Advertisement

விபீஷணன் மற்றும் நந்தனாவிற்குத் திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில், விபீஷணனின் கல்லூரிக் கால நண்பர்கள் கெட் டுகெதர் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். வருடா வருடம் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அனைத்து வருடங்களும் விபீஷணன் சென்றது இல்லை. அவர்கள் ஏற்பாடு செய்த வருடம் அவனிற்கு நேரம் இருந்தால் கண்டிப்பாகச் சென்றுவிடுவான். இந்த வருடமும் அவனிற்கு நேரமிருந்ததால் அவன் செல்லலாம் என்று முடிவெடுத்து இருந்தான்.

திருமணம் ஆனவர்கள் அனைவரும் அவரவர் மனைவி அல்லது கணவனுடன் தான் அந்த விழாவிற்கு வருகின்றனர். அதனால் விபீஷணனும் நந்தனாவை அழைத்துக் கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தான்.

கெட் டுகெதர் சென்னையின் பிரபலமான உயர்தர உணவகத்தின் திறந்த வெளி இடத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய பேச்சு விபீஷணன் பற்றித் தான். அவனைக் கிட்டத்தட்ட பல வருடங்களாகப் பார்க்கின்றனர். இதுவரை திருமணத்தில் ஈடுபாடு இல்லாதவன், அதே போல் எந்தப் பெண் வந்து அவனிடம் காதலைச் சொன்னாலும் அவர்களைத் தவிர்த்தவன் இன்று அவனே காதல் திருமணம் செய்தது அவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. 

அந்தக் கூடத்தில் சிலர் அவனுடையத் திருமணத்திற்கும் வந்திருந்தனர். அவர்கள் எல்லாம் விபீஷணன் மற்றும் நந்தனாவின் ஜோடி பொருத்தத்தைப் பார்த்து அசந்து தான் போனார்கள். நந்தனாவிற்குத் தான் விபீஷணன் இத்தனை வருடம் காத்திருந்தான் போல என்று நினைத்தனர். அவனது திருமணத்திற்கு வராதவர்கள் நந்தனாவை காண்பதற்காகவே அன்று வந்திருந்தனர். அதிலும் அவனிடம் காதலைச் சொன்ன பெண் அப்படி என்ன தன்னிடம் இல்லாதது அந்தப் பெண்ணிடம் இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே வந்திருந்தாள்.

நந்தனா சாம்பல் நிறப் புடவை கட்டியிருந்தாள். அந்தப் புடவையின் பார்டர் கருப்பு நிறத்தில் கொஞ்சம் பட்டையாக இருந்தது. கருப்பு நிறத்திலே ரவிக்கையும் அணிந்து இருந்தாள். அதே போல் அலங்காரமும் பகட்டாக இல்லாமல் சாதாரணமாகவே செய்து இருந்தாள். ஆனால் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தாள். விபீஷணனும் அவளது புடவைக்குப் பொருத்தமாக அவனும் சாம்பல் நிறத்தில் சட்டையும் கருப்பு நிறத்தில் ஜீன்சும் அணிந்திருந்தான். 

இருவரும் ஜோடியாகக் கைகளைக் கோர்த்துக் கொண்டு உள்ளே நுழைந்ததைப் பார்க்கப் பார்க்க அத்தனை அம்சமாக இருந்தனர். விபீஷணனிடம் காதலைச் சொல்லி அவன் அதை ஏற்றாமல் ஒதுக்கிய பெண்ணுமே இவர்களது ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து ஆ என்று அசந்து தான் போனாள்.

“என்ன அத்து எல்லாரும் நம்மளை இப்படிப் பார்க்கிறாங்க?” என்று மெதுவாக விபீஷணனைப் பார்த்துக் கேட்டாள் நந்தனா.

“அது ஒன்னுமில்லை லட்டு நீ ஃப்ர்ஸ்ட் டைம் வரல!! அதான் உன்னை அதிசயமா பார்க்கிறாங்க.” என்றான் விபீஷணன்.

நந்தனா பதில் பேசுவதற்கு முன்பு விபீஷணன் வகுப்புத் தோழன் கமல் அவர்களிடம் வந்து,”ஹலோ சிஸ்டர். நான் கமல், உங்க மேரேஜ்கு வந்தேன். ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான்.

“ம் ஞாபகம் இருக்கு. நீங்க தான மதுரை கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்றீங்க?”

“எஸ் கரெக்ட். நானே தான். பரவால ஞாபகம் வைச்சிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். என்ன டா எல்லாரும் இப்படி ஆச்சரியமா பார்க்கிறாங்கனு பார்க்கிறீங்களா?” என்று கேட்டான்.

ஆமாம் என்று அவள் தலையசைக்க, அவனே விபீஷணனைப் பார்த்துக் கொண்டு,”அது ஒன்னுமில்லை சிஸ்டர், நாங்க காலேஜ்ல படிக்கும் போது விபிக்கு நிறைய ப்ரோபோசல்ஸ் வந்தது. ஆனால் எல்லாரையும் ரிஜெக்ட் பண்ணிட்டான். அது மட்டுமில்லாம இவன் வொர்க் பண்ணும் போது கூட லவ்னு சொன்ன எல்லாரையும் முகத்துக்கு நேரா நோ சொல்லி அனுப்பிட்டான். நாங்க கூட இவன் சாமியாரா தான் போகப் போறான்னு நினைச்சோம். ஆனால் திடீர்னு ஒரு நாள் அவனுக்குக் கல்யாணம்னு சொன்ன போது நாங்க உண்மையிலே ஷாக் ஆகிட்டோம். சரி பையன் லைஃப்ல செட்டில் ஆகப் போறான்னு யோசிக்கிறதுக்கு முன்னாடியே இன்னொரு ஷாக்க கொடுத்தான். அதான் உங்களை அவன் லவ் பண்ணி மேரேஜ் பண்றான்னு கேள்விப்பட்டதும் எங்களுக்கும் இன்னும் பயங்கர ஷாக். அதான் உங்க மேரேஜ்கு வராதவங்க உங்களை ஆவலா பார்க்கிறாங்க. நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம்.” என்று நீண்டதொரு பிரசங்கத்தைக் கொடுத்தான்.

“டேய் சும்மா இரு டா. நான் ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் கிடையாது. ரொம்ப ஓட்டாத சரியா. அப்புறம் நான் தான் காசு கொடுத்து சொல்ல வைச்சேன்னு நினைச்சுட போறா டா.” என்று சிரித்துக் கொண்டே கூறினான் விபீஷணன்.

“அச்சச்சோ அப்படி எல்லாம் இல்லை சிஸ்டர். இவனுக்கு ப்ரோபோஸ் பண்ணப் பொண்ணுங்க பெயர் எல்லாம் என்னால சொல்ல முடியும்.” என்று கூறி வரிசையாக ஒரு ஐந்து பெயர் கூறினான். அதில் நந்திதாவின் பெயரும் வந்தது.

(நந்திதாவை மறந்து இருக்க மாட்டீர்கள். அவளிடம் தான் விபீஷணன் அவனது லட்டுவை பற்றிக் கூறிக் கொண்டிருக்கிறான்.)

“அதிலும் மத்தவங்க எல்லாம் இவன் முடியாதுனு சொன்னதும் இவனை விட்டுட்டாங்க. ஆனால் அந்த நந்திதா பொண்ணு கடைசி வரைக்கும் இவன் பின்னாடியே சுத்திட்டு இருந்துச்சு. பாவம் அந்தப் பொண்ணுக்கு மட்டும் இவனுக்குக் கல்யாணம் ஆனது தெரிந்தால் கண்டிப்பா ஒரு நாலு இல்லை ஐந்து பக்கெட் அளவுக்குக் கண்ணீர் விட்டுருப்பா நிச்சியமா.” என்று அவனும் சிரித்துக் கொண்டே கூறினான்.

“டேய் டேய் போதும் டா. நந்திதா இந்நேரம் என்னை மறந்துருப்பா. நீ சும்மா இரு சரியா.” என்றான் விபீஷணன்.

“என்ன டா நீங்க இரண்டு பேரும் மட்டும் பேசிட்டு இருக்கீங்க? இங்க வாங்க.” என்று இன்னொரு நண்பன் அழைக்க, மூவரும் அங்குச் சென்றார்கள்.

விளையாட்டு, பாட்டு, பேச்சு என்று அன்றைய இரவு நன்றாகக் கழிந்தது அங்கு வந்தவர்களுக்கு. இரவு உணவை முடித்துக் கொண்டு விபீஷணன் மற்றவர்களிடம் விடைபெற்று நந்தனாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

வரும் வழியில் நந்தனா எதுவும் பேசவில்லை. அவளது அமைதி விபீஷணனிற்கு வித்தியாசமாகப் பட்டது. அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு,”என்ன டா ஏதோ யோசனைல வர மாதிரி இருக்கு? என்னாச்சு என்னோட லட்டுக்கு?” என்று கேட்டான்.

“காலேஜ் படிக்கும் போது பயங்கர ரோமியோவா இருந்துருப்பீங்க போல?” என்று கேட்டாள்.

“ஏய் என்ன டா இப்படிக் கேட்டுட்ட?”

“கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க அத்தான்.” என்றாள். அவளது அத்தான் என்ற அழைப்பிலே அவள் கோபமாக இருக்கிறாள் என்று புரிந்து கொண்டாள். அவள் அவனை அத்தான் என்று சோகமாகவும் கோபமாகவும் இருக்கும் போது மட்டும் தான் அழைப்பாள்.

“ஏய் கமல் சும்மா விளையாடுறான்.”

“பொய் சொல்லாதீங்க. அத்தனைப் பொண்ணுங்க வந்து உங்களுக்கு லவ் ப்ரோபோஸ் பண்ணிருக்காங்க. என்கிட்ட சொன்னீங்களா நீங்க?” கோபமாகக் கேட்டாள் நந்தனா.

“இது எல்லாம் எனக்குப் பெரிய விஷயமா தெரியலை லட்டுக் குட்டி. அதை விட எனக்கு அதெல்லாம் கமல் சொல்ற வரைக்கும் ஞாபகத்துல கூட இல்லை தெரியுமா?” என்றான் அவன்.

“உண்மையாவா சொல்றீங்க?”

“அட ஆமா லட்டுக் குட்டி. என்னை நம்ப மாட்டியா நீ?” என்று கேட்டான்.

“ம் நம்புறேன்.” என்று மட்டும் கூறினாள். 

அதன் பின்னர் எதுவும் பேசாமல் அவள் அமைதியாக இருக்க, விபீஷணனும் எதுவும் பேசவில்லை. திடீரென நந்தனாவே,”அப்போ இதுக்குப் பதில் சொல்லுங்க. யார் அந்த நந்திதா?” என்று கேட்டாள்.

“நந்திதா…” என்று அவன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு,”ஏய் அவள் என்னோட ஜூனியர். எனக்கு ப்ரோபோஸ் பண்ணும் போது மட்டும் தான் நான் பார்த்துருக்கிறேன். அதுக்கு அப்புறம் நான் மறந்துட்டேன். இன்ஃபேக்ட் கமல் சொல்லும் போது தான் ஞாபகம் வந்தது.” என்றான் விபீஷணன்.

“ஒரு வேளை அவங்க பேரும் என் பேரும் ஒரே மாதிரி இருக்கிறதுனால தான் உங்களுக்கு என்னைப் பிடிச்சதோ?” என்று கேட்டாள் நந்தனா. அவளிற்கே தெரியும் அவள் கேட்பது அபத்தமான ஒன்று என்று தெரியும். இருந்தாலும் கேட்டு விட்டாள்.

ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான் விபீஷணன். அந்த அதிர்ச்சியில் அவன் காரை ஓரமாக நிப்பாட்டி விட்டான் விபீஷணன். அதன் பிறகு தான் அவளிற்கு அப்படிக் கேட்டு இருக்கக் கூடாதென்றும் அதன் வீரியமும் புரிந்தது.

ஒருவிதக் குற்றவுணர்ச்சியாகி விட்டது நந்தனாவிற்கு. அவள் அவனைப் பார்க்கவே இல்லை. விபீஷணனிற்குப் புரிந்தது அவள் ஏதோ ஒரு கோபத்தில் கேட்டுவிட்டாள் என்று. இருந்தாலும் அவள் கேட்ட கேள்வி அவனிற்குக் கோபத்தைத் தந்தது.

Advertisement