விபீஷணன் பெயர் தாங்கிய திருமணச் சான்றிதழை வெறித்துப் பார்த்தது எல்லாம் சில நிமிடங்கள் தான். உடனே தெளிந்து தன் வீட்டில் உள்ள அனைவரிடமும்,”இல்லை இதுல ஏதோ தப்பா இருக்கு. ராகவி அக்கா அவரோட ஃப்ர்ண்ட. அதை விடச் சின்ன வயசுல இருந்து அவங்க இரண்டு பேரும் ஒன்னா தான் இருக்காங்க. ராகவி அக்காவுக்கு கல்யாணம் ஆகிடு ரீசன்ட்டா தான் அவங்களுக்கு குழந்தை கூடப் பிறந்துச்சு. அவங்க ஹஸ்பண்ட்டோட கேனடால இருக்காங்க. நான் கூட அக்கா கூடப் பேசினேன்.” என்று நந்தனா கூறவும், நடராஜன் யோசித்தார்.

“என்ன சொல்ற நீ? அப்போ இதுல இருக்கிறது பொய்னு சொல்றியா? இல்லை என் வீட்டுக்காரர் தப்பா சொல்றார்னு சொல்றியா?” என்று ஹரிணி எகிறிக் கொண்டு வந்தாள். அவளது கணவன் தான் இந்தத் தகவலைத் திரட்டி இருந்தான். அதைக் கொடுக்கத் தான் அவள் வீட்டிற்கே வந்திருந்தாள்.

“அச்சோ அக்கா, நான் மாமாவை எதுவுமே சொல்லலை!! யாரோ அவருக்கு வேண்டாதவங்க பண்ண வேலை அக்கா இது. என்கிட்ட ராகவி அக்கா நம்பர் கூட இருக்கு. நான் வேணா அவங்களுக்கு கால் பண்ணவா? நீங்களே பேசுங்க அப்போ புரியும் நான் சொல்றது சரினு.” என்று அவள் பொறுமையாகக் கூற, யாரும் கேட்கும் நிலையில் இல்லை.

மேனகா, அசோக் மற்றும் ஹரிணி என்று மூவரும் அவளைத் திட்டியபடி விபீஷணனை மறக்கச் சொல்ல, அதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கண்டிப்பாக அவளால் விபீஷணனை மறக்க இயலாது. என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தாள் நந்தனா.

“எல்லாரும் கொஞ்சம் அமைதியாக இருங்க.” என்று சத்தம் போட்ட நடராஜன் நந்தனாவிடம்,”உனக்கு அந்தப் பையன் மேல நம்பிக்கை இருக்கா?” என்று கேட்டார்.

“ஆமா பெரியப்பா நான் அவரை நம்புறேன். கண்டிப்பா இதுல ஏதோ பொய் தான் இருக்கு.” என்று ஆணித்தரமாகக் கூறினாள் நந்தனா.

“சரி மா, ஒரு வேளை இது உண்மையா இருந்தால் என்ன பண்றது?” என்று கேட்டார்.

அதை அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை. ஒரு சில வினாடிகள் கழித்து,”பெரியப்பா அப்படி இது உண்மையா இருந்தாலும் ஏதாவது காரணம் கண்டிப்பா இருக்கும். அவர் தப்பானவர் கிடையாது பெரியப்பா. ரொம்ப ரொம்ப நல்லவர். அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று அவள் கூறவும் வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருக்க, அசோக் சென்று கதவைத் திறந்தான்.

விபீஷணன் தான் நின்றிருந்தான். அசோக் அவனைப் பார்த்ததும் வேகமாக அவனது சட்டைக் காலரைப் பிடித்து,”ஏன் டா உனக்கு விளையாட என் தங்கச்சி வாழ்க்கை தான் கிடைச்சதா?” என்று கேட்க, அவனது சத்தம் கேட்டு அங்கு வந்தனர் அனைவரும்.

அந்த நிமிடம் விபீஷணனை அவர்களும் அங்கு எதிர்பார்க்க வில்லை. அசோக் இப்படி நடந்து கொள்வான் என்றும் அவர்கள் நினைக்கவில்லை. வேகமாக அவர்களிடம் விரைந்த நடராஜன் அசோக்கை தள்ளிவிட்டு,”என்ன பண்ற அசோக்? எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்.” என்று கூறி அவனை இழுத்துக் கொண்டு செல்ல, நந்தனா கண்ணில் நீருடன் அவனைப் பார்த்தாள்.

“சாரி.” என்று அவள் அவனுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுக்க, அவன் அவளது கையை அழுத்தி அவளுக்குத் தைரியம் தந்துவிட்டு உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து அவளும் உள்ளே சென்றாள்.

விபீஷணன் உள்ளே நுழைந்ததும், நடராஜன் அவனை அமரச் சொல்ல, அவனும் முதலில் நந்தனா அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்தான். அமர்ந்தவுடனே அவனது கண்ணில் பட்டது அந்தத் திருமணச் சான்றிதழ். அதைப் பார்த்ததும் என்ன நடந்து இருக்கும் என்று தெளிவாகப் புரிந்தது.

அவன் அவர்கள் வீட்டிற்கு வந்து அழைப்பு மணி அடிக்கும் கை வைக்கும் போது தான் அவனிற்கு நந்தனா ‘அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.’ என்று கூறிய வார்த்தை அவனது காதில் விழுந்தது. அதைக் கேட்டவுடன் தான் அவன் அழைப்பு மணியையே அடித்தான்.

அவன் அதை எடுத்துப் பார்த்ததுமே அசோக் மீண்டும் ஏதோ பேச வர, அவனைப் பார்வையால் அடக்கினார் நடராஜன். பின்னர் விபீஷணனைப் பார்த்து,”இதுக்கு என்ன அர்த்தம் தம்பி? உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா?” என்று கேட்டார்.

ஓர் ஆழ்ந்த மூச்சொன்றை வெளியே விட்டு விட்டு”அங்கிள் இது உண்மை தான். ஆனால் எனக்கும் ராகவிக்கும் மேரேஜ் ஆனது இட்ஸ் ஜஸ்ட் ஆன் ஐ வாஷ்.” என்று அவன் கூற, அனைவரும் புரியாமல் அவனைப் பார்த்தனர்.

“இது என்ன இன்டர்வியூ வா? இட்ஸ் ஜஸ்ட் ஆன் ஐ வாஷ்னு ஈசியா சொல்ற?” என்று கோபமாகக் கேட்டான் அசோக்.

“நான் சொல்றது உண்மை தான். இந்தக் கல்யாணம் ராகவியைக் காப்பாத்த நடந்தது. நான் முழுசா சொன்னா தான் உங்களுக்குப் புரியும்.” என்று கூறி, அந்தத் திருமணம் நடந்த விதத்தை அவன் கூற ஆரம்பித்தான்.

ராகவியின் தந்தையும், விபீஷணனின் தந்தையும் பள்ளிக் காலத்திலிருந்தே தோழர்கள். அவர்களது தோழமை வேலை, கல்யாணம், குழந்தை என்று ஆனதும் கூடத் தொடர்ந்து கொண்டே இருந்தது. ராகவியின் இல்லம் விபீஷணனின் இல்லத்திற்குப் பக்கத்தில் தான் இருக்கிறது.

ராகவியின் அப்பாவிற்குத் தாமதமாகத் தான் திருமணம் நடந்தது. ராகவி பிறந்து ஒரு மாதம் கழித்துத் தான் விபீஷணன் பிறந்தான். விபீஷணனை எப்படிச் சகோதரன் என்று கவுதமும் நர்மதாவும் பார்த்தார்களோ அதே போல் தான் ராகவியையும் தங்கள் கூடப் பிறந்த சகோதரியாகவே பாவித்தனர் அவர்கள் இருவரும்.

ராகவி அவள் செய்யும் அனைத்தையும் தன் பெற்றோர்களிடமும் விபீஷணனிடமும் மறைக்கவே மாட்டாள். அனைத்தையும் கூறிவிடுவாள். அதே போல் ஹரீஷ் அவளிடம் காதலைத் தெரிவிக்கும் போதும் அவள் உடனே சென்று அவளது பெற்றோர் மற்றும் விபீஷணனிடம் கூறிவிட்டாள். ஹரீஷ் இவர்களை விட, ஒரு வயது பெரியவன்.

ராகவிக்காக,விபீஷணன் அவனைப் பற்றி ஒன்று விடாமல் விசாரித்து அவன் நல்லவன் என்று சான்றிதழ் கொடுத்தவுடன் தான் ராகவியின் பெற்றோர்கள் அவளது காதலிற்கு ஒத்துக் கொண்டார்கள். வீட்டில் தெரிந்தே தான் அவள் ஹரீஷை காதலித்தாள்.

ஹரீஷ் நல்ல வேலையில் அமர்ந்தவுடன் அவனது வீட்டில் பேசி கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தனர். ஆனால் ஹரீஷின் வீட்டில் அவனது காதலுக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதை விட முதலில் அவனது தங்கைக்குத் தான் கல்யாணம் நடக்க வேண்டுமென்றும் கூறிவிட, அதுவரை இங்கேயே இருந்தால் ஏதாவது பேசி அவனது மனதை மாற்ற நினைப்பார்கள் என்று யோசித்து அவன் வேலை செய்யும் அலுவலகத்தில் கூறி ஆன்சைட் வாங்கிக் கொண்டு ப்ரான்ஸ் சென்று விட்டான்.

அது ராகவிக்குக் கவலையாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டாள். ஹரீஷ் சென்று மூன்று மாதம் தான் ஆகிருக்கும் அப்போது ராகவியின் வீட்டின் முன்பு நான்கு ஆம்னி கார்களில் ஆட்கள் வந்து இறங்க, அப்போது தான் மருத்துவமனைக்குச் சென்று வந்த விபீஷணன் இவர்களைப் பார்த்து விட்டு அவனது வீட்டிற்குச் செல்லாமல் ராகவியின் வீட்டிற்குச் சென்றான்.

அனைவரும் ராகவியின் வீட்டிற்கு வர, அவர்களை எல்லாம் குழப்புத்துடன் பார்த்தனர் ராகவியின் பெற்றோரும் விபீஷணனும். இவர்கள் அமரச் சொல்லாமலே அவர்களே அங்கு அமர்ந்து விட்டு கையில் கொண்டு வந்த பழத்தட்டை மேஜையில் வைத்தனர்.

வந்திருந்தவர்களில் வாய் எல்லாம் பல்லாக, நகைக் கடை விளம்பரம் போல் இருக்கும் நகையை எல்லாம் போட்டுக் கொண்டு வெள்ளை வேட்டிச் சட்டைப் போட்ட ஒருவர்,”இங்க பாருங்க, என் பெயர் வெள்ளைச்சாமி, இது என்னோட பிள்ளை மனோஜ். நம்ம பாப்பா படிச்ச அதே காலேஜ்ல தான் என் பையனும் படிச்சான். நம்ம பாப்பாவைப் பார்த்ததும் அவனுக்குப் பிடிச்சு போச்சு. அதான் பொண்ணு கேட்டு அப்படியே கல்யாணத்துக்கு நாள் குறிக்கலாம்னு வந்தோம்.” என்று அவர் கூற, கேட்ட மூவருக்கும் அதிர்ச்சியாகி விட்டது.

இருந்தாலும் அமைதியாகப் பேசலாம் என்று ராகவியின் அப்பா,”இல்லைங்க எங்களை மன்னிச்சுருங்க, என் பொண்ணுக்கு வேற ஒரு பையனைத் தான் பிடிச்சுருக்கு. நீங்க வேற இடம் பார்த்துக்கோங்க.” என்று அவர் தன்மையாகக் கூறினார்.

“என்னங்க நீங்க பிள்ளை ஏதோ விவரம் தெரியாமல் பேசுது. நீங்களும் அதுக்கு சரினு சொல்லிட்டு. நம்ம பிள்ளைக்கு நாம தான் புத்திமதி சொல்லனும். அதனால என்ன பண்ணுறீங்க போய் உங்க பொண்ணுகிட்ட அந்தப் பையனை மறக்கச் சொல்லிட்டு என் பையனை கட்டிக்கச் சொல்லுங்க. என்னோட சொத்து எல்லாத்துக்கும் இவன் ஒருத்தன் தான் வாரிசு. உங்க பொண்ணு ராணி மாதிரி என் வீட்டுல வாழலாம்.” என்று அவர் புரியாமல் பேச, மூவருக்கும் கோபம் வந்து விட்டது.

“சொன்னா உங்களுக்குப் புரியாதா? முதல்ல எழுந்து வெளில போங்க.” என்று சத்தம் போட்டான் விபீஷணன்.

“விபி அமைதியா இரு. நான் பேசிக்கிறேன்.” என்று கூறினார் ராகவியின் அப்பா.

“இல்லைங்க இது சரியா வராது. நீங்க உங்க பையனுக்கு வேற இடத்துல பொண்ணு பார்த்துக்கோங்க.”

“யோவ் இவ்ளோ சொல்றேன். நீ என்ன புரியாமல் பேசிகிட்டு இருக்க! என்னால நினைச்சா உன் பொண்ண தூக்கிட்டு போய் என் பையனுக்குத் தாலி கட்ட வைக்க முடியும். அதை நீ நினைச்சா கூடத் தடுக்க முடியாது. என் பையன் ஆசைப்பட்டுட்டான். அதனால பொறுமையா பேசிட்டு இருக்கேன்.”

“ப்ச் மாமா இவங்ககிட்ட என்ன பொறுமை வேண்டிக் கிடைக்குது? யோவ் உனக்கு அவ்ளோ தான் மரியாதை! எந்திரிச்சு வெளில போயிடு. இல்லாட்டி நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது. போயா வெளில.” என்று விபீஷணன் கத்த, மனோஜின் அம்மாவிற்குக் கோபம் வந்து விட்டது.

“அட எழுந்திருங்க, இதுக்கு மேல இங்க நாம உட்காரனுமா என்ன? டேய் மனோஜ் இவள் என்ன சீமைல இல்லாத ராணியா? உனக்கு நான் இவளை விட அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். வாங்க போகலாம்.” என்று கூறி அவர் முன்னே நடக்க, வெள்ளைச்சாமியும் மனோஜூம் அவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றார்கள்.

அவர்கள் சென்றதும் ராகவியின் அப்பா விபீஷணனிடம்,”விபி அவங்களை பார்த்தாலே ரவுடிக் கும்பல் மாதிரி தெரியுது. கொஞ்சம் நிதானமா பேச வேண்டாமா? நாளைக்கு ஏதாவது ஏடாகூடமாகிடுச்சுனா என்ன பண்றது?” என்று வருத்தப்பட்டார்.

“மாமா அதெல்லாம் ஒன்னும் ஆகாது. குறைக்கிற நாய் கடிக்காது. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. நான் ஹரீஷ் கிட்டப் பேசி இங்க வர முடியுமானு பார்க்கச் சொல்றேன். அப்படி வந்தால் சட்டுப்புட்டுனு அவங்க கல்யாணத்தை முடிச்சுரலாம்.” என்று கூறிவிட்டு விபீஷணன் அங்கிருந்து அவனது வீட்டிற்குச் சென்று விட்டான்.