Advertisement


“விடுங்க எதுக்கு இப்போ நமக்குள்ள விவாதம் பண்ணிகிட்டு? அடுத்த வாரம் அந்தப் பொண்ணுகிட்ட நாம பேசிட்டு மத்ததை முடிவு பண்ணலாம்.” என்று ராஜாராம் கூற,

“ஆமா விடுங்க நாமளே எந்த முடிவுக்கும் வர வேண்டாம். நர்மதா நீயும் மாப்பிள்ளையும் சாப்பிட்டிங்களா?” என்று சசிகலா கேட்க,

“அதெல்லாம் ஆச்சு மா. சரியா சாப்பிட்டு கை கழுவும் போது தான் அண்ணா ஃபோன் பண்ணான்.” என்று நர்மதா கூற,

“ஆமா அத்தை. நேரமாச்சு நாங்க கிளம்புறோம். நீங்க எதுவும் யோசிக்காமல் உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க. நாங்க வரோம்.” என்று கிஷோர் கூறிவிட்டு நர்மதாவுடன் கிளம்பி விட,

“அம்மா நாங்களும் ஆபிஸ்கு கிளம்புறோம்.” என்று கூறிய கவுதம் சுவாதியை அழைத்துக் கொண்டு அவன் கிளம்பிவிட்டான்.

கவுதமும் சுவாதியும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். இருவரும் வெவ்வேறு நிறுவனத்தில் வேலை செய்தாலும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் ஓரே டி.எல்.எப் பில் இருப்பதால் இருவரும் ஒன்றாகத் தான் செல்வார்கள்.

அவனது அறைக்கு வந்த விபீஷணனுக்கு கவலையாக இருந்தது. அவனது படுக்கைக்குப் பக்கத்திலிருந்த புகைப்படத்தை எடுத்து,”ஏன் லட்டு என்னை விட்டுட்டு போன? நீ போனதால தான் இத்தனைப் பிரச்சனையும். அன்னைக்கு எனக்கு ஃபோன் பண்ணி ஏதோ முக்கியமான விஷயம் என் கிட்ட பேசனும் அதனால சீக்கிரம் வரச் சொன்னியே லட்டு. அப்படிச் சொன்ன நீ எதுக்கு லட்டு கார் எடுத்துட்டு வெளில போன? உனக்கு நான் கார் ஓட்ட கத்துக் கொடுத்துருக்கவே கூடாது. அதனால தான் நீ தனியா கார் எடுத்துட்டு எங்கோயோ போய், இப்போ என் கூட இல்லாமல் போயிட்டியே லட்டு. ஏன் ஏன் ஏன். நான் அப்படி என்ன தப்புப் பண்ணேன்னு எனக்கு இந்தத் தண்டனை.” என்று விபீஷணன் புகைப்படத்தைப் பார்த்துப் புலம்ப, சரியாக அவனது கைப்பேசி ஒலி எழுப்ப, எடுத்துப் பார்த்தவன் வாட்சப்பில் வீடியோ கால் என்று புரிய, முகத்தைத் துடைத்துக் கொண்டு அதை அடென்ட் செய்தான்.

“ஹேய் விபி எப்படி இருக்க? என்ன வீட்டுலயா இருக்க? அதிசயமா இருக்கு டா நீ வீட்டுல இருக்கிறது. விபி அழுதியா? என்னாச்சு?”

“எப்படி ராக்ஸ் உன்கிட்ட நான் பேசனும்னு நினைக்கும் போது எல்லாம் சரியா ஃபோன் பண்ணிடுற?”

“அது தான் டா நமக்குள்ள இருக்க டெலிபதி. சரி சொல்லு என்னாச்சு? ஏன் அழுத? நீ வீட்டுல இருக்கிறதைப் பார்த்தால் கண்டிப்பா எல்லாரும் ஏதோ சொல்லிருக்காங்க. ஏதோ என்ன உன்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்களா?” சரியாக ராக்ஸ் என்ற ராகவி கேட்க,

விபீஷணனுக்கு தன் தோழியைக் கண்டு வியப்பாக இருந்தது,”சரியா சொல்லிட்ட ராக்ஸ். அதே தான். இதனால தான் நான் வீட்டுக்கே வரது இல்லை. அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கனு அண்ணா சொன்னதால தான் வந்தேன். ப்ச் வந்ததும் எல்லாரும் அதையே பேச ஆரம்பிச்சுட்டாங்க. கடுப்பா வருது ராகாஸ்.” சலிப்பாக விபீஷணன் கூற,

“விபி ஒரு மாசம் பொறுத்துக்கோ. நான் இந்தியா வந்துடுவேன். வந்ததும் நான் ஆன்ட்டிகிட்ட பேசுறேன் சரியா. நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காத ஓகே வா.” என்று அவள் கூற,

“ஹேய் நிஜமாவா? எத்தனை நாள் இருக்கிற மாதிரி வர?”

“விபி நாள் இல்லை. இனிமே முழுசா சென்னை தான். ஹரீஷ் வேலைப் பார்த்தது போதும் ஏதாவது பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறான். அவங்க வீட்டுலயும் அத்தைக்குக் கொஞ்சம் உடம்புச் சரியில்லை. இவனோட தங்கச்சி பத்தித் தான் தெரியுமே உனக்கு. அதான் இவனால இங்க இருக்கவே முடியலை. நான் சொல்லும் போது எல்லாம் சார் கேட்கலை. இப்போ அம்மாவுக்கு உடம்பு சரியில்லனு தெரிஞ்சதும் போதும் இந்த ஊர்னு மூட்டைக் கட்ட ஆரம்பிச்சுட்டான்.” என்று ராகவி கூற,

“ரொம்ப சந்தோஷம் ராக்ஸ். எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா. என்னோட லட்டுவும் என் கூட இல்லை. நீயும் கேனடாவுல இருக்க, வீட்டுலயும் யாரும் என்னைப் புரிஞ்சுக்கலை. I feel terribly lonely Rags.” வருத்தமாக அவன் கூற,

“ஒரு மாசத்துல நான் வந்துடுவேன் விபி. நீ கவலைப்படாத, பார்த்துக்கலாம்.”

“சரி சாம்ப் என்ன பண்றான்?” என்று விபீஷணன், ராகவியின் பையன் குஷாலை கேட்க,

“உன் சாம்ப் தூங்குறான் விபி. எழுந்ததும் நான் திரும்ப வீடியோ கால் பண்றேன். நீ எதைப் பத்தியும் யோசிக்காத சரியா. ஏனோ தோனுச்சு உன்கிட்ட பேசனும்னு அதான் டைம் எல்லாம் பார்க்காமல் உடனே ஃபோன் பண்ணிட்டேன். நான் பண்ணதும் நல்லதா போச்சு….” என்று ராகவி பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது கைப்பேசியில் இன்னொரு அழைப்பு வர,

“ராக்ஸ் எனக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து கால் வருது.” என்று விபீஷணன் கூற,

“சரி விபி நீ பார். நான் உனக்கு குஷால் எழுந்ததும் ஃபோன் பண்றேன்.” என்று கூறிவிட்டு ராகவி வைக்க,

விபீஷணன் அவனுக்கு அழைப்பு வந்த எண்ணிற்கு மீண்டும் அழைத்தான். அவன் காலையில் அறுவை சிகிச்சை செய்யும் அவனுக்கு உதவியாக இருந்த மருத்துவர் தான் அழைத்திருந்தார்.

“டாக்டர் அந்த பேஷன்ட் கண் முழிச்சுட்டார்.”

“சரி. நான் வீட்டுக்கு வந்துருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க இருப்பேன். அவரோட வைட்டல்ஸ், ஹேண்ட் அண்ட் லெக் மூவ்மென்ட் செக் பண்ணியா?” என்று கேட்டுக் கொண்டே விபீஷணன் தயாராகி வெளியே வந்தான்.

“சார வைட்டல்ஸ் மட்டும் தான் செக் பண்ணேன்.” என்று தயங்கிக் கொண்டே அவன் கூற,

“ப்ச் சரி நான் சொன்ன மாதிரி ஹேண்ட் அண்ட் லெக் மூவ்மென்ட் செக் பண்ணு கூடவே ஐ மூவ்மென்ட்டும் செக் பண்ணு. நான் வந்துடுறேன்.” என்று கூறிவிட்டு விபீஷணன் கைப்பேசியை வைக்க,

“இப்போ தான டா வந்த, அதுக்குள்ள எங்க போற? சாப்பிடக் கூட இல்லை?” என்று சசிகலா கேட்க,

“அம்மா நான் காலைல ஆப்பரேட் பண்ண பேஷன்ட் கண் முழிச்சுட்டாங்க. நான் போய் பார்த்துட்டு வரேன். அங்கேயே சாப்பிட்டுக்கிறேன் மா.” என்று கூறிவிட்டு அவரின் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் மருத்துவமனை நோக்கிச் சென்றான் விபீஷணன்.

மருத்துவமனை சென்ற விபீஷணன் வேகமாக NICU க்கு சென்றான். அவனுக்கு உதவியாக இருந்த மருத்துவர் இவனைப் பார்த்து,”டாக்டர் நான் வைட்டல்ஸ் செக் பண்ணிட்டேன். ஹேன்ட் அண்ட் லெக் மூவ்மென்ட்ஸூம் எல்லாம் சரியா இருக்கு டாக்டர். ஐ மூவ்மென்ட்ஸூம் செக் பண்ணிட்டேன் சார். எல்லாம் நார்மல்லா இருக்கு டாக்டர்.” என்று அவன் கூற,

விபீஷணன் அவனது மனத் திருப்திக்காக மீண்டும் ஒரு முறை அவனே அனைத்தும் சரி பார்க்க, அந்த நோயாளியும் அவனுக்கு ரெஸ்பான்ட் செய்ய, திருப்தியாக வெளியே வந்தான்.

நோயாளியின் மனைவியும் மகனும் அங்கே இருக்க, அவர்களிடம் சென்றவன்,”உங்க ஹஸ்பண்ட் நல்ல பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ் குடுக்கிறார். இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்கப் போய் பார்க்கலாம். அதுக்கு முன்னாடி அவங்க கொடுக்கிற அந்த ட்ரெஸ்ஸை போட்டு ஸ்டெரிலைஸ் பண்ணிட்டு, சானிடைஸர் எல்லாம் போட்டுட்டு தான் நீங்கப் போகனும். இவர் அதைச் சொல்லுவார். அதை அப்படியே பண்ணுங்க.” என்று அவர்களிடம் கூறிவிட்டு உதவி மருத்துவரிடம் பார்த்துக்கோ என்று கண்ணைக் காட்டிவிட்டு அவனது அறைக்குச் சென்று விட்டான்.

கோவிலில் சசிகலாவை ஆட்டோவில் ஏற்றிவிட்டு அவளது காரை எடுத்துக் கொண்டு நந்திதா அவளது வீட்டிற்குச் சென்றாள். பிரியா வேலைக்குச் சென்றதால் அவளிடமிருந்த சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். காலையில் பிரியா செய்து வைத்துச் சென்ற பொங்கலின் மனம் அவளைச் சாப்பிட அழைக்க, வேகமாக கை கழுவி விட்டு தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள்.

பிரியா தான் சமையல் எல்லாம். அதற்காக நந்திதா எதுவும் செய்ய மாட்டாள் என்று எல்லாம் இல்லை. பிரியா சமைத்தால், இவள் தான் பாத்திரம் கழுவுவது. அதனால் பிரியாவும் எந்தக் குறையும் கூறாமல் சமையல் செய்து விடுவாள்.

நந்திதாவும் பிரியாவும் ஓரே பள்ளியில் தான் படித்தனர். அப்போது இவர்கள் இருவரும் நண்பர்கள் கிடையாது. ஒரே பள்ளி மற்றும் வகுப்பில் படித்ததால் ஒருவரை ஒருவர் தெரியும் அவ்ளோ தான். பள்ளிக் காலம் முடிந்ததும் வேறு வேறு கல்லூரியில் இருவரும் படித்ததால் எந்தத் தொடர்பும் இருவருக்கும் இல்லை. கிட்டத்தட்டப் பள்ளி முடிந்து பல வருடங்களுக்குப் பிறகு, அதாவது போன வருடம் அவர்களது பள்ளி அலுமினி விழாவில் தான் பிரியாவை சந்தித்தாள் நந்திதா.

எப்போதும் செல்லாத நந்திதா அன்று அவளுக்கு நேரமிருக்க, அவளது பள்ளிக்கால தோழிகளைச் சந்திக்க ஆசையுடன் கிளம்பிச் சென்றாள்.

பள்ளிக்கு வந்த நந்திதா, அவளுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள் அனைவரையும் சென்று சந்தித்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு அங்குப் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து அவளுக்குத் தெரிந்த முகம் ஏதாவது இருக்கா என்று தேட, சற்று தள்ளி பிரியா யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த நந்திதா அவளிடம் விரைந்தாள்.

“ஹேய் நீ பிரியா தானா?” என்று இவள் கேட்க,

“ஆமா. நீ நந்திதா தான? எப்படி இருக்க? இப்போ என்ன பண்ற?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை பிரியா கேட்க, அவள் பக்கத்தில் அமர்ந்த நந்திதா,

“நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க?” என்று பேச ஆரம்பித்தவர்கள், விழா முடியும் வரை இருவரும் பேசிக் கொண்டே இருந்தனர். ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்து கொண்டது மட்டுமல்லாமல் அவர்களது கைப்பேசி எண்களையும் மாற்றிக் கொண்டனர்.

பின்னர் இருவரும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் தொலைப்பேசியில் தொடர்பில் தான் இருந்தனர். அப்போது நந்திதா காஞ்சிபுரத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் சென்னை வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட, எங்குத் தங்குவது என்று யோசிக்கும் போது தான் பிரியா அவளுடன் இருந்த பெண் வேறு ஊருக்குப் போவதால் தன்னுடனே வந்து தங்கிக் கொள் என்று கூற, பிரியா இருந்த வீடு நந்திதா வேலை செய்யும் இடத்திற்குச் சிறிது பக்கத்தில் இருப்பதால் மகிழ்ச்சியோடு நந்திதா ஒரு வாரம் முன்பு தான் அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிற்கு வந்தாள்.

நந்திதா சாப்பிட்டு விட்டு அவளது அறைக்குச் சென்று சுடிதாருக்கு மாற்றிக் கொண்டு அவளது கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். மீண்டும் வீட்டைப் பூட்டிக் கொண்டு கீழே வந்து அவளது காரை எடுத்துக் கொண்டு அவள் சென்று இடம் VSB Multispeciality Hospital தான். 

Advertisement