Advertisement

“நீங்க புதுசுல அதான் உங்களுக்குத் தெரியலை. விபி டாக்டர் ரொம்ப ஜாலி டைப். பேருக்குத் தான் அவர் நியூரோ டிபார்ட்மென்ட்ல வேலைப் பார்க்கிறார். ஆனால் ஹாஸ்பிட்டல்ல இருக்கிற எல்லாருக்கும் இவரைத் தெரியும். கூட்டித் துடைக்கிற ஆயால இருந்து நம்ம எல்லாருக்கும் சம்பளம் தர எம்.டீ. வரைக்கும் எல்லார்கிட்டயும் ஸ்டேட்டஸ் பார்க்காமல் பழகுவார். என்ன அவர் வைஃப் இறந்த அப்புறம் ஃபுல்லா வொர்க்ல தன்னை ஈடுபடுத்திக்கிட்டார்.” என்று அந்த மருத்துவர் கூற,

“என்னது அவரோட வைஃப் இறந்துட்டாங்களா?” அதிர்ச்சியாக நந்திதா கேட்க,

“ஆமா டாக்டர். ஏதோ ஆக்சிடெண்ட்னு சொன்னாங்க. பாவம் கல்யாணமாகி மூணு மாசம் தான் ஆச்சு. நம்ம ஹாஸ்பிட்டல்ல இருந்து நிறையப் பேர் போயிருந்தோம் அவரோட கல்யாணத்திற்கு. இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி தான் இருந்தாங்க. யார் கண்ணு பட்டதோ. அவரை இப்படிப் பார்க்கவே எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. பாவம் அவர்.” என்று விபீஷணனுக்காக அவர் வருத்தப்பட, நந்திதாவின் மனநிலை ஒரு நிலையில் இல்லை. விபீஷணனின் மனைவி இறந்ததை நினைத்து சந்தோஷப்படுறதா இல்லை வருத்தப்படுவதா என்று புரியவில்லை. அதனால் எதுவும் பேசாமல் அப்படியே அமைதியாகி விட்டாள்.

விபீஷணன், சசிகலா மற்றும் ராஜாராம் உணவு உண்டவுடன் மருத்துவமனையிலிருந்து கிளம்பினர். விபீஷணன் வண்டி ஓட்ட, சசிகலாவும் ராஜாராமும் பின்னால் அமர்ந்து தங்களுக்குள்ளே ஏதோ பேசிக் கொண்டு வர, அதைப் பார்த்த விபீஷணன்,”என்ன இரண்டு பேரும் எனக்குத் தெரியக் கூடாதுனு இவ்ளோ அமைதியா இரகசியம் பேசிட்டு வரீங்க? என்ன விஷயம்?” சந்தேகமாக அவன் கேட்க,

“ஆமா நானும் உன் அப்பாவும் இந்தியப் பிரதமரும் ஜனாதிபதியும் நீ பாகிஸ்தான் பிரதமர். அதனால் உனக்குத் தெரியாமல் நாங்க இரகசியம் பேசி உன்னைக் கவுக்க திட்டம் போடுறோம்.  ஏன் டா நீ வேற? நாங்க சும்மா பேசிட்டு வந்தோம். சத்தமா பேசினா உனக்கு வண்டி ஓட்ட டிஸ்டர்ப் ஆகும்னு அமைதியா பேசுனா இரகசியம் பேசுறதா ஆகிடுமா? ஒழுங்கா ரோட்டை பார்த்து ஓட்டு டா.” என்று சசிகலா சமாளிக்க, அது விபீஷணனுக்கும் புரிந்தது. இருந்தாலும் அமைதியாக இருந்து கொண்டான். எப்படி இருந்தாலும் ஒரு நாள் விஷயம் வெளியே வரத் தான் போகிறது. அப்போது பார்த்துக்கலாம் என்று விட்டு விட்டான்.

அவர்கள் வீடு வந்ததும் சசிகலா அவனிடம்,”விபி எங்களுக்குத் தூக்கம் வருது. நாங்க போய் தூங்குறோம். அப்படி ஆத்விக் வரப்போ நான் தூங்கிட்டு இருந்தா அவனுக்கு முகம் கழுவி ஸ்நாக்ஸ் மட்டும் குடுத்துரு சரியா.” என்று கூற,

“ம் சரி மா. நீங்க தூங்கப் போறதுக்கு முன்னாடி குளிச்சுடுங்க. டெஸ்ட் எல்லாம் பண்ணாங்களா அதுக்கு தான்.”

“ம் சரி டா. குளிச்சா எப்படியும் தூக்கம் போயிடும். சரி நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறிவிட்டு அவர் உள்ளே சென்று விட, ராஜாராமும் அவரின் பின்னேயே சென்று விட்டார்.

அவர்கள் அறைக்குள் வந்ததும் சசிகலா,”என்னங்க அந்தப் பொண்ணு நந்திதா பத்தி என்ன நினைக்கிறீங்க?” என்று ஆர்வமாகக் கேட்க,

“நல்லவளா தான் இருக்கா. ஆனால் உன் பையன் ஒத்துக்கனுமே சசி? பார் என்ன பேசினாலும் கடைசில அவன் நந்தனாவை தான் கொண்டு வரான். நீ சுலபமா முடிவுப் பண்ணிட்ட, ஆனால் அவன் ஒத்துக்கவே மாட்டான்னு தான் எனக்குத் தோனுது.” கவலையாக அவர் கூற,

“என்னங்க நீங்க இப்படிப் பேசுறீங்க? எறும்பு ஊறக் கல்லும் தேயும் பழமொழி கேள்விப்பட்டு இருக்கீங்கள? அதே மாதிரி இவன்கிட்ட பேசிப் பேசி சம்மதம் வாங்க வேண்டியது என்னோட வேலை. அதைப் பத்தி நீங்க யோசிக்காதீங்க. நந்திதா நம்ம வீட்டுக்கு மருமகளா வரது உங்களுக்கு ஓகே வா?” என்று கேட்டார்.

“எனக்கு என் பையன் சந்தோஷமா பொண்டாட்டி பிள்ளைகளோட வாழனும். அது மட்டும் தான் என்னோட மனசுல இருக்கு.” என்று அவர் கூற,

“அப்புறம் என்ன அந்தப் பொண்ணு நந்திதாவுக்கு நம்ம விபிய பிடிக்கும்னு தான் தோனுது. வெள்ளிக்கிழமை கோவில்ல பார்க்கப் போறோம்ல அப்போ உடைச்சே அந்தப் பொண்ணுகிட்ட பேசப் போறேன். நந்திதா சரினு ஒரு வார்த்தைச் சொன்னா போதும் மத்ததை நான் பார்த்துக்குவேன்.” தீர்க்கமாக அவர் கூற,

“சசி எது செய்றதா இருந்தாலும் யோசிச்சு செய். என்னன்னு தெரியலை மனசுக்கு ஏதோ தப்பாவே படுது. என் பையன் சந்தோஷமா இருக்கனும்னு தோனுது ஆனால் மனசு ஒரு நிலைல இல்லை. எனக்கு எப்படிச் சொல்றதுனு புரியலை.” என்று கூறவிட்டு அவர் குளிக்கச் சென்று விட, அது வரை சந்தோஷமான மனநிலையிலிருந்த சசிகலா, ராஜாராம் அப்படிப் பேசிவிட்டுப் போகவும் சோர்ந்து போய் விட்டார்.

மருத்துவமனையில் தன் வேலையை முடித்துக் கொண்டு வீடு வந்த நந்திதாவுக்கு முழுவதும் விபீஷணனின் யோசனை தான். அவள் கல்லூரி முடித்ததும் விபியும் மேற்படிப்பு முடித்திருப்பான் என்று அவனது விவரங்களை அவள் விசாரிக்க, அவன் நரம்பியல் பிரிவில் அறுவைச் சிகிச்சை நிபுணராவதற்குப் படித்துக் கொண்டு தான் இருக்கின்றான் என்ற செய்தியே கிட்ட, தைரியமாகவே அவளது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விபீஷணன் பற்றி அவள் அவ்வப்போது விசாரித்துத் தெரிந்து கொள்வாள். இப்பொழுது அவள் VSB மருத்துவமனையில் சேர்ந்ததிற்குக் காரணமே விபீஷணன் அங்கு வேலைப் பார்க்கிறான் என்று தான். ஆனால் அவனை அங்கு இவ்ளோ சீக்கிரம் பார்ப்போம் என்று எதிர்பார்க்காததால் தான் அவனைப் பார்த்த போது ஆச்சரியமாகப் பார்த்தாள்.

அவள் அவனது யோசனையில் அப்படியே அமர்ந்திருக்க, பிரியா வந்து அவளது முதுகில் ஒரு தட்டு தட்டவும் தான் உணர்வுக்கு வந்த நந்திதா பிரியாவை பார்த்துச் சிரித்தாள்.

“என்ன யோசனை எல்லாம் பலமா இருக்கு நந்து?”

“நான் இன்னைக்கு விபீஷணனை பார்த்தேன் பிரியா.”

“ஏய் உன்னோட க்ரஷ் லவ்னு சொல்லுவியே அவரையா?” ஆர்வமாக அவள் கேட்க,

“ஆமா பிரியா. அவரே தான். ஆனால் அவருக்குக் கல்யாணமாகிடுச்சு.”

“என்ன சொல்ற நந்து? அவருக்குக் கல்யாணமாகிடுச்சா? இப்போ நீ என்ன பண்ண போற? பிரியா சோகமாகக் கேட்க,

“தெரியலை பிரியா. ஆனால் அவரோட வைஃப் இறந்து ஒரு வருஷமாகிடுச்சாம். அவங்களோட நினைப்புல தான் இன்னும் இவர் இருக்கார் போல. எனக்கு என்ன செய்றதுனே தெரியலை. வீட்டுல வேற வயசு ஏறிகிட்டே போகுது எப்போ கல்யாணம் பண்றதா இருக்கனு அம்மாவும் அப்பாவும் மாத்தி மாத்தி கேட்டுட்டே இருக்காங்க. எனக்கு என்ன பண்றதுனு தெரியலை.” விரக்தியாக நந்திதா கூற,

பிரியா அவளது கையைப் பிடித்து,”இங்கப் பார் நந்திதா அவரோட வைஃப் இறந்துட்டாங்க ஓகே. அதுக்காக அவர் காலம் முழுசா தனியா இருக்கப் போறது இல்லை. கண்டிப்பா இன்னொரு கல்யாணம் செய்துக்க தான் போறாங்க. அப்புறம் என்ன கவலை உனக்கு? அவர்கிட்ட போய் பேசு. உன் மனசுல இருக்கிற ஆசையை அவர்கிட்ட சொல்லு. அவர் தான் நீ உன் லவ்வ சொல்லும் போதே சொன்னாரே படிச்சு முடிச்சுட்டு வா அப்போ பார்த்துக்கலாம்னு.”

“பிரியா அவர் சொன்ன அப்போ இருந்த நிலைமை வேற இப்போ இருக்கிற நிலைமை வேற.”

“என்ன வேற நிலைமை? அப்போ அவருக்குக் கல்யாணமாகல இப்போ ஆகிடுச்சு அதைச் சொல்றியா? அவருக்குக் கல்யாணமானது உனக்குப் பிரச்சனையா இருந்தால் உங்க வீட்டுல பார்க்கிற மாப்பிள்ளைக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் கல்யாணம் பண்ணிக்கோ.”

“ஏய் அதெல்லாம் முடியாது. அவருக்குக் கல்யாணமானதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அவரோட மனசுல இன்னும் அவரோட வைஃப் தான் இருக்காங்க. அது தான் எனக்குப் பிரச்சனை.”

“உனக்கு எப்படித் தெரியும்? சரி அப்படியே இருந்தாலும் என்ன? அவரோட வைஃப் இறந்து போயிட்டா அவங்களை மறந்துரனும்னு எந்த அவசியமும் இல்லையே.”

“ஏய் என்ன டீ உன் பிரச்சனையா? எதுக்கு இப்படி மாத்தி மாத்தி பேசுற?”

“நான் மாத்தி பேசலை. உனக்குப் புரிய வைக்கிறேன் அவ்ளோ தான்.”

“ப்ச் நானே ஏற்கனவே குழப்பத்துல இருக்கேன். நீ வேற இப்படிப் பேசு மேலும் என்னைக் குழப்பாத. தெளிவா சொல்லு.”

“இங்கப் பார் நந்திதா நீ அவரை லவ் பண்ற மாதிரி அவரும் அவரோட வைஃப்ப லவ் பண்ணிருப்பார். அவங்க இல்லைனதும் அவரோட ஞாபகங்களை உடனே மறந்துரவாங்கனு நாம எதிர்பார்க்கக் கூடாது. நீ அவர் மனசுல இடம் பிடிக்க ரொம்ப போராடனும். அந்தப் போராட்டத்துக்கு நீ தயாரா இருக்கனும். லவ்வே பிடிக்காதுனு சொல்றவங்களை கூட லவ் பண்ண வைச்சுடலாம். ஆனால் ஏற்கனவே வேற ஒருத்தரை லவ் பண்ணவங்களை திரும்ப லவ் பண்ண வைக்கிறது ரொம்ப கஷ்டம். அவரால உனக்கு நிறையக் காயங்கள் ஏற்படலாம். அதுக்கு எல்லாம் நீ தயாரானு யோசிச்சுக்கோ.”

“பிரியா நீ சொல்றதை கேட்கும் போதே எனக்கு ஒரு மாதிரி இருக்கு. இதுல இது எல்லாம் சாத்தியப்படுமா? என்னால அவர் மனசுல இடம்பிடிக்க முடியும்னு நம்புறியா?”

“அது உன்னோட சாமர்த்தியத்துல தான் இருக்கு. உன்னால கண்டிப்பா அவர் மனசுல இடம்பிடிக்க முடியும்னு என்னால நம்பிக்கையா சொல்ல முடியாது. ஆனால் உனக்கு அவர் வேணும்னா நீ முயற்சி பண்ணித் தான் ஆகனும். உனக்கு வேற சாய்ஸ் இல்லை. அப்படி உன்னால இதையெல்லாம் பண்ண முடியாதுனா அவரை நீ மறந்துரு. அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்.” என்ற பிரியா சில நிமிட அமைதிக்குப் பிறகு மீண்டும் அவளே,”ஆனால் எது செய்றதா இருந்தாலும் ஒன்னுக்கு பல முறை யோசிச்சுக்கோ.” என்று கூறிவிட்டுப் பிரியா எழுந்து சென்று விட, நந்திதா பலமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

Advertisement