Advertisement

“ஏய் உன் பேர் கூட எனக்குத் தெரியாது உன்னை முதல்ல பார்க்கும் போது. பார்த்த உடனே நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். நம்மோட செகெண்ட் மீட்டிங்ல தான் உன் பேரே தெரியும். அதுக்கு முன்னாடியே நான் உன்கிட்ட ப்ரோபோஸ் பண்ணிட்டேன். மேடம்கு ஞாபகம் இருக்கா?” என்று அவன் கேட்க, அவனது குரலே ஏதோ ஒட்டாத தன்மையில் இருக்க, நந்தனாவிற்கு அழுகை வந்து விட்டது.

அவள் பேசியது தவறு என்று தெரியும். இருந்தாலும் அவனது கோபம் அவளை மிகவும் பாதித்தது. இது அவர்களது முதல் சண்டை. அவள் எதுவும் பேசவில்லை. அவனும் எதுவும் பேசமால் வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டினான்.

வீட்டிற்கு வரும் வரை கூட எதுவும் பேசவில்லை. சசிகலா தான் கதவை இவர்களுக்குத் திறந்து விட்டார். அவர்களது அமைதி அவருக்கு வித்தியாசமாகப் படவில்லை. அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அப்படியே மாடி ஏறி அவர்களது அறைக்குச் சென்று விட்டனர்.

உள்ளே நுழைந்ததும் நந்தனா விபீஷணனின் கையைப் பிடித்து,”சாரி அத்தான். எனக்குப் புரியுது நான் பேசுனது தப்புனு. ஆனால் ஏன் அப்படிப் பேசுனேன்னு எனக்குத் தெரியலை. ஐ ஆம் ரியலி சாரி அத்தான்.” என்று அழுது கொண்டே அவள் கூறினாள்.

அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவளது அழுகை அவனிற்குப் பிடிக்கவில்லை. முதல் முறை அவன் முன்னால் அழுகிறாள். அது அவனிற்குக் கஷ்டமாக இருந்தது. அவளை அப்படியே இழுத்து அவன் அணைத்துக் கொள்ள, அவளது அழுகை அதிகமாகியது.

அவளது முதுகைத் தட்டிக் கொடுத்து,”விடு டா. எனக்கும் புரியுது. நீ என் மேல உள்ள பொசசிவ்ல தான் இப்படிப் பேசிட்டனு. எனக்குமே யாராவது என்கிட்ட வந்து உன்னை நிறையப் பேர் லவ் பண்ணாங்கனு சொன்னா கோபம் வரத் தான் செய்யும். ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட். நீ அழுகாத லட்டுக் குட்டி.” என்று அவளைச் சமாதானப்படுத்தினான் விபீஷணன்.

“சாரி அத்தான்.” என்று மட்டும் அவள் கூற, அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அதன் பின்னர் அவளைச் சமாதானப்படுத்தி அவளைத் தூங்க வைத்து விட்டுத் தான் அவன் தூங்கினான்.

அடுத்த நாள் எதுவும் நடக்காதது போல் தான் இருந்தனர் இருவரும். நாட்கள் நகர அதை அவர்கள் மறந்தும் போய் இருந்தனர்.

நந்தனாவிற்குக் கல்லூரி மதியம் வரை தான். அதனால் சில நேரங்களில் விபீஷணனிற்கு மருத்துவமனைக்குச் சென்று மதிய உணவை அவனுக்கு அழித்து விட்டுத் தானும் அவனுடன் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வருவாள்.

ஒரு நாள் அதாவது அவர்களுக்குத் திருமணமாகி மூன்று மாதங்களாகி இருந்த நிலையில் அவள் மதிய உணவை எடுத்துக் கொண்டு விபீஷணனைப் பார்க்க வந்தாள்.

அவள் பல நாட்கள் அங்கு வந்திருந்ததால், அங்கிருந்த பலருக்கும் அவளை நன்றாகவே தெரியும். அது மட்டுமல்லாமல் நந்தனாவும் அவர்களுடன் நன்றாகப் பேசுவாள். அனைவரிடமும் ஒரு வணக்கத்தை வைத்து விட்டு விபீஷணன் அறைக்குச் சென்றாள்.

விபீஷணன் அப்போது தான் வெளி நோயாளிகளைப் பார்த்து முடித்திருந்தான். நந்தனா கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும், யாரோ நோயாளி என்று நினைத்த விபீஷணன் நந்தனா உள்ளே நுழையவும் வேகமாக எழுந்து வந்து அவளை அணைத்துக் கொண்டான்.

“என்ன அத்து ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்கிற மாதிரி இப்படிக் கட்டிப் பிடிக்கிறீங்க?” என்று கேட்டாள்.

“தெரியலை லட்டு இன்னிக்கு என்னமோ தப்பா நடக்கிற மாதிரி தோனுது டா. எனக்கு மனசே சரியில்லை நந்தனா.” என்று அவன் கூறவும், எதையோ நினைத்துப் பயப்படுகிறான் என்று நினைத்தாள் நந்தனா. ஆனால் அவனது பயம் உண்மையாகப் போகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை.

“அத்தான் ஒன்னும் இல்லை. எல்லாம் நல்லா தான் நடக்குது. நீங்க தேவையில்லாமல் பயப்படாமல் வந்து சாப்பிடுங்க வாங்க. எனக்கும் இன்னைக்கு பயங்கரமா பசிக்குது.” என்று அவள் கூறவும், மற்றதை மறந்து வேகமாகச் சென்று கையைக் கழுவிக் கொண்டு வந்தான்.

“ம் இன்னைக்கு நான் உங்களுக்கு ஊட்டி விடுறேன் சரியா.” என்று அவள் கூறிக் கொண்டு தட்டில் சாப்பாட்டை வைத்து சாம்பார் மற்றும் பொரியல் வைத்தாள். பின்னர் ஒரு வாய் எடுத்து ஊட்டினாள் அவனிற்கு. அவனும் எதுவும் கூறாமல் அவள் கொடுத்ததை வாங்கிக் கொண்டு அவளிற்குத் தட்டில் இருக்கும் சாதத்தை எடுத்து ஊட்டினான்.

இருவருக்கும் இது தான் கடைசியாக அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி உண்பது என்பதைத் தெரியாமலே ஊட்டி விட்டுக் கொண்டனர். இருவரும் அன்று எப்போதும் விட நிறையவே சாப்பிட்டனர். கையைக் கழுவி விட்டு பாத்திரத்தை எடுத்துப் பையில் வைத்து விட்டுக் கிளம்பினாள் நந்தனா.

எப்போதும் விபீஷணன், நந்தனா வரும் போது எல்லாம் அவள் கூடவே கீழே வரை வந்து அவள் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு செல்லும் வரை இருந்து பார்த்து விட்டுத் தான் அவனது அறைக்குச் செல்வான். அன்றும் அவன் அவளுடன் அறையை விட்டு வெளியே வர, அப்போது வேகமாக அங்கு வந்த செவிலியர்,”டாக்டர் ஒன் நாட் சிக்ஸ் பெட்ல இருக்கிற பேஷண்ட்க்கு திடீர்னு ஃபிக்ஸ் வந்துருச்சு. லிங்கம் டாக்டரோட பேஷன்ட். ஆனால் அவர் இங்க இல்லை டாக்டர். நீங்க வரீங்களா?” என்று கேட்கவும் நந்தனா அவனிடம் தானே சென்று கொள்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, விபீஷணனிற்கு அவள் போவதைப் பார்த்து ஏதோ இனம் புரியாத உணர்வு தோன்றியது. இருந்தும் அப்போதைக்கு நோயாளி தான் முக்கியம் என்று அவன் அவரைப் பார்க்கச் சென்று விட்டான்.

ஒரு வேளை நந்தனாவுடன் சென்றிருந்தாள் பல அனர்த்தங்களைத் தடுத்து இருக்கலாமோ!! நந்தனாவை அவன் இழந்திருக்க நேர்ந்திருக்க மாட்டானோ என்னவோ!! எல்லாம் விதியின் செயல்.

வீட்டிற்கு வந்த நந்தனாவிற்கு மிகுந்த உற்சாகம். மருத்துவமனையிலே செய்தியை விபீஷணனிடம் கூற வேண்டும் என்று நினைத்தாள். வேகமாக அவனது அறைக்கு மீண்டும் செல்ல, அங்கிருந்த இன்னொரு செவிலியர் அவளிடம்,”மேம் இப்போ தான் டாக்டர் ஆப்ரேஷன் ரூம்கு போனாங்க. அவர் வர எப்படியும் த்ரீ டூ ஃபோர் ஹவர்ஸ் மேல ஆகிடும் மேம்.” என்று அவர் கூற, சரி அவன் வீட்டிற்கு வந்ததும் அவனிடம் விஷயத்தைக் கூறிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து வீட்டிற்கு வந்து விட்டாள். அது அவள் செய்த தவறா அல்லது காலத்தின் கோலமா என்று புரியவில்லை.

ஆனால் அவள் வீட்டிற்குள் வந்த அடுத்த நிமிடம் விபீஷணனிடம் இருந்து அழைப்பு வந்தது. வேகமாகக் கைப்பேசியை எடுத்து காதில் வைத்து,”அத்து நீங்க ஆப்ரேஷன் தேட்டர் போயிருக்கிறதா நர்ஸ் சொன்னாங்க. ஆனால் எனக்கு கால் பண்றீங்க?” என்று கேட்டாள்.

“ஆமா டா போனேன். அந்த பேஷன்ட்கு வேற ஒரு டாக்டர் தான் ஆப்ரேஷன் பண்ணுறதா இருந்தது. ஆனால் அவர் வரலைனு தான் நான் போனேன். பட் அவர் வந்துட்டாரா ஸோ நான் வெளில வந்துட்டேன்.” என்று அவன் கூறவும், அவளிற்கு அய்யோ என்று இருந்தது.

“சரி அத்து. இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வரீங்களா? உங்ககிட்ட முக்கியமா ஒன்னு சொல்லனும்.” என்று அவள் கூறவும், அவன் யோசித்தான்.

“என்ன விஷயம் லட்டு?”

“நோ இது ஃபோன்ல சொல்ல முடியாது. நேர்ல தான் சொல்ல முடியும். ஸோ நீங்க கொஞ்சம் வீட்டுக்குச் சீக்கிரம் வாங்க ஒகே வா.” என்று கூற, அவனும் சரியென்று கூறிவிட்டு வைத்து விட்டான்.

அவளும் களைப்பாக இருக்கிறது என்று தூங்கிவிட்டாள். சரியாக இரண்டு மணிநேரம் தூங்கி இருப்பாள். திடீரென அவளது காதின் பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்க, தூக்கக் கலக்கத்துடனே அந்தச் சத்தம் என்னவென்று அவள் யோசிக்க, அது அவளது கைப்பேசியில் ஒலி என்று புரிந்து அதைத் தேடி எடுத்து,”ஹலோ” என்று தூக்கக் கலக்கத்திலே கூறினாள்.

ஆனால் எதிரில் சொல்லப்பட்ட விஷயத்தைக் கேட்டு விட்டு பட்டென்று எழுந்து அமர்ந்து விட்டாள் நந்தனா. அவளது கண்களிலிருந்து அவளது அனுமதி இல்லாமலே கண்ணீர் அருவியாகக் கொட்டுகிறது. அதைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் வேகமாக எழுந்து அவர்களது அறையிலிருந்து வெளியே வந்தாள். வீட்டின் கூடத்தில் யாருமில்லை. அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் நந்தனா இல்லை. அங்கு வைத்திருந்த இன்னொரு காரின் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டாள்.

Advertisement