Advertisement

அவன் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க, சீதாவே தொடர்ந்தார்,”சரி சொல்லு விபீஷணன். எதுக்கு என்னைப் பார்க்கனும்னு சொன்ன? என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“மேம் நந்தனா உங்களைப் பார்க்க வந்தாளா?” என்று மொட்டையாக அவன் கேட்க, அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“புரியலை விபீஷணன். நந்தனா தான் இறந்துட்டாளே!!” என்றார்.

“மேம் நான் சொல்றது இப்போ இல்லை.” என்று கூறிவிட்டு அவன் கொண்டு வந்த கோப்பையை அவரிடம் நீட்டினான்.

அவரும் அதை வாங்கிப் பார்த்தவர், இதில் என்ன இருக்கிறது என்ற அர்த்தத்தில் அவனைப் பார்த்து,”ஆமா நான் தான் ரிப்போர்ட் கொடுத்தேன். அதை இப்போ ஏன் கேட்கிற விபீஷணன்?” என்று கேட்டார்.

“மேம் அப்போ நிஜமா என்னோட நந்தனா ப்ரெக்னென்ட்டா இருந்தாளா?” என்று நம்ப முடியாமல் கேட்டான் விபீஷணன்.

“ஆமா விபீஷணன்…” என்று அன்று நடந்ததைக் கூற ஆரம்பித்தார் மருத்துவர் சீதா.

எப்போதும் நந்தனாவுடன் கீழே வரை செல்லும் விபீஷணன், அன்று அவனிற்குப் பார்க்க நோயாளி இருந்ததால் அவன் அவளுடன் செல்ல முடியாமல் போக, அவனிடம் சொல்லிக் கொண்டு கீழே வந்தாள் நந்தனா. அப்போது எதிரில் சீதா வர, அவளைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ அவளிடம் வந்து,”நீ விபீஷணனோட வைஃப் தான?” என்று கேட்டார்.

சீதா வெள்ளைக் கோட்டுடன் இருந்ததால் அவரும் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் என்பதால் அவரிடம்,”ஆமா டாக்டர்.” என்று கூறினாள்.

“கொஞ்சம் என் கேபின் வரியா மா?” என்று கேட்டார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஏன் டாக்டர்.” என்று கேட்டாள்.

“பயப்படாத மா. நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். நீ வா உனக்கே தெரிஞ்சுடும் நான் எதுக்கு கூப்பிடுறேன்னு.” என்று கூறவும் அவளும் சிறிது தயக்கத்துடனே அவருடன் சென்றாள்.

சீதாவைப் பின் தொடர்ந்து அவரது அறைக்குள் சென்றாள் நந்தனா. அவளை நோயாளிகள் உட்காரும் நாற்காலியில் அமரச் சொன்னார் சீதா. சந்தேகத்துடனே அவளும் அவர் கூறிய இடத்தில் அமர்ந்தாள்.

“உனக்கு பீரியட்ஸ் கடைசியா எப்போ வந்தது மா?” என்று அவர் கேட்கவும், இவர் எதற்கு இதைக் கேட்கிறார் என்று புரியாமல் பார்த்தார்.

“நான் கைனிக் மா. விஷயம் இல்லாமல் எதுவும் கேட்க மாட்டேன். அதனால பயப்படாமல் சொல்லு. இல்லாட்டி விபீஷணனையும் கூப்பிடவா?” என்று கேட்டார்.

“இல்லை டாக்டர் அவர் ஏதோ அவசரமா பேஷன்ட்டை பார்க்கப் போய்ட்டார். அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.” என்று கூறிவிட்டு மீண்டும் அவளே,”லாஸ்ட் மன்த் வந்தது மேம். அதுக்கு அப்புறம் வரலை. ஏன் மேம்? எதுக்கு கேட்டீங்க” என்று கேட்டாள் நந்தனா.

“காரணமா தான் கேட்டேன். ஸோ உனக்கு இந்த மந்த் வரலை அப்படித்தான?” என்று கேட்கவும் அவள் ஆமாம் என்று தலையசைத்து,”ஆமா மேம், எப்போவும் வர டேட் தாண்டிப் போயிடுச்சு மேம்.” என்றாள்.

பின்னர் அவளது மணிக்கட்டை எடுத்துச் சோதித்தார் மருத்துவர் சீதா. அவளிடம் மேலும் சில சோதனைகளைச் செய்தார். பின்னர் அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு,”எல்லாம் நல்ல விஷயம் தான் மா. நீ ப்ரெக்னென்ட்டா இருக்க.” என்று அவர் கூறவும் அவளிற்கு முதலில் அதிர்ச்சி. பின்னர் அந்த அதிர்ச்சி மகிழ்ச்சியாக மாறியது.

“டாக்டர் நிஜமா சொல்றீங்களா?”

“ஆமா மா. நான் ஓர் இரண்டு மூணு முறை உன்னைப் பார்த்தேன். அப்போவே உன்னோட ஃபேஸ்ல ஒரு ப்ரைட்னஸ்ஸை பார்த்தேன். எனக்குச் சந்தேகமா இருந்தது. அதனால தான் உன்னைக் கூப்பிட்டு செக் பண்ணேன்.” என்று அவர் கூறவும் அவளிற்குப் பயங்கரச் சந்தோஷம்.

“ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் மேம்.” என்று கூறிவிட்டு அவரிடம் ஃபீஸ் பற்றிக் கேட்க, அவர் அடுத்த நிமிடமே,”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா. நீ நம்ம ஹாஸ்பிட்டல் டாக்டரோட வைஃப். உன்கிட்ட ஃபீஸ் வாங்க முடியுமா?” என்று அவர் கூற, அவள் தயங்கினாள்.

“சரி விடு மா நான் விபீஷணன்கிட்ட வாங்கிக்கறேன்.”என்று கூறவும் அவளும் சிரித்துக் கொண்டே அவரது அறையிலிருந்து வெளியே வந்தாள்.

இதை மருத்துவர் சீதா விபீஷணனிடம் கூறவும் அவரைப் பார்த்து,”ஏன் டாக்டர் என்கிட்ட நீங்க இதைச் சொல்லவே இல்லை?” என்று கேட்டான்.

“என்ன பண்றது விபீஷணன்? அன்னைக்கு நந்தனா உங்ககிட்ட சொல்லிருப்பாங்க அடுத்த நாள் நீங்க மறுபடியும் நந்தனாவை என்கிட்ட கூட்டிட்டு வருவீங்கனு எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி நடக்காமல் நந்தனா இறந்து போயிட்டதா கேள்விப்பட்டதும் ஐ வாஸ் ஷாக்டு. இப்போ நீங்க என்கிட்ட வந்துக் கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்குப் புரியுது நந்தனா கர்ப்பமா இருக்கிறது உனக்குத் தெரியாதுனு.” என்று அவர் கூறவும் அவனது மடத்தனத்தை எண்ணி அவனால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை.

“ப்ச் என்ன சொல்றதுனு தெரியலை டாக்டர். இதைத் தான் விதினு சொல்றாங்களா என்னனு புரியலை. ஒரு வேளை நந்தனாவோ இல்லை நீங்களோ சொல்லிருந்தா இந்நேரம் கதையே வேற மாதிரி மாறி இருக்கும். ஆனால் ஒரு வருஷம் நான் கஷ்டப்படனும்னு என் தலைல எழுதுயிருக்கு.” என்று அவன் வருத்தமாகக் கூறவும், அவர் புரியாமல் பார்த்தார். அவரிடம் சில விஷயங்களைக் கூற, அவரும் அதிர்ந்து விட்டார்.

“சாரி விபீஷணன். இப்படி நடக்கும்னு எனக்குத் தெரியாது. அப்படித் தெரிஞ்சுருந்தா நான் சொல்லிருப்பேன். ஐ ஆம் ரியலி சாரி.” என்று அவர் மனதார மன்னிப்புக் கேட்டார்.

“அச்சோ மேடம் நீங்க என்ன தெரிஞ்சா எல்லாம் பண்ணீங்க? எங்களோட விதி நாங்க கஷட்டப்படனும்னு இருக்கு. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க. விடுங்க மேடம் இனி எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்புறேன்.” என்று கூறிவிட்டு அவரிடம் விஷயத்தைக் கூறியதற்கு நன்றியும் தெரிவித்து விட்டு அவரது அறையிலிருந்து அவனது அறைக்கு வந்தான். அப்போது தான் அவனது அம்மா அழைத்து கோவிலிற்கு வரச் சொல்ல, அவரைக் காணச் சென்றான் விபீஷணன்.

அனைத்தையும் அவன் கூறிமுடிக்க, அவர்களுக்குப் புரிந்தது ஏன் நந்தனா தங்களிடம் இந்த விஷயத்தைக் கூறவில்லை என்று.

“சரி விபி, இப்போ என்ன பண்றது? நந்தனா தான் உயிரோட இல்லைல அப்புறம் உனக்கு என்ன தயக்கம் நந்திதாவைக் கல்யாணம் பண்றதுல?” என்று சசிகலா கேட்க, அவனிற்குப் பயங்கரக் கோபம் வந்துவிட்டது.

“அம்மா ஏதாவது சொல்லிடப் போறேன். எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்ன தயக்கம்னு கொஞ்சம் கூட யோசிக்காமல் கேட்கிறீங்க? என் மனசுல நந்தனா மட்டும் தான் இப்போ மட்டுமில்லை எப்போவும் நந்தனா மட்டும் தான் இருப்பா.” என்று ஆணித்தரமாகக் கூறினான் விபீஷணன்.

“அப்போ இறந்து போன அந்த நந்தனா முக்கியம் உயிரோட இருக்கிற நாங்க முக்கியமில்லையா விபி? நீ மட்டும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்காட்டி என்னை உயிரோட பார்க்க முடியாது. இங்கேயே நான் செத்துடுவேன்.” என்று சசிகலா கூறவும் அனைவரும் அவரை அதிர்ச்சியாகப் பார்க்க, விபீஷணன் மட்டும் அவரை அலட்சியமாகப் பார்த்தான்.

“என்ன ப்ளாக்மெயில் பண்றீங்களா? சரி ப்ளாக்மெயில் பண்ணி இந்தக் கல்யாணத்தை நடத்திடுவீங்க!! அதுக்கு அப்புறம் வாழ்க்கைனு ஒன்னு இருக்கே!! அதையும் ப்ளாக்மெயில் பண்ணி வாழ வைப்பீங்களா? சொல்லுங்க மா!! கடைசி வரை என்னை ப்ளாக்மெயில் பண்ணிப் பண்ணி ஒவ்வொரு காரியத்தையும் சாதிப்பீங்களா? அசிங்கமா இல்லையா உங்களுக்கு?” என்று அவன் கேட்கவும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

“விபி கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியாகிடும். எனக்குப் புரியுது நந்தனா ப்ரெக்னென்ட்டா இருக்கும் போது இறந்ததை உங்களால ஏத்துக்க முடியலை. ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட்…” என்று இன்னும் என்னவெல்லாம் கூறியிருப்பாளோ நந்திதா அவளை இடைமறித்து,”வில் யு ஜஸ்ட் ஷட் அப் நந்திதா.” என்று பொதுவிடம் என்றும் பாராமல் கத்தினான் விபீஷணன்.

அதில் சற்று அதிர்ந்து விட்டாள் நந்திதா. அவளது பெற்றோரும் என்ன இது இவன் இப்படிக் கத்துகிறான் என்று அதிர்ந்து பார்த்தனர். அவர்களின் பார்வைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு நந்திதாவிடம் வந்தவன்,”ஏய் உனக்கு எல்லாம் அறிவுனு ஒன்னு இருக்கா இல்லையா? ஒரு முறை இல்லை நிறைய முறை உன்னை எனக்குப் பிடிக்காதுனு சொல்லிட்டேன். அப்படியும் இப்படி அலங்காரம் பண்ணிகிட்டு என்னைக் கல்யாணம் பண்ண வந்து நிக்கிறியே உனக்கு அசிங்கமா இல்லை?” என்று வார்த்தைகளில் கடிந்து துப்பினான் விபீஷணன். அதில் நந்திதா காயமடைந்தாலும் அவன் மேலுள்ள காதல் அவளை அமைதியாக நிற்க வைத்தது.

“டேய் அந்தப் பொண்ணை எதுக்கு இப்படித் திட்டுற? உன்னை நேசிச்சது மட்டும் தான் அந்தப் பொண்ணு செஞ்ச தப்பு!! நான் தான் இந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணேன். நீ எது சொல்றதா இருந்தாலும் என்னைச் சொல்லு.” என்றார் சசிகலா.

“ஓ!! அப்படியா அப்போ உங்ககிட்டயே கேட்கிறேன். சப்போஸ் நீங்க ப்ளாக்மெயில் பண்றேன்னு இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வைங்க, நாளைக்கே இவள் செத்துப் போயிட்டா என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அப்போவும் கட்டாயப்படுத்துவீங்களோ!!” என்று அவன் கேட்க, இந்தக் கேள்விக்கும் அவரால் பதில் பேச முடியவில்லை.

“விபி சும்மா உனக்குத் தான் பேசத் தெரியும்னு பேசாதா. அவங்க நம்ம அம்மா, நமக்கு நல்லது தான் செய்வாங்கனு ஏன் உனக்குப் புரியலை?” என்று கேட்டாள் நர்மதா.

“அக்கா சும்மா இந்த அம்மா சென்டிமென்ட்ட என்கிட்ட பேசாத. அப்புறம் என்ன சொன்ன என்னோட நல்லதுக்கா? எது நல்லது என் பொண்டாட்டி உயிரோட இருக்கும் போது என்னை இன்னொரு கல்யாணம் பண்ணச் சொல்றதா?” என்று அவன் கேட்கவும் அங்கிருந்தவர்கள் அனைவரும் இது என்ன புதுக் கதை என்பது போல் பார்த்தனர்.

“விபி என்ன சொல்ற நீ? நந்தனா உயிரோட இருக்காளா? சும்மா எங்களைச் சமாளிக்க நீ பொய் சொல்லாத.” என்றார் ராஜாராம்.

“ப்ச் உங்களைச் சமாளிக்க என்னால முடியாதுனு நினைக்கிறீங்களா? அப்புறம் நான் எதுக்கு பொய் சொல்லனும். நான் கொடுத்த ஃபைல்ல கடைசில ஒரு பேப்பர் இருக்கும் அதை எடுத்துப் பாருங்க.” என்றான் விபீஷணன்.

உடனே ராஜாராம் அந்தக் கோப்பையைத் திறந்து அதில் கடைசியில் உள்ள காகிதத்தை எடுத்துப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. விபீஷணனிடமே,”இது நந்தனாவை போஸ்மார்ட்டம் பண்ண ரிப்போர்ட். இதுல என்ன இருக்கு?” என்று கேட்டார்.

“ப்ச் அப்பா நான் தான் சொல்றேன்ல நந்தனா உயிரோட தான் இருக்கா. அன்னைக்கு நாம போய் பார்த்தது நந்தனாவே கிடையது. அந்த ரிப்போர்ட்டை நல்லா பாருங்க அதுல எங்காவது ப்ரெக்னென்சி பத்திப் போட்டுருக்கா? போஸ்ட்மார்டம் பண்ணால் ப்ரெக்னென்ட்டா இருந்தால் அதுல ஸ்பெசிஃபை பண்ணிருப்பாங்க. ஆனால் அப்படி எதுவும் அந்த ரிப்போர்ட்ல இல்லை. அப்போ என்ன அர்த்தம்? அன்னைக்கு நந்தனானு நினைச்சுட்டு வேற ஏதோ சடலத்துக்குத் தான் எல்லா காரியத்தையும் எல்லாரும் செஞ்சுருக்கீங்க!!” என்று அவன் தெளிவாகக் கூறவும் அனைவருக்கும் அதிர்ச்சி என்றால் நந்திதாவிற்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு திருப்பத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை.

“விபி நீ சொல்றது உண்மைனா அப்போ நந்தனா எங்கே இப்போ? இத்தனை நாளா ஏன் நம்மளைப் பார்க்க வரலை அவள்?” என்று கேட்டாள் நர்மதா.

“அது ஒன்னுக்கு மட்டும் தான் எனக்கும் பதில் தெரியலை. அவளுக்கு வேற எதுவும் பிரச்சனையானு ஒன்னும் புரியலை. நான் சொல்றதை மட்டும் அன்னைக்கு நீங்க நம்பியிருந்தா இந்நேரம் என் பொண்டாட்டியும் என் குழந்தையும் என் கூட இருந்திருப்பாங்க.” என்று கண்களில் கண்ணீருடன் கூறினான் விபீஷணன்.

“கவலைப்படாத விபி நந்தனாவுக்கு என்னாச்சுனு நான் சொல்றேன்.” என்று கூறிக் கொண்டே அங்கு வந்தாள் ராகவி.

Advertisement