Advertisement

ராகவியை அங்குப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தனர். விபீஷணன் அவளிடம் வந்து,”ராகவி நீ இங்க என்ன பண்ற? எப்போ இந்தியா வந்த? நீ வரத் தான் இன்னும் நாள் இருக்கே!!” என்று கேட்டான்.

“ஏதாவது சொல்லிடப் போறேன் விபி!! கால் பண்ணால் எடுக்கனும்னு தோனாதா உனக்கு?எத்தனைத் தடவை உனக்குக் கால் பண்ணேன்!! அப்புறம் எதுக்கு உனக்கு ஃபோன்? அதைத் தூக்கிக் குப்பையில போடு. நீ எடுக்கலைனு தான் நான் குஷாலை ஹரீஷ்கிட்டயே விட்டுட்டு நேர்லயே விஷயத்தைச் சொல்லலாம்னு வந்துட்டேன்.” என்று அவள் கூறவும், அனைவரும் புரியாமல் பார்த்தார்கள்.

“என்ன சொல்ற நீ? நான் எடுக்கலைனா நீ கனடால இருந்து வந்த?” சிறுபிள்ளைத்தனமான கேள்வியை விபீஷணன் கேட்க, ராகவி அவனை முறைத்துப் பார்த்தாள்.

“ப்ச் நான் ஒன்னும் கனடால இருந்து நீ ஃபோன் எடுக்கலைனு வரலை. நான் இப்போ பாண்டிச்சேரில இருந்து ஃப்ளைட் பிடிச்சு வரேன்.” என்று கூறினாள் ராகவி.

[நேரடியாக பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு விமானம் இல்லை. ஆனால் இந்தக் கதையில் மட்டும் விமானம் உள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள் நட்புக்களே]

“என்ன விஷயம் ராகவி? பாண்டிச்சேரில உனக்கு என்ன வேலை?” என்று கேட்டான் விபீஷணன்.

“ஹரீஷ்கு வொர்க் முடிஞ்சது. அதனால நாங்க சீக்கிரமே கனடால இருந்து கிளம்பிட்டோம். உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். சரி நேர்ல வந்து சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நான் சொல்லலை. ஆனால் கிளம்புறதுக்கு முன்னாடி ஹரீஷோட அம்மா ஃபோன் பண்ணி அவனோட தங்கச்சி ஹஸ்பெண்ட் கீழே விழுந்துட்டார்னு ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கிறதா சொன்னாங்க. அதனால ஹைதரபாத்ல இறங்கி பாண்டிச்சேரி போனோம்.” என்று நீண்டதொரு விளக்கத்தைத் தந்தாள் ராகவி.

“ஓ!! சரி என்கிட்ட என்ன விஷயம் சொல்லனும்?” என்று விபீஷணன் கேட்டான்.

ராகவி பதில் சொல்வதற்கு முன்பு, நந்திதாவின் தந்தை ராஜாராமிடம் வந்து,”என்னங்க நீங்கச் சொல்லி தான நாங்க எல்லா ஏற்பாடும் பண்ணோம். ஒரே பொண்ணு அவளோட கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்த நாங்க ஆசைப்பட்டோம். ஆனால் உங்க பையன் அதுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டார்னு சொன்னீங்க. அதுவுமில்லாம எங்க பொண்ணும் உங்க பையன் மேல் உசுர வைச்சுருக்கான்னு தான் இப்படிக் கோவில்ல கல்யாணம் பண்ணவே ஒத்துக்கிட்டோம். ஆனால் அது இப்போ நடக்காது போலவே!!” என்று அவர் கூறவும், ராஜாராம் என்ன பதில் பேசுவது என்று புரியாமல் அமைதியாக இருந்தார்.

கோபமாக வந்து விபீஷணன் நந்திதாவின் அப்பாவிடம்,”உண்மையிலே நீங்க நந்திதாவோட அப்பா தானா?” என்று கேட்கவும் அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

“என்ன தம்பி இப்படிப் பேசுறீங்க?அவளுக்கு நான் தான் அப்பா. இப்படித் தப்பா பேசாதீங்க.” என்று கோபமாகக் கூறினார் அவர்.

“நான் எந்தத் தப்பான அர்த்ததுலயும் கேட்கலை. உண்மையிலே நீங்க அப்பாவா இருந்திருந்தா என்ன செஞ்சுருக்கனும்? உங்க பொண்ணை கல்யாணம் பண்ணப் போற மாப்பிள்ளைகிட்ட நீங்க பேசிருக்கனுமா வேண்டாமா? எந்தப் பொறுப்புள்ள அப்பாவும் இதைத் தான் பண்ணுவார். உங்களை மாதிரி அந்தப் பையனோட அம்மா அப்பா சொன்னாங்க, பொண்ணு ஆசைப்பட்டுச்சுனு அப்படியே கல்யாணத்துக்குத் தயாராக மாட்டாங்க.” என்று அவன் கூறவும், அவருக்கு முகத்தில் அறை வாங்கியது போல் இருந்தது.

“விபி எங்க மேல தான் தப்பு. நீ அவரை எதுவும் சொல்லாத.” என்று சசிகலா கூறவும், அவர் பக்கம் அவன் திரும்பவே இல்லை. அதுவே அவரது மனதிற்கு வேதனையாக இருந்தது.

“அம்மா நீங்க இப்படிப் பண்ணுவீங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கும் விபி இப்படித் தனியா இருக்கிறது கஷ்டமா தான் இருக்கு. அதுக்காக அவனைக் கேட்காமலே கல்யாணம் வரை ஏற்பாடு பண்ணது ரொம்ப தப்பு மா. இப்போ அவன் சொல்றது எல்லாம் பார்த்தால் நந்தனா உயிரோட தான் இருக்கா போல. கொஞ்சம் யோசிச்சு பாருங்க, சப்போஸ் நீங்க அவனைக் கட்டாயப்படுத்துறீங்கனு அவன் இந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டியிருந்தால் நந்தனாவோட நிலைமை என்ன ஆகிருக்கும்? அப்பா நீங்களுமா இப்படி?” என்று கவுதம் கேட்கவும் இருவருக்கும் என்ன சொல்வதெனப் புரியவில்லை. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

“ப்ச் கவுதம் அண்ணா நீயும் அவனை மாதிரி பேசி அம்மா அப்பா மனசை கஷ்டப்படுத்தாத!! நந்தனா உயிரோட இருந்தால் இந்த ஒரு வருஷம் ஏன் நம்மளை ப்ச் நம்மளை விடு இவனைத் தேடி ஏன் வரலை?” என்று நர்மதா கேட்கவும் கவுதம் மற்றும் விபீஷணன் இருவராலும் இதற்குப் பதில் கூற முடியவில்லை.

“அக்கா நான் தான் வந்தவுடனே சொன்னேன்னே அதுக்கு நான் பதில் சொல்றேன்னு!!” என்று ராகவி கூறவும் அனைவரும் அவளைப் பார்த்தனர்.

“என்ன சொல்ற நீ? உனக்கு நந்தனா பத்தி எதுவும் தெரியுமா?” என்று நர்மதா கேட்டாள்.

“நந்தனா பத்தி என்ன? அவள் இப்போ எங்க இருக்கான்னும் தெரியும்.” என்று அவள் கூறவும் அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.

வேகமாக அவளிடம் வந்த விபீஷணன், அவளது இரு தோள்பட்டையிலும் கையை வைத்து அவளை ஓர் உலுக்கு உலுக்கி,”என்ன சொல்ற நீ? அப்போ என் நந்தனா உயிரோட இருக்கிறது நிஜம் தானா?” என்று கேட்டான்.

“ஆமா விபி, உன்னோட லட்டுக்குட்டி உயிரோட தான் இருக்கா. அவளை நான் நேர்ல பார்த்துட்டு தான் வரேன்.” என்று கூறவும் விபீஷணன் கண்ணிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

இத்தனை நாள் அவன் நந்தனா உயிரோடு இருக்கிறாளா இல்லை அது தன்னுடைய நினைப்பு மட்டும் தானா என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு வரமாக வந்து நல்லச் செய்தி ஒன்றை ராகவி கூற, இது நாள் வரை அவன் அடைந்த துன்பம் எல்லாம் பறந்தோடியது போல் ஓர் உணர்வு அவனை மகிழச் செய்தது.

“நான் இப்போவே நந்தனாவைப் பார்க்கனும். என்னை அவகிட்ட கூட்டிட்டு போ.” என்று சிறு குழந்தை போல் அடம்பிடித்தான் விபீஷணன்.

அவனைப் பொறுத்தவரை நந்தனா உயிரோடு இருக்கிறாள் அது போதும் அவனிற்கு. அவள் ஏன் இத்தனை மாதங்கள் தன்னைப் பார்க்கவில்லை என்ற காரணம் எல்லாம் தேவையில்லை. ஆனால் அவனது குடும்பத்தாரும் அப்படி நினைப்பார்கள் என்று கூற முடியாது. அதைப் பலிக்கும் விதமாக சசிகலா ராகவியிடம் வந்து,”என்ன சொல்ற நீ? அது நந்தனா தானா?” என்று நம்பாமல் கேட்டார்.

“அட ஆமா அத்தை அது நந்தனா தான். எனக்கு நந்தனாவைத் தெரியாதா என்ன?”

“அப்போ ஏன் ராகவி, நந்தனா இத்தனை நாள் நம்மளைத் தேடி வரலை?” என்று கேட்டாள் சுவாதி.

“அதுப் பெரிய கதை அண்ணி. நந்தனாவுக்கு ஆக்சிடெண்ட் ஆகியிருக்கு. அதுல கிட்டத்தட்ட ஆறு மாசம் கோமால தான் இருந்திருக்கா. அதுக்கு அப்புறம் அவளுக்கு நினைவு வந்துருக்கு. ஆனால் பழசை எல்லாம் மறந்துட்டா.” என்று அவள் கூறவும் அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி. சசிகலா மற்றும் ராஜாராம் இருவருக்கும் அதிர்ச்சியோடு மட்டுமல்லாமல் குற்றவுணர்ச்சியும் அவர்களைச் சேர்த்து ஆட்டி வைத்தது.

கவுதம் கூறியது போல் ஒரு வேளை விபீஷணன் சசிகலாவின் வார்த்தைக்காக நந்திதாவின் கழுத்தில் தாலி கட்டியிருந்தால் இரு பெண்களின் வாழ்க்கை மட்டுமல்லாமல் எந்த மகன் நன்றாக இருக்க வேண்டுமென்று இரண்டாவது திருமணம் செய்து வைக்க எண்ணினார்களோ அதே மகனின் வாழ்க்கையும் அல்லவா கேள்விக் குறியாகி இருக்கும் என்று எண்ணாமல் அவர்களால் இருக்க முடியவில்லை.

“நீ நந்தனாவ எங்கே பார்த்த? அவளைக் கையோட கூட்டிட்டு வந்துருக்கலாமே!!” என்று கேட்டாள் சுவாதி.

“அண்ணி நந்தனாவை நான் பார்த்தது ஹரீஷ் தங்கையோடு ஹஸ்பெண்ட் அட்மிட் ஆகிருக்கிற ஹாஸ்பிட்டல்ல. அந்த ஹாஸ்பிட்டல்லோட ஓனர் தான் நந்தனாவுக்கு ட்ரீட்மென்ட் எல்லாம் தந்து அவளை இத்தனை நாளா கேர் பண்ணிட்டு இருக்காங்க. நந்தனா நார்மலா இருந்திருந்தால் நான் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அவளே வந்துருப்பா. ஆனால் அவளுக்கு எதுவும் நினைவில் இல்லை. நான் போய் அவகிட்ட பேசுனேன். என்னை அவளுக்கு அடையாளமே தெரியலை. அதே மாதிரி எனக்கு நந்தனாவை பார்த்ததும் முதல்ல விபிகிட்ட சொல்லத் தான் தோனுச்சு. அவளைக் கையோட கூட்டிட்டு வரனும்னு தோனலை அண்ணி.” என்று அவள் கூறவும் அவளது நிலைமையைப் புரிந்து கொண்டார்கள்.

“ராகவி, நேரம் கடத்த வேண்டாம். வா இப்போவே பாண்டிச்சேரி போகலாம். என்னோட நந்தனாவை கூட்டிட்டு வந்துரலாம்.” என்று விபீஷணன் கூறவும், அவனது தவிப்பு அவளிற்கு நன்றாகப் புரிந்தது.

“ம் போகலாம் விபி. ஆனால் அதுக்கு முன்னாடி உன்னோட ஐடி, உங்களோட மேரேஜ் செர்ட்டிஃபிகேட் அப்புறம் உங்க கல்யாணத்துல எடுத்த ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்துட்டு வா. நாம சும்மா போய் சொன்னதும் அவங்க நம்பி அனுப்பிருவாங்களா?” என்று ராகவி கேட்கவும் விபீஷணனிற்கும் அவள் கூறுவது சரியாகத் தோன்றியது.

“சரி அப்போ வா வீட்டுக்குப் போயிட்டு நாம போகலாம்.” என்று விபீஷணன் கூறிவிட்டு யாரையும் திரும்பியும் பார்க்காமல் அவன் வெளியே வந்துவிட்டான். சசிகலாவிடம் வந்த ராகவி,”அத்தை நீங்க என்ன தான் விபிக்கு நல்லதுனு நினைச்சு பண்ணாலும் நீங்க செஞ்சது தப்பு தான். அவனுக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க, அவனே வருவான். நீங்க அழுகாதீங்க அத்தை, மாமா அத்தையைப் பார்த்துக்கோங்க. நாளைக்கு உங்க மருமகள் வீட்டுக்கு வரும் போது தெம்பாக இருக்க வேண்டாமா?” என்று அவர்களைச் சமாதானப்படுத்தி விட்டே வெளியே வந்தாள் ராகவி.

முதலில் விபீஷணனும் ராகவியும் சென்றது விபீஷணன் வேலை செய்யும் மருத்துவமனைக்குத் தான். ராகவியை கீழே காத்திருப்போர் அறையில் அமர வைத்து விட்டு நேராக அவனது துறையின் தலைமை மருத்துவரைக் காணச் சென்றான்.

அவர் அப்போது தான் ஒரு நோயாளியைப் பார்த்து விட்டு வந்திருந்தார். விபீஷணனை காணவும்,”வா விபீஷணன். என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“சார் எனக்கு ஒரு மூணு நாள் லீவ் வேணும்.” என்று அவன் கேட்கவும், அவர் யோசிக்கவே இல்லை உடனே தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.

“ஓகே விபீஷணன். நீ இத்தனை மாசமா லீவ் எதுவும் எடுக்காமல் தான் வொர்க் பண்ண!! சோ நீ தாராளமாக எடுத்துக்கலாம். நான் இங்கே பார்த்துக்கிறேன்.”

“ரொம்ப தாங்கஸ் சார்.” என்று கூறிவிட்டு அவன் அவரது அறையிலிருந்து வெளியே வந்து வேகமாகக் கீழே வந்து ராகவியை அழைத்துக் கொண்டு அவனது வீட்டிற்குச் சென்றான்.

ராகவி கீழே உட்கார்ந்திருக்க, விபீஷணன் அவனது அறைக்குச் சென்று ராகவி கூறிய அனைத்தையும் எடுத்து ஒரு பையில் போட்டு அதை எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.

“விபி, இப்போ ப்ளைட் எதுவுமே இல்லை. நாம கார்ல தான் போகனும்.” என்றாள் ராகவி.

“நோ ப்ராப்ளம் ராக்ஸ். எனக்கு என்னோட நந்தனாவைப் பார்க்கனும் அவ்ளோ தான்.” என்று அவன் கூறவும் அவனது தவிப்புப் புரிந்தது. சரியென்று அவனுடன் வெளியே வந்தாள்.

விபீஷணன் காரை இயக்க, ராகவி பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். சரியாக அப்போது ராகவியின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. ஹரீஷ் தான் அழைத்திருந்தான்.

“என்ன ராகவி விபியைப் பார்த்தியா?”

“ம் பார்த்தாச்சு. இப்போ நாங்க அங்கத் தான் வந்துட்டு இருக்கோம். பட் ப்ளைட் கிடைக்கலை ஸோ பை ரோட் தான் வந்துட்டு இருக்கோம். நீ குஷாலை பார்த்துக்கோ சரியா.”

“ம் நீ பத்திரமா வா. பாப்பாவை நான் பார்த்துக்கிறேன்.” என்று ஹரீஷ் கூறவும், அவனது அம்மா ஏதோ புலம்பும் சத்தமும் கேட்டது.

“என்ன பிரச்சனை உன் அம்மாவுக்கு?”

“ராகவி!!” என்று மட்டும் அவன் கூற, அவள் அமைதியாகி விட்டாள்.

Advertisement