Advertisement

“நான் எதுவும் பண்ணலை. எல்லாம் அவன் செயல். நான் ஒரு கருவி அவ்ளோ தான். அவன் செய்யறது நான் சொல்றேன் அவ்ளோ தான். நீங்க அந்த ஈசனுக்கு தான் நன்றி சொல்லனும்.”

“சந்தோஷம்ங்க.” என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்குக் கிளம்பினர் விபீஷணனின் பெற்றோர்கள்.

அந்த வார வெள்ளிக் கிழமையில் எப்போதும் போல் சசிகலா கோவிலிற்கு வந்தார். இன்று அவருடன் ராஜாராமும் வந்திருந்தார். நந்திதா அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காகவே முன்னதாக வந்து அவர்களுக்காகக் காத்திருந்தாள்.

இவர்கள் வருவதைத் தூரத்திலிருந்தே பார்த்து விட்டாள் நந்திதா. வேகமாக அவர்களிடம் வந்து வணக்கம் கூறினாள். அவளை அப்போது அங்கு எதிர்பார்க்காதவர்கள், திடீரென அவள் வந்து முன் நிற்கவும் அவர்களுக்கு அவளைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. இவள் தான் ஜோசியர் கூறிய தங்கள் வீட்டு மருமகள் என்று அவர்கள் முடிவெடுத்து விட்டனர்.

“உன்னைப் பார்க்கனும், உன்கிட்ட பேசனும் நாங்க நினைச்சுட்டே இருந்தோம். நீயே வந்துட்ட மா. சாமி கும்பிட்டியா மா?”

“இல்லை ஆண்டி உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” என்று அவள் கூறவும் சசிகலாவின் அகம் மலர்ந்தது.

மூவரும் கோவிலிற்குள் சென்று கடவுளை வணங்கி விட்டு ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்தனர். சசிகலா அவர்களது கூடையிலிருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து அவளிடம் தந்தார். அதை வாங்கிக் கொண்டு அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

“நந்திதா உங்க அம்மா அப்பாகிட்ட பேசிட்டியா?” என்று கேட்டார் சசிகலா.

“ம் பேசிட்டேன் ஆண்டி. அவங்க ஓகே சொல்லிட்டாங்க ஆண்டி. என்னோட சந்தோஷம் தான் அவங்களுக்கு பெரிசு.” என்றாள் நந்திதா.

“நாங்க உன்னோட அப்பா அம்மாவை பார்க்கனும். என்னைக்கு அவங்க ஃப்ரீனு சொல்லு மா. நாங்க வந்து பேசுறோம்.” என்று ராஜாராம் கூறவும் நந்திதாவிற்குப் பயங்கரச் சந்தோஷம்.

“அங்கிள் ரொம்ப சந்தோஷம். நான் அம்மா அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன்.”

“கண்டிப்பா மா. விபியை அப்படியே விட எங்களுக்கு மனசு கேட்கலை. அவனுக்குக் கல்யாணம் ஆனால் சரியாகிடுவான் மா.”

“ஆமாம் ஆண்டி, மேரேஜ் ஆகிட்டால் போதும். என்னால விபியை பழயை மாதிரி மாத்த முடியும். அவரோட சந்தோஷமா என்னால வாழ முடியும்.” என்று அவள் கூறவும் பெற்றவர்களுக்கு மனம் மகிழ்ந்தது.

“சரி மா. நீ உன்னோட அப்பா நம்பர் குடு. நானே பேசுறேன்.” என்று ராஜாராம் கேட்க, நந்திதா உடனே அவளது தந்தையின் எண்ணைத் தர, அடுத்த நிமிடமே அவர் அவளது தந்தையிற்கு அழைத்து விட்டார்.

பிறகு சிறிது நேரம் அவர்கள் மிகத் தீவிரமாகப் பேசினர். ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மூவரும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். நந்திதாவின் முகம் மட்டும் பயங்கரப் பரவசத்துடனும் எதையோ சாதித்த மகிழ்ச்சியுடன் இருந்தது.

வீட்டிற்கு வந்த பின்பு, சசிகலாவும் ராஜாராமும் கோவிலில் நடந்த எந்த விஷயத்தையும் வீட்டிலுள்ள யாரிடமும் அவர்கள் சொல்லவில்லை. அவர்களுக்குத் தெரியாமல் ராஜாராமை மட்டும் வைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் சசிகலா.

மூன்று நாட்கள் சென்றிருக்கும், அன்று காலை எழும் போதே விபீஷணனின் மனது இன்று ஏதோ பெரிதாக நிகழப் போகின்றது என்று தோன்றியது. அன்று நந்தனா காணாமல் சென்ற போது அவனது மனநிலை எப்படி இருந்ததோ அதே போல் தான் இப்போதும் இருந்தது.

அதே மனநிலையுடன் அவன் மருத்துவமனைக்குச் செல்லத் தயாராகினான். குளித்து முடித்து வந்தவன் அலமாரியைத் திறந்து உடையை எடுக்கப் போனவன் கண்ணில் பட்டது ஒரு கோப்பை. அதுவும் அந்தக் கோப்பை நந்தனாவின் புடவைக்கு நடுவிலிருந்தது. இத்தனை நாள் அவன் கண்ணில் படாமலிருந்தது இன்று பட்டது.

என்ன கோப்பை இது என்ற யோசனையுடன் எடுத்துப் பார்க்க அதிர்ந்து விட்டான் விபீஷணன். அதன் பிறகு நொடியும் தாமதிக்காமல் வேகமாகத் தயாராகி அந்தக் கோப்பையையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் வேகமாக வீட்டை விட்டு வெளியேற, சசிகலா கூப்பிடுவது கூடக் கேட்காமல் அவனது காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். உள்ளே வந்தவர் ராஜாராமிடம்,”என்னங்க இது இவன் கூப்பிடக் கூப்பிட வேகமா போயிட்டான். இப்போ என்ன பண்றது? இன்னைக்கு இவன் ஹாஸ்பிட்டல் போனால் நம்ம காரியம் எப்படி நடக்கும்?” என்று கேட்டார்.

“விடு சசி, முதல்ல நாம எல்லா ஏற்பாட்டையும் செய்வோம். அதுக்கு பின்ன அவனைக் கூப்பிட்டுக்கலாம். இப்போ அவன் போனதும் நல்லதுக்கு தான்.” என்று அவர் கூற, சசிகலாவுக்கும் அவர் கூறுவது நியாயமாக இருக்க, சரியென்று அவர் அன்று நடக்கும் விஷயத்திற்கான ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தார்.

சரியாக பண்ணிரெண்டு மணிக்கு, சசிகலா விபீஷணனிற்கு அழைத்தார். அவனோ அப்போது தான் பார்க்க வேண்டிய நபரைப் பார்த்து விட்டு யோசனையுடன் அமர்ந்திருந்தான்.

அப்போது சசிகலா அவனிற்கு அழைக்க, ஒரு விதச் சலிப்புடன் அதை எடுத்து,”ம் சொல்லு மா.” என்றான்.

“விபி உனக்காக வேண்டுதல் வைச்சு இங்க முருகன் கோவிலுக்கு வந்தேன். ஐயர் நீ வரனும்னு சொல்றார். கொஞ்சம் வந்துட்டு போ பா. அப்போ தான் நான் பண்ண வேண்டுதல் நிறைவேறும்.” என்று அவர் கூற, அவன் இருந்த மனநிலையில் கண்டிப்பாக எதுவும் அவனால் செய்ய முடியாது.

“அம்மா என்னால இப்போ எங்கேயும் வர முடியாது.” என்றான் விபீஷணன்.

“விபி அம்மா உன்கிட்ட வேற எதுவும் கேட்க மாட்டேன். ப்ளீஸ் எனக்காக வா. இது கூட அம்மாவுக்காக நீ செய்ய மாட்டியா?” என்று அவன் கெஞ்சி கேட்கவும், வேறு வழியின்றி அவனும் சரியென்று கூறிவிட்டு கைப்பேசியை வைத்த போது தான் ராகவி பல முறை அவனிற்கு அழைத்தது தெரிய, அவளிற்கு அழைத்தான் அவன். ஆனால் அவளது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வர, சரி அப்புறம் அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து கைப்பேசியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

காலையில் எடுத்த கோப்பையுடனே அவன் கோவிலுக்குச் சென்றான். சரியாக அதே நேரம் கவுதமும் சுவாதியும் வர, அவனுக்கு இவர்கள் எதற்கு இங்கு வந்திருக்கிறார்கள் என்ற யோசனையுடனே அவர்களிடம் வந்து,”என்ன கவுதம் நீ இங்க? ஆபிஸ் லீவ்வா?” என்று கேட்டான்.

“ப்ச் அம்மா எனக்கு ஃபோன் பண்ணி லீவ் போட்டுட்டு உடனே கோவிலுக்கு வரச் சொன்னாங்க டா. எதுக்குனு கேட்டதுக்கு சொன்னா தான் வருவியா நீ!! அப்படி இப்படினு ஒரே சத்தம். வரும் போது சுவாதியையும் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. உன்னையும் அம்மா தான் வரச் சொன்னாங்களா?” என்று கேட்டான்.

“ஆமா, ஏதோ வேண்டுதல்னு சொன்னாங்க.”

“அப்போ எதுக்கு எங்களையும் வரச் சொல்லனும்? ஏதோ தப்பா இருக்கே!!” என்று சுவாதி கூற, விபீஷணனிற்கும் அதே தான் தோன்றியது.

“ஏய் நீ சும்மா இரு. அதெல்லாம் ஒரு தப்பும் இருக்காது.” என்று கவுதம் கூறவும் சசிகலா விபீஷணனிற்கு அழைக்கவும் சரியாக இருக்க, விபீஷணன் கைப்பேசியை அணைத்து விட, மூவரும் உள்ளே சென்றனர்.

கொஞ்சம் தூரம் சென்றதுமே சுவாதி கூறியது போல் அங்குத் தப்பாகத் தான் நடந்து கொண்டிருந்தது. விபீஷணன் அவனது அம்மாவையும் அப்பாவையும் முறைத்துப் பார்க்க, உனக்கு நான் சலித்தவள் இல்லை என்று சசிகலாவும் தைரியமாக அவனை எதிர் கொண்டார்.

கோபமாக அங்கு வந்தவன்,”அம்மா என்ன நடக்குது இங்க?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான் விபீஷணன்.

“ஏன் விபி உனக்குக் கண்ணு தெரியாதா?” என்று நக்கலாகக் கேட்டாள் நர்மதா.

“என்ன உன்னோட ஐடியாவா இது? அறிவில்லையா உனக்கு?”

“விபி அவள் உன்னோட அக்கா. அதை மறந்துடாதா.” என்று ராஜாராம் கூற,

“அப்படியே என் ஐடியாவா இருந்தாலும் இதுல என்ன டா தப்பு இருக்கு?” என்று கோபமாக நர்மதா கேட்டாள்.

“ஏய் இதுல என்ன தப்பிருக்காவா? ஏற்கனவே கல்யாணம் ஆன ஒருத்தனுக்கு இன்னொரு கல்யாணம் அதுவும் என்னோட விருப்பம் இல்லாமல் பண்ணி வைக்கிறது தப்புனு உனக்குத் தெரியாதா?”

“சும்மா இதையே சொல்லிட்டு இருக்காதா விபி. நாங்க என்ன நந்தனா உயிரோட இருக்கும் போதா உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சோம்? அவள் இறந்துட்டா!! அதுக்காக நீ கடைசி வரைக்கும் தனிமரமாவே இருந்துடுவியா? அதைப் பார்க்கிறச் சக்தி எங்களுக்கு இல்லை. அதனால தான் இந்த ஏற்பாடு.” என்று சசிகலா கூறவும் விபீஷணனிற்குப் பயங்கர கோபம் வந்து விட்டது.

வேகமாக அவனது அம்மாவை நெருங்கியவன் அவனது கையிலிருந்த கோப்பையை அவரது கையிலில் திணித்து விட்டு கோபமாக,”ஓப்பன் பண்ணிப் பாருங்க.” என்று அவன் கூறவும், அவரும் அதைத் திறந்து பார்த்தார். ஆனால் அவருக்கு அது யாருடையது என்று தெரியவில்லை.

“இது யாருடையது? இதை என்கிட்ட எதுக்கு கொடுக்கிற?” என்று கேட்டார்.

“ப்ச் ஏன் அதுல பேர் போட்டுருக்கு. உங்களுக்கு அது தெரியலையா?” என்று அவன் கூறவும் தான் அவர் மீண்டும் திறந்து பார்க்க, அதிர்ந்து விட்டார் சசிகலா.

Advertisement