Advertisement

“சரி நான் எதுவும் பேசலை. நீ அதுக்கு அப்புறம் நந்தனாவை பார்த்தியா?”

“ம்ஹூம் இல்லை, மே பி அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயிருக்கலாம்.”

“நீ எதுவும் சொன்னியா அவங்ககிட்ட?”

“இல்லை நான் எதுவும் பேசலை. நீ தான வேண்டாம்னு சொன்ன.”

“ம் ஓகே!! நாங்க அங்க வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்.” என்று ராகவி கூறிவிட்டுக் கைப்பேசியை வைத்தாள்.

“என்னாச்சு ராகவி? உங்க அத்தை எதுவும் சொல்றாங்களா?”

“அவங்க எப்போவும் அப்படித் தான். ஹரீஷ்காக மட்டும் தான் அவங்க எது பேசுனாலும் நான் அமைதியா போயிட்டு இருக்கேன். ஹரீஷும் என்னை எப்போவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அதனால நீ கவலைப்படாத.”

“ம் தெரியும். ஹரீஷ் அடம்பிடிச்சதால தான அவங்க வீட்டுல உன்கிட்டயும் பேச ஆரம்பிச்சாங்க.”

“ம் ஆமா.”

“சரி நான் கோவில்ல தான் இருக்கேன்னு எப்படித் தெரியும் உனக்கு?”

“நான் வீட்டுக்குத் தான் போனேன். நீங்க யாருமில்லை வீட்டுல!! உனக்குக் கூப்பிட்டால் நீ எடுக்கலை. அதனால அண்ணிக்கு கூப்பிட்டு எங்கே இருக்கீங்கனு கேட்டேன். அவங்க தான் உனக்குக் கல்யாணம் கோவில்லனு சொன்னார். எங்கே நீ அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டிடுவியோனு பயந்து வேகமா வந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கலை.”

“ஏய் நான் எப்படி யாரையோ கல்யாணம் பண்ணுவேன்னு எதிர்பார்த்த நீ? என் மனசுல எப்போவும் என்னோட நந்தனா மட்டும் தான் இருப்பாள்.”

“ம் ம் அந்த நம்பிக்கை எனக்கு இருந்துச்சு. ஆனால் எங்கே அத்தையும் மாமாவும் உன்னை ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வைச்சுடுவாங்களோனு ஒரு டவுட் அவ்ளோ தான். அப்புறம் அந்தப் பொண்ணு பேர் என்ன நந்திதா வா? அந்தப் பொண்ணுகிட்ட ஏதோ தப்பா இருக்கு விபி.”

“என்ன சொல்ற நீ? அதெல்லாம் ஒன்னுமில்லை. அவளுக்கு என்னைப் பிடிக்கும். அதுவும் கிட்டத்தட்ட எட்டு வருஷமா என்னை லவ் பண்றா. அவளுக்கு ஏமாற்றம் இருக்கும் தான!!”

“என்ன விபி நீ அவளுக்கு சப்போர்ட் பண்ற?”

“நான் சப்போர்ட் பண்ணலை!! அவகிட்ட ஏதோ தப்பு இருக்குனு சொன்னல அதுக்கு பதில் சொல்றேன் அவ்ளோ தான்.”

“நான் இப்போவும் சொல்றேன் அவகிட்ட ஏதோ தப்பு இருக்கு. அண்ட் அவளோட முகமும் ஏதோ தெரிஞ்ச முகம் மாதிரி இருக்கு.”

“அப்படியா?”

“ம் ஆமா. சரி அவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ அதை மட்டும் தான் என்னால சொல்ல முடியும்.”

“ஏய் ராகவி இப்போ நந்திதா பத்திப் பேசுற நேரமில்லை. இது நந்தனா பத்திப் பேச வேண்டிய நேரம். அவகிட்ட நீ என்ன பேசுன? அவள் எப்படி ரியாக்ட் பண்ணா? ஆக்சிடெண்ட் ஆச்சுனு சொன்னியே இப்போ எப்படி இருக்கா?”

“இப்போ நல்லா தான் இருக்கா விபி. நான் ஹாஸ்பிட்டல்ல ஹரீஷோட தங்கச்சி ஹஸ்பெண்ட்டை பார்த்துட்டு குஷால் அழுகுறான்னு வெளிய அங்க இருக்கிற தோட்டத்துக்கு வந்தேன். அப்போ ஒரு பையன் கூட நந்தனா பேசிட்டு இருந்தாள். முதல்ல என்னால நம்பவே முடியலை. அப்புறம் கிட்டப் போய் பார்த்தப் போது என்னால என் கண்ணையே நம்ப முடியலை.” என்று ஆரம்பித்து அன்று நடந்ததை விவரிக்க ஆரம்பித்தாள் ராகவி.

குஷால் இடமாற்றம் மற்றும் புதிய நபர்களைப் பார்த்ததும் ஆழுக ஆரம்பிக்க, ஹரீஷ் குஷாலை தூங்கிக் கொண்டு வெளியே வர, அவனைத் தொடர்ந்து ராகவியும் அவன் பின்னால் வந்து விட்டாள்.

அப்போதும் குஷால் விடாமல் அழுது கொண்டே இருக்க, தூக்கிக் கொண்டு மருத்துவமனையின் தோட்டத்திற்கு வந்து தட்டிக் கொடுக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக அழுகையைக் குறைத்தான் குஷால்.

“ஹரீஷ் உடனே உள்ள போக வேண்டாம். அப்புறம் திரும்ப அழுக ஆரம்பிச்சுடுவான்.” என்று ராகவி கூறவும் ஹரீஷும் சரியென்று அங்கேயே அமர்ந்தான்.

“விபிக்கிட்ட நீ இன்னும் சொல்லலையா இந்தியா வந்தது?”

“இல்லை ஹரீஷ். அவனை நேர்ல போய் பார்த்து இன்ப அதிர்ச்சி கொடுக்கனும்.”

“ம் ஆனால் விபியை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. பாவம் ரொம்ப ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணான்.”

“ம் ஆமா ஹரீஷ்.” என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே கூறிய ராகவி திடீரென எழுந்து நின்றாள்.

“என்னாச்சு ராகவி?” என்று ஹரீஷ் கேட்க அதற்குப் பதில் சொல்லாமல் வேகமாக முன்னே நடந்தாள்.

ஒன்றும் புரியாமல் ஹரீஷ் அவளை அழைத்துக் கொண்டே பின்னே செல்ல, ராகவி வேகமாகச் சென்று நந்தனா முன்பு நின்றாள்.

நந்தனாவை அங்குப் பார்த்ததும் ஹரீஷிற்குமே பயங்கர அதிர்ச்சி. ராகவி வேகமாக நந்தனாவை அணைத்துக் கொண்டு,”நந்தனா நீ உயிரோட தான் இருக்கியா?” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கேட்டாள்.

நந்தனாவிற்கு ஒன்றும் புரியவில்லை. கூட இருந்த பையன் வேகமாக,”உங்களுக்கு நந்தனாவைத் தெரியுமா?” என்று கேட்டான்.

“நீங்க யார்?” என்று அவனது கேள்விக்குப் பதில் கூறாமல் அவள் ஒரு கேள்வி கேட்டாள்.

“முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க. நீங்க யார்? உங்களுக்கு எப்படி நந்தனாவைத் தெரியும்?” என்று கேட்டான்.

“நந்நனா என்னோட ஃப்ரண்ட் விபீஷணனோட வைஃப்.” என்று அவள் கூறவும் அந்தப் பையனிற்கு அதிர்ச்சி. வேகமாக அவன் நந்தனாவைப் பார்க்க, அவளிற்கும் பயங்கர அதிர்ச்சி.

அவளால் சரியாக நிற்க முடியவில்லை. தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே கீழே அமர்ந்து விட, அவள் கூட இருந்த பையன் அதிர்ந்து அவளைக் குனிந்து தாங்கிப் பிடித்தான்.

“நந்தனா எதையும் யோசிக்காத. நீ உள்ள போ நான் பேசிட்டு வரேன்.” என்றான் அவன். அவளும் எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து உள்ளே சென்றாள்.

ராகவி புரியாமல் பார்க்க, அந்தப் பையன் அவளிடம்,”நந்தனாவுக்கு பழைய ஞாபகம் எதுவுமில்லை. அவளுக்கு நடந்த ஆக்சிடெண்ட்ல எல்லாத்தையும் மறந்துட்டா. நீங்க எதுவா இருந்தாலும் முதல்ல அப்பாகிட்ட பேசுங்க. இப்போதைக்கு நந்தனாகிட்ட எதுவும் கேட்க வேண்டாம்.” என்றான் அவன்.

“உங்க அப்பா எங்கே இருக்காங்க?”

“அப்பா இப்போ ஆப்ரேஷன் தியேட்டர்ல இருக்காங்க. நீங்க வெயிட் பண்ணுங்க.”

“நான் என்னோட ப்ரண்ட்டை கூட்டிட்டு வரேன். உங்க ஃபோன் நம்பர் கொஞ்சம் தாங்க.” என்று அவள் கேட்கவும், அவனது விசிட்டிங் கார்ட் எடுத்துத் தந்தான்.

“நீங்களும் டாக்டரா?” என்று அவள் கேட்க, அவன் ஆம் என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

உடனே ராகவி நேரம் தாழ்த்தாமல் விபீஷணனிற்கு அழைக்க, அவனோ எடுக்கவே இல்லை. திரும்பத் திரும்ப அவள் அழைத்துக் கொண்டே இருந்தும் அவன் எடுக்கவில்லை.

“ஹரீஷ் விபி எடுக்க மாட்டீங்கிறான். அவனும் எதுவும் ஆப்ரேஷன் பண்ணிட்டு இருக்கானா என்னன்னு தெரியலை. நானே போய் பார்த்து விஷயத்தைச் சொல்லி கூட்டிட்டு வரேன்.”

“ம் சரி நீ போயிட்டு வா. குஷாலை நான் பார்த்துக்கிறேன்.”

“சரி நான் உள்ளே போய் சொல்லிட்டு என்னோட ஹாண்ட் பேக் எடுத்துட்டு வரேன்.” என்று அவள் கூறவும், அவளைத் தனியாக அனுப்ப மனமில்லாமல் அவனும் உடன் சென்றான்.

ராகவி அனைத்தையும் சொல்லி முடிக்க, விபீஷணனின் முகம் யோசனையில் ஆழ்ந்தது. அவனது முகத்தைப் பார்த்த ராகவி,”என்ன யோசனை விபி?” என்று கேட்டாள்.

“இல்லை கூட ஒரு பையன் இருந்தான்னு சொன்னைல யார் அந்தப் பையன்?” என்று கேட்டான்.

“அந்தப் பையன் தான் அந்த ஹாஸ்பிட்டல் ஓனரோட மகன்.” என்று அவள் கூறவும் அவன் எதுவும் பதில் பேசவில்லை.

“என்னாச்சு விபி? ஜெலஸ்ஸா ஃபீல் பண்றியா?” என்று கேட்டாள்.

அவளைப் பார்த்தவன்,”லைட்டா!!” என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் ரோட்டைப் பார்த்தான். அதில் ராகவி சிரித்து விட்டாள்.

“டோண்ட் வொர்ரி நந்தனா அவளை அண்ணான்னு தான் சொன்னா.” என்றதும் தான் விபீஷணனிற்கு உயிரே வந்தது.

விபீஷணன் ராகவியோடு கோவில்லை விட்டுக் கிளம்பியதும் அவனது குடும்பத்தினரும் நந்திதாவின் பெற்றோரிடம் மன்னிப்புக் கூறிவிட்டுக் கிளம்பினர்.

அவர்கள் கிளம்பியதும் கோபமாக நந்திதா அங்குள்ள மணமகள் அறைக்குச் சென்று அவளது கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்தாள். எதிர்முனையில் அழைப்பு எடுத்தவுடன்,”ஏய் அந்த நந்தனாவை கார் ஏத்தி கொண்ணுட்டேன்னு தான சொன்ன!! ஆனால் இப்போ அவள் உயிரோட இருக்காளாம்!! இத்தனை வருஷம் நான் காத்துட்டு இருந்த விஷயம் இன்னைக்கு நடக்கப் போகுதுனு எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா!! எல்லாத்தையும் அந்த நந்தனாவும் ராகவியும் கெடுத்துட்டாங்க. நீ சுத்த வேஸ்ட் இனி நடக்கப் போறதை நானே பார்த்துக்கிறேன்.” என்று அவள் கத்தவிட்டு, எதிர்முனையில் கூறிய எந்தப் பதிலையும் காதில் வாங்காமல் கைப்பேசியை அணைத்து விட்டு குரோதத்துடன் சுவரை வெறித்தாள் நந்திதா.

Advertisement