Advertisement

சந்தோஷத்துடன் அவனது வீட்டிற்குச் சென்றான் விபீஷணன். அங்கு இருந்து அவன் வேகமாக யாரிடமும் சொல்லாமல் சென்றதைப் பார்த்த சசிகலா, மருத்துவமனையில் தான் ஏதோ அவசரம் என்று செல்கிறான் என்று தான் நினைத்தார். ஆனால் விபீஷணன் வீட்டிற்கு வந்ததும் வேகமாக வந்து அவரைக் கட்டி அணைக்கவும் புரியாமல் பார்த்தார் சசிகலா.

“என்ன டா புதுசா பாசம் வந்துருச்சா என்ன? கட்டி எல்லாம் பிடிக்கிற?” என்று கேட்டார் அவர்.

“ப்ச் அம்மா என்ன எனக்கு உங்க மேல பாசம் இல்லையா என்ன?”

“சரி சரி சொல்லு என்ன திடீர்னு?” என்று அவர் கேட்டார்.

“அம்மா நந்தனா வீட்டுல ஒத்துக்கிட்டாங்க. இரண்டு நாள்ல நல்ல நாள் வருது. அன்னைக்கு எல்லாரையும் அவங்க வீட்டுக்கு வரச் சொன்னாங்க.” என்று விபீஷணன் கூற, அவனது மகிழ்ச்சியான முகம் பார்த்து அவருக்கும் சந்தோஷம் தான்.

“சரி விபி. அப்பா வெளில வாக்கிங் போயிருக்கார். நான் நர்மதாகிட்டயும் ஒரு வார்த்தைச் சொல்லிடுறேன். நீயும் அவளுக்குக் கூப்பிட்டுச் சொல்லிடு. நீ சொல்லலைனு அவளுக்கு வருத்தம்.” என்று அவர் கூற, சரியென்று கூறிவிட்டு அவனது அறைக்குச் சென்றான் விபீஷணன்.

இங்கு நந்தனாவின் வீட்டில் விபீஷணன் சென்றதும் மேனகா வேகமாக,”என்னங்க நீங்க செய்கிறது கொஞ்சமாவது சரியா? அந்தப் பையன் சொல்றது உண்மை தான்னு நாம எப்படி நம்புறது?” என்று கேட்டார்.

“முதல்ல என் கேள்விக்குப் பதில் சொல்லு மேனகா, அந்தப் பையன் எதுக்கு நமக்கிட்ட பொய் சொல்லனும்?” என்று கேட்டார்.

“ப்ச் எனக்கு எப்படித் தெரியும்?”

“தெரியாதுல அப்புறம் என்ன மேனகா? எனக்கு அந்தப் பையனைப் பார்த்தால் தப்பா தெரியலை. அதே மாதிரி அந்தப் பையன் சொல்றது உண்மையா தான் இருக்கும். இல்லாட்டி எப்படி அந்தப் பொண்ணு கூட நம்ம நந்தனாவைப் பேச வைப்பார்?” என்று அவர் கேட்க, இது யோசிக்க வேண்டிய விஷயம் என்று புரிந்தது அவருக்கு. அதனால் அவரால் எதுவும் பேச முடியவில்லை.

“அப்பா நாளைக்கு அவன் அவளை ஏதாவது ஏமாத்திட்டான்னு இங்க வரக் கூடாதுனு சொல்லிடுங்க.” என்று அசோக் கூற, நடராஜனிற்குக் கோபம் வந்து விட்டது.

“என்ன டா பேச்சு பேசுற? அவள் இங்க வராமல் எங்க போவா? ” என்று கேட்டார் அவர்.

“பெரியப்பா கண்டிப்பா எனக்கு அந்த நிலைமை என்னைக்கும் வராது. அவர் என்னை நல்லாவே பார்த்துப்பார். அண்ணா நீங்க என்னைப் பத்தி நினைச்சு கவலைப்பட வேண்டாம்.” என்று கடினமாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

“அசோக் உனக்கு எத்தனைத் தடவைச் சொல்றது? அவளும் இந்த வீட்டுப் பொண்ணு தான். இனிமேல் இந்த மாதிரி பேசுனைனா நான் என்ன பண்ணுவனேன்னு எனக்கே தெரியாது.” என்று அவரும் கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

“அம்மா என்ன மா இவர் இப்படிப் பேசுறார்?” என்று கேட்டான் அசோக்.

“இங்க பார் அசோக் நீ பேசுனது தப்பு. அதனால் தான் உங்க அப்பா அப்படிப் பேசுனார். ஹரிணிக்கு இப்படி நடந்தா நீ இதே மாதிரி தான் பேசுவியா?” என்று அவர் கேட்க, அசோக் அதிர்ச்சியாகி விட்டான்.

“அம்மா என்ன நீயும் இப்படிப் பேசுற!!”

“இது ஒன்னும் சாதாரண விஷயமில்லை அசோக். நந்தனாவோட வாழ்க்கை இது!! நீ பேசுனது தப்பு தான். உனக்கு அவளைப் பிடிக்கலைனு அவள் எப்படியோ போனு விட்டுற முடியுமா? என்ன இருந்தாலும் நந்தனா இந்த வீட்டுப் பொண்ணு. அதை ஞாபகம் வைச்சுக்கோ. இனிமேல் இப்படிப் பேசாத.” என்று கூறிவிட்டு அவர் உள்ளே சென்று விட, அசோக் யோசித்தான். அவன் பேசியது தப்பு என்று அவனுக்கும் புரிந்தது. இருந்தாலும் நந்தனாவிடம் மன்னிப்புக் கேட்க அவனது தன்மானம் இடம் கொடுக்க வில்லை.

நடராஜன் கூறிய நாளில் குடும்பத்துடன் நந்தனாவைப் பெண் பார்க்க வந்துவிட்டான் விபீஷணன். நர்மதாவிற்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை. இருந்தாலும் இது விபீஷணனின் வாழ்க்கை, அவன் இஷ்டப்படி நடக்கட்டும் என்று அமைதியாக இருந்து விட்டாள்.

அனைவரும் உள்ளே வந்து அமர, மேனகாவும், ஹரிணியும் குடிக்கத் தண்ணீர், டீ மற்றும் சிற்றுண்டிகளை கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்து முடியவும் ராஜாராம் அவரைப் பற்றியும் அவரது குடும்பத்தையும் அறிமுகம் செய்து வைத்தார்.

நடராஜனும் அவரது தொழில் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் நந்தனாவின் பெற்றோர் பற்றியும் கூறினார்.

பின்னர் என்ன பேசுவதெனத் தெரியாமல் அமைதியாக இருக்க, ராஜாராமே பேச்சை ஆரம்பித்தார்.

“என் பையன் இது வரைக்கும் கல்யாணமே வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தேன். நாங்க ரொம்ப பயந்தோம் எங்க இவன் கல்யாணமே பண்ணிக்காமல் இருந்துடுவானோனு!! ஆனால் அப்படி நடக்காமல் உங்க பொண்ணு காப்பாத்திட்டா.” என்றார் ராஜாராம்.

“ம். நந்தனா பத்தி நான் சொல்ல வேண்டியதே இல்லைங்க. அவள் உங்களுக்கு மருமகளா இருக்க மாட்டா, கண்டிப்பா மகளா தான் இருப்பா. அவள் தனக்கு இது வேணும்னு ஒரு முறைக் கூட ஆசையா என்கிட்ட கேட்டதே இல்லை. முதல் முறை தனக்கு ஒன்னு வேணும்னு கேட்டது உங்க பையனைத் தான். என் தம்பி உயிரோட இருந்திருந்தா கண்டிப்பா அவன் நந்தனாவுக்கு எது இஷ்டமோ அதைத் தான் செஞ்சுருப்பான். இப்போ அவன் ஸ்தானத்துல இருந்து நாங்க அதைச் செய்றோம் அவ்ளோ தான்.” என்றார் நடராஜன்.

“ரொம்ப சந்தோஷம். நம்ம பசங்க விருப்பத்தை நிறைவேற்றி அவங்க சந்தோஷத்தைப் பார்க்கிறது தான பெத்தவங்களுக்கும் சந்தோஷம்.”

“சரியா சொன்னீங்க.”

“ம் இப்படிப் பேசிட்டா இருந்தா எப்படி பொண்ணை வரச் சொல்லுங்க.” என்று கூறினாள் நர்மதா.

“ப்ச் நர்மதா அப்பா பேசிகிட்டு இருக்கார் தெரியலையா?”

“இல்லை அம்மா பேசிட்டே அவங்க வந்த விஷயத்தை மறந்துட்டா என்ன பண்றது அதான் ஞாபகப் படுத்தினேன்.” என்றாள்.

நடராஜனும் சிரித்துக் கொண்டே,”அதுவும் சரி தான். ஹரிணி நந்தனாவை கூட்டிட்டு வா.” என்று அவர் கூற, ஹரிணி எழுந்து சென்றாள் நந்தனாவை அழைத்து வர.

நந்தனா அவளது அறையில் பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள். இது அவளிற்குப் புதுசு. எந்த ஒரு பெண்ணிற்குமே இந்தச் சமயத்தில் இருக்கும் பதற்றம் அவளிற்கும் இருந்தது. ஹரிணி கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைய, நந்தனா அப்போதும் பதற்றத்துடன் அவளைப் பார்த்தாள்.

அவள் அருகில் வந்த ஹரிணி அவளது முகத்திலிருந்த பதற்றத்தைப் பார்த்து விட்டு,”வீட்டுக்குத் தெரியாமல் காதலிக்கும் போது வராத பதட்டம் இப்போ மட்டும் வருதோ?”  என்று சற்றுக் கடுமையாகக் கேட்க, நந்தனாவிற்குக் கண்ணில் நீர் வந்து விட்டது. இருந்தாலும் அதை வெளியே விடாமல் கண்ணைச் சிமிட்டி கண்ணீரை அடக்கினாள்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, ஹரிணியே தொடர்ந்தாள்,”உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. வா.” என்று கூறிவிட்டு அவள் வெளியே செல்ல, மீண்டும் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்து விட்டு வெளியே வந்தாள்.

ஹரிணியுடன் அவள் கீழே இறங்க, விபீஷணன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். முதல் முறை அவளைப் புடவையில் பார்க்கிறான். சாதாரணப் புடவை தான் கட்டியிருந்தாள். அதுவே அவளை அவ்ளோ அழகாகக் காட்டியது. அசந்து அப்படியே அவளையே பார்த்துக் கொண்டிருக்க, கீழே வந்த நந்தனா அனைவரையும் பார்த்து வணக்கம் கூற, சசிகலாவிற்கு அவளைப் பார்த்து திருப்தியாக உணர்ந்தார்.

நந்தனாவைப் பார்த்துமே நர்மதாவின் பெண் தீக்ஷிதா வேகமாக,”ஐ இவங்க என்னோட டான்ஸ் மிஸ்.” என்றாள் சத்தமாக.

வேகமாக சுவாதி,”தீக்ஷூ இவங்க இனிமேல் டான்ஸ் மிஸ் இல்லை. இவங்களை நீ அத்தைனு தான் கூப்பிடனும். என்ன விபி சரியா?” என்றாள் சிரித்துக் கொண்டே.

உடனே விபீஷணன் தீக்ஷியைத் தூக்கி தன் மடியில் அமர வைத்து,”ஆமா டா குட்டிமா. இவங்க இனிமேல் உனக்கு அத்தை சரியா.” என்று கூறிவிட்டு நந்தனாவைப் பார்த்துக் கொண்டே அவளது கண்ணத்தில் முத்தம் வைத்தான்.

அதைப் பார்த்தும் நந்தனாவின் கண்ணம் குப்பென்று செர்ரி பழம் போல் சிவப்பானது. வெட்கத்தில் தலையைக் குனிந்து கொண்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த விபீஷணனிற்குப் புரிந்தது அவள் வெட்கப்படுகிறாள் என்று. அப்படியே அவளை அனைத்து அந்தச் சிவப்பு ஏறிய கண்ணத்தில் நச்சென்று ஒரு முத்தம் வைக்க அவனிற்கு ஆசைத் தான். ஆனால் சூழ்நிலையை உணர்ந்து அமைதியாக இருந்தான்.

Advertisement