந்திதா அவரைத் தாங்கிப் பிடிக்க, மக்கள் கூட்டம் கூடியது.

வேகமாக நந்திதா,”கொஞ்சம் தள்ளி நில்லுங்க, அவங்களுக்கு காத்து வரனும். அப்புறம் யாராவது தண்ணீ இருந்தா குடுங்க.” என்று அவள் கேட்க, கூட்டத்தில் யாரிடமும் தண்ணீர் இல்லை. உடனே நந்திதா பக்கத்திலிருந்தவரிடம்,

“அக்கா ஆபத்துக்குப் பாவமில்லை, அந்தத் தேங்காயைக் கொஞ்சம் குடுங்களேன். அதோட காசையை நான் கொடுத்துடுறேன்.” என்று அவள் கூறி அவளது பையிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுக்க,

“அட என்னமா நீ? அந்த அளவுக்கு மனசுல ஈரமில்லாதவ கிடையாது நான். இந்தா பிடி, காசெல்லாம் வேண்டாம்.” என்று தேங்காயை அவளிடம் தர,

“ரொம்ப தாங்க்ஸ் அக்கா.” என்று கூறி அந்தத் தேங்காயை உடைத்து அந்தப் பெண்மணியின் முகத்தில் சிறிது தெளித்து விட்டு அவரது வாயைத் திறந்து அதில் தேங்காய் தண்ணீரை ஊற்ற, அந்தப் பெண்மணி மெதுவாகக் கண் விழித்துப் பார்த்தார். அவர் கண் விழித்ததுமே கூட்டத்திலிருந்த ஒருவர்,”அதான் முழிச்சுட்டாங்கள அப்புறம் என்ன பா போய் வேலையைப் பாருங்க.” என்று குரல் கொடுக்க அனைவரும் கலைந்து சென்றனர்.

அனைவரும் சென்றதும் அவரைப் பக்கத்தில் அமர வைத்தவள், வேகமாகப் பிரசாதம் கொடுக்கும் இடத்திற்குச் சென்று ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக் கொண்டு அந்தப் பெண்மணியிடம் வந்தாள்.

“ஆன்ட்டி இந்தாங்க, இதைச் சாப்பிடுங்க, காலைல சாப்பிடாமல் வந்திருப்பீங்க அதனால் தான் தலைச் சுத்தி கீழே விழுகப் போயிட்டீங்க.” என்ற நந்திதா, அவளது கையிலிருந்த பிரசாதத்தை அவரிடம் நீட்ட,

“இதெல்லாம் எதுவும் வேண்டாம் மா. இங்கக் கோவில்ல விழுந்தவ நடு ரோட்டுல விழுந்திருந்தா ஓரேயடியா போய் சேர்ந்திருக்கலாம்.” விரக்தியாக அந்தப் பெண்மணி கூற, கேட்டுக் கொண்டிருந்த நந்திதாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

Advertisement