Advertisement

“ஓ!! சரி அப்போ நீங்க முதல்ல போங்க, செக் அப் பண்ணும் போது நானும் கூட வரேன்.”

“டோண்ட் வொர்ரி இன்னைக்கு செக் அப் பண்ண முடியாதுனு நினைக்கிறேன். அதை விட அப்பா தான் அவளைப் பார்த்துக்கிறது. அவர் தான் இங்கே இருக்காரே!!” என்று அவன் கூறவும் விபீஷணனும் சரியென்று கூறினான்.

அவனிடம் பேசியதும் அனைவரும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான் பிரவீண். அவனது அம்மா மற்றும் அப்பாவிடம் கண் ஜாடை காட்டி விட்டு நந்தனாவிடம்,”நந்து நாம கொஞ்சம் அப்படியே வெளில போயிட்டு வரலாமா?” என்று கேட்டான்.

“எங்கே?” என்று கேட்டாள் நந்தனா.

“நீ தான திங்க்ஸ் வாங்கனும்னு சொன்ன. அதுக்கு தான் உன்னைக் கூப்பிடுறேன்.” என்றான் பிரவீண்.

அவளிற்கு விபீஷணனை விட்டு விட்டுப் போக ஏனோ மனம் வரவே இல்லை. நந்தனா விபீஷணனைப் பார்க்க, அவளது மனம் அவனிற்குப் புரிந்தது. அவளிடம் வந்து,”நீங்க முதல்ல போங்க, நான் இங்கே ஒருத்தரைப் பார்க்கனும். பார்த்துட்டு உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன்.” என்று விபீஷணன் கூறவும் நந்தனாவிற்குச் சந்தோஷமாக இருந்தது. வேகமாகத் தலையசைத்து விட்டு பிரவீணுடன் சென்றாள் நந்தனா.

நந்தனா சென்றவுடன் விபீஷணன் கௌரி மற்றும் வேணுகோபாலிடம் நடராஜன் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் கூறினான். அவர்கள் எப்படி நந்தனாவை அனாதை ஆசிரமத்திலிருந்து தத்தெடுத்து வளர்த்தார்கள் என்றும் அவளைத் தத்தெடுத்த பெற்றோர்களும் விபத்தில் இறந்தது என அனைத்தையும் கூறினான். கேட்ட கௌரிக்கும் வேணுகோபாலிற்கும் மனம் வலித்தது. தங்கள் பெண் இத்தனைக் கஷ்டப்பட்டு இருக்கிறாள் என்று. இருந்தாலும் நடராஜன் குடும்பம் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டதை எண்ணிச் சற்று மகிழ்ச்சியாகவும் இருந்தது.

விபீஷணன் அசோக்கிற்கு அழைத்து வேணுகோபால் வீட்டு முகவரியைக் கூற, அசோக் சற்று பக்கத்திலிருந்ததால் பத்து நிமிடத்தில் அங்கு வந்து விட்டான்.

வேணுகோபால் மற்றும் கௌரி இருவரும் வெளியே வந்து அவர்களை வரவேற்றனர். நந்தனாவின் பெற்றோர் இவ்வளவு வசதியானவர்களா என்று வியந்து தான் பார்த்தனர் மூவரும். இத்தனை வசதியுடன் வாழ வேண்டியவள் தங்கள் வீட்டில் சாதாரணமாக வாழ்ந்திருக்கிறாள் என்று நினைக்கும் போது வருத்தமாக இருந்தது நடராஜன் குடும்பத்தினருக்கு.

உள்ளே நுழைந்தவர்களை அமர வைத்துக் குடிக்க டீ மற்றும் சாப்பிடச் சிற்றுண்டி என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்துக் கவனித்தார் கௌரி. பின்னர் விபீஷணன் அனைவரிடமும் பொதுவாக,”நான் இவங்களை(நடராஜனை கைகாட்டி) உங்களோட( இப்போது வேணுகோபாலிடம்) தூரத்து சொந்தம்னு சொல்லி வைச்சுருக்கேன் நந்தனாகிட்ட. அவள் கேட்டாலும் நீங்களும் அப்படியே சொல்லுங்க. சென்னைல இவங்க வீட்டுல ஸ்டே பண்ணித் தான் அவள் டான்ஸ் கத்துக்கிட்டானு சொல்லிருக்கேன். நான் சொன்னதை அவளும் நம்பிட்டா. சப்போஸ் உங்ககிட்ட கேட்டால் நீங்களும் அதையே சொல்லிடுங்க. அப்புறம் ஏன் இவ்ளோ நாள் பார்க்க வரலை அப்படினு ஏதாவது கேட்டால் நீங்க ஃபாரின் போயிருந்ததா சொல்லிடுங்க.” என்று விபீஷணன் கூற அனைவரும் சரியென்றார்கள்.

நடராஜன், மேனகா மற்றும் அசோக்கை பொறுத்தவரை நந்தனா உயிரோடு இருக்கிறாள் அது போதும் என்று தான் நினைத்தனர்.

“சரி நான் நந்தனாகிட்ட வரேன்னு சொல்லிருக்கேன். நீங்க பேசிட்டு இருங்க. நான் போய் நந்தனாவைக் கூட்டிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் விபீஷணன்.

போகும் போதே பிரவீணிடம் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டு விட்டு அந்த இடத்திற்குச் சென்றான். ஆனால் அவன் செல்வதற்கு முன்பே அங்கு வேண்டாத விஷயங்கள் நடந்து நந்தனா மீண்டும் காணாமல் போய் விட்டாள்.

பிரவீண் நந்தனாவை அழைத்துக் கொண்டு சென்றது அங்கிருக்கும் வணிக வளாகத்திற்குத் தான். இருவரும் பேசிக் கொண்டே அங்கிருக்கும் கடைகளைச் சுற்றி வந்தனர். அப்பொழுது மூன்றாவது தளத்தில் ஆண்கள் அணியும் ஆடைக்கான கடை இருக்க, நந்தனா அந்தக் கடைக்குள் சென்றாள். திடீரென நந்தனா உள்ளே நுழையவும் பிரவீணும் அவளுடன் உள்ளே வந்தான்.

“என்ன நந்து யாருக்குச் சட்டை எடுக்கிற?”

“அத்துக்கு.” சட்டென்று அவள் கூறிவிட்டாள். பிரவீண் புரியாமல் அவளைப் பார்க்க, அப்போது தான் அவள் கூறியதே அவளது நினைவில் வந்தது. ஒரே வெட்கமாகிப் போய் விட்டது அவளிற்கு.

“ஹேய் நந்து அது யாரு?” என்று பிரவீண் அறியாமல் கேட்க, நந்தனாவிற்குச் சட்டென்று அது விபீஷணன் என்று கூற வார்த்தை வரவில்லை. அவள் பதில் கூறாமல் சட்டையைத் தேர்ந்தெடுக்க ஆரம்பிக்க பிரவீணிற்கு அவள் விபீஷணனைத் தான் குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது.

நந்தனாவுக்கு ஒரு சட்டைப் பிடித்து விட, அதை பில் போட்டு வாங்கினான் பிரவீண். பின்னர் இருவரும் வெளியே வர, அப்போது தான் விபீஷணன் அவனிற்கு அழைத்தான்.

“உன்னோட அத்து தான் கூப்பிடுறார்.” என்று கூறிவிட்டு அவன் கைப்பேசியை எடுத்து ஹலோ என்று கூற, விபீஷணன் பதில் கூறியது எதுவும் கேட்கவில்லை பிரவீணிற்கு.

அவன் மறுபடியும் ஹலோ ஹலோ என்று கூற, விபீஷணன் பேசியது அப்போதும் பிரவீணிற்குக் கேட்கவில்லை. அப்போது தான் அவனது கைப்பேசியைப் பார்த்தான். அதில் டவர் சுத்தமாக இல்லை. பின்னர் நந்தனாவிடம்,”நந்து அவர் பேசுறது எதுவும் கேட்கலை. என்னோட ஃபோன்ல டவர் இல்லை போல. வா கீழே போய் பேசிட்டு வரலாம்.” என்றான் பிரவீண்.

சரியென்று நந்தானவும் பிரவீணுடன் கீழே வந்தாள். அப்போதும் அவர்களுக்கு டவர் கிடைக்கவில்லை. அதனால் அந்த வளாகத்தை விட்டு வெளியே வர, பிரவீணின் கைப்பேசியில் டவர் கிடைத்தது. சரியென்று ஒரு ஓரமாகச் சென்று அவன் விபீஷணனிற்கு அழைத்து விவரத்தைக் கேட்க, அவன் அவர்களைப் பார்க்க வருவதாகக் கூற, அந்த வணிக வளாகத்தின் பெயரைக் கூறி வரச் சொன்னான் பிரவீண்.

விபீஷணனிடம் பேசிவிட்டு திரும்ப, நந்தனாவை அங்குக் காணவில்லை. ஒரு நொடி பயந்து விட்டான் பிரவீண். பின்னர் மனதை ஒருநிலைப் படுத்தி, அங்கிருக்கும் இடத்தில் எல்லாம் தேட, அவனது கண்களுக்கு நந்தனா எங்கும் புலப்படவில்லை. பக்கத்திலிருக்கும் கடைகளில் எல்லாம் சென்று விசாரிக்க யாரும் நந்தனாவைப் பார்க்கவில்லை என்று கூறவும் அவனது பயம் அதிகரிக்க ஆரம்பித்தது.

அப்போது தான் அவனது மூளையில் அந்த விஷயம் தோன்றியது. நந்தனா இது வரை தனியாக எங்கும் சென்றதில்லை. இருந்தாலும் ஒரு முன்னெச்சரிக்கையாக அவளது டாலரில் ஜீ.பி.எஸ் பொருத்தி இருந்தார்கள்.

வேகமாக அவனது கைப்பேசியை எடுத்து இப்போது நந்தனா எங்கே என்று பார்க்க, அவள் அவன் இருக்கும் இடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது போல் காட்ட, நொடியும் தாமதிக்காமல் அவனது வாகனத்தை எடுக்க, வாகனத் தரிப்பிடத்திற்கு வந்தான்.

சரியாக விபீஷணன் அவனது வாகனத்தை நிறுத்த உள்ளே நுழைய, தனியாக பிரவீண் வருவதை அதுவும் பதட்டத்துடன் இருப்பதைப் பார்த்ததும் விபீஷணன் வேகமாக அவனிடம் வந்து விஷயத்தைக் கேட்க, பிரவீண் நடந்ததைக் கூற, விபீஷணனின் நிலையை எவ்வாறு விளக்குவது என்று தெரியவில்லை. அவன் தோய்ந்து போய் விட்டான். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துக் கிடைத்தவள் மீண்டும் தொலைந்து போனதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

“நந்தனா டாலர்ல ஜி.பீ.எஸ் இருக்கு. அவள் எங்கே இருந்தாலும் நாம கண்டுப் பிடிச்சுரலாம். டோண்ட் லூஸ் யுவர் ஹோப்.” என்று பிரவீண் அவனிற்குத் தைரியம் கூற, விபீஷணனும் அவனது வாகனத்தில் ஏறப் போக, அவனைத் தடுத்து தன்னுடைய வாகனத்தில் அழைத்துச் சென்றான் பிரவீண்.

போகும் வழியிலே பிரவீண், வேணுகோபாலிடம் கூறிவிட்டான். அவரும் நேரம் தாழ்த்தாமல் அவருக்குத் தெரிந்த காவலர் அதிகாரியிடம் விஷயத்தைக் கூற, அவர்களும் உடனே கிளம்பிவிட்டார்கள் நந்தனாவைக் கண்டுபிடிக்க.

நந்திதா பாண்டிச்சேரி வந்து சேர்ந்ததும், அவள் ஏவிய ஆட்கள் அதாவது விபீஷணன் பாண்டிச்சேரி வரும் போது அவனது வாகனத்தைத் தொடர்ந்து வந்து ஆட்களைத் தொடர்பு கொண்டாள். அவர்களிடம் இப்போது விபீஷணனைப் பற்றி வினவ, அவர்கள் அவன் வேணுகோபால் இல்லத்தில் தான் இருப்பதைக் கூறினார். அவர்களிடம் அந்த வீட்டிலிருந்து எந்த வாகனம் வெளியே வந்தாலும் அதைத் தொடர்ந்து போகச் சொல்லியிருந்தாள். அதே போல் நந்தனாவின் புகைப்படத்தையும் அனுப்பி அவளைக் கண்காணிக்கச் சொல்லியிருந்தாள். அதே போல் நந்தனா வணிக வளாகம் சென்றதை நந்திதாவிடம் அவர்கள் கூறி, அவளது கட்டளையின் படி நந்தனா தனியாக இருக்கும் போது அவளைக் கடத்திக் கொண்டு வந்து விட்டார்கள்.

நந்தனாவின் கண்களையும் கைகளையும் கட்டிக் கொண்டு அந்த வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர். உள்ளே அழைத்து வந்து அவளை நாற்காலியில் அமர வைத்து விட்டு  அவர்கள் வெளியே வந்து விட்டனர். நந்தனாவிற்குப் பயம் அதிகரிக்க ஆரம்பித்தது. அவளிற்கு இந்த நிலைமையில் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அதே போல் தன்னை ஏன் கடத்திக் கொண்டு வந்தார்கள் என்று புரியாமல் முழித்தாள்.

அப்போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் நந்திதா. அவளுடன் ஒரு ஆணும் வந்தான். அவன் வேறு யாருமில்லை ராகவியை ஒரு தலையாகக் காதலித்து அவளது பெற்றோரைக் கொலை செய்த மனோஜ் தான்.

Advertisement