Advertisement

விபீஷணன் உள்ளே வந்து அவனது அம்மாவிடம் கோபமாகப் பேசுவதைப் பார்த்த நந்திதாவின் தோழி வேகமாகச் சென்று நந்திதாவிடம் விஷயத்தைக் கூற, அவளிற்குப் பயம் வந்து விட்டது. எங்கு இந்தக் கல்யாணம் நடக்காமல் போய்விடுமோ!! விபீஷணன் தனக்குக் கிடைக்காமல் போய்விடுவானோ என்று பயந்து வேக வேகமாக விபீஷணன் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.

அவளை முதலில் அங்குக் கண்ட விபீஷணன், இவள் எதற்கு இங்கு இருக்கிறாள் என்று புரியாமல் பார்த்தான். ஆனால் அடுத்த நொடிய அவளது அலங்காரம் அவள் ஏன் அங்கு இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லியது. அதில் ரௌத்திரமாக மாறினான் விபீஷணன்.

நந்திதாவைத் திட்ட வாயைத் திறக்கப் போனவனிடம் சசிகலா,”விபீ இது எப்படி? ஏன் நந்தனா இதைப் பத்தி எதுவும் நம்மகிட்ட சொல்லைல?” என்று கேட்கவும் அவனது கவனம் அவர் பக்கம் திரும்பியது.

“அம்மா எதையும் சரியா பார்க்க மாட்டீங்களா? அதுல போட்டிருக்கிற டேட்ட பாருங்க.” என்று அவன் கூறவும், அவரும் தேதியைப் பார்த்தார். அது நந்தனா காணாமல் சென்ற தினம். இன்னுமே அதிர்ந்து விட்டார் சசிகலா.

ராஜாராம் வேகமாக சசிகலாவின் கையிலிருந்த கோப்பையை வாங்கி அவர் பார்த்தார். அவருக்கும் அதிர்ச்சி!! இப்படி ஒன்றை அவர்கள் யாரும் எதிர்பார்க்க வில்லை. இருவரது அதிர்ச்சிக்கான காரணத்தை அறியாமல் மற்றவர்கள் குழம்பி நின்றிருந்தனர்.

“அப்பா, அம்மா அதுல என்ன போட்டிருக்கு? ஏன் இப்படி இரண்டு பேரும் அதைப் பார்த்துட்டு அதிர்ச்சியானீங்க? சொன்னா தான எங்களுக்கும் தெரியும். டேய் விபி அதுல என்ன தான் இருக்கு?” என்று பொறுமை இழந்த நர்மதா அவர்களிடம் கேட்டாள்.

விபீஷணன் ராஜாராமிடம் இருந்த கோப்பையை வாங்கி நர்மதாவிடம் தந்து விட்டு,”நல்லா பார் அக்கா. அதுல என்ன போட்டுருக்குனு.” என்று அவன் கூறவும் அவள் வாங்கிப் பார்த்தாள்.

அவளுக்கும் அதிர்ச்சியே, அதே அதிர்ச்சியுடனே விபீஷணனிடம்,”என்ன விபி இதுல நந்தனா ப்ரெக்னென்ட்னு போட்டிருக்கு? உனக்குத் தெரியாதா என்ன?” என்று கேட்டாள்.

நர்மதா அவ்வாறு கூறவும் கவுதம், சுவாதி மற்றும் நந்திதாவிற்கும் அதிர்ச்சி. யாரும் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவே இல்லை.

“ஆமா, என் நந்தனா என் கூட இருந்திருந்தா இந்நேரம் என் கையில என்னோட வாரிசு இருந்துருக்கும்.” என்று உணர்ச்சிப் பொங்கக் கூறினான் விபீஷணன்.

“நீ சொல்றது உண்மை தான், ஆனால் நந்தனா தான் உயிரோட இல்லையே!! நாம ஒன்னும் பண்ண முடியாது விபி. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை நீ நந்நிதாவைக் கல்யாணம் பண்ணிக்கோ அடுத்த வருஷத்துல உன்னோட வாரிசை அவள் பெத்து தருவா.” என்று நர்மதா கூறவும் விபீஷணனிற்குக் கோபம் அதிகமாகி நர்மதாவை அடிக்கவே வந்து விட்டான். ஆனால் கையை அவன் பாதியிலே நிறுத்த, அதிலே நர்மதா அதிர்ந்து விட்டாள்.

“மச்சான் என்ன இது?”என்று நர்மதாவின் கணவன் கிஷோர் கேட்க, அவரை உறுத்து விழித்தான் விபீஷணன்.

“என்ன மாமா உங்க பொண்டாட்டி பேசுனது எதுவும் தப்பில்லை, நான் அடிக்கக் கை ஓங்குனது மட்டும் தப்போ!! என்ன நீங்களும் இவங்களுக்கு கூட்டா?” என்று கடுமையாகக் கேட்டான் விபீஷணன்.

“ப்ச் மச்சான் எனக்கு எதுவும் தெரியாது. திடீர்னு இவள் கோவிலிக்கு கூப்படவும் அப்படியே வந்துட்டேன். இங்க வந்ததுக்கு அப்புறம் தான் உனக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணிருக்காங்கனு புரிஞ்சது. முதல்ல எனக்கும் கோபம் வந்தது தான். ஆனால் நீயும் இப்படித் தனியா எத்தனை நாள் இருப்ப மச்சான்? அதுனால தான் ஒத்துக்கிட்டேன். அதுக்காக நீ என் பொண்டாட்டிய அடிக்கக் கை ஓங்கிட்டு வரதை எல்லாம் என்னால பார்த்துட்டு இருக்க முடியாது.” என்று நல்ல கணவராக மனைவிக்குப் பரிந்து கொண்டு பேசினான் கிஷோர்.

“ரொம்ப நல்லா இருக்கு மாமா நீங்க பேசுறது. நியாயமா ஒரு தம்பியா நீங்கப் பேசுனதை நினைச்சு நான் சந்தோஷம் தான் பட்டுருக்கனும். ஆனால் எல்லாரும் செஞ்ச செயல்ல என்னால சந்தோஷப் பட முடியலை. அப்பா நீங்களுமா இப்படிப் பண்ணீங்க? எப்படி பா உங்களுக்கு மனசு வந்துச்சு?”

“விபி நாங்க உன் நல்லதுக்கு தான் செஞ்சோம். உனக்கு எப்படி இந்த ஃபைல் கிடைச்சது? அதுவும் இத்தனை நாள் உனக்குத் தெரியாதா என்ன?” என்று ராஜாராம் கேட்டார்.

“எனக்குத் தெரியாதே!! அன்னைக்கு நந்தனா என்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்னு சீக்கிரம் வரச் சொன்னால். இப்போ யோசிச்சு பார்த்தால் அவள் கர்ப்பமா இருக்கிறதைச் சொல்லத் தான் கூப்பிட்டிருக்கா. ஆனால் அதைச் சொல்றதுக்கு முன்னாலே அவள் எங்கேயோ போய்ட்டாளே!!” என்று புலம்பினான் விபீஷணன்.

பின்னர் மனதைத் தேற்றிக் கொண்டு அன்று காலையில் நடந்ததைக் கூற ஆரம்பித்தான் விபீஷணன்.

எப்போதும் போல அன்று மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாராகக் குளித்து விட்டு வந்தான். அவனது அலமாரியைத் திறந்து உடையை எடுக்கப் போகும் போது தான் நந்தனாவின் புடவைக்கு நடுவில் ஏதோ துருத்திக் கொண்டு வெளியே தெரிய, அது என்னவென்று எடுத்துப் பார்த்தான்.

அது ஒரு கோப்பை என்றும் அவன் வேலை செய்யும் மருத்துவமனையின் பெயர் அந்தக் கோப்பையின் மேல் எழுதி இருந்ததையும் பார்த்தான். யாருடைய கோப்பை இங்கிருக்கிறது என்று திறந்து பார்த்தான். அதில் நோயாளியின் பெயர் யது நந்தனா விபீஷணன் என்று போட்டிருக்க, அவனிற்கு ஒன்றும் புரியவில்லை.

‘நந்தனாவிற்கு ஏதாவது உடம்புச் சரியில்லாமல் போய் விட்டதா? ஆனால் அவள் எதையும் நம்மிடம் கூறவில்லையே’ என்று யோசித்தான். வேகமாக அந்தக் கோப்பையைப் புரட்டிப் பார்க்கும் போது தான் விஷயம் புரிந்தது அவனிற்கு. நந்நனா கர்ப்பமாக இருக்கிறாள் என்றும் அதுவும் நாற்பது நாளாகி விட்டது என்றும் குறிப்பு எழுதியிருந்தது.

அதிர்ந்து விட்டான் விபீஷணன். ஒரு மருத்துவராக அவள் கூடவே இருந்தும் எப்படி அவள் கர்ப்பம் தரித்தது தனக்குத் தெரியாமலே இருந்திருக்கிறது என்று அவனது அறிவை எண்ணித் தன்னையே திட்டிக் கொண்டான் விபீஷணன்.

இப்போது ஆராய்ச்சி செய்வதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று புரிந்து வேகமாக அந்தக் கோப்பையில் இருக்கும் மருத்துவரின் பெயரைப் பார்த்தான். அதில் அவர்கள் மருத்துவமனையின் மகப்பேறு துறையின் தலைவர் சீதா பெயர் இருக்க, வேகமாக அவனது மேஜை ட்ராயரை திறந்து அதிலிருந்த இன்னொரு கோப்பையிலிருக்கும் காகிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சட்டையை மாட்டிக் கொண்டு விறுவிறுவென அவனது மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றான் விபீஷணன்.

மருத்துவமனை வந்து விபீஷணன் அவனது துறைக்குச் செல்லாமல் மகப்பேறு பிரிவிற்குச் சென்று தலைமை மருத்துவர் சீதா வந்து விட்டாரா என்று கேட்டான். அவர் இன்னும் வரவில்லை என்ற செய்தி கிடைத்ததும் அவரது எண்ணை வாங்கிக் கொண்டு அவனது அறைக்குச் சென்றான்.

அன்று அவனால் எந்த நோயாளியையும் பார்க்கும் நிலைமையில் இல்லை. அதனால் அவனது உதவி மருத்துவரை அழைத்து அவனது நோயாளிகளை இன்று ஒரு நாள் மட்டும் அவரைப் பார்க்கக் கூறி விட்டான். என்றும் இல்லாமல் இன்று விபீஷணன் அவ்வாறு கூறியதால் அந்த உதவி மருத்துவரும் சரியென்று கூறிவிட்டு அவரது அறைக்குச் சென்று விட்டான்.

பின்னர் விபீஷணன் சீதாவிற்குக் கைப்பேசியில் அழைப்பு விடுத்தான். மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தவர், அவருடைய வாகனத்தை நிறுத்தி விட்டுக் கைப்பேசியை எடுத்தார்.

“ஹலோ மேம் நான் விபீஷணன் பேசுறேன்.” என்றான் அவன்.

முதலில் சீனாவிற்கு அது யாரென்று தெரியவில்லை. அதனால்,”எந்த விபீஷணன்?” என்று கேட்டார்.

“மேம் நம்ம ஹாஸ்பிட்டல்ல நியூரோ சர்ஜனா இருக்கிற விபீஷணன்.” என்று கூறவும் அவருக்கு யாரென்று தெரிந்தது.

“அடச் சொல்லு விபீஷணன். என்ன எனக்கு ஃபோன் பண்ணிருக்க?”

“மேம் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் அதுவும் நேர்ல. எப்போ ஹாஸ்பிட்டல் வருவீங்க?” என்று கேட்டான்.

“ஐ ஆம் ஆன் த வே விபீஷணன். இன்னும் டென் மினிட்ஸ்ல நானே கூப்பிடுறேன்.”என்று அவர் கூறவும் நன்றி தெரிவித்து விட்டு கைப்பேசியை வைத்தான்.

அவனால் இன்னும் நம்ப முடியவில்லை. அவனிற்குப் பல எண்ணங்கள் தோன்றி மறைந்தது. நந்தனா ஏன் தன்னிடம் கூறாமல் தனியாகச் சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டும். அன்று தன்னுடன் அவள் நன்றாகத் தானே பேசிச் சென்றாள். எந்தச் சண்டையும் இல்லையே!! பின்னர் ஏன் என்ற கேள்வி மட்டும் அவனைப் படுத்தி வாட்டி எடுத்தது.

சீதா சொன்னது போலவே சரியாக பத்து நிமிடத்தில் அவனிற்கு அழைத்தார். அவனும் இதோ வருவதாகக் கூறிவிட்டு அவனது அறையிலிருந்து வெளியே வந்து மகப்பேறு பிரிவிற்குச் சென்றான்.

முன்னரே சீதா சொல்லியதால், அவனை உள்ளே விட்டார் சீதாவின் செவிலியர். கதவைத் திறந்து கொண்டு அவன் உள்ளே செல்லவும், அவனை வரவேற்றார் சீதா.

“வா விபீஷணன். முதல்ல உட்கார்.” என்று அவர் கூறவும் அவனும் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

“முதல்ல நீ எப்படி இருக்கனு சொல்லு.” என்றார் சீதா.

“நான் இருக்கேன் மேம்.”

“புரியுது விபீஷணன். ஆனால் நந்தனாவோட உன் லைஃப்பும் முடிஞ்சுடுச்சுனு நீ தேங்கி நின்றாத.” என்று அக்கறையாகக் கூறினார் சீதா. 

Advertisement