Advertisement

விபீஷணன் அதற்குப் பதில் சொல்ல அவனை இடைமறித்து,”ஒரு நிமிஷம், நீ டாக்டர், இவள் டான்ஸ் டீச்சர். எப்படி இரண்டு பேருக்கும் பழக்கம்?” என்று அசோக் கேட்க, அப்போது சரியாக உள்ளே நுழைந்தார் நந்தனாவின் பெரியப்பா நடராஜன்.

“என்ன பழக்கம்? எதுக்கு அசோக் என்னை அவசரமா வரச் சொன்ன? கடைல பழனியை உட்கார வைச்சுட்டு வந்திருக்கேன்…” என்று கூறிக் கொண்டே உள்ளே வந்தவர் விபீஷணனைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தி விட்டு வீட்டின் சூழ்நிலையை அப்போது தான் கவனித்தார்.

நந்தனா கையைப் பிசைந்து கொண்டு நிற்கும் நிலையும், அசோக்கும் மேனகாவும் கோபமாக நந்தனாவை முறைத்துக் கொண்டிருந்த நிலையும் விபீஷணன் யாரென்று சொல்லாமல் சொல்லியது அவருக்கு.

விபீஷணன் அவரிடம்,”வணக்கம் அங்கிள். என் பெயர் விபீஷணன். நான்…” என்று அவன் ஆரம்பிக்கவும் அவனை இடைமறித்து,

“நந்தனா எத்தனை நாளா நீ காதலிக்கிற?” என்று நேரடியாக் கேட்டார்.

“பெரியப்பா அது வந்து நாலு மாசம்.” என்று அவள் கூற, அவரின் புருவத்தை உயர்த்தி யோசித்தார்.

“இங்கப் பாருங்க தம்பி எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையும் என்னால பண்ண முடியாது. எங்க வீட்டுப் பொண்ணுகிட்ட நான் கொஞ்சம் பேசனும். உடனே என்கிட்டப் பதில்லை எதிர்பார்க்காதீங்க. எங்களுக்குக் கொஞ்சம் டைம் வேணும்.” என்று பட்டும்படாமலும் அவர் கூறினார்.

“அங்கிள் எனக்கு உங்களோட சிட்டுவேஷன் புரியுது. எந்த வீட்டுலயும் உடனே காதல் கல்யாணத்திற்கு ஒத்துக்க மாட்டாங்க. எங்க வீட்டுலயும் யோசிச்சு சொல்றேன்னு தான் சொன்னாங்க. ஆனால் ஒன்னு மட்டும் நான் சொல்லிக்கிறேன். எனக்குக் கல்யாணம் நடந்தா அது நந்தனா கூட மட்டும் தான். அப்புறம் நந்தனாவுக்கும் அப்படித் தான். நந்தனாவை டான்ஸ் க்ளாஸ்ல முதல்ல பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு. ஆனால் நந்தனா ஒத்துக்கவே இல்லை. கஷ்டப்பட்டு தான் ஒத்துக்க வைச்சேன். அவள் என்னைக் காதலிக்க ஓகே சொன்ன ஒரே ரீசன் நான் உங்க எல்லார்கிட்டயும் பேசி எல்லார் சம்மதத்தோடத் தான் கல்யாணம் நடக்கும்னு சொன்னதால தான். இப்பவும் எனக்கு நம்பிக்கை இருக்கு அங்கிள். என்னைப் பத்தி நீங்க யார்கிட்ட வேணாலும் விசாரிச்சுக்கோங்க. நந்தனாவை நான் நல்லா பார்த்துப்பேன்.” என்று அவன் கூற, அவர் எதுவும் பேசவில்லை.

“நீங்க யோசிச்சுட்டு சொல்லுங்க அங்கிள். நாங்க வெயிட் பண்றோம்.” என்று கூறிவிட்டு நந்தனாவையும் பார்த்துத் தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் விபீஷணன்.

அவன் சென்றதும் நந்தனா வேகமாக அவளது பெரியப்பாவிடம் வந்து அவரது காலின் கீழ் அமர்ந்து,”பெரியப்பா எனக்கு அவரை ரொம்ப பிடிச்சுருக்கு. நான் இதுவரைக்கும் உங்ககிட்ட எதையும் கேட்டது இல்லை. ப்ளீஸ் பெரியப்பா என்னை அவரோட சேர்த்து வைச்சுடுங்க. நான் வேற எதுவும் உங்ககிட்ட கேட்க மாட்டேன்.” என்று கூறினாள் நந்தனா.

மேனகா ஏதோ பேச வந்தவரை நடராஜன் தடுத்து,”நான் அவர்கிட்ட சொன்னது தான். எனக்கு யோசிக்க டைம் கொடு. நான் நல்ல முடிவா சொல்றேன்.” என்று கூறிவிட்டு அவரது அறைக்குச் சென்று விட்டார். மேனகாவும் அசோக்கும் அவளை முறைத்துப் பார்த்து விட்டு நடராஜன் பின்னால் சென்றனர்.

நான்கு நாட்கள் ஆன நிலையில் விபீஷணன் வீட்டிலிருந்தும் எந்தப் பதிலும் இல்லை, நந்தனா வீட்டிலிருந்தும் எந்தப் பதிலும் இல்லை. இந்த நிலையில் நந்தனாவால் அவளது நடனத்தில் சுத்தமாகக் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் நாட்டியஞ்சலி செல்லும் முடிவை மாற்றிக் கொள்ளலாம் என்று அவள் நினைத்து அதை அவளது ஆசிரியரிடமும் கூறிவிட்டாள்.

அவளது ஆசிரியருக்கு அது அதிர்ச்சியாகவும் அவள் மேல் கோபமாகவும் வந்தது. அதை அவளிடம் காட்டவும் தவறவில்லை,”என்ன நந்தனா இது? உன்கிட்ட இருந்து இப்படி ஒரு இர்ரெஸ்பான்ஸிபிள் பிஹேவியரை நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணலை. இதுல ஆட எத்தனை வருஷம் நீ ட்ரை பண்ண? இப்போ உனக்கு சான்ஸ் கிடைச்சும் வேண்டாம்னு சொல்ற!!” என்று அவளைச் சகட்டு மேனிக்குத் திட்டிவிட்டார் அவர்.

விஷயத்தை அறிந்த விபீஷணன் நந்தனாவைப் பார்க்க வந்தான். அவனிற்குப் பயங்கரக் கோபம். அன்று எப்படிச் சந்தோஷமாக அவள் கூறினாள் என்று நினைத்துப் பார்த்தவனுக்கு ஆற்றாமையாக இருந்தது. இப்போது அவர்களது காதல் விஷயத்தைப் பற்றிக் கூறியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது.

“என்ன நந்தனா இப்படிப் பண்ணிட்ட?”

“இல்லை அத்தான் என்னால கான்சென்ட்ரேட் பண்ணி டான்ஸ் பண்ண முடியலை. வீட்டுலயும் யாரும் சரியா பேச மாட்டீங்கிறாங்க. பெரியப்பா கூட என்கிட்ட எதுவும் பேசலை. எனக்குக் கஷ்டமா இருக்கு அத்தான். உங்களையும் என்னால விட முடியாது, அவங்களையும் என்னால விட முடியாது அத்தான்.” என்று அவன் தோளில் சாய்த்து அவள் அழுகவும் அவனிற்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.

அவளை நிமிர்த்தி அவளது கண்ணங்களைப் பற்றி,”இங்கப் பார் யார் என்ன பண்ணாலும் நானும் நீயும் தான் கல்யாணம் பண்ணிப்போம் சரியா. இதுகெல்லாம் அழுகலாமா? உங்க பெரியப்பா சீக்கிரம் நம்ம கல்யாணத்துக்கு ஒகே சொல்வார். நீ வருத்தப்படாத.” என்று அவளைச் சமாதானப்படுத்தினான் விபீஷணன்.

அவளது மனநிலை அவனிற்குப் புரிந்தது. இன்று இல்லை என்றாலும் அடுத்த வருடம் அவளால் அங்கு நடனம் ஆட முடியும். ஆனால் கல்யாணம் அப்படி இல்லையே!! இதற்கு ஒரு முடிவுத் தெரிய வேண்டுமென முடிவெடுத்து நந்தனாவைச் சமாதானப்படுத்தி அவளது வீட்டில் இறக்கிவிட்டு அவனது வீட்டிற்குச் சென்றான்.

வேகமாக உள்ளே வந்தவன் உடை கூட மாற்றமால் அவனது அம்மா மற்றும் அப்பாவிடம்,”நந்தனாவைப் பத்தி என்ன டிசைட் பண்ணிருக்கீங்க? எப்போ அவங்க வீட்டுக்குப் போய் பேசுறது?” என்று கேட்டான்.

அவர்களும் நன்றாக யோசித்து நந்தனாவின் குடும்பத்தைப் பற்றி விசாரித்து விட்டு, நர்மதாவின் புகுந்த வீட்டிலும், சுவாதியின் வீட்டிலும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.

“உன்கிட்ட நாங்களே சொல்லலாம்னு இருந்தோம். நீயே வந்துட்ட. எங்களுக்கு இதுல சம்மதம் விபி. அவங்ககிட்ட பேசிட்டு சொல்லு. ஒரு நல்ல நாள்ல நாம அவங்க வீட்டுக்குப் போய் பேசுவோம்.” என்று ராஜாராம் கூற, விபீஷணனிற்குப் பயங்கர மகிழ்ச்சி.

அதே சந்தோஷத்துடன் அவனது அறைக்கு வந்து நந்தனாவிற்கு அழைத்தான். ஆனால் அவள் கைப்பேசியை எடுக்கவே இல்லை. மறுபடி மறுபடியும் அவன் அழைத்துக் கொண்டே இருந்தான். அவள் எடுக்காமல் இருந்தது இல்லை. இன்று எடுக்கவில்லை என்றதும் ஏதோ பிரச்சனையாக இருக்குமோ என்று பயந்து உடனே கீழே வந்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் நந்தனாவின் வீட்டிற்குச் சென்றான்.

விபீஷணன் நந்தனாவை இறக்கி விட்டுச் சென்றதும், அவள் உள்ளே வந்தாள். அப்போது வீட்டில் அவளது பெரியப்பா, பெரியம்மா, அவளது அண்ணன் அசோக் மற்றும் அவளது அக்கா ஹரிணி என்று எல்லாரும் அமர்ந்திருந்தனர்.

அனைவரும் அமர்ந்திருப்பதைப் பார்த்தே புரிந்து போனது நந்தனாவிற்கு. ஏதோ தப்பாக நடக்கப் போகிறது என்று மனம் அடித்துக் கூறியது. இருந்தாலும் அனைத்தையும் எதிர் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்து உள்ளே வந்தாள்.

“நந்தனா இங்க வா.” என்று அவளை அழைத்தார் நடராஜன்.

அவளும் அவர் அருகில் வர, அவளை அவர் பக்கத்தில் அமரச் சொன்னார். அவளும் அவர் கூறியதை எல்லாம் செய்தால்.

“உனக்கு எத்தனை நாளா அந்தத் தம்பியைத் தெரியும்?” என்று கேட்டார்.

“அப்பா இன்னும் என்ன தம்பி தொம்பினு!! அவன் ஒரு ஃப்ராட். அவனைப் போய் மரியாதை கொடுத்து பேசிட்டு இருக்கீங்க.” என்று அசோக் எகிறினான்.

“அசோக் நான் தான் பேசிட்டு இருக்கேன்ல. கொஞ்சம் அமைதியாக இரு.” என்று அவர் கூறிவிட்டு நந்தனாவைப் பார்க்க, அவளோ அசோக் விபீஷணனை ஃப்ராட் என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“நந்தனா நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலை.” என்று கேட்டார் நடராஜன்.

“பெரியப்பா அவரை எனக்கு நாலு மாசமா தெரியும். அவர் ரொம்ப நல்லர். அண்ணா சொல்ற மாதிரிலாம் கிடையாது. அண்ணா ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு சொல்றாங்க.” என்று விபீஷணனிற்கு ஆதரவாக அவள் பேச, மேனகாவிற்குக் கோபம் வந்து விட்டது.

“ஏய் என் பையன் தப்பா சொல்றான். நீ காதலிக்கிறவன் ரொம்ப ஒழுக்கமானவனோ!! பாருங்க நம்ம வீட்டுல உட்கார்ந்து கிட்டே நம்ம பையனைப் பத்தித் தப்பா பேசுறா. இவளுக்கு எல்லாம் கொஞ்சம் கூட நன்றி உணர்ச்சியே இல்லை.”

“மேனகா யாரையும் பேச வேண்டாம்னு சொன்னது உன் காதுல விழுகலையா!! என்ன பேசுற நீ? அமைதியா இருக்கிறதுனு இரு. இல்லாட்டி உள்ள எழுந்திருச்சு போ.” என்று அவர் சத்தம் போட, மேனகா அவரை முறைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்தார்.

பின்னர் நடராஜன், நந்தனாவிடம் திரும்பி, எதுவும் பேசாமல் கையிலிருந்த ஒரு காகிதத்தை அவளிடம் தந்தார். அவளும் புரியாமல் அதை வாங்கிப் பார்த்தாள்.

பார்த்தவள் அதிர்ச்சியாகி விட்டாள். ஏனென்றாள் அது ஒரு மேரேஜ் செர்ட்டிஃபிகேட். அதில் மாப்பிள்ளை என்ற இடத்தில் விபீஷணன் பெயர் இருந்தது. அதைப் பார்த்ததும் நந்தனாவிற்குப் பயங்கர அதிர்ச்சி. இப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று மீண்டுமொரு முறைப் பார்க்க, அதில் மணப்பெண் என்ற இடத்தில் ராகவியின் பெயரைப் பார்த்ததும் இன்னும் அதிர்ச்சி. இது சாத்தியமே இல்லாத ஒன்று என்று அவளிற்குத் தோன்றியது.

Advertisement