Advertisement

விபீஷணனின் அணைப்பு அதிகரிக்க, சுய உணர்வுப் பெற்ற நந்தனா அவனைத் தள்ளிவிட்டு வேகமாகப் படிகளில் ஏறி அவளது அறைக்கு ஓடிச் சென்றாள்.

நந்தனா விபீஷணனை தள்ளி விட்டு ஓடியதும் அவனிற்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு புறம் வருத்தமாகவும் இருந்தது. மற்றவர்களுக்கு நந்தனாவின் செயல் ஆச்சரியத்தை உண்டு செய்தது. அவர்களுக்குத் தான் தெரியுமே நந்தனா நினைவுத் திரும்பியதும் எப்படி நடந்து கொண்டாள் என்று. அவர்கள் யாரையும் அவள் கிட்ட நெருங்கவே விடவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரம் கௌரியும் பிரவீணும் போய் போய் பேசிப் பேசித் தான் அவளைச் சகஜமாக்க முயன்றனர். அதுவும் முயன்றனர் அவ்வளவு தான். நந்தனா அவர்களிடம் எண்ணி எண்ணித் தான் வார்த்தைகளை விட்டாள். ஆனால் பார்த்த நொடியில் விபீஷணனை அணைத்தது அவர்களுக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது.

விபீஷணன், நந்தனா ஓடிச் சென்றதைப் பார்த்து அவனது மனம் வருந்தியது. அவள் பின்னால் சென்று அவளைச் சமாதானப்படுத்த அவனுக்குக் கை பரப்பரத்தது. ஆனால் சூழ்நிலை காரணமாக அவன் அமைதியாக இருந்தான்.

“கௌரி, இப்போ என்ன சொல்ற? பார் விபீஷணனை பார்த்ததும் நந்தனா எப்படி ரியாக்ட் பண்ணனு பார்த்ததானா? அவளுக்கு விபீஷணனை ஞாபகம் தான் இல்லை. ஆனால் அவளோட உள் மனசு விபீஷணனோட நினைவை மறக்கலை. அதனால் தான் விபீஷணனை பார்த்ததும் அப்படி ரியாக்ட் பண்ணிருக்கா.”

“ம் எல்லாம் சரி தான் வேணு. நான் ஒன்னும் இவரைத் தப்பா சொல்லலையே!! அன்னைக்கு நந்தனா எப்படி ரோட்ல இருந்தானு நீங்களும் தான பார்த்தீங்க? அதை விட நந்தனா இத்தனை வருஷம் எப்படி இருந்தானு நான் தெரிஞ்சுக்க நினைச்சேன். இது தப்பா?”

“அச்சோ ஆண்டி அதெல்லாம் தப்பே இல்லை. அம்மானு அப்படித் தான் இருப்பாங்க. என்னால புரிஞ்சுக்க முடியுது ஆண்டி. நான் ஒன்னு கேட்டால் என்னைத் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?” என்று விபீஷணன் கேட்க, இல்லையென்று அவர் தலையசைத்தார்.

“அப்போ நான் போய் நந்தனாவை இப்போ பார்க்கலாமா?” என்று கேட்டான்.

கௌரிக்கு விபீஷணன் மேல் நல்ல எண்ணம் இருந்தாலும் ஏனோ அவரால் உடனே விபீஷணனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கு அவனைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். நந்தனாவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் அவரது தற்போதைய ஆசை.

“ஆண்டி உங்களோட வருத்தம் எனக்குப் புரியுது. ஆனால் எனக்கு நந்தனானா உயிர். அவள் இல்லாமல் இந்த ஒரு வருஷம் நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். அவளை நான் நல்லா பார்த்துப்பேன் ஆண்டி. என்னை நம்புங்க.” என்றான் விபீஷணன்.

இதற்கு மேல் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது என்று,”ம் போய் பாருங்க.” என்றார் கௌரி. விபீஷணன் வேகமாக எழுந்து மேலே சென்றான். 

நந்தனா அவளது அறையில் தான் என்ன செய்தோம் ஏன் அப்படிச் தெய்தோம் என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். அவளிற்கே அவளது செயல் புரியவில்லை. ஆறு மாதங்களாகத் தன்னைப் பாதுகாக்கும் தன் குடும்பத்தினரை விட இன்று வந்த அவன் எந்த விதத்தில் தனக்கு உசத்தி என்று புரியாமல் விழித்தாள்.

அவளது எண்ணங்களைக் கலைக்கும் விதமாகக் கதவுத் தட்டும் சத்தம் கேட்க, அவள் நிமிர்ந்து பார்த்தாள். விபீஷணன் அறை வாசலில் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் நந்தனா எழுந்து நிற்க, விபீஷணன் சிரித்துக் கொண்டே,”நான் உள்ளே வரலாமா?” என்று கேட்டான்.

அவள் தலையாட்டவும், உள்ளே நுழைந்தான் விபீஷணன். அறையைச் சுற்றி ஒரு பார்வையை ஓட்டிக் கொண்டே அவள் பக்கத்தில் வந்தான் விபீஷணன். அவன் நெருங்க நெருங்க நந்தனாவிற்கு இதயம் வேகமாக அடித்தது.

அவளது படப்படப்பை ரசித்துப் பார்த்தான் விபீஷணன். நந்தனாவின் இந்த முகமும் அவனிற்குச் சுவாரஸ்யத்தைத் தந்தது. இதுவரை நந்தனா அவனிடம் பயந்து பேசியது கிடையாது. தைரியமாகத் தான் பேசியிருக்கிறாள். அவனது காதலை அவளிடம் கூறிய போது கூட அதைத் தைரியமாக எதிர் கொண்டாள். ஆனால் இன்று அவள் பயந்து போய் அவனைப் பார்க்கிறாள்.

“நந்தனா நான் யாரோ கிடையாது. என்னைப் பார்த்து நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. நான் உன்கிட்ட லவ் சொன்ன போது கூட நீ தைரியமா தான் என்னை ஃபேஸ் பண்ணத் தெரியுமா?” என்று கேட்டான்.

அதை வரை இருந்து படப்படப்பு போய்,”என்ன சொல்றீங்க? நீங்க என்னை லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிகிட்டீங்க?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

“ம் எஸ். நான் மட்டுமில்ல நீயும் என்னை லவ் பண்ணத் தெரியுமா?” என்று கேட்டான்.

“அதான் எனக்குப் பழசு எதுவும் ஞாபகமில்லையே!!”

“ம் ஆமா. ஆனால் நீ முழுசா மறக்கலை நந்தனா. உன்னோட உள் மனசுல என்னைப் பத்தின ஞாபகம் இருக்கு. அதனால தான் நீ என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடிச்ச.” என்று அவன் கூறவும் அவளிற்கு வெட்கமாகி விட்டது.

“ஹேய் லட்டுக் குட்டி இதுல வெட்கப்பட ஒன்னுமில்லை. உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு.” என்று அவன் கூறவும் அவனது லட்டு என்ற அழைப்பு அவளிற்குள் பல மாற்றங்களை நிகழ்த்தியது.

“என்ன சொன்னீங்க? எப்படி என்னைக் கூப்பிட்டீங்க?” என்று கேட்டாள்.

அவள் கேட்டவுடன் தான் அவனிற்கே அவளை எப்போதும் அழைப்பது போல் லட்டு என்று அழைத்தது நினைவில் வந்தது. அசட்டுச் சிரிப்பை ஒன்றைக் கொடுத்து விட்டு,”நான் உன்னை அப்படித் தான் கூப்பிடுவேன். உனக்குப் பிடிச்சுருக்கா?.” என்று கேட்டான் விபீஷணன்.

அவன் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் அவனிடம்,”அப்போ நான் உங்களை எப்படிக் கூப்பிடுவேன்?” என்று கேட்டாள் நந்தனா.

அவனும் சிரித்துக் கொண்டே,”என்னை நீ அத்துனு கூப்பிடுவ.” என்றான்.

“அத்து வா? ஏன் அப்படிக் கூப்பிட்டேன்? எனி ரீசன்?” என்று புரியாமல் கேட்டாள்.

“ஹா ஹா அத்துனு சொன்னதும் ஏதோ தனி வார்த்தைனு நினைச்சுட்டியா? இல்லை இல்லை அத்தான் அதைச் சுருக்கித் தான் நீ என்னை அத்துனு கூப்பிட்ட.”என்று விளக்கமாகக் கூறினான் விபீஷணன்.

“ஓ!! அப்படியா.” என்றதோடு நந்தனா அமைதியாகி விட்டாள்.

“சரி சொல்லு நான் உன்னை லட்டுனு கூப்பிடுறது பிடிச்சுருக்கா?”என்று ஆசையாகக் கேட்டான் விபீஷணன்.

“ம் பிடிச்சுருக்கு.” என்று வெட்கத்துடன் கூறினாள் நந்தனா. அவளது கண்ணச் சிவப்பு அவனை மயக்கியது. அவளை அப்படியே அள்ளிக் கொண்டு கொஞ்ச கை பரப்பரத்தது. ஆனால் அவளது நிலை அவனின் உணர்வைக் கட்டுப்படுத்தியது.

“சரி நம்ம லவ் ஸ்டோரி பத்திச் சொல்லட்டுமா?” என்று கேட்டான்.

அவள் வேகமாகத் தலையசைக்க, அவளது உச்சந்தலையை அழுத்திப் பிடித்து ஆட்டி விட்டு அவர்களது காதல் கதையைக் கூற ஆரம்பித்தான். அவர்களது முதல் சந்திப்பு, அவளைப் பார்த்ததும் அவன் காதல் கொண்டது. பின்னர் அவளிடம் காதலை வெளிப்படுத்தியது. அவர்களது பெயர் பொருத்தம். அதன் பின்னர் அவனிற்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று எண்ணி அவள் பயந்து அவனைப் பார்க்க மருத்துவமனை வந்தது. அவளது காதலை அவனிடம் தெரிவித்தது என்று அனைத்தையும் கூறினான். அவர்களது திருமணம், ராகவிப் பற்றி என்று அனைத்தையும் ஒன்று விடாமல் அவளிடம் கூறினான் விபீஷணன்.

அமைதியாக எல்லாவற்றையும் கேட்ட நந்தனா அவனிடம்,”அப்போ நான் சென்னைலயா இருந்தேன்? என்னோட அம்மா அப்பா இங்கே தான இருக்காங்க.” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

அவளிடம் எப்படி உண்மையைக் கூறுவது என்று புரியாமல் முழித்தான் விபீஷணன். ஆனால் அவளிடம் ஏதாவது கூறி அது அவளது உடல்நிலையை மோசமாக்கி விடுமோ என்று பயந்து,”ம் ஆமா, உங்க அப்பாவோட தூரத்து ரிலேஷன் ஒருத்தர் வீட்டுல நீ இருந்த. அவரை நீ பெரியப்பானு கூப்பிடுவ.” என்று அப்போதைக்கு என்ன தோன்றியதோ அதை உளறி வைத்தான் விபீஷணன்.

“ஓ அப்போ நான் டான்ஸ் எல்லாம் ஆடுவேனா?”

“ம் ஆமா. சூப்பரா ஆடுவ தெரியுமா. நீ டான்ஸ் ஆடுற அழகைப் பார்த்துத் தான் எனக்கு உன் மேல காதலே வந்துச்சு.” என்று கூறிவிட்டு அவனது கைப்பேசியில் அவள் நடனமாடிய காணொளியைக் காட்டினான் விபீஷணன்.

அதை ஆசையாக வாங்கிப் பார்த்தாள் நந்தனா. அவளிற்கே ஆச்சரியமாக இருந்தது அவள் அத்தனை அருமையாக ஆடுவாளா என்று. சிறிது நேரம் மீண்டும் மீண்டும் அதைப் போட்டுப் பார்த்தாள் நந்தனா.

“இப்போ நம்புறியா?” என்று கேட்டான் விபீஷணன்.

“ம் நான் உங்களை நம்பாமல் எல்லாம் இல்லை. சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டேன். எனக்குத் தான் எதுவுமே ஞாபகத்துல இல்லையே” என்று சோகமாகக் கூறினாள் நந்தனா.

“ஹேய் இப்போ ஞாபகம் இல்லாட்டி என்ன? கொஞ்சம் கொஞ்சமா உனக்கு எல்லாம் ஞாபகம் வரும் சரியா.”

“அப்படி ஞாபகம் வராட்டி என்ன பண்றது?”

“இங்கே பார் நந்தனா,

“ஓகே இப்போ நார்மல் ஆகிட்டியா?” என்று அவன் கேட்டதும் தான் அவளிற்கே அத்தனை நேரம் இருந்த படப்படப்பு, பயம் எல்லாம் இப்போது எங்குச் சென்றது என்று தோன்றியது.

இருந்தாலும் அவளிற்குச் சிறு சந்தேகம் இருக்கத் தான் செய்தது. தனக்கு உயிர் தந்த அம்மா, அப்பா, தன் மூத்தச் சகோதரன் இவர்களைப் பார்க்கும் போது அவளது மனதிற்கு நெருக்கமானவர்களாகத் தோன்றவில்லை. ஆனால் விபீஷணனைப் பார்த்ததும் ஏதோ பல வருடங்கள் பழகியது போல் நெருக்கமான உணர்வு தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. ஏன் என்ற கேள்வி அவள் மனதைப் போட்டு ஆட்டி வைத்தது. ஆனால் அதை யாரிடம் கேட்பது என்று புரியாமல் தவித்தாள் நந்தனா.

“என்னாச்சு லட்டு? என்ன யோசனை? எதுவா இருந்தாலும் என்கிட்ட நீ வெளிப்படையா கேட்கலாம்.”

“இல்லை ஒன்னுமில்லை. சும்மா தான்.” என்றாள் நந்தனா.

“சரி கீழே போகலாமா? எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.” என்று அவன் கூறவும் அவளும் சரியென்றாள்.

இருவரும் சிரித்த முகத்துடன் கீழே இறங்கி வர, அதைப் பார்த்ததும் தான் வேணுகோபால், கௌரி மற்றும் பிரவீண் மூவருக்கும் நிம்மதியாக இருந்தது.

ஆனால் இந்த நிம்மதியைக் கெடுப்பதற்காகவே ஒருத்தி சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு வந்தது பாவம் யாருக்கும் தெரியவில்லை.

Advertisement