Advertisement

பின்னர் வேகமாக விபீஷணன் அவனிடமிருந்த அவர்களது கல்யாணப் பத்திரிக்கை, புகைப்படங்கள் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்த சான்றிதழ் என்று அனைத்தையும் எடுத்து அவரிடம் நீட்ட, அவரும் பக்கத்திலிருந்த கண் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அவன் கொடுத்ததைப் பார்த்தார்.

“இப்போ நந்தனா எங்கே இருக்கா டாக்டர்? நான் அவளைப் பார்க்கனும்.” என்று கண்களில் ஆவலை அடக்கிக் கொண்டு கேட்டான் விபீஷணன்.

“உன்னோட ஆவல் எனக்குப் புரியுது. ஆனால் நந்தனாவைப் பார்க்கிறதுக்கு முன்னாடி நான் சில விஷயங்கள் உன்கிட்ட பேசனும்.” என்று அவர் பீடிகையாக ஆரம்பித்தார்.

“என்ன டாக்டர். எதுனாலும் சொல்லுங்க.”

“நீ ஒரு டாக்டர். உனக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை. நந்தனாவுக்கு நடந்த ஆக்சிடெண்ட்ல அவள் பழசை மறந்துட்டா. இப்போ எதையும் நாம ஃபோர்ஸ் பண்ணி ஞாபகப்படுத்தக் கூடாது. அவளுக்கா ஞாபகம் வந்தால் சரி ஆனால் நாம அவளுக்கு ஞாபகப்படுத்துரோம்னு கஷ்டப்படுத்தக் கூடாது. அது நந்தனாவோட உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிடும்.”

“டாக்டர்  அதை நான் பார்த்துக்கிறேன். எனக்கு நந்தனா என்னோட இருந்தால் போதும். அவளுக்குப் பழசு ஞாபகம் வரனும்னு எந்தக் கட்டாயமும் இல்லை. வந்தால் சந்தோஷம் தான். அதே போல் வரலைனாலும் கவலைப்பட மாட்டேன்.” என்றான் விபீஷணன்.

“டாக்டர் நீங்க நந்தனாவை எங்கே பார்த்தீங்க?” என்று ராகவி கேட்டாள்.

“நானும் என் மனைவி கௌரியும் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பாண்டிச்சேரி வந்துட்டு இருந்தோம். அப்போ ரோட்ல கொஞ்சம் கூட்டமா இருந்தது. அதான் என்னாச்சுனு பார்க்க நாங்க இறங்கும் போது தான் நந்தனா இரத்த வெல்லத்துல இருந்ததை பார்த்தோம். அதைப் பார்த்ததும் பயங்கர அதிர்ச்சி. வேகமா நான் போய் முதல் உதவி செய்தேன். சரியா ஆம்புலன்ஸும் வர, எங்களோட காரை டிரைவரை எடுத்துட்டு வரச் சொல்லிட்டு நானும் கௌரியும் ஆம்புலன்ஸ்ல நந்தனா கூடப் போயிட்டோம்.”

“எப்படி அவளோட பெயர் தெரிஞ்சுது உங்களுக்கு?” என்று கேட்டாள் ராகவி.

“நாங்க ஆம்புலன்ஸ்ல போகும் போது நந்தனா கான்சியஸ்ல இருக்கனும்னு பேச்சு கொடுத்துட்டே வந்தோம். அப்போ முதல்ல கேட்டது உன் பெயர் என்னன்னு தான். அவள் யது நந்தனானு சொன்னதும் எங்களுக்குப் பயங்கர அதிர்ச்சி.” என்று அவர் கூறவும் இருவரும் புரியாமல் பார்த்தனர்.

“எங்களோட பொண்ணு பேர் யது நந்தனா தான். அவளை நாங்க ஐந்து வயசுல தொலைச்சுட்டோம். அவளைத் தேடாத இடமில்லை. ஆனால் எங்களுக்கு எங்க பொண்ணு மட்டும் கிடைக்கவே இல்லை. அதனால அந்தப் பேரைக் கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டோம். அடுத்த அப்பா அம்மா பத்திக் கேட்கும் போது இரண்டு பேரும் இறந்து போயிட்டாங்கனு சொன்னா. கேட்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்போ தான் நாங்க கவனிச்சோம் நந்தனா தன்னோட தாலியை இறுக்கமா பிடிச்சுட்டு இருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு புரிஞ்சது. கணவர் பெயர் என்னன்னு கேட்கிறதுக்கு முன்னாடி நந்தனா மயங்கிட்டா. ஹாஸ்பிட்டல்லும் வந்துருச்சு. ஸோ ட்ரீட்மென்ட் கொடுக்க தூக்கிட்டு போயிட்டாங்க. நந்தனா பெயர் கேட்டதும் எங்களால அப்படியே விட்டுட்டு போக முடியலை. அதனால நாங்க ஆப்ரேஷன் முடியுற வரை இருந்தோம். பட் ஆப்ரேஷன் முடிஞ்சு ஒரு நாள் ஆகியும் நந்தனா கண்ணைத் திறக்கவே இல்லை. அதனால இங்கே வச்சு பார்த்துக்கலாம்னு நாங்க நந்தனாவை இங்கே கொண்டு வந்துட்டோம்.”

“டாக்டர் நந்தனா ப்ரெக்னென்ட்டா இருந்தாள் அப்போ.” என்று விபீஷணன் கூறினான்.

“ம் ஆமா. சாரி விபீஷணன், ஆக்சிடெண்ட்ல அபார்ட் ஆகிடுச்சு.” என்று அவர் வருத்தத்துடன் கூற, விபீஷணனிற்கும் விபத்தில் கருக் கலைந்திருக்கும் என்று தெரிந்தும் அவனால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

“டாக்டர் நாங்க நந்தனாவைப் பார்க்கலாமா?” என்று கேட்டாள் ராகவி.

“ம் ஆனால் இன்னும் நான் பேச வேண்டியது பாக்கி இருக்கு.” என்று வேணுகோபால் கூற, அவர்கள் இருவரும் புரியாமல் பார்த்தனர்.

“உங்களோட நந்தனா தான் எங்களோட பொண்ணு நந்தனா.” என்று அவர் கூறவும் இருவருக்கும் பயங்கர அதிர்ச்சி.

“டாக்டர் என்ன சொல்றீங்க?” அதிர்ச்சியுடன் கேட்டான் விபீஷணன்.

“ஆமா விபீஷணன். நந்தனாவை எங்க ஹாஸ்பிட்டலுக்கு நாங்க ஷிப்ட் பண்ணதும் அவளைப் பார்த்துகிட்டது முழுக்க முழுக்க என்னோட மனைவி கௌரி தான். கௌரிக்கு மனசுல நந்தனா எங்களோட பொண்ணா இருக்க வாய்ப்பு இருக்கிற மாதிரி தோனி இருக்கு. அதனால என்னை டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கச் சொன்னா. நான் எதுக்கு தேவையில்லாத வேலைனு நினைச்சேன். ஆனால் கௌரி நினைச்ச மாதிரியே டி.என்.ஏ. டெஸ்ட்ல நந்தனா எங்களோட பொண்ணுனு வரவும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. அதுக்கு அப்புறம் நாங்க நந்தனாவை எங்களோட வீட்டுக்கு ஷிப்ட் பண்ணிட்டோம். சரியா ஆறு மாசம் கழிச்சு தான் நந்தனா கண் திறந்தாள். ஆனால் அவளுக்குப் பழசு எல்லாமே மறந்து போயி இருந்தது. அதை யோசிக்கும் போது ரொம்பவே கஷ்டமாகிடுச்சு. எப்படி நந்தனாவோட கணவரை காண்டேக்ட் பண்றதுனு புரியாமல் தவிச்சோம். நந்தனா இல்லைனு வேற கல்யாணம் பண்ணிருந்தால் என்ன பண்றதுனு யோசிச்சோம். ஆனால் நல்ல வேளை அப்படி எல்லாம் நடக்கமால் நீயே நந்தனாவைத் தேடி வந்துட்ட.” என்று அவர் கூறி முடிக்க, ராகவி மற்றும் விபீஷணன் இருவராலும் அந்த அதிர்ச்சியிலிருந்து சுத்தமாக வெளியே வர முடியவில்லை.

“டாக்டர் நீங்க சொல்றது எல்லாம் உண்மையா?” என்று கேட்டான் விபீஷணன்.

“ஏதோ சினிமா அப்புறம் கதைல படிக்கிற மாதிரி இருக்கு டாக்டர்.” என்று ராகவியும் கூறினாள்.

“எங்களுக்குமே அப்படித் தான் இருந்தது முதல்ல. நாங்க தொலைச்ச எங்க பொண்ண என் கையால காப்பாத்துவேன்னு நானும் நினைச்சு கூடப் பார்க்கலை. டாக்டரா என்னோட கடமை ஒரு உயிரா காப்பாத்தனும்னு தான் நான் நந்தனாவுக்கு முதல் உதவி பண்ணேன். ஆனால் அந்தக் கடவுள் எங்களோட இத்தனை வருஷ பிரார்த்தனைக்குப் பதில் சொல்வார்னு எதிர்பார்க்கவே இல்லை.”

“இப்போ நந்தனா எங்கே இருக்கா? நான் அவளை உடனே பார்க்கனும்.” என்று விபீஷணன் கேட்க,

“அவள் எங்க வீட்டுல தான் இருக்கா. இப்போவே நாம அங்கே போகலாம்.” என்று வேணுகோபால் கூறவும் ராகவியும் விபீஷணனும் எழுந்து அவருடன் வெளியே வந்தனர்.

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த வேணுகோபால் அவரது வாகனம் நோக்கி நடக்க, விபீஷணன் வேகமாக அவரிடம் வந்து,”டாக்டர் நீங்க முன்னாடி போங்க, நாங்க பின்னாடியே என்னோட கார்ல வரோம்.” என்றான் விபீஷணன்.

“இன்னும் என்ன டாக்டர்னு கூப்பிடுறீங்க மாப்பிள்ளை. உரிமையா மாமானு கூப்பிடுங்க. அப்படி உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் இன்னொரு டி.என்.ஏ.டெஸ்ட் எடுக்கலாம்.” என்று இதுவரை ஒருமையில் பேசியவர் பன்மையில் பேச ஆரம்பித்தார் வேணுகோபால்.

“அய்யோ உங்களை நம்பளைனு இல்லை டாக்டர் சாரி மாமா. அது திடீர்னு அப்படிக் கூட வரலை. போகப் போகப் பழகிடும்.” என்று அவன் கூற, சரியென்று தலையசைத்தார் வேணுகோபால்.

“அப்புறம் மாப்பிள்ளை சொல்ல மறந்துட்டேன். நந்தனாவுக்கு நினைவு திரும்பும் போது அவள் எங்களை எல்லாம் பார்த்து ரொம்பவே பயந்துட்டா. எங்க எல்லார் கூடவும் பேசவே அவள் ரொம்ப நாள் எடுத்துக்கிட்டா. இப்போ கூட அவள் எங்ககிட்ட எல்லாம் சகஜமா பேசுறது கிடையாது. ஒரு விதத் தயக்கத்தோடு தான் பேசுறா. அதனால உங்களைப் பார்த்ததும் அவள் சரியா பேசலைனா நீங்கக் கவலைப்படக் கூடாது. அதுக்கு தான் முன்னெச்சரிக்கையாக நான் சொல்றேன்.” என்றார் அவர்.

“ம் புரியுது மாமா. நானும் டாக்டர் தான!!” என்றான் விபீஷணன்.

“ஓகே விபி நீ முதல்ல போ. நான் வந்தும் இன்னும் என்னோட மாமியார் மாமனாரைப் போய் பார்க்கலை. அதுக்கு கண்டிப்பா ஏதாவது பேசுவாங்க. ஹரீஷ் எவ்ளோ தான் சமாளிப்பான். அவனும் பாவம். அதனால நீ முதல்ல போ. நான் ஹரீஷை கூட்டிட்டு அப்பறம் வரேன்.” என்று அவள் கூறவும் அவனிற்கும் அது சரியென்று படத் தலையசைத்து விட்டு அவனது வாகனத்தை எடுக்கச் சென்றான் விபீஷணன்.

வேணுகோபால் முன்னால் செல்ல, அவரைப் பின் தொடர்ந்து அவனது வாகனத்தில் சென்றான் விபீஷணன். அத்தனை நேரம் நன்றாக இருந்த மனம் வண்டிச் செல்ல செல்ல அவனது மனம் படப்படப்பாக அடித்தது.

நந்தனாவை முதன் முதலாக அவன் பார்க்கச் செல்லவில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் அதுவும் அவள் இறந்து விட்டாள் என்று எண்ணிக் கொண்டு இருந்து விட்டு இப்போது திடீரென அவள் உயிரோடு இருப்பதைத் தெரிந்து அதுவும் அவளிற்குப் பழைய ஞாபகங்கள் இல்லை என்பது வேறு மனதைப் பிசைந்தது. அதை விட நந்தனா தன்னைப் பார்த்ததும் எப்படி எதிர்கொள்வாள்? ஒரு வேளை அவள் பழையதை நினைவில் கொண்டு வர முயன்று அவளிற்கு ஏதாவது ஆகிவிடுமா என்று பல எண்ணங்கள் அவன் மனதை ஆக்கிரமித்திருந்தது.

சென்னையில், நந்திதாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. விபீஷணன் தனக்குக் கிடைத்து விடுவான் என்று அதீத நம்பிக்கையில் இருந்தாள். அதனால் அவள் ஒவ்வொரு செயலையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். இன்னும் சில நிமிடங்களில் தன் கனவு நினைவாகிவிடும் என்று அவள் மிகவும் எதிர்பார்த்திருந்த போது வெண்ணெய் திரண்டு வரும் போது பாணை உடைந்த கதையாகக் கடைசி நிமிடத்தில் ராகவி வந்து நந்தனா உயிரோடு இருப்பதைக் கூறியதும் அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.

நந்தனாவைக் கொலை செய்ய, அவள் தீவிரமாகத் திட்டம் தீட்டினாள். அது சாத்தியமாகி விபீஷணன் தனக்குக் கிடைத்து விடுவான் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவள் அதில் மண் விழவும் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

‘நந்திதா இப்படியே இங்கேயே இருந்து புலம்புரதுக்கு அங்கே போய் என்ன நடக்குது அடுத்து என்னச் செய்யலாம்னு யோசிக்கலாம்.’ என்று தீர்மானித்து பாண்டிச்சேரி கிளம்பினாள் நந்திதா.

——————————-

ரொம்ப ரொம்ப சாரி. நேரம் தாழ்த்தாமல் யூடி போடனும்னு நினைச்சேன். ஆனால் வரிசையா functions. அதுவும் ஒரு function வெளியூர்ல. அதனால சுத்தமா எழுத முடியலை. கதை முடியப் போகுது. இன்னும் இரண்டு யூடி தான் இருக்கு. அதனால என்னை உங்க வீட்டுப் பிள்ளையா மன்னிச்சு கதைப் படிக்கிறவங்க கொஞ்சம் உங்களோட silence ஐ உடைச்சு கமென்ட் பண்ணால் சந்தோஷப்படுவேன். Bye Friends.

Advertisement