Advertisement

அடுத்த நாள் விபீஷணன் எப்போதும் போல் மருத்துவமனைக் கிளம்பிச் சென்றான். வீட்டில் யாரும் எதுவும் அவனது காதல் விவகாரத்தைப் பற்றிப் பேசவில்லை. அவனும் எதையும் கேட்டு அவர்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவனுக்கு நம்பிக்கை இருந்தது அவனது அம்மாவும் அப்பாவும் அவனது காதலை ஏற்றுக் கொள்வார்கள்.

நந்தனாவிடம் விபீஷணன் எதுவும் இதைப் பற்றிப் பேசவில்லை. அவளும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவனே கூறுவான் என்று பொறுமையாக இருந்தாள்.

எப்போதும் போல் விபீஷணன் மருத்துவமனை வர, அவனை நரம்பியல் பிரிவின் தலைமை மருத்துவர் அழைக்க, அவரைக் காணச் சென்றான் விபீஷணன். அவரது அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் விபீஷணன்.

“டாக்டர் கூப்பிட்டீங்களா?”

“ம் ஆமா விபி. உட்கார், கொஞ்சம் பேசனும் உன்கிட்ட.” என்றார் அவர்.

“சொல்லுங்க டாக்டர்.”

“விபி நம்ம ஹாஸ்பிட்டல் வருஷம் வருஷம் மெடிக்கல் கேம்ப் போடுவாங்க தெரியும் தான?”

“எஸ் டாக்டர் தெரியும்.”

“ம் இந்த முறை நம்ம டிபார்ட்மென்ட்ல இருந்து உன்னையும் டாக்டர் லிங்கம் அவரையும் தான் அனுப்பலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?” என்று அவர் கேட்டார் அவனிடம்.

“எத்தனை நாள் டாக்டர்?”

“ஒன் வீக் விபீஷணன்.” என்று அவர் கூற, அவன் யோசித்தான். இப்போது தான் பத்து நாட்கள் விடுமுறை எடுத்தான். அடுத்து ஒரு வாரம் என்றால் அவன் தான் வேண்டும் என்று கேட்கும் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். அதே போல் ஒரு வாரம் நந்தனாவையும் பார்க்காமல் இருக்க வேண்டும்.

“டாக்டர் நான் இப்போ தான் பத்து நாள் லீவ் போட்டேன். இப்போ மறுபடியும் ஒரு வாரம்னா…” என்று தயங்கினான் விபீஷணன்.

“என்ன விபி பேசுற நீ? இது ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் ஏற்பாடு பண்றது தான? ஸோ உனக்கு இது லீவ் கணக்குல சேராது.”

“ம் எந்த ஊர் டாக்டர்?”

“சிதம்பரம் பக்கத்துல புவனகிரினு ஓர் ஊர்ல தான் கேம்ப் போட்டுருக்காங்க.” என்று அவர் கூறினார்.

“ஓகே டாக்டர் நான் இன்னைக்கு சாயந்தரம் குள்ள சொல்லட்டுமா?” என்று கேட்டான்.

“சுயர். நல்லா யோசிச்சு சொல்லு விபி.” என்று அவர் கூறி, சரியென்று தலையசைத்து விட்டு விபீஷணன் அவரது அறையிலிருந்து வெளியேறினான்.

அதே போல் அங்குக் கல்லூரியில் நந்தனாவின் ஆசரியர் அவளை அழைத்து,”நந்தனா இந்த முறை நாட்டியாஞ்சலி திருவிழால நீ டான்ஸ் ஆடுறியா?” என்று கேட்டார்.

வருடா வருடம் சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா சிறப்பாக நடைபெறும். அதில் பங்கேற்கப் பல மாவட்டங்களிலிருந்து பல நடனக் கலைஞர்கள் வருவார்கள். அதைப் பார்க்கவும் மக்கள் கூட்டம் திரள் திரளாக வருவார்கள்.

அதில் ஆட வாய்ப்புக் கிடைக்க நிறையப் பேர் தவம் இருக்கிறார்கள். அதனால் அந்தச் செய்தியைக் கேட்டதும் நந்தனாவிற்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது.

சற்றும் யோசிக்காமல்,”எனக்கு டபுள் ஓகே மேம்.” என்று அவள் கூற, அவளது குரலிலிருந்தே அவளது சந்தோஷத்தைப் புரிந்து கொண்டார் அவளது ஆசிரியர்.

“சரி மா. அப்போ அதுக்கு தகுந்த மாதிரி உன்னோட பிராக்டீஸ்ஸை பார்த்துக்கோ சரியா. உன் மேல எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கு.” என்று அவளது ஆசரியர் கூற, நந்தனா எந்தப் பாட்டுக்கு எப்படி ஆடி வேண்டுமென்று இப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

நந்தனா அவளது ஆசிரியரிடம் இருந்து விடைபெற்று வெளியே வந்த அடுத்த நிமிடம் விபீஷணனிற்குத் தான் அழைத்தாள். அவனும் அப்போது தான் உள்ளேயே இருக்கும் நோயாளிகளைப் பார்த்து முடித்து விட்டு அவனது அறைக்கு வந்திருந்தான்.

அவனது கைப்பேசி ஒலிப்பதைப் பார்த்து அதை எடுத்துப் பார்த்தவன் நந்தனா என்றவுடன் சந்தோஷமாக அதை எடுத்தான். அவன் எடுத்து காதில் தான் வைத்திருப்பான் அவளே சந்தோஷமாக,”அத்து செம ஹேப்பி நியூஸ். ஒவ்வொரு வருஷமும் சிதம்பரத்துல நாட்டியஞ்சலி ப்ரோக்ராம் நடக்கும். அதுல இந்த வருஷம் நான் பார்ட்டிசிபேட் பண்ண போறேன்.” என்று குதூகலமாகக் கூறினாள் நந்தனா.

“ஹேய் சூப்பர் லட்டுக் குட்டி. நீ சொல்றதுலயே இந்த ப்ரோக்ராம் எவ்ளோ இம்பார்ட்டென்ட் அண்ட் ஸ்பெஷல் உனக்குனு புரியுது. நீ கண்டிப்பா நல்லா பண்ணுவ டா லட்டு.”

“ம் ஆமா அத்து. எனக்கு இது ரொம்ப இம்பார்ட்டென்ட். அப்புறம் அதுக்கு ப்ராக்டீஸ் பண்றதால உங்களை அப்போ அப்போ தான் பார்க்க முடியும்.” என்று சற்று சோகமாகக் கூறினாள் நந்தனா.

“ம் சரி டா. அப்படி உன்னைப் பார்க்கனும்னா நீ எங்க ப்ராக்டீஸ் பண்றனு சொல்லு அங்க வந்து நான் பார்க்கிறேன் சரியா.”

“ம் சரி அத்து. அப்புறம் பெரியம்மாவும் பெரியப்பாவும் ஊர்ல இருந்து வந்துட்டாங்க.” என்று அவள் கூறவும், அவனிற்குப் புரிந்தது.

“சரி டா இன்னைக்கு நான் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வரேன்.” என்று உறுதியாகக் கூறிவிட்டுக் கைப்பேசியை வைத்தான் விபீஷணன்.

சொன்னது போலவே மாலை நேரம் நந்தனாவிடம் விலாசத்தைக் கேட்டு விட்டு அவளது வீட்டிற்கு வந்து விட்டான்.

விபீஷணன் வீட்டின் அழைப்பு மணியை அடித்து விட்டுக் காத்திருக்க, நந்தனா வேகமாக ஓடி வந்தவள், அசோக் அவளது அண்ணன் வந்து கதவைத் திறக்கச் செல்லவும் அப்படியே நின்று விட்டாள். அசோக் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுத் தான் சென்று கதவைத் திறந்தான்.

அவன் கதவைத் திறந்தவுடன்,”ஹாய், ஐ ஆம் விபீஷணன்.” என்று விபீஷணன் கூறினான்.

“ஓகே. என்ன வேணும்?” என்று அவனை உள்ளே விடாமல் அசோக் கேட்டான்.

நந்தனா வேகமாக அசோக்கிடம் வந்து,”அண்ணா பெரியப்பாகிட்ட பேசத் தான் வந்திருக்கார்.” என்று அவள் கூறவும் அவனிற்கு விஷயம் புரிந்து விட்டது.

அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே அவனது கைப்பேசியை எடுத்து அவனது தந்தைக்கு அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லி விட்டு உள்ளே சென்று அவனது அம்மாவை அழைத்து வந்தான்.

அதற்குள் நந்தனா விபீஷணனை உள்ளே அழைத்து வந்து அவனை அமர வைத்திருந்தாள். நந்தனாவின் பெரியம்மா மேனகா அசோக்குடன் வெளியே வரவும், விபீஷணன் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் வைத்தான்.

“என்ன நடக்குது நந்தனா? அசோக் சொல்றது உண்மையா?” சற்று கோபமாகக் கேட்டார் மேனகா.

நந்தனா பதில் சொல்வதற்கு முன்பு இடைப்புகுந்த விபீஷணன்,”உங்க பையன் என்ன சொன்னார்னு எனக்குத் தெரியாது. ஆனால் நான் இங்க வந்ததுக்கு ரீசன் நந்தனாவை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுங்கனு கேட்கத் தான்.” என்று அவன் தெளிவாகக் கூறினான்.

“இங்க பார் தம்பி நீ யார் என்னன்னு எங்களுக்கு எதுவும் தெரியாது. இப்படித் திடீர்னு வந்து எங்க வீட்டுப் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சொன்னால் என்ன அர்த்தம்?”

“சரி ஆண்டி, அப்போ என்னைப் பத்தி நான் சொல்றேன். என் பெயர் விபீஷணன். நான் VSB மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ல நியூரோ சர்ஜென்னா வொர்க் பண்றேன். அம்மா ஸ்கூல்ல டீச்சரா இருந்து வாலன்ட்டியர் ரிட்டையர்மென்ட் வாங்கிட்டாங்க. அப்பா எல்.ஐ.சி.ல வொர்க் பண்ணிட்டு ரிட்டையர் ஆனதும் வீட்டுல தான் இருக்கார். எனக்கு அண்ணா ஒருத்தன் இருக்கான். அப்புறம் அக்காவும் இருக்காங்க. இரண்டு பேருக்கும் கல்யாணமாகி குழந்தையும் இருக்கு.” என்று அவன் கூற, மேனகா என்ன இவன் புரியாமல் பேசுகிறான் என்று தான் தோன்றியது.

“இதெல்லாம் தெரிஞ்சா மட்டும் போதுமா? உங்க குடும்பத்துல இருக்கிறவங்க எப்படினு எங்களுக்குத் தெரிய வேண்டாமா? அதை விட எல்லாம் சரிப்பட்டு வரும்னு எப்படி நினைக்கிறீங்க? நந்தனா நீ இப்படிப் பண்ணுவனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.” என்றார் மேனகா.

Advertisement