Advertisement

ராஜாராம் எல்.ஐ.சி.யில் வேலைப் பார்த்துப் போன வருடம் தான் ஓய்வு பெற்றார். சசிகலாவும் அரசாங்கப் பள்ளியின் ஆசிரியராக இருந்து ஆறு வருடங்களுக்கு முன்பு சில உடல்நலக் குறைவால் அவர் விருப்ப ஓய்வு பெற்று விட்டார். பிள்ளைகள் மூவரையும் நன்குப் படிக்க வைத்தனர். அதுவும் விபீஷணன் இவர்களுக்கு அதிகச் செலவு வைக்காமல் தன்னுடைய அத்தனை படிப்பையும் படித்து முடித்தான். நர்மதாவுக்கு நூறு பவுன் நகை, ஐந்து கீழோ வெள்ளி, பத்து லட்சம் ரொக்கம், மாப்பிள்ளைக்கு கார் என்று சீரும் சிறப்புமாகக் கல்யாணம் செய்து வைத்தனர். அதே போல் கவுதம் மற்றும் விபீஷணன் இருவருக்கும் சென்னையிலே தனி வீடு வாங்கிக் கொடுத்து விட்டார்கள். அவர்கள் தனியாகச் செல்ல ஆசைப்பட்டால் தாராளமாகச் செல்லலாம் என்று தான் திருமணத்திற்கு முன்பே இருவரது பெயரிலும் பதிவு செய்து கொடுத்து விட்டார். ஆனால் இருவருக்கும் தனியாகப் போக விருப்பம் இல்லாததால் இரண்டு பேரும் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர். இப்போது இவர்கள் இருக்கும் வீடு மட்டும் மூவருக்கும் சொந்தம்.

அன்று வெள்ளிக்கிழமை, சசிகலா காலையில் சாப்பிடாமலே ராஜாராமுடம் கோவிலுக்குக் கிளம்பிவிட்டார். அவர் பயங்கர ஆர்வத்துடன் கோவிலுக்கு வர, ராஜாராம் தான் அவரிடம்,”சசி ரொம்ப நம்பிக்கை வைச்சுடாத. அப்புறம் அது நடக்காட்டி கஷ்டமா இருக்கும்.” என்று கூற,

“ப்ச் சும்மா இருங்க. கோவிலுக்கு வந்து நல்ல விஷயம் பேசாட்டியும் இப்படிப் பேசாதீங்க. நம்பிக்கை தான் வாழ்க்கை. எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கு. நீங்க வேணா பாருங்க நந்திதாவுக்கு நம்ம விபியை பிடிக்கும்னு தான் சொல்லுவா. வாங்க அவள் வரதுக்குள்ள நாம போய் சாமி கும்பிட்டு வரலாம்.” என்று சசிகலா கூறிவிட்டு ராஜாராமையும் இழுத்துக் கொண்டு சாமி கும்பிடச் சென்றார்.

சசிகலாவின் வேண்டுதல் அனைத்தும் விபீ தன் மற்ற பிள்ளைகள் போல் நன்றாக இருக்க வேண்டும். மனைவி குழந்தை எனச் சந்தோஷமாக வாழ வேண்டுமென மன்றாடி கடவுளை வேண்டிக் கொண்டார்.

சசிகலாவும் ராஜாராமும் சாமியைக் கும்பிட்டு பிராகாரத்தையும் சுற்றி விட்டு ஒரு ஓரத்தில் அமர்ந்தனர். சசிகலா தான் பேச்சை ஆரம்பித்தார்,”என்னங்க இன்னும் நந்திதாவை காணோம். ஒரு வேளை வர மாட்டாளோ?” என்று கேட்க,

“இங்கப் பார் சசி, அவள் ஒரு டாக்டர். அவளுக்குத் திடிர்னு ஏதாவது பேஷன்ட் வந்துருப்பாங்க. நீ கொஞ்சம் டென்ஷனாகமல் அமைதியா இரு. இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம். அப்படி அந்தப் பொண்ணு வராட்டி நாம கிளம்பிடலாம்.”

“என்னது கிளம்புறதா? சும்மா இருங்க நீங்க. நான் நந்திதாவுக்கு ஃபோன் பண்ணிக் கேட்கிறேன்.” என்று கூறிவிட்டு அவரது கைப்பேசியை எடுக்க, ராஜாராம் அவரது கையைப் பற்றித் தடுத்து,

“சசி என்ன பண்ற நீ? நாம பண்றது சரியா தப்பானு தெரியாமல் நான் திண்டாடிட்டு இருக்கேன். நீ ஏன் இப்படிப் பண்ற?” இயலாமையுடன் அவர் கேட்க,

“என்னங்க சொல்றீங்க? இப்போ அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?”

“இப்போ நீ அந்தப் பொண்ணு நந்திதாகிட்ட பேச வந்துருக்க, அது சரியா சொல்லு?”

“ஏன் சரியில்லை? என் பையனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு நான் நினைக்கிறது தப்பா? ஏன் உங்களுக்கும் தான நந்திதா நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க? எங்க இல்லைனு சொல்லுங்க பார்க்கலாம்.”

“சசி நீ சொல்றது சரி தான். எனக்கும் நம்ம விபீ இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு மனைவி பிள்ளைங்கனு வாழ்றதை பார்க்கனும்னு ஆசையா தான் இருக்கு. ஆனால் நாம என்ன பண்ணிருக்கனும்? நந்திதாகிட்ட பேசக் கூடாது சசி அவங்க அப்பா அம்மாகிட்ட முதல்ல பேசனும். இது சாதாரண கல்யாணம் கிடையாது. நம்ம பையன் என்ன தான் மூணு மாசம் தான் நந்தனா கூட வாழ்ந்தாலும் அவனுக்கு இது இரண்டாவது கல்யாணம் தான். ஆனால் நந்திதாவுக்கு இது முதல் கல்யாணம். அந்தப் பொண்ணு ஒத்துக்கிட்டாலும் அவங்க வீட்டுல யோசிச்சு பார்த்தியா? இதுவே நம்ம பொண்ணுனா அப்படி நடக்க ஒத்துக்குவோமா சொல்லு?” என்று ராஜாராம் கேட்க, சசிகலாவிற்கு முகம் வெளுத்து விட்டது. அவர் இந்தக் கோணத்தில் யோசித்துப் பார்க்கவே இல்லை. கண்டிப்பாக நந்திதாவின் பெற்றோர் இத்திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். சசிகலா எதுவும் கூறாமல் அமைதியாக விட, 

“நாம கிளம்பலாம் சசி. கடவுள் மேல பாரத்தைப் போட்டுடுவோம். அவன் பார்த்துக்குவான் எல்லாத்தையும்.” என்று கூறிவிட்டு அவர் எழுந்திருக்க, சசிகலாவும் எதுவும் கூறாமல் எழுந்து மீண்டும் ஒரு முறை சாமியை அங்கிருந்தபடியே தரிசித்து விட்டு, கோவிலிற்கு வரும் போது இருந்த மனநிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் அங்கிருந்து கிளம்பி அவர்கள் வெளியே வர, அவர்களுக்கு எதிரில் நந்திதா வந்தாள்.

இவர்களைப் பார்த்து இன்முகமாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு,”அச்சோ கிளம்பிட்டீங்களா? நேத்து நைட் ட்யூட்டு எனக்கு. காலைல வீட்டுக்கு வரக் கொஞ்சம் லேட்டாகிடுச்சு. வேக வேகமா குளிச்சுட்டு வந்தேன் ஆன்ட்டி, அங்கிள்.” என்று அவள் கூற, சசிகலாவிற்கு மனம் ஆரவில்லை. இவ்ளோ நல்ல பெண்ணை விட வேண்டுமா? இவளின் பெற்றோரின் கை காலிலாவது விழுந்து இவளை விபீக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென முடிவு செய்து விட்டார்.

“அதனால என்ன மா இருக்கு? நீ போய் சாமி கும்பிட்டு வா. நாங்க வெயிட் பண்றோம். உன்கிட்ட முக்கியமா சில விஷயங்கள் பேசனும் மா.” என்று சசிகலா கூற, தான் இவ்ளோ கூறியும் மனைவி இப்படிப் பேசியது ராஜாரமிற்கு உவப்பாக இல்லை. ஆனால் மூன்றாம் மனிதர்(நந்திதா) முன்பு மனைவியைக் கடிந்து கொள்ள மனம் வராமல் அமைதியாக இருந்து விட்டார்.

“ம் சரி ஆன்ட்டி. நான் போய் வேகமாக சாமி கும்பிட்டு வந்துடுறேன்.”

“இல்லை மா. நீ நிதானமா சாமி கும்பிடு மா ஒன்னும் பிரச்சனை இல்லை. எங்களுக்கு வீட்டுல என்ன வேலை இருக்கு? நீ நல்லாவே சாமியைத் தரிசனம் பண்ணிட்டு வா.” என்று சசிகலா கூற, நந்திதாவும் சரியென்று தலையசைத்து விட்டுச் சென்றாள்.

அவள் சென்றவுடன் சசிகலா ராஜாராமையைப் பார்க்க, அவரோ முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றிருந்தார். அவரது கையைப் பிடித்து மீண்டும் கோவிலுக்குள் அழைத்து வந்தார் சசிகலா. அதில் சற்று எரிச்சல் அடைந்தவர்,”என்ன பண்றனு தெரிஞ்சு தான் பண்றியா சசி? இவ்ளோ நேரம் நான் பேசுனதை எல்லாம் நீ காதுல வாங்கவே இல்லையா? நம்ம பையன் நல்லா இருக்கனும்னு இவ்ளோ சுயநலமா யோசிக்கக் கூடாது சசி.” என்று அவர் கூற,

“இங்கப் பாருங்க நீங்க என்னைப் பத்தி எப்படி நினைச்சாலும் பரவால. நந்திதா மட்டும் சரினு ஒரு வார்த்தைச் சொல்லட்டும், அவளோட அம்மா அப்பா கால்ல விழுந்தாவது இந்தக் கல்யாணத்தை நான் நடத்திடுவேன்.” என்று சசிகலா கூற, ராஜாராமிற்கு சுத்தமாக இந்தப் பேச்சு பிடிக்கவில்லை. இருந்தாலும் அமைதியாக இருந்தார் மனைவி எவ்ளோ தூரம் செல்கின்றாள் என்று பார்க்க.

நந்திதா சாமியைத் தரிசித்து விட்டு பிரகாரத்தைச் சுற்றிவிட்டு சசிகலா மற்றும் ராஜாராம் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அவர்களுடன் அமர்ந்தாள்.

“ஆன்ட்டி உங்களோட அண்ட் அங்கிளோட டெஸ்ட் ரிப்போர்ட் வந்துருச்சா? ஒன்னும் இல்லை தான ஆன்ட்டி?”

“இல்லை மா. இந்த விபீ தான் நான் மயக்கம் போட்டு விழுந்தவுடனே கொஞ்சம் பயந்து ஃபுல் செக் அப் பண்ணிட்டான். எங்க இரண்டு பேருக்குமே எதுவுமில்லை. அப்புறம் சொல்லு மா நீ எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி.”

“ம் அப்புறம் அம்மா அப்பா எல்லாம் சென்னை தானா?”

“இல்லை ஆன்ட்டி காஞ்சிபுரம்.” என்று அவள் கூறியதும் சசிகலா மற்றும் ராஜாராம் இருவரது முகமும் மாறியது. ராஜாராம் சசிகலாவைப் பார்க்க, அவர் கண்களால் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு,

“ஓ அப்போ எங்க மா தங்கியிருக்க நீ?”

“நான் என் ப்ரண்டோட ஸ்டே பண்ணிருக்கேன் ஆன்ட்டி. ஹாஸ்பிட்டலுக்கும் பக்கத்துல தான் இருக்கு.”

“அப்படியா ரொம்ப சந்தோஷம். அப்பா அம்மா என்ன பண்றாங்க?”

“மெடிக்கல் ஷாப் வைச்சுருக்காங்க ஆன்ட்டி. அம்மா ஹவுஸ் வைஃப் தான். ஆனால் அப்போ அப்போ ஷாப் போய் அப்பாவை மாத்தி விடுவாங்க.” என்று அவள் கூற,

“ஓ சரி மா. நான் நேரா விஷயத்துக்கே வரேன். உனக்கு எங்க விபீய பிடிச்சுருக்கா?” என்று அவர் கேட்க, நந்திதா அதிர்ச்சியாக அவரைப் பார்க்க, அவரே தொடர்ந்தார்,

“தைரியமா சொல்லு மா. நான் தப்பா எதுவும் எடுத்துக்க மாட்டேன். அன்னைக்கு விபீயைப் பார்த்ததும் உன் முகம் அவ்ளோ பிரகாசமா இருந்ததை நானும் தான் பார்த்தேன்.”சிரித்துக் கொண்டே அவர் கூற, நந்திதாவுக்கு தான் சங்கடமாகி விட்டது.

“இதுல சங்கடப்பட எதுவுமில்லை நந்திதா. எனக்கு உன்னை முதல்ல முறை பார்க்கும் போதே நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரனும் ரொம்ப ஆசைப்பட்டேன். இப்போவும் அந்த ஆசை எனக்கு இருக்கு.” என்றார் சசிகலா.

அதைக் கேட்டு நெகிழ்ந்து போன நந்திதா சசிகலாவின் கையைப் பிடித்துக் கொண்டு,”ஆன்ட்டி எனக்கு சீனியரை காலேஜ் படிக்கும் போதுல இருந்தே ரொம்ப பிடிக்கும். நான் என் காதல்ல கூட அவர்கிட்ட சொன்னேன் ஆன்ட்டி. ஆனால் அவர் தான் என்னால இப்போதைக்கு படிப்பைத் தவிர வேற எதுலயும் கான்சென்ட்ரேட் பண்ண முடியாதுனு சொல்லி என்னை ரிஜெக்ட் பண்ணிட்டார். நானும் அவர்க்காகத் தான் இத்தனை நாளா காத்திருக்கிறேன் ஆன்ட்டி. ஆனால் அவர் ஏற்கனவே கல்யாணமானவர்னு கேட்டதும் எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. ஆனால் அவரோட வைஃப் இறந்துட்டாங்கனு கேள்விப்பட்டதும் எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை ஆன்ட்டி.” அவள் வருத்தமாகக் கூற,

Advertisement