Advertisement

விபீஷணன்,நந்தனா கூறியதால் அன்று எப்போதும் விடச் சீக்கிரம் வீட்டிற்கு வந்தான். எப்போதும் வீட்டிற்குள் அவன் நுழைந்தாள் வேகமாக வந்து அவனது பையை வாங்கிக் கொண்டு அவனுடன் அவர்களது அறைக்கு வருவாள். ஆனால் அன்று நந்தனா வரவில்லை. சரி அவர்களது அறையில் இருப்பாள் என்று நினைத்து அங்கு வந்து பார்த்தாள் அங்கும் இல்லை. வேகமாகக் கீழே வந்து சசிகலாவிடம்,”நந்தனா எங்கே?” என்று கேட்டான்.

“என்ன விபி நந்தனா இங்க இல்லையா?” என்று சசிகலா கேட்டார்.

“அம்மா நீங்க தான வீட்டுல இருக்கீங்க? அப்போ என்கிட்ட கேட்கிறீங்க?” என்று அவன் சற்றுக் கோபமாகக் கேட்டான்.

அப்போது அவனது பேச்சைக் கேட்டு வெளியே வந்த ராஜாராம்,”நான் பக்கத்துல இருக்கிற வாசுகிட்ட பேசிட்டு வரும் போது நந்தனா கார் எடுத்துக்கிட்டு எங்கேயே போனா. நான் கூப்பிட்டது கூடக் கேட்காம வேகமாக போனாள். சரி உனக்குத் தெரியும்னு நினைச்சேன். ஆனால் நீ வந்து கேட்கிறதைப் பார்த்தால் அவள் உன்கிட்ட சொல்லலை போல!!” என்றார்.

“என்னங்க நீங்க இதை என்கிட்ட சொல்லவே இல்லை.”

“நீ தூங்கிட்டு இருந்த சசி. அதான் நான் சொல்லலை. அப்புறம் வீட்டை அப்படியே திறந்து போட்டுட்டு போயிட்டா. உன்கிட்ட சொன்னா நீ திட்டுவனு தான் சொல்லலை.” என்று அவர் கூறவும் விபீஷணனிற்கு ஏதோ தப்பாகத் தோன்றியது.

அவனது இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. உடனே அவனது கைப்பேசியை எடுத்து அவளிற்கு அழைக்க, அந்த அழைப்புப் போகவே இல்லை. மீண்டும் மீண்டும் அவன் அழைத்துக் கொண்டே இருக்க, எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அவனிற்குப் பதற்றம் அதிகமாகியது. அவனது பதற்றம் சசிகலா மற்றும் ராஜாராமிற்கும் பதற்றத்தைக் கொடுத்தது.

“இந்தப் பொண்ணு சொல்லாம எங்கேயும் போக மாட்டாளே!! ஒரு வேளை அவங்க வீட்டுக்குப் போயிருப்பாளோ! விபி நீ அவளோட பெரியப்பாவுக்கு ஃபோன் பண்ணிப் பார்.” என்று சசிகலா கூறவும் அவன் வேகமாக நடராஜனிற்கு அழைக்க, அசோக் தான் அவரது கைப்பேசியை எடுத்தான்.

“அசோக் நந்தனா அங்கு இருக்காளா?” என்று அவன் கேட்கவும், அசோக்கிற்கு புரியவில்லை.

“என்ன ஆச்சு? நந்தனா இங்க இல்லையே!! எதுவும் பிரச்சனையா?” என்று அவன் கேட்கவும், நந்தனா காணவில்லை என்ற விஷயத்தைக் கூறவும் அவனிற்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. உடனே கைப்பேசியை வைத்து விட்டு மேனகா மற்றும் நடராஜனிடம் விஷயத்தைக் கூறிவிட்டு அவர்களுடன் விபீஷணன் வீட்டிற்கு வந்து விட்டான்.

அவர்கள் வரவும், அலுவலகம் சென்றிருந்த கவுதம் மற்றும் சுவாதி வரவும் சரியாக இருந்தது. அவர்களை அங்குக் காணவும் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் தான் நந்தனா காணவில்லை என்ற விஷயம் கேள்விப்பட்டதும் பதறி விட்டார்கள்.

அனைவரும் மாற்றி மாற்றி விபீஷணனிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க, அவனோ உலகமே அழிந்து விடும் நிலையில் தலையில் கையை வைத்து உட்கார்ந்திருந்தான். உண்மை தானே!! நந்தனா தான் அவனது உலகம். அவளைக் காணவில்லை என்று தெரிந்ததில் இருந்து பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருக்கிறான்.

“விபி இப்படியே உட்கார்ந்திருந்தால் யார் நந்தனாவைப் போய் தேடுறது? எழுந்திரி நந்தனாவுக்கு ஒன்னும் ஆகாது. அவள் சீக்கிரமே கிடைச்சுடுவா பார்.” என்று கவுதம் அவனைத் தேற்றி நந்தனாவைத் தேட அனுப்பி வைத்தான்.

அசோக்கும் விபீஷணனுடன் சென்றான். அவர்கள் நந்தனா செல்லும் அனைத்து இடத்திற்கும் சென்று விசாரித்து விட்டனர். ஆனால் பலன் தான் இல்லை. எங்கும் நந்தனா இல்லை. நேரம் ஆக ஆக அவர்களுக்குப் பயம் அதிகரித்தது. எப்போதும் கார் எடுத்துச் செல்லாத நந்தனா அன்று ஏன் கார் எடுத்துக் கொண்டு போனாள் என்பதே கேள்விக் குறியாக இருக்க, இப்போது அவள் இல்லை என்பது இன்னும் பயத்தை உண்டாக்கியது.

இரவு முழுவதும் தேடி அலைந்து களைத்துப் போய் தான் விபீஷணன் வீட்டிற்கு வந்தான் அசோக்குடன். அவனைப் பார்க்கவே யாராலும் முடியவில்லை. விஷயம் கேள்விப்பட்டு ஹரிணி, நர்மதா என்று அனைவரும் இங்கு வந்து விட்டனர்.

நந்தனா அப்படி எங்கு தான் சென்றிருப்பாள் என்று புரியாத புதிராகவே இருந்தது. அப்போது தான் அசோக்,”இல்லை இதுக்கு மேல வெயிட் பண்ண வேண்டாம், நாம போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாம்.” என்று அவன் கூறவும், மற்றவர்களுக்கும் அது சரியென்று தோன்ற நடராஜன், ராஜாராம், அசோக் மற்றும் விபீஷணன் காவல் நிலையத்திற்குச் செல்ல தீர்மானம் ஆனது.

விபீஷணனின் கண்களில் ஜீவனே இல்லை. வெறும் உடல் மட்டும் தான் அவனிடம் இருக்கிறது. அவனது உயிர் இங்கு இல்லவே இல்லை. மற்றவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைச் செய்தான். கிட்டத்தட்ட ரோபோ போல் தான் அவன் செயல்பட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கவே அனைவருக்கும் கண்கள் கலங்கியது. அவனிற்காகவாவது நந்தனா சீக்கிரம் வீடு திரும்ப வேண்டுமென்று பிரார்த்தித்தனர்.

காவல் நிலையத்தில் நிறையக் கேள்விகள், குற்றச்சாட்டுகள் என்று அனைத்தையும் கடந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு நந்தனாவை தேடும் பணி ஆரம்பம் ஆனது.

விபீஷணன் தான் மிகவும் உடைந்து போயிருந்தான். கனடாவில் உள்ள ராகவிக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டு அவள் விபீஷணனை அழைக்க, அவனோ எடுக்கவே இல்லை. முற்றும் இழந்தவன் போல் தான் அவன் இருந்தான். சாப்பிட அழைத்ததற்குக் கூட நந்தனாவை கண்ணில் காணும் வரை எதையும் சாப்பிட மாட்டேன் என்று கூறி பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்காமல் நந்தனாவிற்காகக் காத்திருந்தான்.

நந்தனா காணாமல் சென்று ஒன்றரை நாட்கள் ஆகி விட்டது. அவள் கிடைப்பாளா என்று தெரியாமலே அனைவரும் காத்திருந்தனர். அடுத்த நாள் காலை ராஜாராமிற்கு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. நந்தனா தான் கிடைத்து விட்டாள் என்று அவசரமாக எடுக்க, அவர்களுக்குக் கிடைத்தது என்னவோ அவர்களது வாகனம் மட்டும் தான்.

சரி அது மூலம் ஏதாவது தகவல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று காவல் நிலையம் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் அவர்களுக்குக் கிடைத்த பதில் தனியாக இருந்த வாகனத்தைத் திருடர்கள் திருடிக் கொண்டு வந்தது மட்டும் தான். நந்தனா பற்றி எந்தத் தகவலும் இல்லை.

மீண்டும் சோகத்துடன் வீட்டிற்கு வந்தனர். அப்படி வாகனத்தை நிறுத்தி விட்டு நந்தனா எங்கு தான் சென்றிருப்பாள் என்று புரியாமல் அனைவரும் குழம்பித் தவித்தனர். விபீஷணன் அவனது கையாலாகாத நிலையை எண்ணி தன்னையே நிந்தித்துக் கொண்டிருந்தான்.

அந்த நாளின் இரவில் மீண்டும் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. மிகுந்த எதிர்பார்ப்போடு தான் ராஜாராம் எடுத்தார். ஆனால் அவர்கள் கூறிய விஷயம் கேட்டு அதிர்ந்து விட்டார்.

அரசு மருத்துவமனையில் நந்தனா வயதுடைய பெண் சடலம் ஒன்று உள்ளது அது தங்கள் வீட்டுப் பெண் தானா என்று பார்த்து அடையாளம் கூறத் தான் அழைத்திருந்தனர்.

அதை வீட்டில் ராஜாராம் கூறவும் விபீஷணன் துடித்து விட்டான்,”இல்லை அது என்னோட நந்தனாவா இருக்காது. நான் வர மாட்டேன். கண்டிப்பா அது என்னோட நந்தனா கிடையாது.” என்று அவன் கத்தி அழுக, பார்த்தவர்களுக்கு மனம் கனத்தது.

இருந்தாலும் போகாமல் இருக்க முடியாது என்று விபீஷணனைச் சமாதானப்படுத்தி அவனை அழைத்துச் சென்றார்கள். அவனால் தைரியமாக உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. அசோக்கும் ராஜாராமும் தான் அவனைக் கைத் தாங்களாக அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

அங்குப் பல சடலங்கள் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு பென்சில் வைக்கப்பட்டு இருந்தது. நான்கு சடலங்கள் தள்ளி இருந்த ஒரு சடலத்தின் அருகே காவல் அதிகாரி அவரை அழைத்துச் சென்றார். அந்த மருத்துவமனையில் வேலைப் பார்க்கும் ஊழியர் அந்தச் சடலத்தின் மேல் உள்ள வெள்ளைத் துணியை அகற்ற, அவர்களால் பார்க்கவே முடியவில்லை. காரணம் முகமெல்லாம் சிதைந்து போயிருந்தது.

“சார், உங்களோட கார் நின்ன இடத்துல இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு ரெயில்வே ட்ராக் இருக்கு. அங்கத் தான் நாங்க இந்தச் சடலத்தைப் பார்த்தோம். ட்ரெயின் அடிச்சு தூக்கிருச்சு போல. அதான் முகம்  உடம்பு எல்லாம் சிதைஞ்சுருச்சு. இதாங்க இது இவங்களோட திங்க்ஸ். அவங்கப் பக்கத்துல இருந்துச்சு.” என்று நந்தனாவின் கைப்பேசி, பை மற்றும் அவளது நகைகளைக் கொடுக்க, அதை வாங்கிப் பார்த்த ராஜாராம் கதறிவிட்டார்.

“அய்யோ நந்தனா எங்களை விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு?” என்று அவர் பெருங்குரல் எடுத்துக் கதற, விபீஷணனின் நிலையைக் கூறவே தேவையில்லை. சாப்பிடாமல் இருந்தது, இப்போது நந்தனா இறந்து விட்டாள் என்ற செய்தி எல்லாம் கேட்டு அவனை ஒரு வழியாக்க அப்படியே மயங்கிச் சரிந்தான் அந்த இடத்திலே.

அசோக் அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு வெளியே அழைத்துச் சென்றான். அவனாலுமே நந்தனா இறந்ததைக் கேட்டு ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அடுத்து அடுத்து காரியங்கள் மடமடவென நடக்க ஆரம்பித்தது. பிரேதப் பரிசோதனைச் செய்த உடம்பு நிறைய நேரம் வைத்திருக்கக் கூடாதென்று அன்றைய மாலையே தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விபீஷணன் மயக்கத்திலிருந்து இன்னும் விழிக்கவே இல்லை. அவன் தான் சடங்கு எல்லாம் செய்ய வேண்டும். அதனால் அவள் விழிக்கக் காத்திருந்தனர். ராகவிக்கும் விஷயம் கேள்விப்பட்டு அவளும் உடனே இந்தியா கிளம்பிவிட்டாள்.

கிட்டத்தட்ட மாலை நெருங்கும் வேளையில் தான் விபீஷணன் கண் விழித்தான். அவனிற்கு நடந்து முடிந்தது எல்லாம் கணவாக தான் இருக்கும். நந்தனா இங்கே தான் இருப்பாள், நாம் கண்டது கெட்ட கனவு தான் என்று நினைத்துக் கொண்டே அவன் எழுந்திருக்க, சசிகலா உள்ளே வந்தார். அவரது முகமும் அழுது அழுது வீங்கி இருந்ததே அவனுக்குப் புரிந்தது நந்தனா உண்மையிலே தன்னுடன் இல்லை என்று.

அவனது அம்மாவைக் கட்டிக் கொண்டு,”அம்மா நிஜமா நந்தனா இறந்துட்டாளா? எப்படி மா முடிஞ்சது அவளால என்னை விட்டுட்டு போக? அவள் இல்லாமல் என்னால எப்படி இருக்க முடியும்?” என்று பெருங்குரலில் அவரிடம் கேட்டு அவன் அழுக, சசிகலாவால் தாங்கிக் கொள்ளவே முடியலை.

இருந்தாலும் அடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் நடந்தாக வேண்டுமே!! அதனால்,”விபி எனக்குப் புரியுது. ஆனால் அடுத்து நடக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் நடந்து தான் ஆகனும். அதை நீ தான் செய்யனும் விபி.” என்று அவர் கூற, வேகமாக சசிகலாவை விட்டுவிட்டு மெத்தையில் அமர்ந்தான்.

“முடியாது மா. அது என்னோட நந்தனா கிடையாது. நான் நம்ப மாட்டேன். என்னோட நந்தனா கண்டிப்பாக என்னை விட்டுட்டு போக மாட்டாள். அவளுக்கு என் கூடச் சேர்ந்து வாழ ரொம்ப ஆசை மா. என் நந்தனா என்கிட்ட வருவா. அது யாரோ!! நான் எதுவும் செய்ய மாட்டேன்.” என்று உறுதியாகக் கூற, சசிகலா அவனை எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவன் முடியாது என்று வீம்பாக இருந்தான்.

வேறு வழியில்லாமல் அவர் அவனை விட்டுட்டு கீழே சென்று விஷயத்தைக் கூற, அனைவரும் மாற்றி மாற்றி அவனை அழைத்தும் அவன் வரவே இல்லை. கடைசியில் தந்தையின் ஸ்தானத்திலிருந்து நடராஜனே அனைத்துக் காரியங்களையும் செய்து முடித்தார்.

———-‐———————————

முதல்ல எல்லாருக்கும் ரொம்ப நன்றி மக்களே. நான் கூடக் கதை நல்லா இல்லையோ அதனால தான் படிக்கலையோனு யோசிச்சேன். பட் நீங்க சொன்ன ரீசன் valuable ஆ இருந்தது. இப்போ I am happy. Flashback முடிக்கணும்னு இன்னைக்கு யூடி ரொம்பவே பெருசா போட்டுட்டேன். சங்கடப்படாமல் ரீட் பண்ணிட்டு உங்களோட கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement