Advertisement

விபீஷணனை அங்கு எதிர்பார்க்காத நந்திதா அப்படியே எழுந்து நின்று அவளது கையைக் கிள்ள அது வலியைக் கொடுக்க, அவள் காண்பது கனவில்லை நிஜம் தான் என்று புரிய, அவளது செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த மூவரும் அவளை வியப்பாகப் பார்க்க, அவளோ விபீஷணனிடம் வந்து,”சீனியர் நீங்களா?” ஆயிரம் வாட் பல்பின் ஒலியைப் போலப் பிரகாசமாக அவளது முகமும் மலர அவனிடம் கேட்டாள்.

நந்திதா அவ்வாறு கேட்டவுடன் ஒரு நிமிடம் யோசித்த விபீஷணன்,”ஹான் நந்திதா தான நீ? எப்படி இருக்க? இங்க என்ன பண்ற? ” என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்க,

“நான் நல்லா இருக்கேன் சீனியர். நீங்க எப்படி இருக்கீங்க? பரவாலயே என் பெயர் எல்லாம் ஞாபகம் வைச்சுருப்பீங்க?” ஆர்வமாக நந்திதா கேட்க,

விபீஷணன் தன் பல் தெரியாமல் உதட்டை மெலிதாக விரித்து ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு,”ம் நான் இருக்கேன்.” விரக்தியாக அவன் கூறவிட்டு மீண்டும் அவனே தொடர்ந்தான்,”என் வைஃப் நேமும் உன்னோட நேம் மாதிரி தான் வரும். அதான் டக்குனு ஞாபகம் வந்துடுச்சு.” என்று இவன் கூறவும் நந்திதாவின் முகம் நொடிக்கும் குறைவாக வேதனையைக் கொடுத்து விட்டு சாதாரணமாக அவள் முகத்தை மாற்றி விட, இதை சசிகலா பார்த்து விட்டார்.

“சீனியர் உங்களுக்குக் கல்யாணமாகிடுச்சா?” அவள் சாதாரணமாகத் தான் கேட்டாள். ஆனால் அவளது குரலில் என்ன முயன்றும் சோகத்தை மறைக்க முடியவில்லை.

“எஸ் ஆகிடுச்சு.” என்று மட்டுமே விபீஷணன் கூற, நந்திதாவுக்கு தான் என்ன பதில் கூற என்று தெரியவில்லை.

“விபி பசிக்குது. முதல்ல சாப்பிடலாம், நந்திதா இங்கத் தான் கைனகாலஜில வொர்க் பண்றாளாம்.” என்று சசிகலா பேச்சை மாற்ற,

“அப்படியா? நான் இது வரைக்கும் உன்னை இங்கப் பார்த்தது இல்லையே?” என்று அவன் கேட்க,

“நான் ஜாயின் பண்ணியே நாலு நாள் தான் ஆகுது சீனியர். அதான் என்னைப் பார்த்திருக்க முடியாது உங்களால.”

“ஓ. ஆல் த பெஸ்ட் உன்னோட நியூ ஜாப்க்கு.” என்றதுடன் பேச்சை விபீஷணன் முடித்துக் கொள்ள,

“எப்படி மா இருக்கு வேலை எல்லாம்? புது ஹாஸ்பிட்டல் வேற?” என்று ராஜாராம் கேட்க,

“நல்லா இருக்கு அங்கிள். எல்லாரும் நல்லா பழகுறாங்க. முதல்ல கொஞ்சம் பயந்தேன் எப்படி எல்லாரும் இருப்பாங்கனு. ஆனால் இப்போ ரொம்ப பரவால அங்கிள் நான் பயந்த மாதிரி எதுவும் நடக்கலை.”

“நாம நம்ம வேலையை ஒழுங்கா செய்தா யாருக்கு நாம பயப்படனும்? அதை விட உங்க டிபார்ட்மென்ட் சீஃப் டாக்டர் சீதா ரொம்ப அருமையானவங்க.” என்று விபீஷணன் கூற,

“அது உண்மை தான் சீனியர். அவங்க ரொம்ப சூப்பர். அவங்ககிட்ட இருந்து நிறையக் கத்துக்கனும் நான்.” என்று அவள் கூற, சரியாக அவளது சக மருத்துவர்கள் சாப்பிட்டு விட்டு வந்தவர்கள் இவளைப் பார்த்து,

“நந்திதா வரலையா?” என்று அதில் ஒருவர் கேட்க, நந்திதா பதில் கூறுவதற்கு முன்,

சசிகலா அவளிடம்,”அச்சோ உனக்கு வேலை இருக்கும்னு மறந்துட்டு நாங்க பேசிட்டு இருக்கோம் பார். நீ போ மா.” என்று கூற,

“சாரி ஆண்ட்டி, சாரி அங்கிள் இப்போ பேஷன்ட்ஸ் பார்க்கிற நேரம் ஆதான்.” தயங்கிக் கொண்டே அவள் கூற,

“அட என்ன மா நீ சாரிலாம் கேட்டுட்டு இருக்க? எங்க பையனும் டாக்டர் தான மா அதனால் எங்களுக்கு புரியும். நீ சாரி எல்லாம் சொல்ல வேண்டாம்.” என்று ராஜாராம் கூற, நந்திதா சரியென்று அவர்களிடம் விடைபெற்று இரண்டு அடி எடுத்து வைத்திருப்பாள் சசிகலா அவளை அழைத்தார்,

“நந்திதா ஒரு நிமிஷம்.”

“என்ன ஆண்ட்டி?”

“வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வருவியா மா?” என்று அவர் கேட்க,

“ம் வருவேன் ஆண்ட்டி.”

“சந்தோஷம் மா அப்போ அன்னைக்கு நான் உன்னை எதிர்பார்த்து கோவில்ல காத்திருப்பேன். சரி உன் ஃபோன் நம்பர் தா மா.” என்று சசிகலா கேட்டு நந்திதாவின் எண்ணை வாங்கிக் கொண்டு அவரது எண்ணையும் அவளுக்குத் தந்தார். பின்னர் அவள் அங்கிருந்து சென்று விட, இதுவரை நடந்ததைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த விபீஷணன்,

“உங்களுக்கு நந்திதாவை தெரியுமா? எப்படித் தெரியும்? அதுவும் இவ்ளோ உரிமையா நீங்க அவளைக் கோவிலுக்கு வருவியானு கேட்கிறீங்க? என்ன நடக்குது இங்க?”

“ஒன்னும் நடக்கலை விபி. போன வெள்ளிக்கிழமை உன் அம்மா கோவிலுக்குப் போன போது மயங்கி விழுந்தா தான? அப்போ இந்தப் பொண்ணு நந்திதா தான் உன் அம்மாவை விழுகாமல் தாங்கிப் பிடிச்சு தேங்காய் தண்ணீ எல்லாம் கொடுத்து ஆட்டோ வரைக்கும் வந்து விட்டுட்டு போயிருக்கா.” என்று ராஜாராம் விளக்கமாகக் கூற,

“ஓ முதல்லயே என்கிட்ட சொல்லிருக்கலாமே நான் ஒரு தாங்க்ஸ் சொல்லிருப்பேன்.”

“ப்ச் அதை விடு விபி. உனக்கு எப்படி நந்திதாவை தெரியும்? அவள் உன்னை சீனியர்னு கூப்பிடுறதை பார்த்தா இரண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சீங்களா?” என்று சசிகலா ஆர்வமாகக் கேட்க, 

அவர் கேட்ட கேள்வி விபீஷணனை அவன் நான்காவது வருடம் படிக்கும் போது இழுத்துச் சென்றது.

விபீஷணன் அவனது தோழர்களுடன் கல்லூரி கேன்டீனில் சாப்பிட்டு விட்டு வெளியே வர, அப்போது எதிரில் வந்த நந்திதா அவன் முன்பு வந்து,”சீனியர் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். அதுவும் தனியா பேசனும்.” என்று அவள் கூற, அவனுடன் இருந்த அவனது தோழர்கள் எல்லாம் ஓ ஓ என்ற சத்தத்துடன்,

“விபி நாங்க க்ளாஸ் போறோம். நீ மெதுவா வா ஒன்னும் அவசரம் இல்லை.” அவனைக் கேலி செய்து விட்டுச் சென்று விட,

“என்ன பேசனும் என்கிட்ட?” அவனுக்குப் புரிந்தாலும் புரியாதது போல் முகத்தைச் சற்றுக் கடுமையாக வைத்துக் கொண்டு கேட்க,

“சீனியர் என் பெயர் நந்திதா. நான் காலேஜ்ல சேர்ந்ததுல இருந்து உங்களைப் பார்க்கிறேன். எப்போ எப்படினு எனக்குத் தெரியலை பட் ஏதோ விதத்துல நீங்க என்னை ஈர்த்துட்டீங்க. நான் முதல்ல இது சாதாரணப் பிடித்தம் அப்படினு தான் நினைச்சேன். ஆனால் அது அப்படி இல்லைனு போன மாசம் உங்ககிட்ட அந்த ஜாஸ்மின் ப்ரோபோஸ் பண்ணும் போது புரிஞ்சது. நீங்க ஓகே சொல்லிடக் கூடாதுனு நான் வேண்டாத கடவுளே இல்லை. நீங்க ஓகே சொல்லலைனு தெரிஞ்சதும் தான் எனக்கு நிம்மதியாவே இருந்தது. அப்போ தான் புரிஞ்சது இது வெறும் ஈர்ப்பு இல்லை. நான் உங்களை லவ் பண்றேன்னு. எஸ் சீனியர் ஐ லவ் யூ. வில் யூ அக்செப்ட் மீ?” என்று அவள் எதிர்பார்ப்புடன் கேட்க,

“இங்கப் பார் நந்திதா, நான் ஜாஸ்மின் கிட்ட சொன்னது தான் உன்கிட்டயும் சொல்றேன். எனக்கு லவ் எல்லாம் செட்டாகுது. அதை விட என்னுடைய தாட் எல்லாம் படிப்புல மட்டும் தான் இருக்கு. எந்த டிஸ்டர்பென்ஸூம் இல்லாமல் நான் என்னோட படிப்பை முடிக்கனும். எனக்கு நேரம் ரொம்ப ரொம்ப அவசியமானது. ஐ டோன்ட் வான்ட் டு வேஸ்ட் மை டைம் இன் லவ்.” திட்டவட்டமாக அவன் கூற, நந்திதாவின் முகம் அப்படியே தொங்கி போய் விட்டது. ஆனால் அடுத்த நொடியே,

“ஓகே சீனியர். ஒரு வேளை உங்க படிப்பு எல்லாம் முடிஞ்சதும் நான் வந்து லவ் சொன்னால் அக்சப்ட் பண்ணிப்பீங்களா?” என்று அவள் கேட்க, விபீஷணன் ஏதோ கூற வர, அதற்கு முன் அவளே,

“சீனியர் உங்க ஹையர் ஸ்டடிஸூம் சேர்த்துத் தான் சொல்றேன். அதெல்லாம் முடிஞ்சதும் நான் வந்து என் லவ்வை சொன்னா ஏத்துக்குவீங்களா?” என்று அவள் எதிர்பார்ப்புடன் கேட்க,

விபீஷணன் அதெல்லாம் நடக்காத காரியம் என்று நினைத்து,”அப்போ வா பார்த்துக்கலாம்.” என்று மட்டும் கூறிவிட்டுச் சென்று விட்டான்.

“டேய் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் எதை யோசிச்சுட்டு இருக்க?” என்ற சசிகலாவின் கேள்வியில் அவன் நிகழ்வுக்கு வர,

“ம் ஹான் நான் தேர்ட் யியர் படிக்கும் போது எங்க காலேஜ்ல ஃப்ர்ஸ்ட் யியர் சேர்ந்தா. அதனால் எனக்குத் தெரியும். ஆனால் டக்குனு பார்க்கும் போது ஞாபகம் வரலை. அவள் வந்து பேசவும் தான் ஞாபகம் வந்துச்சு என் நந்தனாவோட பேர் மாதிரியே இவள் பேரும் வரும்னு.” என்று விபீஷணன் கூற, சசிகலாவிற்கு அவன் முதலில் பேசும் போது முகத்தில் ஏற்பட்ட சந்தோஷம் கடைசியில் அவன் நந்தனா பெயரைக் கூறியதும் அப்படியே வண்டி டையரில் காற்று இறங்கியது போல் புஸ் என்று ஆகிவிட்டது.

ஆனால் ஒரு விஷயம் அவருக்குப் புரிந்தது. நந்திதாவிற்கு விபீஷணனை பிடித்திருக்கிறது என்று. அவள் அவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஏற்பட்ட பிரகாசத்தை அவரும் தான் பார்த்தார். அவரது வேலை சுலபமாக முடியும் என்று தோன்றியது. அப்படி மட்டும் இருந்தால் எப்படியாவது நந்திதாவிடம் பேசி அவளுக்கும் விபீஷணனுக்கும் திருமணம் செய்துவிட வேண்டுமென முடிவுச் செய்து விட்டார்.

நந்திதா தன் சக மருத்துவர்களுடன் அவர்களது துறை நோக்கி நடக்க, அப்போது ஒரு சக மருத்துவர்,”நந்திதா உங்களுக்கு விபி சாரை முதல்லயே தெரியுமா?” என்று கேட்க,

“ம் தெரியும். இரண்டு பேரும் ஓரே காலேஜ் தான். என்னோட சூப்பர் சீனியர் அவர்.” என்று அவள் கூற,

“ஓ சூப்பர். விபி சார் செம பெர்சன். என்ன இந்த ஒரு வருஷமா தான் அவர் மூடியா சுத்திட்டு இருக்கார்.” வருத்தமாக ஒரு மருத்துவர் கூற,

“ஏன் அப்படிச் சொல்றீங்க?” என்று நந்திதா கேட்க,

Advertisement