Advertisement

விபீஷணன் மிகுந்த எதிர்பார்ப்போடு வி.ஜி.இல்லத்தில் தன் காலை எடுத்து வைத்தான். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு நந்தனாவைக் காணச் செல்கிறான். அதிலும் அவள் இவனைப் பார்த்து யாரென்று தான் கேட்கப் போகிறாள். அதை நினைக்கும் போது மனம் கனத்தது.

வேணுகோபால் அவரது வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கி விபீஷணனிற்காகக் காத்திருக்க, அவனும் வந்து வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினான்.

“வாங்க மாப்பிள்ளை.” என்று அவர் அழைக்க, அவர் பின்னால் சென்றான் விபீஷணன்.

கௌரி மற்றும் பிரவீணிடம் முன்னரே வேணுகோபால் கூறியிருந்ததால் அவர்களும் தயாராகத் தான் இருந்தனர். கௌரிக்குத் தான் வருத்தமாக இருந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து கிடைத்த தன் மகளை ஆசை தீரக் கூட வைத்துக் கொள்ள முடியவில்லையே என்று. திருமணமாகிய பெண் கணவருடன் இருப்பது தான் நியாயம். ஆனால் கௌரியால் அப்படி நினைக்க முடியவில்லை. அதுவுமில்லாமல் நந்தனாவின் விபத்து அவரை யோசிக்க வைத்தது. விபீஷணனிடம் தெளிவாகப் பேச வேண்டுமென்று யோசித்தார்.

விபீஷணனை வேணுகோபால் வீட்டிற்கு அழைத்து வருகிறார் என்று தெரிந்ததுமே நந்தனாவை அவளது அறைக்கு அனுப்பி விட்டார் கௌரி. முதலில் அவர் விபீஷணனிடம் பேசி விட்டுத் தான் நந்தனாவை அழைக்க வேண்டுமென்று அவர் முடிவெடுத்ததால் அவ்வாறு செய்தார்.

நந்தனாவும் கௌரி கூறியதால் அவளின் அறைக்குச் சென்றாள். அவளிற்கு விபீஷணன் அங்கு வருவது தெரியாது. ஏன் அவனது பெயரைக் கூட அவர்கள் கூறவில்லை. ஆனால் யாரோ தெரியாத ஒருவனுடன் அவளை அனுப்பி வைத்துவிடுவார்களோ என்ற பயம் மட்டும் அவளது மனதை வியாபித்து இருந்தது.

கீழே விபீஷணன் வேணுகோபாலுடன் உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்த முதல் பார்வையிலே கௌரிக்கு அவனது தோற்றம் பிடித்திருந்தது. நந்தனாவிற்குப் பொருத்தமாகத் தான் இருக்கிறான் என்றும் தோன்றியது. இருந்தாலும் வெளித் தோற்றத்தை வைத்து முடிவு செய்யக் கூடாதென்று அமைதியாக இருந்தார்.

விபீஷணன் உள்ளே நுழைந்தாலும் அவனது கண்கள் நந்தனாவைத் தான் தேடியது. ஆனால் நந்தனா அவனது கண்களுக்கு அகப்படவில்லை. அவனது தேடலைப் பார்த்த வேணுகோபால் தன் மனைவியிடம்,”நந்தனா எங்கே கௌரி?” என்று கேட்டார்.

அதற்குக் கௌரி ஒரு முறைப்பை அவரிடம் தந்து விட்டு,”அவள் அவளோட ரூம்ல இருக்கா.” என்றார்.

வேணுகோபாலிற்குக் கௌரி ஏன் தன்னைப் பார்த்து முறைத்தார் என்று புரியவில்லை. இருந்தும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விபீஷணனை உள்ளே அழைத்து வந்து சாய்விருக்கையில் அமரச் சொன்னார்.

“கௌரி, இவர் தான் விபீஷணன். நந்தனாவோட ஹஸ்பெண்ட்.” என்று அவர் கூறவும் விபீஷணன் அவருக்கு வணக்கம் கூறினான்.

“பிரவீண் நந்தனாவைக் கூட்டிட்டு வா.” என்று வேணுகோபால் கூறவும் மீண்டும் முறைத்தார் கௌரி. இப்போதும் அவரது முறைப்பிற்கான காரணம் சுத்தமாகப் புரியவில்லை வேணுகோபாலிற்கு.

பிரவீண் எழுந்து போக, அவனைத் தடுத்து நிறுத்தினார் கௌரி,”பிரவீண் வெயிட் பண்ணு.” என்றார்.

“என்னாச்சு கௌரி? ஏன் அப்போல இருந்து ஒரு மாதிரியாவே பிஹேவ் பண்ற? அதை விட நந்தனாவை ஏன் வர விட மாட்டீங்கிற? விபீஷணன் இங்கே வந்ததே நந்தனாவைப் பார்க்கத் தான!! அப்புறம் என்ன?” என்று கேட்டார் வேணுகோபால்.

“இங்கே பாருங்க வேணு, நீங்க வேணா உடனே நந்தனாவை இவர்கிட்ட ஒப்படைக்கலாம். ஆனால் நான் அவளோட அம்மா. எனக்கு இவரைப் பத்தி முதல்ல தெரியனும். அதுக்கு அப்புறம் தான் என் பொண்ணை இவர்கூட அனுப்ப முடியும்.” என்று தீர்மானமாகக் கூறினார் கௌரி.

கௌரி இப்படி வெளிப்படையாகக் கூறவும் அதுவும் விபீஷணன் முன்பே கூறவும் வேணுகோபாலிற்கு ஒரு மாதிரியாகி விட்டது. அவர் சற்றுச் சங்கடமாக விபீஷணனைப் பார்த்தார்.

அவரது சங்கடம் அவனிற்குப் புரிய அவரிடம்,”மாமா, நீங்கச் சங்கடப்பட எதுவுமில்லை. ஆண்டிக்கு என் மேல முதல்ல நம்பிக்கை வரட்டும். அப்புறம் நந்தனாவை என் கூட அனுப்பட்டும். ஆனால் ஆண்டி முதல்ல நந்தனாவை நான் பார்க்கனும். அவளைப் பார்த்துக் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு ஆண்டி. எங்களோட கல்யாணம் பெரியவங்க பார்த்து வைச்சு செஞ்ச கல்யாணம் கிடையாது. நான் நந்தனாவை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணேன். இந்த ஒரு வருஷமும் அவள் இல்லாமல் நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் ஆண்டி ப்ளீஸ் அவளை வரச் சொல்லுங்க. உங்களுக்கு எப்போ நம்பிக்கை இருக்கோ அப்போ என் கூட அனுப்புங்க.” என்று விபீஷணன் கெஞ்சிக் கேட்கவும், கௌரிக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

இருந்தாலும் அவரது மனதிலிருக்கும் சந்தேகத்தைக் கேட்காமல் இருக்க முடியாதென்று,”நீங்க இவ்ளோ பேசுறீங்க. அப்புறம் ஏன் நந்தனாவை தனியா விட்டீங்க? அதனால தான அவளுக்கு ஆக்சிடெண்ட் ஆகியிருக்கு. எங்க கண்ல பட்டதால் அதுவும் வேணு டாக்டரா இருந்ததால சீக்கிரம் முதல் உதவிப் பண்ணார். அதனால நந்தனா பிழைத்தாள். இல்லாட்டி கொஞ்சம் கூட யோசிக்கவே முடியவில்லை. எங்களோட பொண்ணுனே தெரியாமல் அவளை நாங்க இழந்திருப்போம்.” என்றார் கௌரி.

“ஆண்டி உங்களோட ஆதங்கம் எனக்குப் புரியுது. ஆனால் நந்தனா அப்படிப் போனது எனக்கே அதிர்ச்சியா தான் இருக்கு. பிகாஸ் அவள் அன்னைக்கு மதியம் எனக்குக் கால் பண்ணிச் சீக்கிரம் வாங்க உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னாள். அதனால நான் எப்போதையும் விடச் சீக்கிரமே வந்தேன். ஆனால் நந்தனா எங்க யார்கிட்டயும் சொல்லாமல் காரை எடுத்துக்கிட்டு வெளியே போயிருக்கா. நாங்க தேடாத இடமே இல்லை. ஆனால் இரண்டு நாள் கழிச்சு ஒரு பொண்ணை காட்டி அது நந்தனாவானு கேட்டாங்க. நந்தனாவோட பெரியப்பா அந்தப் பொண்ணுகிட்ட இருந்த பொருட்களைப் பார்த்து அது நந்தனானு சொல்லவும் எல்லாரும் நந்தனா இறந்துட்டானு முடிவுக்கு வந்துட்டாங்க. எனக்கு மட்டும் ஏனோ நந்தனா உயிரோட தான் இருப்பானு தோனுச்சு. அதே மாதிரி இப்போ அவள் உயிரோட தான் இருக்கா.”

“என்ன சொல்றீங்க? நந்தனாவோட பொருட்கள் எப்படி அந்தப் பொண்ணுகிட்ட?”

“அது தெரியலை. நந்தனா ஏன் அந்த நிலைமையில தனியா அதுவும் காரை எடுத்துட்டு போனாள்னு சுத்தமா புரியலை. அது நந்தனாவுக்கு மட்டும் தான் தெரியும்.” என்று சோகத்துடன் விபீஷணன் கூற, கௌரிக்கு என்ன கூறுவதெனப் புரியவில்லை.

“பிரவீண் நந்தனாவை கூட்டிட்டு வா.” என்று மட்டும் கௌரி கூறினார். அவருக்கு நிறைய விஷயங்கள் தெரிய வேண்டியது இருந்தது. அதைப் பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தார்.

பிரவீண் நந்தனாவின் அறைக்குச் செல்ல, அவளோ சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளது நிலைமையைப் பார்த்த பிரவீணிற்கு வருத்தமாக இருந்தது. அதே சமயம் விபீஷணனின் தவிப்பும் அவனிற்கு வருத்தத்தைத் தந்தது. முதலில் நந்தனா விபீஷணனைப் பார்க்கட்டும் பின்னர் எதுவாக இருந்தாலும் அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் அறையின் உள்ளே வந்தான்.

“ஹேய் நந்து என்ன டா பண்ற?” என்று கேட்டுக் கொண்டே அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

பிரவீண் வந்து அமர்ந்ததும் தன்னிலை அடைந்த நந்தனா பயத்துடன் அவனைப் பார்த்தாள். அவளது கையின் மேல் தன் கையை வைத்து அழுத்தி,”நந்து பயப்பட எதுவுமில்லை. நான் இருக்கேன். அம்மா,அப்பா எல்லாரும் இருக்கோம். எங்களை மீறி எதுவும் நடக்காது சரியா. அப்புறம் விபீஷணனும் பார்க்க ரொம்ப நல்லவரா இருக்கார். நீயும் பார்த்தனா…” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவனைத் தடுத்த நந்தனா,”இப்போ என்ன பேர் சொன்னீங்க?” என்று கேட்டாள்.

அவனும்,”யாரைக் கேட்கிற?” சட்டென்று நந்தனா கேட்டதால் அவனும் புரியாமல் கேட்டான்.

“ப்ச் இப்போ ஒரு பேர் சொன்னீங்களா அதை மறுபடியும் சொல்லுங்க.” சற்று எரிச்சல் மட்டும் கோபத்துடன் அவள் கூற, அவன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

இதுவரை அவள் பயத்தைத் தவிர வேறு எந்த உணர்ச்சியையும் காட்டியதில் இல்லை. இப்போது எரிச்சல் மட்டும் கோபத்தை அவள் காட்டவும் சற்று ஆச்சரியமாகத் தான் பார்த்தான்.

“அண்ணா உங்ககிட்ட தான் கேட்டேன்.” என்று அவள் மீண்டும் அழுத்திக் கூறவும், இன்னும் ஆச்சரியமாகப் பார்த்தான்.

அமைதியாக இருந்தால் அவள் இன்னும் கோபமடைய வாய்ப்பு இருக்கிறது என்று,”ம் சொல்றேன் நந்து. நான் சொன்ன பெயர் விபீஷணன்.” என்று அவன் கூறவும், அந்தப் பெயர் அவளுக்குள் பல உணர்வுகளைக் கொடுத்தது.

“அது யார்?” என்று கேட்டாள்.

“அவர் தான் உன்னோட ஹஸ்பெண்ட். ஐ மீன் அவர் பெயர் தான் விபீஷணன்.” என்று அவன் கூறவும் அவளிற்குள் நடக்கும் மாற்றத்தை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

பிரவீணிற்கும் அவளது உணர்வுகள் புரியத் தான் செய்தது. இருந்தாலும் இப்போதைக்கு அதைத் தள்ளி வைத்து விட்டு நந்தனாவை கீழே அழைத்துச் செல்ல வேண்டியக் கடமை இருப்பதால் அவளிடம்,”சரி நந்து வா கீழே போகலாம். உனக்காக எல்லாரும் கீழே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.” என்று கூறிவிட்டு அவன் எழுந்திருக்க, நந்தனாவும் அவனுடன் எழுந்தாள்.

இருவரும் சேர்ந்தே கீழே வர, நந்தனா தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வர, விபீஷணன் அவள் தன்னைப் பார்ப்பாளா என்ற தவிப்புடன் விபீஷணன் அவள் கீழே இறங்கி வருவதைப் பார்க்க, அவளோ தலையை நிமிர்த்திப் பார்க்கவே இல்லை.

நந்தனா கீழே வரவும் விபீஷணன் எழுந்து நிற்க, பிரவீண் அப்படியே அங்கேயே நிற்க, நந்தனாவும் புரியாமல் நின்று பிரவீணைப் பார்க்க அவன் அவளுடைய தலையை விபீஷணன் பக்கம் திருப்பி,”என்னைப் பார்க்காத நந்து, அங்கே பார். அவர் தான் உன்னோட ஹஸ்பெண்ட்.” என்று அவன் கூற, நந்தனாவின் கண்கள் விபீஷணனின் முகத்தைப் பார்த்தது.

அடுத்து என்ன நடந்தது என்று யோசிப்பதற்கு முன்னரே நந்தனா வேகமாக வந்து விபீஷணனை அணைத்துக் கொள்ள, விபீஷணன் முதற்கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி சில வினாடிகளே, மற்றவர்கள் இருக்கிறார்கள் என்று எல்லாம் பார்க்காமல் விபீஷணனும் நந்தனாவை அணைத்துக் கொண்டான்.

Advertisement