Advertisement

பின்னர் பொதுவாகப் பேசிவிட்டு, இன்னும் முப்பத்தி ஐந்து நாட்களில் திருமணம் என்றும் திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டதும் விபீஷணனின் குடும்பம் கிளம்பியது. இது காதல் கல்யாணம் என்பதால் விபீஷணன் மற்றும் நந்தனாவால் தனியாக எதுவும் பேச முடியவில்லை.

வீட்டிற்குள் வந்ததும் விபீஷணன் செய்த முதல் வேலை அவனது அறைக்கு வந்து நந்தனாவை வீடியோ கால்லில் அழைத்தது தான். நந்தனாவும் அப்போது தான் மேனகாவிற்கு உதவிச் செய்து விட்டு அவளது அறைக்கு வந்தாள்.

அவளது கைப்பேசி ஒலி எழுப்ப, அது விபீஷணன் என்று தெரிந்து கொண்டே எடுத்துப் பார்க்க, அவன் தான் அழைத்திருந்தான். மகிழ்ச்சியுடன் அவள் அலைப்பேசியை எடுத்தாள்.

“ஏய் லட்டுக் குட்டி என் கண்ணே பட்டுரும் போல இருக்கு. அவ்ளோ அழகா இருந்த டா இன்னைக்கு. உம்ம்ம்ம்மா.” என்று அவன் கூற, அவளிற்கு இன்ப அவஸ்தையாக இருந்தது.

“அச்சோ சும்மா இருங்க அத்து. எனக்கு எல்லார் முன்னாடியும் உட்கார்ந்திருந்தது எப்படி இருந்துச்சு தெரியுமா? இதுல நீங்க வேற என்னையே பார்த்துட்டு இருந்தீங்க. எனக்கு ஒரே ஷையா இருந்துச்சு.” என்று சிணுங்கிக் கொண்டே கூறினாள்.

“ஹா ஹா. அது என் தப்புக் கிடையாது லட்டு. உன்னை யார் அழகா இருக்கச் சொன்னது? அதை விட அந்தப் புடவையில சூப்பரா வேற இருந்த!! என்னால வேற எங்கயும் பார்க்க முடியலை. ஸோ இட்ஸ் நாட் மை ஃபால்ட்.” என்று சற்றும் அலட்டிக் கொள்ளாமல் அவன் கூற, அவனைப் பார்த்து முறைத்தாள் நந்தனா.

பின்னர் விபீஷணன் அவளைச் சீண்டி, வெட்கப்பட வைத்து, வம்பிழுத்து அவளிடம் சிறிது திட்டும் வாங்கி விட்டே கைப்பேசியை வைத்தான் விபீஷணன். அந்த நிமிடம் இந்த உலகத்திலே மிகவும் சந்தோஷமான மனிதன் யாரென்று கேட்டாள் தான் தான் என்று கூறுவான். அந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் இருந்தான் விபீஷணன்.

அன்றே விபீஷணன் ராகவியை அழைத்து விஷயத்தைக் கூறிவிட்டான். அவளிற்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னரே வந்து விடுவதாகக் கூறினாள்.

திருமண வேலைகள் அனைத்தும் பரப்பரப்பாக நடந்தது. திருமண அழைப்பிதழ் இரு வீட்டாரும் சேர்ந்தே அடிப்போம் என்று முடிவெடுக்கப் பட்டது. அதனால் விபீஷணன் மற்றும் நந்தனா அழைப்பிதழ் அடிக்கும் அலுவலகத்திற்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த வடிவில் அழைப்பிதழைத் தேர்ந்தெடுத்தனர்.

விபீஷணன் வீட்டின் சார்பில் நர்மதா அவளது கணவர் கிஷோர், கவுதம் மற்றும் சுவாதி உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் திருமண அழைப்பிதழைத் தரும் வேலையைச் செய்தனர். நந்தனா வீட்டின் சார்பில் நடராஜனும் மேனகாவும் தான் அந்த வேலையைச் செய்தனர். ஹரிணியின் கணவர் வேலை இருப்பதால் அவரால் வர முடியாது என்று கூறிவிட்டார்.

இப்படித் திருமண அழைப்பிதழ் தரும் வேலை ஒருபக்கம் நடந்தது என்றால், இன்னொரு பக்கம் நந்தனாவிற்கும், விபீஷணனிற்கும் உடை மற்றும் நகை எடுக்கும் வேலை நடந்தது.

ஒவ்வொரு நகையையும் உடையையும் விபீஷணன் பார்த்துப் பார்த்து எடுத்தான். அதிலும் நந்தனாவிற்கு அவன் எடுத்தது பிடிக்கிறதா என்று கேட்டுக் கேட்டே அவன் அனைத்தையும் தேர்ந்தெடுத்தான். அதை எல்லாம் அசோக்கும் ஹரிணியும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

அசோக்கிற்கு விபீஷணனின் செயல் அவன் மேல் நல்லெண்ணத்தைத் தந்தது. ஹரிணிக்கு நந்தனாவின் விருப்பத்தைக் கேட்டு நடக்கும் கணவர் கிடைத்ததை நினைத்து அவளுக்குச் சிறிது பொறாமையாக இருந்தது.

அவளது கல்யாணத்திற்குப் புடவை, நகை எடுக்கும் போது அவளது விருப்பத்தை அவளது மாமியார் கேட்கவே இல்லை. அதிலும் அவளது கணவர் அம்மா பேச்சு தட்டாதவர். அதற்காக அவள் மேல் பாசமில்லை என்றில்லை. அவள் மேல் கொள்ளை பாசம் வைத்திருக்கிறார். ஆனால் அம்மா என்று வந்து விட்டால் மனைவி பின்னுக்குப் போய் விடுவாள்.

ஆனால் நந்தனாவிற்கு அவளது மாமியார் உனக்கு என்ன விருப்பமோ அதையே எடுத்துக்கோ என்று கூறியது மட்டுமல்லாமல் விபீஷணன் ஒவ்வொன்றிற்கும் அவளது விருப்பம் கேட்டு எடுப்பதைப் பார்க்கும் போது அவளால் பொறாமை படாமல் இருக்க முடியவில்லை.

மேனகா, அசோக் மற்றும் ஹரிணி மூவரும் நந்தனாவை வெறுக்கவில்லை. அதே சமயம் ஆதரிக்கவும் இல்லை. அதற்காக அவள் எக்கேடு வேணாலும் கெட்டுப் போகட்டும் என்றும் நினைத்தது இல்லை. அவள் ஏதாவது தவறு செய்தால் அதை அவர்கள் தட்டிக் கேட்காமல் இருந்தது இல்லை. அசோக் கோபப்பட்டது கூட எங்கு விபீஷணனை நம்பி அவளது வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வாளோ என்ற பயத்தில் தான். ஆனால் விபீஷணனிடம் பழகப் பழக அவனுக்கு விபீஷணன் நல்லவன் என்று புரிந்தது.

அசோக் பேசவில்லை என்றாலும் நந்தனாவிற்காக விபீஷணன் சென்று சென்று அசோக்கிடம் பேசியதால் இப்போது அசோக்கும் விபீஷணனிடம் நன்றாகப் பேச ஆரம்பித்து விட்டான். அதைப் பார்த்ததும் நந்தனாவிற்கு அத்தனை நிம்மதி.

சரியாக ராகவி கூறியது போலவே திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னால் இந்தியா வந்து விட்டாள் ஹரீஷ் மற்றும் அவளது குட்டிப் பையன் குஷாலுடன். நேராக அவளது வீட்டிற்குத் தான் வந்தாள். அவர்களது திருமணத்தை இன்னும் ஹரீஷின் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்குக் குழந்தைப் பிறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு ஹரீஷின் வீட்டில் பேசினாலும் அவனுடன் மட்டும் தான் பேசினார்கள். ராகவியுடன் அவர்கள் பேசவில்லை. அதில் அவளுக்கு வருத்தம் இருந்ததால் ஹரீஷும் அவளுடன் பேசும் வரை அவர்களைச் சென்று பார்க்கக் கூடாது என்ற முடிவுடன் தான் அவனது வீடு அதே சென்னையில் இருந்தாலும் ராகவியின் வீட்டிற்கு வந்தனர்.

அவள் வந்தது தெரிந்ததும் நர்மதா, கவுதம், சுவாதி, கிஷோர் அவளது வீட்டிற்கு வந்து அவளையும் குழந்தையும் பார்த்து விட்டுச் சென்றனர். விபீஷணன் அன்றும் மருத்துவமனைச் சென்றதால் அவன் வரவில்லை.

அதற்குள் ராகவியே குஷாலை சசிகலாவிடம் கொடுத்து விட்டு நந்தனாவை நேரில் சந்திக்க அவளது வீட்டிற்கு ஹரீஷுடன் சென்றாள். நந்தனாவின் வீட்டில் யாரும் அவளை அப்போது எதிர்பார்க்கவில்லை. ராகவியே அங்கு வந்தது அவர்கள் மனதில் மிச்சம் மீதி இருந்த பயமும் பறந்துச் சென்றது.

“வணக்கம் அங்கிள், ஆண்டி. நான் ராகவி, விபியோட ப்ரண்ட். இது என்னோட ஹஸ்பண்ட் ஹரீஷ்.” என்று அவள் அறிமுகப்படுத்தினாள்.

“வா மா. உனக்கு இப்போ தான் குழந்தைப் பிறந்ததுனு கேள்விப்பட்டேன்.” என்று கூறினார் மேனகா.

“ஆமா ஆண்டி. சசி ஆண்டிக்கிட்ட குட்டியை விட்டுட்டு வந்தேன். நந்தனா கூட ஃபோன்ல தான் பேசி இருக்கேன். நேர்ல பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். எங்க ஆண்டி நந்தனா?” என்று கேட்டாள் ராகவி.

“அவ ரூம்ல தான் இருக்கா மா. இரு கூப்பிடுறேன்.” என்று கூறிவிட்டு அவர் கீழே இருந்த அழைக்க, நந்தனா வேகமாக வந்தவள் சத்தியமாக ராகவியை அங்கு அவள் எதிர்பார்க்கவில்லை. அவளைப் பார்த்ததும் வேகமாகக் கீழே வந்தாள் நந்தனா.

“ஆவ் அக்கா நீங்க இங்க வரதை சொல்லவே இல்லை.”

“ஹாஹா ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் நான் சொல்லவே இல்லை. இன்னும் நான் விபியை கூடப் பார்க்கலை. உன்னைப் பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன்.”

“சூப்பர் அக்கா. ஆமா அவருக்கு இன்னைக்கும் ஹாஸ்பிட்டல்ல வொர்க் இருக்குனு சொன்னார்.”

“ஆமா ஆமா அப்போ தான கல்யாணம் முடிஞ்சு நீங்க ஹனிமூன் போக நிறைய நாள் லீவ் கிடைக்கும்.”

“அச்சோ சும்மா இருங்க அக்கா.” என்று சிணுங்கினாள் நந்தனா. பின்னர் சிறிது நேரம் பேசிவிட்டு ராகவி ஹரீஷுடன் கிளம்பிவிட்டாள்.

விபீஷணனும் நந்தனாவும் மிகவும் எதிர்பார்த்த நாள் அவர்களது திருமணம் நாள் தான். அதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களது நிச்சயதார்த்த விழா சிறப்பாக ஆரம்பித்தது.

உறவுகள் மற்றும் நண்பர்கள் சூழ, அந்த மண்டபமே களைகட்டியது. விபீஷணன் மற்றும் நந்தனா மேடையில் அமர்ந்திருக்க, அவர்கள் பக்கத்தில் இருவரது பெற்றோரும் அமர்ந்திருந்தனர். ஐயர் சொல்வதை எல்லாம் செய்து கொண்டிருந்தனர். முதலில் கணபதிக்குப் பூஜை செய்து முடித்தவுடன் மாப்பிள்ளை வீட்டின் சார்பில் நந்தனாவிற்கு உடை வழங்கப்பட, அதை வாங்கிக் கொண்டு ராகவி மற்றும் ஹரிணியுடன் அவள் புடவை மாற்றி வரச் சென்றாள். அதே போல் நந்தனாவின் பெரியப்பா, பெரியம்மா விபீஷணனிற்கு உடைத் தர, அவனும் கவுதம் மற்றும் ஹரீஷுடன் மாற்றி வரச் சென்றான்.

அரை மணிநேரத்தில் அவர்கள் இருவரும் வர, மீண்டும் ஐயர் சில பூஜைகள் செய்து விட்டு, நிச்சிய பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. பின்னர் விபீஷணன் மற்றும் நந்தனா எழுந்து நடுவில் வர, ஹரிணி நந்தனாவிடன் மோதிரத்தைத் தர, அதை விபீஷணன் கையில் போட்டாள் நந்தனா. பின்னர் கவுதம் மோதிரத்தைத் தர, அதை வாங்கிய விபீஷணன் அவள் முன் ஒரு காலில் மண்டியிட்டு அவளது கையில் மோதிரத்தைப் போட்டு விட்டு முத்தம் வைக்க, அனைவரும் ஓஹோ என்று கத்தினர்.

அதில் நந்தனாவிற்குத் தான் வெட்கம் வெட்கமாக வந்து விட்டது. விபீஷணன் எழுந்து நின்று அவளது தோளோடு கட்டிக் கொண்டான். பின்னர் இருவரும் மேடையில் நிற்க, ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர் பரிசு கொடுக்க.

விபீஷணன் மருத்துவமனையில் வேலைப் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் என்று அனைவரையும் நந்தனாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அதே போல் நந்தனவின் கல்லூரியில் வேலைப் பார்க்கும் சக ஆசிரியர்களும் வந்திருக்க, அவர்களை எல்லாம் விபீஷணனிற்கு அறிமுகப்படுத்தினாள்.

இப்படியே அந்த நாள் முடிய, இருவரும் சாப்பிட்டு விட்டுப் படுக்கச் சென்றனர். ஆனால் இருந்த பரவசத்தில் இருவருக்கும் தூக்கம் தான் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தவர்கள் விடியக் காலையில் தான் தூங்கினர்.

முகூர்த்தம் பத்து மணி என்பதால் அவர்களுக்கு அது சவுகரியமாக இருந்தது. பின்னர் இருவரையும் எழுந்து தயாராகினர். நந்தனா எழுந்து தயாராகிக் காத்திருக்க, அதற்குள் விபீஷணன் காசி யாத்திரைச் சடங்கை முடித்து விட்டான். பின்னர் அவனை அசோக் அழைத்து வந்து மேடையில் அமர வைக்க, ஹரிணி நந்தனாவை அழைத்து வந்தாள்.

சுபமுகூர்த்த நேரத்தில் அனைவரின் ஆசியுடன் விபீஷணன் நந்தனா கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சிட்டான். நர்மதாவைக் கூட மூன்றாவது முடிச்சு கட்ட அவன் விடவில்லை. மூன்று முடிச்சையும் தானே தான் கட்டுவேன் என்று முன்னரே அவன் கூறியது போல் கட்டி விட்டான்.

ஐயர் விபீஷணனை நந்தனாவின் நெற்றியில் குங்குமம் வைக்கச் சொல்ல, அவனும் அவர் கூறியபடி குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட்டான். நந்தனாவிற்குச் சந்தோஷத்தில் கண்ணில் நீரே வந்து விட்டது. விபீஷணனும் உணர்ச்சிவசப்பட்டு தான் இருந்தான். அவளை அப்படியே அமர்ந்தாவாக்கில் அணைத்துக் கொண்டான் விபீஷணன்.

Advertisement