Advertisement

நந்தனா இறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் அவர்களது அறையில் மெத்தையில் அமர்ந்து எதிரில் உள்ள சுவரில் அழகாக மாட்டியிருந்த அவர்களது திருமணப் புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். யார் என்ன கூறியும் அதற்குப் பதிலோ எதிர்வினையாற்றவோ இல்லை விபீஷணன். அனைத்துக் காரியங்களும் முடிந்து அடுத்த நாள் தான் ராகவி அங்கு வந்துச் சேர்ந்தாள். அவளாலும் நந்தனா இறந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வேகமாக விபீஷணன் அறைக்குள் வந்து அவனைப் பார்க்க, அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அவள் வந்ததும் தான் சிறிது பேசினான் விபீஷணன். பின்னர் அவனைத் தனியாக விடாமல், அவளது குழந்தை குஷாலை அவனிடம் தந்து பார்த்துக் கொள்ளக் கூற, அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகத்தைப் பார்க்கப் பார்க்க அவன் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து அவனது அன்றாட வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான்.

அவர்களது அறையில் இன்று வரை யாரையும் விட்டது இல்லை. அவனே கூட்டி, தொடைத்தும் விடுவான். நந்தனா சென்ற போது அறை எப்படி இருந்ததோ அப்படித் தான் இன்று வரை உள்ளது. அவளது பொருட்கள் எங்கு அவள் வைப்பாளோ அப்படி அதே இடத்தில் தான் இன்றும் உள்ளது.

சசிகலா எவ்வளவு எடுத்துக் கூறியும் அவன் மாறவே இல்லை. ஒரு கட்டத்தில் விபீஷணனிற்கு மற்றொரு கல்யாணம் செய்து வைத்தாள் தான் அவன் நிம்மதியாக இருப்பான் என்று முடிவெடுத்துத் தான் நந்திதாவைப் பார்த்ததும் அவருக்கு விபீஷணனின் மனைவியாக வந்தாள் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

இதை எல்லாம் அவன் கூறி முடிக்கவும் நந்திதா பிரமித்துப் போய் விட்டாள். இப்படி ஒருவன் அவனது மனைவியைக் காதலிக்க முடியுமா என்று. அப்படிப்பட்டக் காதல் தனக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அவளது மனம் கூறியது. எப்படியாவது விபீஷணனின் மனதை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

“ஓகே விபி அப்போ உங்களுக்கு நந்நனா இன்னும் இறந்து போகலைனு நினைக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

“நான் இன்னும் உயிரோட தான இருக்கேன். என் மனசு நந்தனா இன்னும் சாகலைனு தான் சொல்லுது. ஆனால் அதைச் சொன்னால் என்னைப் பைத்தியம் மாதிரி பார்க்கிறாங்க.”

“அப்போ அன்னைக்கே நீங்க டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்துருக்கலாமே. டவுட் க்ளியர் ஆகிருக்குமே!! அவங்க பெரியப்ப டி.என்.ஏ. வோட அவங்க டி.என்.ஏ. ஒரு 25% ஆ வது மேட்ச் ஆகுமே!!”

“ம் ஆமா நீ சொல்றது சரி தான். ஆனால்…” என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு மீண்டும் வாயைத் திறந்தான்,”நந்தனா இஸ் ஆன் ஆடாப்டட் சைல்ட்.” என்று அவன் கூறவும் அதிர்ந்து தான் போனாள் நந்திதா.

“என்ன சொல்றீங்க? நந்தனா அவங்களோட சொந்தப் பொண்ணு இல்லையா?”

“ஆமா!! அது அவளுக்குத் தெரியாது. நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு அவளோட பெரியப்பா என்கிட்ட மட்டும் உண்மையைச் சொன்னார்.”

“ஓ!! அப்போ நந்தனா உயிரோட இருந்திருந்தா அவங்க இந்நேரம் வரைக்குமா உங்களைத் தேடி வராமல் இருந்திருப்பாங்க?” என்று கேட்டாள்.

“அந்த ஒரு கேள்வி தான் என் மண்டைல ஓடிட்டு இருக்கு. இல்லாட்டி அது நிஜமாவே நந்தனா தானோனு என் மனசு அடிச்சுக்குது.”

“இங்கே பாருங்க விபி, நந்தனாவோட திங்க்ஸ் எல்லாம் போலிஸ் உங்ககிட்ட கொடுத்தாங்க. அதே மாதிரி நீங்க சொல்றதை வைச்சு பார்க்கும் போது நந்தனா உங்க மேல ரொம்பவே அன்பு வைச்சுருக்காங்க. அவங்க உயிரோட இருந்திருந்தா இப்படி ஒரு வருஷம் உங்களைத் தவிக்க விட்டுருக்க மாட்டாங்க. ஆனால் நீங்க தான் இல்லாத ஒருத்தர் இருக்கிறதா நினைச்சுட்டு உங்க ஃபேமிலி மெம்பர்ஸை தவிக்க விட்டுட்டு இருக்கீங்க.” என்று அவள் கூறவும் விபீஷணன் அவளை உறுத்து விழித்தான்.

“நந்திதா டோண்ட் க்ராஸ் யுவர் லிமிட்ஸ். ஐ நோ வாட் ஐ ஆம் டூயிங். உங்களோட அட்வைஸ் எனக்குத் தேவையில்லை.”

“விபி நான் உண்மையைத் தான் சொன்னேன். நந்தனா உயிரோட இருக்க வாய்ப்பு இல்லை. இருந்திருந்தா கண்டிப்பா அவங்க உங்களைத் தேடி வந்துருப்பாங்க. ஆனால் ஒரு வருஷமாகியும் அவங்க வரலைனா அவங்க உயிரோட இல்லைனு தான் அர்த்தம். அவங்களை நினைச்சுகிட்டே உங்களோட லைஃப் ஆ ஸ்பாயில் பண்ணிக்காதீங்க. நான் சொல்றது உங்களுக்குக் கோபத்தை வரவழைக்கலாம். ஆனால் இது தான் நிதர்சனம். புரிஞ்சுக்கோங்க விபி. உங்களுக்குனு ஒரு லைஃப் இருக்கு. இறந்து போனவங்களை மறந்துட்டு உங்க அம்மா அப்பாவை யோசிச்சு புதுசா ஒரு லைஃப் ஆரம்பிங்க.” என்றாள் நந்திதா.

“பேசி முடிச்சுட்டியா? முதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கோ! நீ எனக்கு யாரோ சரியா. அதை மறந்துடாத. அப்புறம் நீ எந்த தாட்ல இப்படிப் பேசுறேன்னு எனக்கு நல்லாவே தெரியும். அது இந்த ஜென்மத்துல நடக்காது புரிஞ்சதா. நவ் கெட் அவுட் ஆப் மை ரூம்.” என்று அவன் கத்தவும், ஒரு வினாடி அவனைப் பார்த்து விட்டு வெளியேறி விட்டாள் நந்திதா.

வெளியே வந்தவள் மனதிற்குள்,”விபி என்னையா கெட் அவுட் சொல்ற!! நீயே என்னைத் தேடி வருவ விபி. உன்னை நான் தேடி வர வைப்பேன். என்னை லவ் பண்ணவும் வைப்பேன். இன்னைக்கு நந்தனானு உருகுற நீ நாளைக்கு நந்திதானு என் பின்னாடியே வரத் தான் போற!!”என்று கூறிக் கொண்டே அவனது அறையை ஒரு முறைப் பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

அவள் சென்றவுடன் விபீஷணனின் சிந்தனை முழுவதும் நந்தனா பற்றித் தான். நந்திதா கூறியது போல் நந்தனா உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக இந்நேரம் தன்னைத் தேடி வந்திருப்பாள். வேறு யாரும் அவளைக் கடத்திச் செல்ல வாய்ப்புக் குறைவு தான். அப்போது எல்லாரும் கூறுவது போல் என்னுடைய நந்தனா உயிரோடு இல்லையா? என்று தான் ஓடியது. அவனால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியும் என்று தோன்றவில்லை. வேகமாக அவனது கார் சாவியை எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.

அவனிற்கு அன்று எந்த அறுவை சிகிச்சையும் இல்லாததால் அவனுடைய காரை எடுத்துக் கொண்டு நந்தனாவுடன் சென்ற இடத்திற்கு எல்லாம் ஒவ்வொன்றாகச் சென்று அங்குப் பத்து நிமிடமாவது செலவழித்து விட்டுத் தான் வீட்டிற்குத் திரும்பினான் விபீஷணன்.

வீட்டிற்கு வந்தவன் அவனது அறைக்குச் சென்று நந்தனாவுடையப் புடவை ஒன்றை எடுத்து அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அப்படியே மெத்தையில் படுத்தான். தூக்கம் வரவில்லை மாறாக அவனது சிந்தையில் பல எண்ணங்கள் வந்து சென்றது.

சூரியனும் சந்திரனும் தங்களது வேலையை மறக்காமல் செய்து கொண்டிருந்தனர். விபீஷணன் இப்படியே இருப்பதைப் பார்த்து கஷ்டமாக உணர்ந்தார் சசிகலா. அதனால் ராஜாராமிடம் சென்று,”என்னங்க நாம விபி ஜாதகத்தை எடுத்துக்கிட்டு போய் ஜோசியரை பார்த்துட்டு வந்துரலாமா?” என்று கேட்டார்.

“சசி நந்தனா இறந்து போனதுக்கு அப்புறம் நாம அந்த ஜோசியரை மூணு முறைப் போய் பார்த்தோம். மூணு முறையும் அவர் பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டார். இப்போ மட்டும் பார்ப்பாரா என்ன?”

“ப்ச் நாம போய் பார்த்தால் தான் தெரியும். இப்போ வீட்டுல சும்மா தான இருக்கோம் இரண்டு பேரும். அப்படியே அவர் பார்க்கலைனாலும் பரவால எதுவும் குறைஞ்சு போயிடாதா. கிளம்பி வாங்க ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வந்துரலாம்.” என்று அவர் கூறவும், ராஜாராம் எதுவும் பதில் பேசாமல் கிளம்பி வந்தார்.

இருவரும் அன்று சென்ற அதே ஜோசியரைத் தான் பார்க்க வந்திருந்தனர். அவர் கூறியபடியே விபீஷணன் மற்றும் நந்தனாவின் திருமணம் முடிந்த மூன்றாவது மாதத்தில் அவர்களுக்குக் கண்டம் வந்து அதில் நந்தனா இறந்தே போய்விட்டாள். அதன் பின்னர் மூன்று முறை அவரைப் பார்க்க வந்தார்கள் தங்களது மகனின் வாழ்க்கை சிறக்குமா என்று கேட்பதற்கு. ஆனால் அவர் இவர்களைப் பார்க்கவே இல்லை. இப்போதும் ஏதோ தைரியத்தில் வந்திருக்கிறார்கள்.

எப்போதும் போல் உள்ளே நுழைந்ததும் அங்கு வேலையிலிருந்த ஆள் இவர்கள் கையிலிருந்த விபீஷணனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜோசியரிடம் கொடுக்க, இன்று அவர்களை உள்ளே அழைத்தார் அவர். அதில் ஆனந்தமடைய, வேகமாக எழுந்து உள்ளே சென்றனர் சசிகலாவும் ராஜாராமும்.

“ஜோசியரே நாங்க இந்த ஒரு வருஷத்துல மூணு முறை உங்களைப் பார்க்க வந்தோம். ஆனால் நீங்க எங்களைப் பார்க்கவே இல்லை. இந்த முறை நம்பிக்கை இல்லாமல் தான் வந்தோம். ஆனால் நீங்க உள்ள வாங்கனு கூப்பிட்டதும் எங்களுக்கு மனசு நிறைஞ்சு போச்சு.” என்றார் சசிகலா.

அவர் எதுவும் பேசாமல் சிரித்தார். பின்னர் கடவுளை வணங்கி விட்டு,”நீங்க மூணு முறை வந்து நான் உங்களைப் பார்க்காமல் இருந்ததுக்கு காரணம் அப்போ உங்களுக்கு எந்த நல்லதும் நடக்கும்னு கட்டம் சொல்லலை. ஆனால் நான் இப்போ உங்களைப் பார்க்க அனுமதிச்சதுக்கு காரணம் உங்களோட குடும்பத்துக்கு நல்ல காலம் ஆரம்பிச்சுடுச்சு. ஆமா உங்க வீட்டுக்கு மருமகள் வரப் போறா. உங்களோட பையன் நீங்க ஆசைப்பட்டது மாதிரி குழந்தை பொண்டாட்டினு சந்தோஷமா வாழப் போறார். இந்த ஜாதகருக்கு இனி எந்தக் கண்டமும் இல்லை.” என்று அவர் கூறவும் கேட்ட பெற்றவர்களுக்கு மனம் குளிர்ந்தது.

அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு,”ரொம்ப நல்ல விஷயத்தைச் சொல்லிருக்கீங்க. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜோசியர். உங்களுக்கு ரொம்ப நன்றி.” என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் ராஜாராம்.

Advertisement