Advertisement

சசிகலா யோசனையில் அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்து,”சசி எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. அந்தச் சாமி நம்ம பிள்ளை வாழ்க்கையில் ஏன் இப்படி விளையாடிட்டார்னு எனக்குச் சுத்தமா புரியலை. நாம யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்னு புரியலை. அந்தப் பொண்ணை ஏன் கடவுள் விபிக்கிட்ட இருந்து பிரிச்சார்? இப்படியே அவன் தனிமரமா இருந்துடுவானோனு எனக்கு பயமா இருக்கு மா.” என்று முதல்முறை அவர் கலங்க,

“ப்ச் என்னங்க நீங்களும் கவுதம் அப்புறம் சுவாதி மாதிரி பேசுறீங்க. கடவுள் செய்ற எல்லா செயலுக்கும் பின்னாடி கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கு. நீங்க நம்பிக்கையைக் கை விடாதீங்க. அவர் தான நம்ம பையனோட கண்ணுல அந்தப் பொண்ணு நந்தனாவை காட்டி அவனுக்கு ஆசையை வர வைச்சு அவள் கூட வாழ்க்கையை ஆரம்பிச்ச மூனே மாசத்துல அவளை அவன்கிட்ட இருந்து பிரிச்சுட்டார். அப்போ என்ன அர்த்தம்?” என்று அவர் கேட்க, ராஜாராம் புரியாமல் அவரைப் பார்க்க, சசிகலாவே தொடர்ந்தார்,

“இன்னாருக்கு இன்னார்னு கடவுள் நாம பிறக்கும் போதே முடிவுப் பண்ணிருப்பார். சிலர் தங்களுக்கே தெரியாமல் கல்யாணம் நடக்கனும்னு தப்பான முடிவு எடுப்பாங்க. அதன் பலன் தான் டைவர்ஸாகி இரண்டாவது திருமணம் நடக்கிறது. அப்படி நடந்த இரண்டாவது திருமணம் பலருக்கும் நல்ல வாழ்க்கையைக் கொடுத்துருக்கு. அதுல கண்டிப்பா எல்லாருமே நினைச்சுருப்பாங்க இரண்டாவதா வந்த துணையை நாம முதல்லயே கல்யாணம் பண்ணிருந்தா நம்ம வாழ்க்கையில அந்தக் கஷ்டங்கள் வந்துருக்காதுனு. அதைத் தான் நான் இப்போவும் சொல்றேன். நந்தனாவை விபி தப்பா சூஸ் பண்ணிட்டான். நந்தனாவுக்கும் நம்ம பையன் விபிக்கும் கடவுள் முடிச்சு போடலை. அவரோட கணக்கே வேறயா இருக்கும்னு தோனுது. பார்க்கலாம் நான் சொன்ன மாதிரி இந்த வெள்ளிக்கிழமை நந்திதா என் கண்ணுல பட்டுட்டா எப்படியாவது அவளை என் மருமகளாக்கிடுவேன்.” என்று உறுதியாக சசிகலா கூறினாலும் ராஜாரம்கு கவலையாகத் தான் இருந்தது.

அடுத்த நாள் விபீஷணன் கூறியது போல் சசிகலாவும் ராஜாராமும் தண்ணீர் கூடப் பல்லில் படாமல் அவன் வருவதற்காகக் காத்திருந்தனர். சசிகலாவிற்கு காலையில் எழுந்து காஃபி குடித்தால் தான் அவரால் வேலையே செய்ய முடியும். இதை நன்கு அறிந்த சுவாதி அன்று எப்போதையும் விடச் சற்று முன்னதாகவே எழுந்து சமைக்க ஆரம்பித்து விட்டாள். கவுதமும் அவள் சமையலில் இறங்கியதால் அவர்களது சுட்டிப் பையன் ஆத்விக்கை பள்ளிக்கு அனுப்பு அவன் தயார்ப்படுத்த ஆரம்பித்து விட்டான்.

விபீஷணன் கிளம்பி கீழே வர, சுவாதி அவனிடம்,”விபி டிபன் ரெடியா இருக்கு. சாப்பிட வாங்க.” என்று அழைக்க, அவன் பதில் கூறுவதற்கு முன்பு சசிகலா,

“நீ போய் சாப்பிடு விபி. நாங்க வெயிட் பண்றோம்.” என்று கூற, அவன் அப்போதும் தயக்கத்தோடு இருப்பதைப் பார்த்த கவுதம்,

“டேய் மூணு இட்லி சாப்பிட ரொம்ப நேரமாகுது. நீ இப்படி யோசிட்டு நிக்கிற நேரத்துல வந்துச் சாப்பிட்டுருக்கலாம்.” என்று கூற, அவனும் சரியென்று அமர்ந்து சாப்பிட, கவுதமும் சாப்பிட அமர்ந்தார்.

சுவாதி ஆத்விக்கிற்கு ஊட்டத் தட்டு எடுத்துக் கொண்டு வர, சசிகலா அந்தத் தட்டை வாங்கிக் கொண்டு,”நீயும் அவங்களோட உட்கார்ந்து சாப்பிடு நான் ஆத்விக்கை பார்த்துக்கிறேன்.” என்று கூறி அவளை அனுப்ப,

“பாட்டி எனக்குக் கதைச் சொல்லனும். அப்போ தான் சாப்பிடுவேன்.” என்று செல்லமாக அவன் மிரட்ட, அவனை அணைத்து கண்ணத்தில் முத்தமிட்டு,

“என் பட்டுக்குட்டிக்கு என்ன கதை வேணும்.” என்று கேட்டுக் கொண்டே அவனை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று கதைக் கூறிக் கொண்டே அவனுக்கு ஊட்டி முடித்தார். அவன் சாப்பிட்டு முடிக்கவும் இவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

சுவாதி ஆத்விக்கின் பள்ளிப் பையை எடுக்க அவர்களது அறைக்குச் செல்ல, வெளியே வந்த விபீஷணன் ஆத்விக்கை தூக்கி அவனது கண்ணத்தில் முத்தம் வைக்க, ஆத்விக் முகத்தைச் சுளித்து அவனது கண்ணத்தைத் தேய்த்து,”சித்து தாடி குத்துது.” என்று அவன் சத்தமாகக் கத்த,

வேகமாக அவனது வாயை மூடிய விபீஷணன்,”ஏன் டா இப்படிக் கத்தி ஊரை கூட்டிடுவ போல இருக்கே. இரு உன் ஸ்கூலுக்கு வந்து உன் மிஸ்கிட்ட சொல்லி அடிக்கச் சொல்றேன்.” என்று அவன் பொய்யாக மிரட்ட, ஆத்விக் உடனே கோபமாக விபியின் மீசையைப் பிடித்து இழுக்க,

“டேய் பயங்கரமா சேட்டைப் பண்ற நீ. கண்டிப்பா நான் மிஸ்கிட்ட இன்னைக்கு வந்து பேசுறேன் பார். உன்னை இன்னைக்கு பயங்கரமா அடிக்கப் போறாங்க.” கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கூற, ஆத்விக் அவன் உண்மையைச் சொல்வதாக நினைத்து கத்தி அழ ஆரம்பிக்க,

“டேய் ஏன் டா இப்படிப் பண்ற? நீ என்கிட்ட வா டா செல்லம். அதெல்லாம் மிஸ் அடிக்க மாட்டாங்க. நான் பார்த்துக்கிறேன் சரியா.” என்று ராஜாராம் அவனைத் தூக்கிச் சமாதானப்படுத்தினாலும் ஆத்விக் அழுது கொண்டே இருக்க, அவனது அழுகைச் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்து என்னவென்று கேட்க, ராஜாராம் நடந்ததைக் கூற,

“டேய் ஏன் டா இப்படி? தங்கம் சித்து பொய் சொல்றாங்க டா. அதெல்லாம் மிஸ் உன்னை அடிக்க மாட்டாங்க. அழதா தங்கம்.” என்று கவுதம் ஆத்விக்கை சமாதானப்படுத்த,

“ஆத்விக் மூச். அழுகைச் சத்தம் வந்துச்சு அம்மா அடிச்சுருவேன்.” என்று சுவாதி கூற, அதற்கும் இன்னும் அழுக,

“ஏய் சுவாதி அவனே அழுதுட்டு இருக்கான். அவனைப் போய் திட்டிட்டு இருக்க. விபி ஒழுங்கா அவனைச் சமாதானப்படுத்து.” என்று சசிகலா அவனைத் திட்ட,

“ஆத்விக் குட்டி சித்து சும்மா சொன்னேன். உங்க மிஸ்கிட்ட எல்லாம் நான் சொல்ல மாட்டேன். அழாதே டா பட்டு. இந்தா சாக்லேட்.” என்று அவனைக் கையில் வாங்கிச் சமாதானப்படுத்த,

“ஆத்விக் நீ அழுகாம ஸ்கூலுக்கு போனால் நீ வரும் போது அன்னைக்கு கேட்ட டாய்ஸை அம்மா வாங்கிட்டு வருவேன். நீ அழுதா வாங்கிட்டு வரமாட்டேன்.” என்று சுவாதி கூற, வேகமாக அவன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன் அம்மாவைப் பார்க்க, பார்த்த அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது.

“சரி நீங்கக் கிளம்புங்க. அத்தையும் மாமாவும் வேற டெஸ்ட் எடுத்ததுக்கு அப்புறம் தான் சாப்பிடனும். அதனால நீங்கச் சீக்கிரம் கிளம்புங்க. போக லேட்டானா அப்புறம் வீட்டுக்கு வரவும் லேட்டாகும். இவனை நான் பார்த்துக்கிறேன்.” என்று சுவாதி கூறி ஆத்விக்கை அவள் வாங்கிக் கொள்ள, விபீஷணன் தலையசைத்து விட்டு ஆத்விக் கண்ணத்தில் மீண்டும் முத்தமிட்டு விட்டு அவனது அம்மா மற்றும் அப்பாவுடன் மருத்துவமனை நோக்கிக் கிளம்பினான்.

மருத்துவமனை வந்தவர்களை விபீஷணன் அழைத்துச் சென்று முழு உடல் பரிசோதனைச் செய்ய வருபவர்களுக்கு என்று இருக்கும் உடையைக் கொடுத்து அவர்களை அணிந்து வரச் சொன்னான். அவர்களும் அணிந்து வர, முதலில் இரத்தப் பரிசோதனையும் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு இருவருக்கும் இரத்தம் எடுத்தவுடன், அவர்களை அடுத்து அடுத்துப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றான் விபீஷணன். அன்று அவன் விடுமுறை தெரிவித்து இருந்ததால் அவன் அவர்களுடன் முழு நேரமும் இருந்தான்.

சரியாக அனைத்து பரிசோதனைகளும் முடிந்து சாப்பிடுவதற்காக அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் கேன்டீனிற்கு வந்தார்கள். அங்கேயே சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதால் சாப்பிட்டு விட்டே வீட்டிற்குச் செல்லாம் என்று விபீஷணன் கூற, அவர்களுக்கும் சற்று அசதியாக இருந்ததால் சரியென்று கூறிவிட்டார்கள்.

அவர்களை உட்கார வைத்துவிட்டு அவன் சாப்பாடு வாங்கி வரச் செல்ல, சரியாகக் கவுதம் ராஜாராமிற்கு அழைக்க, அவர் அவனிடம் பேசிக் கொண்டிருந்தார். சசிகலா அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, திடீரென அவர் முகம் பிரகாசமாகி எழுந்து அங்கிருந்த நகரப் போக, அதைப் பார்த்த ராஜாராம் அவரின் கையைப் பற்றி,”எங்க போற சசி?” என்று கேட்க,

“அங்கப் பாருங்க, நான் சொன்னேன்ல கோவில்ல பார்த்தேன்னு நந்திதா. அந்தப் பொண்ணு அங்க இருக்கா. நான் போய் பேசிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு ராஜாராம் பதில் பேச இடமளிக்காமல் அவர் சென்று விட்டார்.

நந்திதா சக மருத்துவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், சசிகலா இவர்கள் மேஜைப் பக்கத்தில் வரவும் அவளும் பார்த்துவிட்டு வேகமாக எழுந்து,”ஆண்ட்டி. எப்படி இருக்கீங்க? நீங்க இங்க எப்படி?” என்று கேட்க,

“அன்னைக்கு கோவில்ல மயக்கம் போட்டு விழுந்துட்டேன்ல அதான் என் பையன் சும்மா இல்லாம எனக்கும் அவங்க அப்பாவுக்கும் ஃபுல் பாடி செக் அப் பண்ணியே ஆகனும்னு கூப்பிட்டு வந்துட்டான் மா. அதோ பார் என் வீட்டுக்காரர். நீ சாப்பிட்டனா அங்க வாயேன்.” என்று அவர் அழைக்க, அவளும் தயங்காமல் அவளுடன் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சசிகலாவுடன் ராஜாராம் அமர்ந்திருந்த மேஜைக்கு வந்தார்.

“என்னங்க இவள் தான் நந்திதா. நான் சொன்னேன்ல கோவில்ல பார்த்தேன்னு. அது இந்தப் பொண்ணு தான்.” என்று அவர் மிகவும் சந்தோஷமாகக் கூற,

“ரொம்ப நன்றி மா. அன்னைக்கு நீ மட்டும் இல்லாட்டி இவள் என்ன பண்ணிருப்பானு என்னால யோசிக்கவே முடியலை. நான் கூட வரேன்னு சொல்லியும் கேட்காமல் தனியா போயிட்டா.” என்று ராஜாராம் கூற,

“அய்யோ அங்கிள் நான் இல்லாட்டியும் வேற யாராவது கண்டிப்பா ஆண்ட்டிக்கு ஹெல்ப் பண்ணிருப்பாங்க. இது ஒரு பெரிய விஷயமில்லை அங்கிள். இதுக்கு போய் தாங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க.” என்று பெருந்தன்மையாக நந்திதா கூற, ராஜாராமிற்கும் அவளது இந்தப் பேச்சு பிடித்தது.

“இங்க என்ன மா பண்ற நீ?” என்று ராஜாராம் கேட்க,

“ஆமா உன்னைப் பார்த்ததுல அதைக் கேட்கலைப் பார் நான். எதுவும் உடம்பு சரியில்லையா மா?” என்று சசிகலாவும் கேட்க,

“அச்சோ இல்லை ஆண்ட்டி. நான் இங்கத் தான் வொர்க் பண்றேன் கைனகாலஜி டிபார்ட்மென்ட்ல.” என்று அவள் கூற, சசிகலா மற்றும் ராஜாராம் இருவருக்கும் ஆச்சரியத்தையும் அதே சமயம் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

“அப்படியா மா. என் பையன் கூட இங்கத் தான் வொர்க் பண்றான் மா. நியூரோ டிபார்ட்மென்ட்ல.” என்று சசிகலா கூறிய அதே நேரம் அவர்களுக்கான சாப்பாட்டுடன் அங்கு வந்தான் விபீஷணன்.

விபீஷணனை அங்கு எதிர்பார்க்காத நந்திதா அப்படியே எழுந்து நின்று அவளது கையைக் கிள்ள அது வலியைக் கொடுக்க, அவள் காண்பது கனவில்லை நிஜம் தான் என்று புரிய, அவளது செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த மூவரும் அவளை வியப்பாகப் பார்க்க, அவளோ விபீஷணனிடம் வந்து,”சீனியர் நீங்களா?” ஆயிரம் வாட் பல்பின் ஒலியைப் போலப் பிரகாசமாக அவளது முகமும் மலர அவனிடம் கேட்டாள்.

Advertisement