Advertisement

நந்திதா அவளது வீட்டிலிருந்து கிளம்பி நேராகச் சென்றது VSB Multispeciality Hospital. அவளது கரை வண்டிகள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு மருத்துவமனை உள்ளே நுழைந்தாள். பின்னர் மகப்பேறு பிரிவு எந்தத் தளத்தில் இருக்கிறது என்பதைப் பார்த்து விட்டு அந்தத் தளத்திற்கு அவள் மின்தூக்கியின் உள்ளே நுழைய, கதவு மூடிவிட, சரியாக அந்த நேரம் மின்தூக்கியைக் கடந்து சென்றான் விபீஷணன்.

நந்திதா மகப்பேறு பிரிவு இருக்கும் தளம் வந்ததும், அவள் மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தாள். நோயாளிகளுக்காகப் போடப் பட்டிருக்கும் நாற்காலியில் சென்று அமர்ந்தாள். பின்னர் அவளது கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்து,”மேம் நான் இப்போ ஹாஸ்பிட்டல் வந்துட்டேன். இங்க கைனிக் டிபார்ட்மென்ட்ல தான் இருக்கேன்.” என்று அவள் கூற, எதிரில் இருந்தவர் என்ன கூறினாரோ அவள் எழுந்து கொஞ்ச தூரம் செல்ல, அங்கு துறைத் தலைவர், தலைமை மருத்துவர் சீதா என்று அந்த அறையின் வெளியே போடப்பட்டிருக்க, அந்த அறையைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

உள்ளே ஐம்பது வயது மதிக்கத்தக்கப் பெண் அமர்ந்திருந்தார். அவர் இவளின் வரவை எதிர்பார்த்து கதவைப் பார்த்துக் கொண்டிருக்க இவள் சிரித்த முகமாக உள்ளே வந்து,”ஹலோ மேம். ஐ ஆம் நந்திதா வேலுச்சாமி.” என்று அவள் கூற,

“ம் வா மா.” என்று இவளிடம் கூறியவர், பக்கத்திலிருந்த தரைவழி தொலைப்பேசியை(landline phone) எடுத்து நர்ஸை உள்ளே வரச் சொல்லிவிட்டு வைத்தார்.

“காலைல டிபன் ஆச்சா?” 

“எஸ் மேம் சாப்பிட்டாச்சு.”

“இங்க சென்னைல எத்தனையோ ஹாஸ்பிட்டல் இருக்க எதுக்கு மா இந்த ஹாஸ்பிட்டல்ல சூஸ் பண்ண? இங்கத் தான் வேகன்சி இருந்ததுனு சொல்ல போறியா?” அவர் சிரித்துக் கொண்டே கேட்க,

இவளும் சிரித்துக் கொண்டே,”இல்லை மேம். மத்த ஹாஸ்பிட்டல் கம்பேர் பண்ணும் போது டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் எனக்கு இந்த ஹாஸ்பிட்டல்ல தான் எனக்குத் தகுந்த மாதிரி இருந்தது மேம். அதுவுமில்லாமல் எனக்கு இந்த ஹாஸ்பிட்டல் பிடிச்சுருந்தது மேம்.” என்று அவள் கூறவும் நர்ஸ் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

உள்ளே வந்த நர்ஸ் மேஜைக்குப் பக்கத்தில் நின்று கொள்ள, மருத்துவர் சீதா அந்த நர்ஸிடம்,”இவங்க தான் நந்திதா. நம்ம டிபார்ட்மென்டோட நியூ டாக்டர். இனிமேல் நீ இவங்க கூடத் தான் வொர்க் பண்ண போற.” என்று அவர் கூற,

“ஹலோ டாக்டர் என் பெயர் அர்ச்சனா.” என்று நர்ஸ் கூற, நந்திதா தன்னை அந்த நர்ஸிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“அப்புறம் அர்ச்சனா, நம்ம டிபார்ட்மென்ட் டாக்டர்ஸ் அண்ட் நர்ஸ் எல்லாரையும் கான்ஃபரன்ஸ் ரூம்க்கு வரச் சொல்லு. நந்திதாவை எல்லாருக்கும் இன்ட்ரோ பண்ணி வைக்கனும்.” என்று சீதா கூற, நர்ஸ் அவரிடம் சரியென்று கூறிவிட்டு வெளியே சென்றார்.

அந்த மருத்துவமனையில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு கலந்தாய்வு அறை இருக்கும். அந்த அறையில் தான் அந்தத் துறையிலிருக்கும் அனைத்து மருத்துவர்களும் சந்தித்துப் பிரச்சனையாக இருக்கக் கூடிய அறுவை சிகிச்சையை எப்படிச் செய்வது, எந்த முறையில் செய்தால் நன்றாக இருக்கும்?ஒரு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு அதைப் பற்றி தலைமை மருத்துவர் மற்றும் அந்தத் துறையின் மற்ற மருத்துவர்களுக்குக் கூறுவது, பின்னர் அந்தத் துறைச் சந்திப்பு என அனைத்திற்கும் அந்த அறையைப் பயன்படுத்துவர்.

சரியாகப் பத்து நிமிடம் கழித்து சீதா நந்திதாவை அழைத்துக் கொண்டு கலந்தாய்வு அறைக்குச் சென்றார். அங்கு அவர் எதிர்பார்த்த படியே நான்கு மருத்துவர்களும் ஐந்து செவிலியர்களும் அமர்ந்திருந்தனர். இவர்கள் உள்ளே நுழைவதைப் பார்த்து அவர்கள் எழுந்திருக்க, சீதா கையாலே அவர்களை அமரச் சொல்லிவிட்டு நடுவில் வந்து நின்று நந்திதாவின் தோளில் கைவைத்து,

“திஸ் இஸ் நந்திதா. நம்ம டிபார்ட்மென்டோட நியூ டாக்டர். இன்னைக்கு தான் ஜாயின் பண்றாங்க. லெட்ஸ் வெல்கம் ஹெர்.” என்று அவர் கூற, அனைவரும் கைத்தட்டி அவளை வரவேற்றனர்.

“தாங்க் யூ எவ்ரிவொன். நான் நந்திதா வேலுச்சாமி. இனி உங்க எல்லோரடவும் நான் வேலைப் பார்க்கப் போறதை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு. தாங்க் யூ.” என்று அவள் கூற,

“ஷார்ட்டா முடிச்சுட்ட. சரி நந்திதா இன்னைல இருந்து உன்னோட வொர்க் ஸ்டார்ட் பண்ணிடு. மீட்டிங் முடிஞ்சது, எல்லாரும் போகலாம். அண்ட் அர்ச்சனா நந்திதாவோட ரூம்ம காட்டிடு.” என்று கூறிவிட்டு சீதா சென்று விட, அர்ச்சனா நந்திதாவை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றாள்.

“டாக்டர் இது தான் உங்க ரூம். பேஷன்ட்ஸ் உடனே அலாட் பண்ண மாட்டாங்க டாக்டர். இன்னைக்கு கொஞ்சம் நீங்க ஃப்ரீயா இருந்துக்கலாம் டாக்டர். ஆனால் நாளைல இருந்து பேஷன்ட்ஸ் வந்துட்டே இருப்பாங்க. அதுவும் நம்ம ஹாஸ்பிட்டல்ல நம்ம டிபார்ட்மென்ட்ல கூட்டம் இருந்துட்டே இருக்கும் டாக்டர்.”

“அர்ச்சனா ஹாஸ்பிட்டல்னு இருந்தா பேஷன்ட்ஸ் வரத் தான் செய்வாங்க. எனக்கே இன்னைக்கு எந்த வேலையும் இல்லைனு நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.” சிரித்துக் கொண்டே அவள் கூற,

“அட டாக்டர் என்ன இப்படிச் சொல்றீங்க? இங்க எல்லாரும் எப்போ டா கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்னு பார்த்துட்டு இருக்காங்க. நீங்க இப்படிப் பேசுறீங்க. பார்க்கலாம் டாக்டர் ஒரு வாரம் கழிச்சும் நீங்க இதையே சொல்றீங்கனா?” என்று அர்ச்சனா கூற, நந்திதா எதுவும் கூறாமல் சிரிக்க மட்டுமே செய்தாள்.

விபீஷணன் நோயாளியைப் பார்த்து விட்டு அவனது அறைக்கு வந்து நாற்காலியில் அமர, வீட்டில் நடந்த விஷயங்கள் அவனது ஞாபகத்திற்கு வந்தது. அந்த நினைப்பு அவனது மனதிற்கு உவகையாக இல்லை. தலையைக் குலுக்கிக் கொண்டு வந்திருக்கும் நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

சசிகலா கோவிலில் மயக்கம் போட்டு நான்கு நாட்களாகி விட்டது. அந்த நான்கு நாட்களும் அவரும் சரி வீட்டில் உள்ள மற்றவர்களும் விபீஷணனிடம் மறுமணம் பற்றி ஒரு வார்த்தைப் பேசவில்லை. அது அவனுக்குச் சந்தேகத்தைத் தந்து ஏதோ திட்டம் போடுகிறார்களோ என்று யோசிக்க வைத்தது. அவனாக அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை. கேட்டு அவர்கள் எதுவும் சொல்லித் திரும்ப ஒரு சண்டை போட இவனிடம் சுத்தமாகத் தெம்பு இல்லை. அதனால் அமைதியாகி விட்டான் விபீஷணன்.

சசிகலா மயக்கம் போட்டு விழுந்த அன்றே விபீஷணன் VSB மருத்துவமனையில் சசிகலாவுக்கும் ராஜாராம்கும் முழு உடல் பரிசோதனைக்கு விண்ணப்பித்து விட்டான். முந்தைய தினம் இரவு அவன் மருத்துவமனையிலிருந்து வந்ததும் சசிகலாவிடமும் ராஜாராமிடமும்,”அம்மா அப்பா நாளைக்கு உங்க இரண்டு பேருக்கும் ஃபுல் பாடி செக் அப் இருக்கு. அதனால் இப்போ சாப்பிடறதோட அவ்ளோ தான். காலையில எழுந்து தண்ணீ மட்டும் வேணும்னா குடிங்க மத்தபடி நோ காஃபி ஆர் டீ. ஏற்கனவே நீங்க ஃபுல் பாடி செக் அப் பண்ணிருக்கீங்க இருந்தாலும் மறந்திடக் கூடாது இல்லையா அதனால் தான் சொல்றேன். எதுவும் சாப்பிடவும் கூடாது.” என்று அவன் கூற,

“ப்ச் காலைல எழுந்து காஃபி குடிக்காட்டி அந்த நாள்லே விடியாத மாதிரி இருக்கும் விபி.” என்று ராஜாராம் சோகமாக முகத்தை வைத்துக் கூற,

“அப்பா ஒரு நாள்ல ஒன்னுமாகாது. நான் சொல்றதை ஒழுங்கா கேளுங்க. நீங்க டெஸ்ட் எடுத்ததுக்கு அப்புறம் நானே வாங்கித் தரேன் போதுமா.” என்று விபீஷணன் கூற,

“என்னமோ சொல்ற கேட்கிறேன் அவ்ளோ தான்.”

“நீ சொல்றது எல்லாம் நாங்க கேட்கிறோம் ஆனால் நாங்க சொல்றதை மட்டும் எதுவும் கேட்காத நீ.” என்று சசிகலா கூற, ஒரு வாய் சாப்பாட்டைக் கையில் எடுத்து வாயில் வைக்கப் போனவன் அதை அப்படியே தட்டில் போட்டு விட்டு சசிகலாவை முறைத்து விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட,

“என்ன சசி நீ? அந்தப் பொண்ணை பார்த்து பேசுற வரைக்கும் விபிகிட்ட எதுவும் பேச வேண்டாம்னு எங்ககிட்ட சொல்லிட்டு இப்போ நீயே இப்படிப் பேசலாமா? பார் அவன் சாப்பிடாமல் போயிட்டான்.” என்று ராஜாராம் வருத்தப்பட,

“மாமா நீங்கக் கவலைப்படாதீங்க விபியே திரும்ப வந்து சாப்பிடுவார் பாருங்க.” என்று சுவாதி கூறி வாயை மூடவில்லை விபீஷணன் திரும்ப அங்கு வந்து யாரிடமும் எதுவும் பேசாமல் வேகமாகச் சாப்பிட்டு விட்டுச் செல்ல, எல்லாரும் அதிசயமாகச் சுவாதியைப் பார்த்தனர்.

அவன் சென்றவுடன் சுவாதியிடம்,”எப்படி சுவாதி இப்படிச் சரியா சொன்ன?” என்று கவுதம் கேட்க,

“அது ஒரு தடவை விபி ஹாஸ்பிட்டல்ல இருந்து டையர்டா வீட்டுக்கு வந்தார். அப்போ நந்தனா அவருக்குச் சாப்பாடு போட அவர் பாதில சாப்பிட்டுட்டு எழுந்திட்டார். நந்தனாவுக்கு அவர் அப்படிப் பாதி சாப்பாட்டுல எழுந்தது கோபம். அதனால அவரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா. இந்தச் சாப்பாடு கிடைக்காமல் எத்தனைப் பேர் இருக்காங்க. நீங்க இப்படிப் பாதி சாப்பாட்டோட எழுந்திருக்கீங்க. நான் தட்டுல வைக்கும் போதே நீங்கக் கொஞ்சமா வைக்கச் சொல்ல வேண்டியது தான. அதோடு சாப்பாடு அன்னலக்ஷ்மி, இப்படிப் பாதில எழுந்தா அது சாப்பாட்டை அவமானப் படுத்தினது மாதிரி. உங்களுக்கு என் மேல அன்பு இருந்தா இனிமேல் சாப்பாட்டை ஒரு போதும் வேஸ்ட் பண்ணக் கூடாது. உங்களுக்கு வேண்டாம்னா முன்னாடியே சொல்லுங்க அதை விட்டுட்டு இப்படித் தட்டுல வைச்சதுக்கு அப்புறம் பாதில எழுந்திருக்க வேண்டாம்னு நிறையச் சத்தம் போட்டுட்டா. அதுல இருந்து விபி ஒரு போதும் சாப்பாட்டை வீணாக்கியது இல்லை.” என்று சுவாதி கூற, கேட்ட அனைவருக்கும் என்ன பதில் பேசுவது என்று புரியவில்லை. நந்தனா இப்போது உயிரோடு இல்லை. ஆனால் அவள் சொன்ன வார்த்தைகளை விபீஷணன் இப்போதும் பின்பற்றுவதை நினைத்து அவர்களுக்குக் கவலையாக இருந்தது. இவ்வளவு காதலை அவள் மேல் வைத்தவன் இன்னொரு கல்யாணத்திற்குச் சம்மதிப்பானா என்று தோன்ற,

“அம்மா அவனைச் சம்மதிக்க வைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். எது செய்றதா இருந்தாலும் பார்த்து செய்யுங்க. அவ்ளோ தான் சொல்லுவேன் நான்.” என்று கூறிவிட்டு கவுதம் எழுந்து சென்று விட,

“அத்தை நான் தப்பா பேசுறேன்னு நீங்க நினைச்சாலும் பரவால, விபி நந்தனா மேல ரொம்பவே அன்பு வைச்சுருக்கிறார். அவர் நந்தனா கூட மூணு மாசம் தான் வாழ்ந்தார்னு ஈசியா நினைச்சுடாதீங்க. மூணு மாசம்னாலும் அவர் அவளை எவ்ளோ லவ் பண்ணார்னு எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தெரியும். அதனால எது செய்றதா இருந்தாலும் பார்த்துப் பண்ணுங்க.” என்று கூறவிட்டு அவளும் சென்று விட, சசிகலாவுக்கு அப்போது தான் இது அவர் நினைத்தது போலச் சாதாரணமாக விபீஷணன் ஒத்துக் கொள்ள மாட்டான் என்று தோன்றியது.

Advertisement