Advertisement

அசோக் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கவுதம் வேலைச் செய்யும் அதே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அதிலும் கவுதம் தான் அவனது குழுத் தலைவர். அதனால் தினமும் இருவரும் சந்திப்பதால் அவர்களது உறவு முறை நெருக்கமானதாக மாறியிருந்தது.

ராகவி கோவிலிற்கு வந்து நந்தனா உயிரோடு தான் இருக்கிறாள் என்று கூறிய தினம் கவுதம் தன் தந்தை மற்றும் தாயைத் திட்டி விட்டு வேலைக்குச் சென்று விட்டான்.

அன்று மதியம் கவுதம் அசோக்கைச் சந்தித்து நந்தனா உயிரோடு தான் இருக்கிறாள் என்று கூறிவிட்டான். அதைக் கேட்டவுடன் அசோக் எத்தனை சந்தோஷப்பட்டான் என்று வார்த்தையால் விவரிக்க இயலாது.

“மாமா நிஜமா தான் சொல்றீங்களா? நந்தனா உயிரோட தான் இருக்காளா? உங்களுக்கு எப்படித் தெரியும்? இப்போ நந்தனா எங்கே இருக்கா?” என்று மகிழ்ச்சியாகக் கேட்டான் அசோக்.

“ராகவி நந்தனாவை பாண்டிச்சேரில பார்த்துருக்கா. இங்கே வந்து சொன்னாளா, உடனே விபி அவள் கூடக் கிளம்பிப் போயிட்டான். அவன் அங்கே போனதுக்கு அப்புறம் தான் மத்த விஷயம் எல்லாம் தெரியும்.”

“அப்போ ஏன் மாமா நந்தனா இத்தனை நாள் நம்மளை தேடி இங்கே வரலை?”

“நந்தனா பழசை மறந்துட்டாள்னு ராகவி சொன்னா. ஆனால் முழு விஷயம் என்னன்னு எனக்குத் தெரியாது அசோக்.”

“ஓ!! இதுவே போதும் மாமா. நான் இப்பவே வீட்டுக்குப் போய் அம்மா அப்புறம் அப்பாகிட்ட விஷயத்தைச் சொல்லனும். எனக்கு பெர்மிஷன் தாங்க மாமா.” என்று அவன் கூறவும் கவுதமும் சிரித்துக் கொண்டே,”சரி போயிட்டு வா.” என்றான்.

கவுதம் அனுமதி கொடுத்ததும் வேகமாக அவன் வீட்டிற்குச் சென்றான். போகும் வழியிலே அவனது தந்தைக்கு அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லி விட்டான். அவர் என்ன விஷயம் என்று கேட்டதற்குக் கூட நேரில் தான் விஷயத்தைக் கூறுவேன் என்று அசோக் கூறியதால் அவரும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் வீட்டிற்கு வந்தார்.

நடராஜான் வீட்டிற்கு வந்த பத்து நிமிடத்தில் அசோக்கும் வந்துவிட்டான். வேகமாக உள்ளே வந்த அசோக் அவனது அம்மா மற்றும் அப்பாவைப் பார்த்து,”நந்தனா உயிரோட தான் இருக்காளாம். விபி மாமா அவளைக் கூப்பிட்டு வரப் பாண்டிச்சேரி போயிருக்காராம்.” என்று அவன் கூறவும் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன சொல்ற அசோக்? நந்தனா உயிரோட இருக்காளா? யார் சொன்னா? கவுதமா?” என்று கேட்டார் மேனகா.

“ஆமா அம்மா. ஆனால் அவருக்கும் எந்த விவரமும் தெரியலை. நந்தனாவை விபி மாமாவோட ப்ரண்ட் பாண்டிச்சேரில பார்த்துருக்காங்க. அவங்க வந்து சொல்லவும் விபி மாமா உடனே கிளம்பிப் போயிட்டாங்களாம்.” என்றான் அசோக்.

நடராஜனிற்குத் தான் கேட்டது உண்மை தானா!! நந்தனா உயிரோடு தான் இருக்கிறாளா!! பின்னர் ஏன் இத்தனை நாட்கள் தங்களைத் தேடி வரவில்லை என்று அனைவருக்கும் தோன்றிய அதே கேள்வி அவருக்கும் தோன்றியது.

“அப்புறம் ஏன் டா நந்தனா நம்மளை தேடி வரலை?”

“அப்பா அவளுக்கு ஏதோ ஆக்சிடெண்ட் ஆகிருக்கும் போல!! அதுல பழசை எல்லாம் மறந்துட்டாளாம்.” என்று அவன் கூறவும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. நந்தனா எத்தனைக் கஷ்டப்பட்டிருப்பாள் என்று நினைக்க நினைக்க மனம் வருந்தியது அவளிற்காக.

“அசோக் வா நாமளும் கிளம்பி இப்போவே பாண்டிச்சேரி போகலாம். எனக்கு நந்தனாவைப் பார்க்கனும்.” என்று சிறு குழந்தை போல் நடராஜன் கூற, அசோக்கும் அந்த முடிவில் தான் இருந்ததால் உடனே சரியென்று கூறினான். மேனகாவிற்கும் நந்தனாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்ததால் அவரும் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.

அசோக் மற்றும் ஹரிணி இருவருக்கும் அவர்களது சித்தப்பா சிறு குழந்தையாக நந்தனாவை அழைத்துக் கொண்டு வரும் போது மிகவும் பிடித்தது. அசோக் எல்லாம் அவளுடன் தான் பாதி நேரம் செலவழிப்பான். ஆனால் தன்னுடைய தந்தை நந்தனாவை தங்கள் வீட்டிற்கே அழைத்து வரும் போது மிகவும் சந்தோஷம் தான் அடைந்தான். ஆனால் நடராஜன் நந்தனாவிற்குப் பெற்றவர்கள் ஞாபகம் வரக் கூடாதென்று அவளைத் தன்னுடனே வைத்துக் கொண்டு அசோக் மற்றும் ஹரிணியை மேனகா பார்த்துக் கொள்வார் என்று அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தது தான் அசோக், ஹரிணி மற்றும் மேனகாவின் கோபத்திற்கான காரணம். மற்றபடி நந்தனா நன்றாக இருக்கக் கூடாதென்று ஒரு போதும் அவர்கள் மூவரும் நினைத்தது இல்லை. அதுவுமில்லாமல் நந்தனா இறந்து விட்டாள் என்று கேள்விப்பட்ட போது மூவருக்கும் நந்தனாவிடம் நன்றாகப் பழகியிருக்கலாமோ என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. இப்போது நந்தனா உயிரோடு இருக்கிறாள் என்று தெரிந்தவுடன் தான் அவர்களுக்கு நிம்மதியாகவே இருந்தது.

நந்தனாவும் விபீஷணனும் கீழே இறங்கி வர, விபீஷணனின் கைப்பேசி ஒலித்தது. கீழே இறங்கிக் கொண்டே கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அசோக் தான் அழைத்திருந்தான். அவன் எடுப்பதற்குள் அது நின்று விட, அவன் நந்தனாவிடம்,”லட்டு நீ போ, நான் ஃபோன் பேசிட்டு வரேன்.” என்று கூற, அவளும் சரி என்றாள்.

சற்று தள்ளிப் போய் அசோக்கிற்கு இவனே அழைத்தான். அழைப்பை எடுத்தவுடன் அசோக் கேட்ட முதல் கேள்வி,”மாமா நந்தனா எங்கே இருக்கா? நாங்க அவளைப் பார்க்கனும். இப்போ பாண்டிச்சேரில தான் இருக்கோம்.” என்றான்.

[விபீஷணன் சென்னையிலிருந்து கிளம்பிய முக்கால் மணிநேரத்தில் அசோக்கும் அவனது அம்மா மற்றும் அப்பாவுடன் கிளம்பிவிட்டான்.]

“என்ன சொல்ற அசோக்? பாண்டிச்சேரில இருக்கியா? உனக்கு யார் சொன்னா? கவுதமா?”

“ம் ஆமா மாமா. ஏன் மாமா நந்தனா உயிரோட இருக்கிறது எங்களுக்குத் தெரியக் கூடாதா?”

“ஏய் நான் அப்படி நினைப்பேன்னா? கவுதம் உன்கிட்ட என்ன சொன்னான்னு எனக்குத் தெரியாது. ஆனால் நந்தனாவுக்கு இப்போ நம்ம யாரையும் ஞாபகத்துல இல்லை. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் இது உனக்குத் தெரியுமா என்னன்னு எனக்குத் தெரியாது. அப்படித் தெரியாட்டி உன் அப்பாகிட்ட கேட்டுக்கோ. விஷயம் என்னன்னா நந்தனாவோட அம்மா அப்பா கிடைச்சுட்டாங்க. அவங்க வீட்டுல தான் அவள் இருக்கா.” என்று அவன் கூற, அசோக்கிற்கு அது பேர் அதிர்ச்சி. அவனைப் பொறுத்தவரை அவனது சித்தப்பா மற்றும் சித்தி தான் நந்தனாவின் பெற்றோர்கள் என்று நினைத்திருந்தான்.

இப்போது விபீஷணன் கூறவதைக் கேட்டால் அவனிற்குத் தலையே சுற்றுவது போல் இருந்தது. என்ன பேச என்று தெரியாமல் அமைதியாக இருந்தான் அசோக்.

“இங்கே பார் அசோக், நீங்க இப்போ எங்கே இருக்கீங்க? சொல்லுங்க நானே அங்கே வரேன். நேர்ல நாம பேசலாம்.” என்று விபீஷணன் பேசிக் கொண்டிருக்கும் போது பிரவீண் அங்கு வந்தான்.

என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா என்று சைகையில் கேட்டான். அவனிடம் காத்திருக்க சொல்லி விட்டு அசோக்கிடம் பேச்சை தொடர்ந்தான்,”அசோக் இரு நானே திரும்ப உனக்குக் கூப்பிடுறேன்.” என்று கூறிவிட்டுக் கைப்பேசியை வைத்தான் விபீஷணன்.

“சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னா?” என்று கேட்டான் பிரவீண்.

“இல்லை அதெல்லாம் ஒன்னுமில்லை. நந்தனாவோட அண்ணா தான் ஃபோன் பண்ணான். இப்போ பாண்டிச்சேரில தான் இருக்கானாம். உடனே நந்தனாவைப் பார்க்கனும்னு விருப்பப்படுறான். அதான் என்ன பண்றதுனு யோசிக்கிறேன்.” என்றான் விபீஷணன்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு? அவரை இங்கே வரச் சொல்லுங்க.”

“அட புரிஞ்சு தான் பேசுறீங்களா? நந்தனாவுக்கு தான் அவங்களை ஞாபகத்துலயே இல்லையே!! இப்போ தான் அவகிட்ட நான் சென்னைல உங்க அப்பாவோட தூரத்து ரிலேஷன் வீட்டுல இருந்தனு சொல்லி வைச்சேன். இப்போ அவங்க இங்கே வந்து ஏதாவது சொல்லிட்டா நந்தனாவுக்கு தான் பிரச்சனை. அதே மாதிரி என்னைப் பார்த்துட்டே அவள் நிறைய யோசிக்கிறா. நல்ல வேளை அவளைப் பார்க்க நான் ஏன் இத்தனை நாள் வரலைனு அவள் கேட்கலை. அப்படிக் கேட்டிருந்தால் என்கிட்ட கண்டிப்பா பதில் இல்லை. அதே மாதிரி வேற ஏதாவது ஏடாகூடமாக அவள் எதுவும் யோசிக்கக் கூடாது. அதான் என்ன செய்றதுனு நான் யோசிக்கிறேன்.” என்று அவன் விளக்கிக் கூறவும் பிரவீணிற்கும் விஷயம் புரிந்தது.

“சரி நான் நந்நனாவைச் சும்மா வெளில கூட்டிட்டுப் போறேன். நீங்க அவங்களை இங்கே வரச் சொல்லுங்க. முதல்ல அவங்ககிட்ட பேசுங்க, நாம நந்தனா வந்தால் அவங்க ஃபாரின் போயிருந்தாங்க, இப்போ தான் ரிட்டன் ஆனாங்க. அதனால தான் இத்தனை நாள் பார்க்க வரலைனு சொல்லுவோம்.” என்று பிரவீண் கூறவும் அந்த யோசனை விபீஷணனிற்கும் சரியாகத் தோன்றியது.

“அதுக்கு எதுக்கு நந்தனா வெளில போகனும்? நான் போய் அவங்களை பார்த்து விஷயத்தைச் சொல்லிட்டு வரேன்.” என்றான் விபீஷணன்.

“இல்லை நந்தனா வெளில போகத் தான் அப்போவே என் கூடக் கிளம்பினா. ஆனால் அதுக்கு முன்னாடி அவளோட செக் அப் முடிச்சுரலாம்னு நான் அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்தப்போ தான் உங்க ப்ரண்ட் பார்த்து நந்துகிட்ட பேசவும் அவளுக்கு ஒரு மாதிரியாகிடுச்சு. அதனால நாங்க செக் அப் எதுவும் பண்ணாமல் வீட்டுக்கு வந்துட்டோம்.” என்றான் பிரவீண்.

Advertisement