Advertisement

பாண்டிச்சேரியின் ஒரு பகுதியில் அமைந்திருப்பது தான் வி.ஜி.இல்லம். அந்த இல்லம் ஐயாயிரம் சதுர அடியில் பார்க்கக் குட்டி அரண்மனை போல் காட்சியளித்தது.

அந்த இல்லத்திற்குள் உயர்ரக வாகனம் ஒன்று உள்ளே நுழைந்தது. அதிலிருந்து கீழே இறங்கினாள் யது நந்தனா. அவளுடன் பிரவீணும் அதாவது ராகவி வந்து நந்தனாவுடன் பேசும் போது அவளுடன் இருந்த பையன்.

பிரவீண், குழந்தைகள் நல மருத்துவர். ஹரீஷின் தங்கை கணவர் அனுமதிக்கப்பட அதே மருத்துவமனையில் தான் இவன் வேலை செய்கிறான். அதாவது அவனது மருத்துவமனையில் தான் வேலை செய்கிறான்.

நந்தனா, ராகவி கூறியதைக் கேட்டதிலிருந்து அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. முதலில் தலை பயங்கரமாக வலித்தது. அதனால் பிரவீண் அவளை உள்ளே அழைத்துச் சென்று சற்று ஓய்வெடுக்க வைத்தான்.

ஆனால் அவளால் தான் ஓய்வெடுக்க முடியவில்லை. அவளது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. பயங்கரமாக அவளிற்கு மூச்சு வாங்கியது. அவளைப் பார்த்துச் சற்று பயந்துவிட்டான் பிரவீண். மருத்தவனான அவனிற்கே அவளது நிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதற்காக அவளை அப்படியே விட முடியாது என்று அவளிடம் சென்று,”அமைதியா இரு நந்து. எதுவா இருந்தாலும் நீ ஃபேஸ் பண்ணித் தான் ஆகனும். டோன்ட் கெட் பேனிக்.” என்று அவளது முதுகைத் தட்டிவிட்டு அவளைச் சமாதானப்படுத்தினான்.

“பட் எனக்குப் பயமா இருக்கு. எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்லை.” என்று அவள் அழுது கொண்டே கூறினாள்.

“ஸோ வாட்? இங்கே பார், உனக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு தெரிஞ்சதும் எனக்கும் ஷாக்கா தான் இருந்தது. பட் வீ ஹேவ் டு அக்செப்ட் த ரியாலிட்டி. அதனால நீ எதையும் நினைச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்காத. உன்னை நாங்க அப்படியே விட்டுர மாட்டோம். ஓகே வா. நாம இங்கே இருக்க வேண்டாம். வீட்டுக்குப் போகலாம். அங்கே போய் அடுத்து என்ன பண்றதுனு யோசிக்கலாம் சரியா.” என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

கௌரி, பிரவீணின் அம்மா நந்தனா சோர்ந்த முகத்துடன் உள்ளே வருவதைப் பார்த்ததும் சற்றுப் பதட்டமாகி அவளிடம் விரைந்தார்.

“என்னாச்சு நந்து? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று அவளிடம் கேட்டுவிட்டு அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியிடம்,”ஆஷா கொஞ்சம் தண்ணீர் எடுத்துட்டு வா.” என்று கூற, வேகமாக உள்ளே இருந்த வந்த சமையல் செய்யும் பெண்மணி டம்ப்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கௌரியிடம் தந்தார்.

கௌரி அதை வாங்கி நந்தனாவிடம் தந்து குடிக்கச் சொல்ல, அவளும் எதுவும் மறுத்துக் கூறாமல் அவர் தந்ததை வாங்கிக் கொண்டு குடித்தாள்.

“என்னாச்சு பிரவீண்? ஏன் நந்து இப்படி இருக்கா?” என்று கௌரி கேட்கவும், பிரவீண், ராகவி வந்து நந்தனாவை அடையாளம் கண்டு கொண்டது மற்றும் நந்தனாவிற்குத் திருமணமாகியது என்று அனைத்தையும் கூற, கேட்ட கௌரிக்குத் தான் எப்படி எதிர்வினையாற்றுவது என்று புரியாமல் முழித்தார்.

பின்னர் நந்தனாவிற்காக முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு,”இங்கே பார் நந்து இதுல பயப்பட எதுவுமில்லை. நாங்களாம் இருக்கோம். அப்படியே உன்னை விட்டுற மாட்டோம். இந்த அம்மா உனக்கு இருக்கேன் சரியா.” என்று அவளை அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தார் கௌரி. அதில் சற்று தெளிவடைந்தாள் நந்தனா.

விபீஷணன் மற்றும் ராகவி, பாண்டிச்சேரி வந்து சேரும் போது மதியம் மூன்று மணிக்கு மேல் ஆகியிருந்தது. அவர்களைத் தொடர்ந்து ஒரு வண்டி வந்ததை அவர்கள் இருந்த மகிழ்ச்சியில் பார்க்கவே இல்லை.

வேகமாக இறங்கிய விபீஷணன் முன்னால் செல்ல, ராகவி மெதுவாக அவனிடம்,”ஹலோ லவ்வர் பாய் கொஞ்சம் பொறுமையா இருங்க. விஷயம் தெரிஞ்ச நான் இங்கே இருக்கேன். நீ போய் என்ன பண்ணப் போற?” என்று ராகவி கேட்கவும், அசடு வலிந்தான் விபீஷணன்.

“சரி வேகமா தான் வாயேன்!!”

“ஏய் அதான் நந்தனா இங்கே இல்லைல. அப்புறம் ஏன் இவ்ளோ அவசரம்?”

“என்ன பேசுற நீ? நந்தனா ஹாஸ்பிட்டல்ல தான் இல்லை. நாம போய் அவர்கிட்ட பேசுனால் தான அவர் நந்தனாகிட்ட நம்மளை கூட்டிட்டு போவார்.” என்று அவன் கூறவும் ராகவி சிரித்துக் கொண்டே தலையசைத்து விட்டு முன்னால் செல்ல, அவளுடன் சென்றான் விபீஷணன்.

இவர்கள் உள்ளே நுழைய, ஹரீஷ் அங்கு வந்தான். வேகமாக விபீஷணன் அவனிடம் சென்று குஷாலை வாங்கிக் கொஞ்சிவிட்டு,”எப்படி இருக்க ஹரீஷ்?” என்று கேட்டான்.

“நான் நல்லா இருக்கேன் விபி. நீ எப்படி இருக்க?”

“இத்தனை நாள் ஏன் டா இருந்தோம்னு இருந்தேன். ராகவி வந்து விஷயத்தைச் சொன்னதும் நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.” என்று விபீஷணன் கூறினான்.

“ம் விஷயம் கேட்டதுக்கு இப்படியா? அப்போ நந்தனாவை நேர்ல பார்த்தா?” என்று கேட்டான் ஹரீஷ்.

“ப்ச் அவளுக்குத் தான் என்னை அடையாளம் தெரியாதே!! அதை நினைச்சா தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு.”

“விடு விபி. இத்தனை நாள் நந்தனா உயிரோட இல்லைனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால் இப்போ உயிரோட இருக்கிறானு தெரிஞ்சுடுச்சே அது போதும். மெதுவா நாம அவளுக்குப் பழைய ஞாபகங்களைக் கொண்டு வரலாம்.” என்று ராகவி கூற, விபீஷணன் தலையசைத்தான்.

குஷாலை மீண்டும் ஹரீஷிடம் தந்து விட்டு ராகவியுடன் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரைக் காணச் சென்றான். அவர் அப்போது தான் அறுவைச் சிகிச்சை செய்து முடித்து விட்டு வந்திருந்தார்.

ராகவி பாண்டிச்சேரி உள்ளே வரவுமே அவள் நந்தனாவுடன் இருந்த பையனிற்கு அதாவது பிரவீணிற்கு அழைத்து விவரத்தைக் கூறியிருந்தாள். அவனும் அவனுடைய தந்தைக்கு அழைத்துக் கூறிவிட்டான். அதனால் அவரும் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அந்த VG மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வேணுகோபால். பாண்டிச்சேரியில் பெயர் போன மருத்துவரில் இவரும் ஒருவர். பாண்டிச்சேரியின் முதல்வர் இவரிடம் வந்து தான் சிகிச்சை பெறுவார். அந்த அளவிற்குப் பெயர் போனவர் வேணுகோபால்.

அவரது அறைக் கதவைத் திறந்து கொண்டு ராகவியும் விபீஷணனும் உள்ளே நுழைந்தார்கள். ஏதோ கோப்பையைப் பார்த்துக் கொண்டிருந்தவர், அறைக் கதவு திறக்கும் சத்தத்தில் முகத்தை நிமிர்த்திப் பார்த்தார் வேணுகோபால். விபீஷணனைப் பார்த்ததும் அவரது முகத்தில் யோசனையின் கோடுகள்.

“ஹலோ சார் நான் ராகவி. உங்களோட பையன்கிட்ட பேசுனது நான் தான். அப்புறம் இவர் தான் விபீஷணன், நந்தனாவோட கணவர்.” என்று ராகவி அறிமுகப்படுத்த, சட்டென்று அவரது முகத்தில் வெளிச்சம் பரவியது.

“ஹாய் எங்க் மேன். என்னை ஞாபகம் இருக்கா?” என்று அவர் கேட்க, விபீஷணனிற்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது.

“சார் என்னை இன்னும் ஞாபகம் வைச்சிருக்கீங்களா?” என்று அவன் கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே தலையசைத்தார்.

“ம் நல்லாவே ஞாபகம் இருக்கு. எப்படி உன்னை மறக்க முடியும்? அன்னைக்கு கான்ஃப்ரன்ஸ்ல உன்னோட ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது. இன்ஃபேக்ட் என்னோட ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்ண உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கானு கூடக் கேட்டேன். நீ தான் சென்னை விட்டு வர முடியாதுனு சொல்லிட்ட.” என்று அவர் கூற, அவனும் ஆம் என்று மட்டும் கூறினான்.

பேங்க்ளூரில் ஒரு முறை நரம்பியல் துறைச் சார்பாக நடத்தப் பட்ட கருத்தரங்கில் விபீஷணன் பங்கு பெற்றான். அது மட்டுமின்றி அவன் அங்கு நரம்பியல் துறை பற்றிப் பேசியிருந்தான். அது வேணுகோபாலை மட்டுமல்ல அங்கு வந்திருந்த நிறையப் பேரைக் கவர்ந்திருந்தது.

“தாங்க்ஸ் டாக்டர் என்னை இன்னும் ஞாபகம் வைச்சிருக்கிறதுக்கு. பட் நான் இங்கே வந்த விஷயமே வேற.”

“ம் எனக்கும் தெரியும் விபீஷணன். பிரவீண் சொன்னான்.” என்று அவர் கூறவும் இருவரும் புரியாமல் பார்த்தனர்.

“பிரவீண் என்னோட பையன்.” என்று அவர் கூறவும், சரியென்று தலையசைத்தனர்.

Advertisement