Advertisement

அத்தியாயம் 2

விபீஷணன் தன் அம்மாவிடம் பேசிவிட்டு அவனது அறைக்குச் செல்லப் போக, வீட்டு வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டு அப்படியே அங்கேயே நின்று பார்த்தான் யார் வருகிறார்கள் என்று. அவனது அக்கா நர்மதா தான் தன் கணவன் கிஷோருடன் அங்கு வந்தாள்.

“வா நர்மதா, வாங்க அண்ணா. எல்லாரும் உள்ள தான் இருக்காங்க. நான் ஆத்விக்கை ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டுட்டு வரேன்.” என்று சுவாதி கூறிவிட்டு,”ஆத்விக் சீக்கிரம் வா.” என்று ஆத்விக்கை அழைக்க,

ஷூ மாட்டிக் கொண்டு வந்த ஆத்விக் அவனது அத்தையைப் பார்த்து வேகமாகத் தாவிச் சென்று”அத்தை.” என்று அவன் நர்மதாவின் இடையைக் கட்டிக் கொள்ள,

“என்ன செல்லம் ஸ்கூலுக்கு கிளம்பிட்டீங்களா?” அவனைத் தூக்கிக் கொண்டு நர்மா வினவ,

“ஆமா அத்தை. அபையும் தீக்ஷூ அக்கா எங்க அத்தை?” என்று கேட்க,

“அவங்க இரண்டும் பேரும் ஸ்கூலுக்கு போயிட்டாங்க செல்லம். இப்போ நீங்க சமத்தா ஸ்கூல்லுக்கு போங்க அத்தை அவங்களை சண்டே கூட்டிட்டு வரேன் சரியா.” என்று நர்மதா கூற, வேகமாக அவன் தலையை அசைத்தான்.

“ஆத்விக் ஸ்கூல் பஸ் வர நேரமாச்சு பார். வா.” என்று சுவாதி கூற, அத்தையிடமும் மாமாவிடமும் பை கூறிவிட்டு அவனது அம்மாவுடன் கிளம்பி விட்டான்.

உள்ளே நுழைந்த நர்மதா நேராக அவளது அம்மாவிடம் வந்தவள்,”அம்மா என்னாச்சு? மயக்கம் போட்டு விழுந்துட்டீங்களமே!! கவுதம் அண்ணா ஃபோன் பண்ணி சொன்னான். விபி எங்க? வந்து உங்களைப் பார்த்தானா இல்லை இப்போவும் ஹாஸ்பிட்டல் தான் என் உலகம்னு சுத்திட்டு இருக்கானா?” சாதாரணமாக ஆரம்பித்து சற்றுக் கடுமையாக முடித்தாள் நர்மதா.

“வாங்க மாப்பிள்ளை, நர்மதா கொஞ்சம் பொறு மா எனக்கு ஒன்னுமில்லை மா…” என்று சசிகலா கூறவும்,

“உட்காருங்க மாப்பிள்ளை.” என்று ராஜாரம் கூறவும்,

“நான் இங்கத் தான் இருக்கேன் அக்கா.” என்று விபீஷணன் கூறவும் சரியாக இருக்க, நர்மதா அவனை முறைத்துப் பார்த்தாள்.

“இப்போ எதுக்கு நீ இப்படி முறைக்கிற? அம்மாவுக்கு எதுவுமில்லை, நீ ஆபிஸ் போகலையா? பிள்ளைங்க இரண்டும் எங்க?” என்று அவன் அவளை அடுக் அடுக்காகக் கேள்விகளைக் கேட்க,

“என்ன புத்திசாலினு நினைப்பா நான் கேட்கிறதுக்கு முன்னாடி நீ கேட்டால் நான் விட்டுடுவேனா? ஏன் டா இப்படி இருக்க? அம்மாவும் நாங்களும் பாவம்னு நினைக்கவே மாட்டியா?” கவலையாக அவள் கேட்க,

“எனக்குப் புரியலை. உங்களைப் பாவமா பார்க்க என்ன இருக்கு? என்ன ஆகிடுச்சுனு நீ இப்படிப் பேசுற?”

“ஆமா எங்களைப் பார்த்தா உனக்கு ஏன் பாவமா தெரிய போகுது. சும்மா எதுவும் தெரியாத மாதிரி நடிக்காத. போனவளை நினைச்சுட்டு இருக்கிறவங்களை கஷ்டப்படுத்தறனு உனக்குப் புரியுதா இல்லையா?”

“அக்கா இப்போ தான் அம்மாகிட்ட முடிச்சேன். திரும்ப நீ ஆரம்பிக்காத. வேற வேலை இல்லையா உனக்க. உங்க ஆபிஸ்னால எப்போ வேணாலும் போகலாம்னு நினைப்பா. மாமா முதல்ல இவளைக் கூட்டிட்டு போங்க.” என்று அக்காவிடம் ஆரம்பித்து மாமாவிடம் முடிக்க,

நர்மதா, கிஷோர் இருவரும் சி.ஏ. முடித்தவர்கள். கிஷோரின் அப்பாவும் சி.ஏ. முடித்தவர். சொந்தமாக அலுவலகம் வைத்திருக்கிறார்கள். அதில் தான் திருமணத்திற்குப் பிறகு அவர்களுடன் நர்மதா வேலை செய்கிறாள்.

“மாப்பிள்ளை உன் அக்கா சொல்றதுல என்ன தப்பு இருக்கு? இப்படியே தனியாவே இருக்கப் போறியா? அப்படி எல்லாம் இருக்க முடியாது மாப்பிள்ளை. இப்போ உனக்குப் புரியாது. கொஞ்ச வருஷம் கழிச்சு நமக்குனு ஒரு துணை இருந்தா நல்லா இருக்கும், நம்மை அப்பானு கூப்பிட ஒரு குழந்தை இருந்தா நல்லா இருக்கும்னு உன் மனசுல தோனும். உன்னோட நல்லதுக்கு தான் மாப்பிள்ளை நாங்க எல்லாரும் சொல்றோம். எங்க பேச்சை கேளேன்.” என்று கிஷோர் கூற,

“நல்லா சொல்லுங்க மாமா அவனுக்கு. நாங்க எவ்ளோ சொன்னாலும் அவன் புத்தில ஏறவே மாட்டீங்கிது. இது ஒன்னும் சினிமா கிடையாது. அந்தப் பொண்ணு நந்தனாவையே நினைச்சுட்டு கடைசி வரைக்கும் வாழ்றதுக்கு. நாங்க சொல்றதை கேட்டா தான் என்ன உனக்கு?” என்று கவுதமும் கேட்க,

“அப்பா நீங்க மட்டும் ஏன் அமைதியா இருக்கீங்க? நீங்களும் ஏதாவது சொல்ல வேண்டியது தான? மொத்தமா நான் பதில் சொல்லிடுவேன்.” கடுப்பாக விபீஷணன் கூற,

“இங்கப் பார் விபி நீ ஒன்னும் சின்ன பையன் கிடையாது. நாங்க சொல்றதை கேட்காட்டி அடிச்சு கேட்க வைக்கிறதுக்கு. உனக்கா புரியனும் நம்ம அம்மா, அப்பா, கூடப் பிறந்தவங்க எல்லாரும் நம்ம நன்மைக்குத் தான் சொல்றாங்கனு. இவ்ளோ படிச்சு என்ன பிரியோஜனம். நாங்க சொல்றதை புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிற உன்கிட்ட என்ன பேசுறது நீயே சொல்லு?” என்று ராஜாராம் கவலையாகக் கூற,

“அதையே நானும் திருப்பி உங்ககிட்ட சொல்லலாம். நான் சொல்றதை நீங்க எல்லாரும் ஏன் புரிஞ்சுக்க மாட்டீங்கிறீங்க? கடைசி வரை தனியா வாழ முடியாதா என்ன? ஏன் அப்பா இவ்ளோ பேசுற நீங்க அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கனு தெரிஞ்சதும் எவ்ளோ துடிச்சீங்க. இதுவரைக்கும் அம்மாவுக்கு ஏதாவது சின்னதா அடிப்பட்டாலே அப்படித் துடிச்சு போயிடுவீங்க. உங்களைப் பார்த்து வளர்ந்த நான் மட்டும் எப்படி என்னோட நந்தனாவை மறந்துட்டு இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேன்னு யோசிச்சீங்க?” என்று விபீஷணன் தன் தந்தையிடம் கேட்க,

“முட்டாள்தனமா பேசாத விபி. நான் ஒன்னும் உயிரோட இருக்க உன் மனைவியை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கச் சொல்லலை. அவள் இறந்து போயிட்டா டா. அவளையே நினைச்சு உன் வாழ்க்கையை ஏன் அழிச்சுக்கிற? எங்களுக்கும் நீ குழந்தை குட்டியோட சந்தோஷமா இருக்கிறதைப் பார்க்கனும்னு ஆசை இருக்காதா? ஏன் விபி புரிஞ்சுக்க மாட்டீங்கிற?” கோபமாக ஆரம்பித்துக் கெஞ்சலில் முடித்தார் ராஜாராம்.

“அப்பா திரும்பத் திரும்ப இதையே பேசாதீங்க. உங்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் சொல்றேன் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன்னு கனவுல கூட நினைக்காதீங்க. அது நடக்கவே நடக்காது. எனக்கு என் நந்தனா மட்டும் போதும். வேற யாரும் வேண்டாம். அப்படி என்னைக் கட்டாயப்படுத்தினா நடக்கிற எந்தச் செயலுக்கும் நான் பொறுப்பாக மாட்டேன்.” என்று கூறிவிட்டு கோபமாக அங்கிருந்து அவனது அறைக்குச் செல்ல, எல்லாரும் இயலாமையுடன் போகும் அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

“என்ன சசி நீ எதுவும் பேசலை அவன்கிட்ட?” என்று ராஜாராம் கேட்க,

“நீங்க எல்லாரும் பேசியே அவன் எதுவும் கேட்கலை. நான் பேசுனா மட்டும் கேட்டுடுவானா? அப்புறம் நான் ஒன்னும் புரிஞ்சுக்கிட்டேன் அவன் பேசுனால் எல்லாம் வழிக்கு வர மாட்டாங்க. நாம செயல்ல தான் இறங்கனும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நீங்க என் கூட கோவிலுக்கு வாங்க. அங்க இன்னைக்கு மாதிரியே அந்தப் பொண்ணு நந்திதா வந்தால் இது கடவுளோட செயல் தான் எடுத்துட்டுகிட்டு அந்தப் பொண்ணுகிட்ட பேசலாம். அப்படி அந்தப் பொண்ணு என் கண்ணுல படலைனா….” ஒரு நொடி பேச்சை நிறுத்திவிட்டு மீண்டும் அவரே தொடர்ந்தார்,”இல்லை நந்திதா கண்டிப்பா என் கண்ணுல படுவா. அவள் தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரப் போறானு என் மனசு சொல்லுது.” என்று சசிகலா கூற,

“அம்மா யாரைப் பத்திப் பேசுறீங்க? யார் அந்த நந்திதா?” என்று நர்மதா கேட்க, சசிகலா கோவிலில் நடந்ததைப் பற்றி அவர்களிடம் கூற, கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் நந்திதா பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது.

“அத்தை அந்தப் பெண்ணைப் பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது. கல்யாணம் ஆகாத பொண்ணுனு வேற சொல்றீங்க. அந்தப் பொண்ணு எப்படி விபியை இரண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கும்?” ஆத்விக்கை பஸ் ஏற்றிவிட்டு வந்த சுவாதி கேட்க,

“ப்ச் அண்ணி எதுக்கு இப்படி அபசகுனமா பேசுறீங்க?” என்று நர்மதாவும்,

“நான் அபசகுனமா பேசலை நர்மதா. உள்ளதைத் தான் சொன்னேன். நாம ஒன்னு ஆசைப்பட்டு அது நடக்கலைனு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஒரு முன்னெச்சரிக்கையா தான் நான் சொன்னேன்.” என்று சுவாதி கூற,

“ப்ச் ஆமா இரண்டாந்தாரமா இருந்தாலும் என் பையன் அந்தப் பொண்ணு கூட ஒரு மூணு மாசம் தான் வாழ்ந்துருப்பான். நான் எப்படிப் பேசனுமனோ அப்படிப் பேசி நந்திதாவை இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைச்சுடுவேன்.” என்று திடமாக சசிகலா கூற,

சுவாதிக்கு தான் அவர்கள் செய்யும் செயலில் ஈடுபாடு இல்லை. அவளுக்கு நன்றாகப் புரிந்தது இவர்கள் என்ன தகிடுதத்தம் பண்ணினாலும் விபீஷணன் இவர்கள் பேச்சைக் கேட்க மாட்டான் என்று. தேவையில்லாமல் ஒரு பெண்ணின் மனதில் இவர்கள் ஆசையை வளர்க்கப் பார்க்கிறார்கள் என்பதை நினைத்து கஷ்டமாக இருந்தது. அது இவர்களுக்குத் தான் பிரச்சனையாக வரப் போகிறது என்று தோன்றியது சுவாதிக்கு. ஆனால் அவள் வாயைத் திறந்து எதுவும் கூறவில்லை. அப்படி ஏதாவது கூறி அவர்கள் விபீஷணனுக்கு நல்லது நடப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று அபத்தமாகப் பேசுவார்கள் என்று தோன்ற அமைதியாகி விட்டாள்.

Advertisement