Advertisement

நந்தனாவிடம் வந்த நந்திதா அவளது கண்களைக் கட்டியிருந்த துணியை எடுக்க, கண்களைக் கசக்கிக் கொண்டு திறக்க முடியாமல் திறந்தாள் நந்தனா. அவளிற்கு அவர்கள் இருவரும் யாரென்று தெரியவில்லை.

புரியாமல் அவர்களைப் பார்க்க, நந்திதா அவளிடம்,”என்ன எங்களை யார்னு பார்க்கிறியா?” என்று கேட்டாள்.

அதற்கு நந்தனா ஆம் என்று தலையசைக்க, நந்திதா கோபமாக,”கிட்டத்தட்ட பத்து வருஷம் எனக்குத் தான் கிடைப்பான்னு நான் காத்துட்டு இருந்தா நேத்து வந்த நீ என்கிட்ட இருந்து பரிச்சுட்டு போவ நான் வேடிக்கைப் பார்ப்பேன்னு நினைச்சியா?” என்று சத்தம் போட்டுக் கேட்டாள்.

நந்தனாவிற்கு ஒன்றும் புரியவில்லை,”நீங்க என்ன சொல்றீங்கனே எனக்குப் புரியவில்லை. நீங்க நினைக்கிற ஆள் நான் இல்லை.” என்று அழுது கொண்டே கூறினாள் நந்தனா.

“உனக்குப் புரியாலையா? அப்போ நான் தெளிவா சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, விபீஷணன் எனக்கு மட்டும் தான். அவர் உன்னைக் கல்யாணம் பண்ணிட்டார்னு தெரிஞ்சதும் நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா!! அவரை நான் உயிருக்கு உயிரா பத்து வருஷமா காதலிக்கிறேன். ஆனால் வெறும் ஆறு மாசம் காதலிச்சுட்டு அவரை நீ கல்யாணம் பண்ணுவ அதை நான் வேடிக்கைப் பார்த்துட்டு இருப்பேன்னு நினைச்சியா? அதனால தான் ப்ளான் பண்ணி உன்னைத் தனியா வர வைச்சு ஆக்சிடெண்ட் பண்ணேன். ஆனால் நீ தப்பிச்சது மட்டுமில்லாம உயிரோட வேற இருக்க. இன்னைக்கு எனக்கும் விபிக்கும் கல்யாணம் நடந்துருக்கும். ஆனால் நீ உயிரோட இருக்க விஷயம் தெரிஞ்சு விபி உன்னைத் தேடி வந்துட்டார். இந்த முறை நான் எந்தத் தப்பும் செய்ய மாட்டேன். யாரையும் நம்பப் போறதும் இல்லை. உன்னை என் கையாலே கொலைப் பண்ணப் போறேன்.” என்று அவள் பைத்தியம் போல் பேச, நந்தனாவிற்குப் பேச்சே வரவில்லை. அடுத்து என்ன செய்வது? எப்படி இங்கிருந்து தப்பிப்பது என்று கூட அவளால் யோசிக்க முடியவில்லை.

அப்போது வெளியே ஏதோ சத்தம் கேட்க, மனோஜ் சாளரம் வழியாக என்ன நடக்கிறது என்று பார்க்க, அங்குக் காவல் அதிகாரிகள், பிரவீண் மற்றும் விபீஷணன் வாகனத்தில் வந்து இறங்க, மனோஜ் வேகமாக நந்திதாவிடம் வந்து,”நந்து போலிஸ். வா நாம போகலாம். இவளை அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றான் அவன்.

“இல்லை அண்ணா இன்னைக்கு விட்டால் இவள் தப்பிச்சுருவா. எனக்கும் விபி கிடைக்க மாட்டார்.” என்று பைத்தியம் போல் கூறினாள் நந்திதா.

“நந்திதா புரிஞ்சுக்கோ, எங்கே போயிட போறாங்க? எப்படி இருந்தாலும் சென்னை வந்து தான ஆகனும். அப்போ பார்த்துக்கலாம்.” என்று அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல மனோஜ் முற்பட, நந்திதா வெறி கொண்டவள் போல் அவனைத் தள்ளிவிட்டு பக்கத்திலிருந்த கட்டையை எடுத்து நந்தனாவின் மண்டையில் பலமாக அடிக்க, அவள் அம்மா என்ற சத்தத்துடன் கீழே விழவும், பிரவீண் மற்றும் விபீஷணன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

மனோஜ், நந்திதாவின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்கப் பார்க்க, அதற்குள் காவல் அதிகாரிகள் வந்து அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து கைவிலங்குப் போட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள்.

விபீஷணன் வேகமாக ஓடி வந்து நந்தனாவை நெருங்கி அவளது கண்ணத்தில் தட்ட, அவளோ கண் முழிக்காமல் இருந்தாள். தான் ஒரு மருத்துவர் என்பதையே மறந்து விட்டு நந்தனாவின் கண்ணங்களைத் தட்டிக் கொடுக்க, பிரவீணிற்கு அவனது நிலைப் புரிய, நந்தனாவின் அருகில் அமர்ந்து அவளது கையை எடுத்து நாடியைப் பிடித்துப் பார்க்க, அவளது துடிப்பு விட்டு விட்டு அடிக்க, விபீஷணனிடம்,”விபி நந்தனாவோட ஹார்ட் பீட் விட்டு விட்டு அடிக்குது. நாம இப்போவே ஹாஸ்பிட்டல் தூக்கிட்டுப் போகலாம்.” என்று பிரவீண் கூறவும் தான் விபீஷணன் சுய உணர்வுப் பெற்று நந்தானவைத் தூக்கிக் கொண்டு அவனது வாகனத்திற்கு வந்தான்.

பிரவீண் வண்டி ஓட்ட, விபீஷணன் நந்தனாவுடன் பின்னால் அமர்ந்திருந்தான். அவளது தலையிலிருந்து குருதி வலிந்ததை அவன் முதலில் பார்க்கவில்லை. பின்னர் தான் கையில் ஏதோ பிசுபிசுப்பாக இருக்க, அவனது கையை எடுத்துப் பார்த்தான். இரத்தத்தை கையில் பார்த்ததும் நந்தனாவின் தலையை எடுத்துப் பார்த்தான். அதிலிருந்து குருதி வலிய, அவனிடமிருந்த கைக்குட்டையை எடுத்து அவளது தலையில் அழுத்து இரத்தம் வராத அளவிற்குப் பிடித்தான்.

பிரவீண் மருத்துவமனை உள்ளே நுழையும் போது அனைவரும் தயாராக இருக்க, நந்தனாவிற்குச் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. ராகவி, ஹரீஷ், கௌரி, வேணுகோபால், நடராஜன், மேனகா மற்றும் அசோக் அனைவரும் மருத்துவமனை வந்து விட்டனர்.

அனைவருக்கும் பயத்தைக் காட்டிய நந்தனா மூன்று மணிநேரம் கழித்து கண் முழித்துப் பார்த்தாள். அவளது கையைப் பிடித்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த விபீஷணன், அவள் கண் முழிக்கவும்,”நந்தனா என்னை அடையாளம் தெரியுதா?” என்று கேட்க, நந்தனா அழுது கொண்டே வேகமாக எழுந்து அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

“அத்து.” என்று அவள் அழுது கொண்டே கூற, அவளது முதுகைத் தட்டிக் கொடுத்த விபீஷணன்,”ஒன்னுமில்லை டா ஒன்னுமில்லை. நீ நல்லா தான் இருக்க.” என்றான்.

நந்தனா தன் தலையை நிமிர்த்தி,”அத்து நம்ம பாப்பா.” என்று கூறி மீண்டும் அவனை அணைத்துக் கொண்டு அழுக, அப்போது தான் விபீஷணனிற்குப் புரிந்தது நந்தனாவிற்குப் பழைய நினைவுகள் அனைத்தும் திரும்பி விட்டது என்று. அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சரியாக அப்போது அவளிற்கு அறுவைச்சிகிச்சை செய்த மருத்துவர் உள்ளே வரவும், விபீஷணன் எழுந்துக் கொள்ள, அவர் அவளைப் பரிசோதித்தார்.

“எல்லாம் நார்மலா இருக்கு. நான் சொல்ல எதுவுமில்லை. எல்லாரும் டாக்டர்ஸ் தான். ஸோ உங்களுக்கு எல்லாம் தெரியும். இனி எந்தப் பிரச்சனையும் இல்லை. இன்னைக்கு ஒரு நாள் அப்சர்வேஷன்ல இருந்துட்டு நாளைக்கு வீட்டுக்குப் போகலாம்.” என்று மருத்துவர் கூறவிட்டு வெளியே சென்றார்.

அதற்குள் நந்தனா முழித்த விஷயம் கேள்விப்பட்டு அனைவரும் உள்ளே வந்து அவளைப் பார்த்தனர். அவளிற்குப் பழைய ஞாபகங்கள் வந்து விட்டதை விபீஷணன் கூற, அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நந்தனா அமைதியாகவே இருக்க, விபீஷணனிற்குப் புரிந்தது. அதனால் அவள் பக்கத்தில் அமர்ந்து, அவளது கையை எடுத்து,”லட்டு எனக்குப் புரியுது!! பட் நம்மாள ஒன்னும் பண்ண முடியாது டா. அந்த நிலைமைல நீ ஏன் டா தனியா போன?” என்று கேட்டான்.

“உங்களுக்கு ஆக்சிடெண்ட்னு ஃபோன் வந்துச்சு. அதுவும் உங்க ஃபோன்ல இருந்து. எனக்கு ரொம்ப பயம் வந்துருச்சு. வீட்டுல கூட யாருக்கும் சொல்லனும்னு கூடத் தோனாமல் மாமாவோட கார் எடுத்துட்டு அவங்க சொன்ன ஹாஸ்பிட்டல்லுக்கு போயிட்டு இருக்கும் போது காரை மறிச்சு இன்னொரு கார் வந்து நின்னுச்சு. நான் என்னன்னு யோசிக்கிறதுக்கு முன்னாடி வந்து டோரை ஓப்பன் பண்ணி என்னைத் தர தரனு இழுத்துட்டு போயிட்டாங்க. அதுக்கு அப்புறம் தான் புரிஞ்சது உங்களுக்கு ஆக்சிடெண்ட்னு பொய் சொல்லி என்னைக் கூப்பிட்டுருக்காங்கனு. அதனால வழில ஒரு இடத்துல நிப்பாட்டும் போது நான் இறங்கி தப்பிச்சு ஓடினேன். ஆனால் அவங்க என் மேல காரை ஏத்திட்டு போயிட்டாங்க.” என்று அழுது கொண்டே அவள் கூற, நந்தனாவை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்த நந்திதா மற்றும் மனோஜ் மீது பயங்கரக் கோபம் வந்தது விபீஷணனிற்கு.

“லட்டு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை. நீ வேணா பார் நமக்குச் சீக்கிரமே பாப்பா பிறக்கத் தான் போகுது. நீ அதை நினைச்சு கவலைப்படாத லட்டு. எனக்காக செய்வியா நீ?” என்று அவன் கேட்க, அவள் அமைதியாகத் தலையசைத்தாள்.

“சரி டா எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் போயிட்டு வந்துடுறேன் சரியா. நீ அதுவரை ரெஸ்ட் எடு.நான் சீக்கிரமே வந்துடுவேன்.” என்று கூறவிட்டு வெளியே வந்தான் விபீஷணன்.

பிரவீணும் அவனுடன் வெளியே வர,”என்னாச்சு விபி? எங்க போறீங்க? என்ன வேலை?” என்று கேட்டான்.

“இப்போவே போலிஸ் ஸ்டேஷன் போகனும் பிரவீண். அந்த நந்திதாவை நான் சும்மா விடப் போறது இல்லை. அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படிப் பண்ணிருப்பா? அந்த மனோஜூக்கும் இருக்கு. ராகவி விஷயத்துலயே அவனை உண்டு இல்லைனு பண்ணிருக்கனும். ஆனால் அப்போ தப்பிச்சுட்டான். இப்போ வசமா சிக்கிருக்கான்!! அவனையும் சும்மா விடக் கூடாது. இவங்க இரண்டு பேருக்கும் எப்படிப் பழக்கம்னு வேற தெரியலை!!”

“நந்திதா மனோஜோட தங்கச்சி. நான் போலிஸ்கிட்ட விசாரிச்சுட்டேன்.” என்று பிரவீண் கூற, அதிர்ந்து போய்விட்டான் விபீஷணன்.

“வாட்? நந்திதா வீட்டுக்கு ஒரே பொண்ணாச்சே!!”

“ம் ஆமா, நந்திதாவோட அப்பா மனோஜோட சித்தப்பா.” என்று கூறவும் இப்போது அனைத்தும் விளங்கியது. தங்கைக்காவும், தன்னைப் பழிவாங்கவும் தான் மனோஜ் இவ்வாறு செய்துள்ளான் என்று.

“விபி நீங்க இப்போ நந்தனாவோட இருக்கிறது தான் முக்கியம். அவங்க இரண்டு பேரையும் நானும் அப்பாவும் பார்த்துக்கிறோம். நீங்க அதுங்களை நினைச்சு மனசு கஷ்டப்பட வேண்டாம். அவங்க இரண்டு பேருக்கும் தண்டனை வாங்கித் தராமல் அப்பா விட மாட்டார். அதனால நீங்க உள்ள போங்க, மத்ததை நான் பார்த்துக்கிறேன்.” என்று பிரவீண் கூறவும், விபீஷணனிற்கும் புரிந்தது. அதனால் பிரவீண் கூறியபடி உள்ளே சென்றான்.

அடுத்த நாள் மருத்துவர் கூறியது போல், நந்தனா வீட்டிற்குப் புறப்பட்டாள். அவளிற்குப் பழைய ஞாபகங்கள் மட்டுமல்ல இந்த ஒரு வருடம் நடந்த அனைத்தும் நினைவிலிருந்தது. அவளால் இப்போது கூட நம்ப முடியவில்லை, அவள் இதுவரை பெற்றவர்கள் என்று நம்பியவர்கள் அவளது உண்மையான அப்பா மற்றும் அம்மா இல்லை என்று. அவர்களிடம் பேசி விளையாடிய ஞாபகங்கள் இல்லை என்றாலும் இத்தனை ஆண்டுகள் அவர்களைத் தான் பெற்றவர்களாகக் கருதியிருக்கிறாள். ஆனால் விதி அவளை அவளுடைய உண்மையான பெற்றவர்களிடம் சேர்த்ததை எண்ணி அவளிற்கு வியப்பாகத் தான் இருந்தது.

ராகவி மூலமாக நடந்த விஷயம் அனைத்தும் கேள்விப்பட்ட சசிகலா மற்றும் ராஜாராம் குற்றவுணர்ச்சியில் செத்துப் பிழைத்தனர் என்று தான் கூற வேண்டும். ஆனால் யாரும் அவர்களைக் குறைவாக ஒரு வார்த்தைக் கூறவில்லை. பெற்றோராகப் பார்க்கும் போது அவர்களது எண்ணம் சரியாக இருந்தது. ஆனால் அவர்களுக்கே தெரியாமல் நடந்த தவறுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்.

நந்தனாவிற்கு இப்போது பழைய ஞாபகங்கள் திரும்பி வந்து விட்டது என்று தெரிந்ததும் விபீஷணனின் குடும்பம் மொத்தமும் பாண்டிச்சேரி சென்று அவளைப் பார்த்து அவளது பெற்றோர்களான கௌரி மற்றும் வேணுகோபாலிடமும் பேசிவிட்டு ஒரு நாள் அங்கேயே இருந்து விட்டுத் தான் வந்தனர்.

விபீஷணன் வேலைச் செய்யும் மருத்துவமனைக்கு அழைத்து ஒரு மாதம் விடுமுறை விண்ணப்பித்து விட்டு பாண்டிச்சேரியிலே நந்தனாவுடன் சந்தோஷமாப் பொழுதைக் கழித்தான் விபீஷணன்.

நந்திதா மற்றும் மனோஜ் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்குத் தக்கத் தண்டனையும் கிடைத்தது. நந்திதாவிற்கு பத்தாண்டு சிறைத் தண்டனை மற்றும் அவளது மருத்துவர் உரிமையும் ரத்து செய்யப்பட்டது. விபீஷணனின் தீவிர முயற்சியால் மனோஜ் தான் ராகவியின் பெற்றோரைக் கொலை செய்தான் என்று நிரூபிக்கப்பட்டு அவனிற்குத் தூக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது.

Advertisement