Advertisement

ஒரு வாரம் அங்கேயே இருந்து ராகவியை நன்றாகப் பார்த்துக் கொண்டு விட்டு சசிகலா, ராஜாராம் மற்றும் விபீஷணன் இந்தியா கிளம்பி விட்டனர்.

நந்தனா மிகுந்த எதிர்பார்ப்போடு அன்று காலையில் கல்லூரிக்குக் கிளம்பினாள். இன்று விபீஷணனை சந்தித்து விடலாம் என்று நம்பினாள். ஆனால் கடைசி நிமிடத்தில் அவனுக்கு மருத்துவமனையில் அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை வந்ததால் அவனால் அன்று அவளைச் சந்திக்கவே முடியவில்லை.

விபீஷணன் இந்தியா வந்து இரண்டு நாளாகிய பிறகு தான் இருவருக்கும் சந்திக்கும் சந்தர்ப்பமே கிட்டியது. அன்று காலையில் விபீஷணன் நந்தனாவிடம் கூறாமலே அவளைச் சந்திக்க முடிவெடுத்து அவள் எப்போதும் கல்லூரிக்குச் செல்லக் காத்திருக்கும் பேருந்து நிலையத்திற்கு முன்பு சென்று தனது காரை நிறுத்தினான்.

முதலில் யாரோ என்று பார்த்தவள் பின்புத் தான் காரின் அடையாளங்களைப் பார்த்தவள் அது விபீஷணன் என்று தெரிந்ததும் வேகமாக காரின் அருகில் வந்தாள். அவன் உள்ளே அமர்ந்து கொண்டே காரின் கதவைத் திறந்து விட, வேகமாக அதில் ஏறினாள் நந்தனா.

நந்தனா அமர்ந்தவுடன் விபீஷணன் காரை இயக்கினான். இருவரும் எதுவும் பேசவில்லை. காரில் ஓடிய பாட்டுச் சத்தம் மட்டுமே கேட்டது. சிறிது தூரம் சென்றவுடன் விபீஷணன் தனது இடது கையை அவளிடம் நீட்ட, அவள் கேள்வியாக அவனைப் பார்க்க, அவனே அவளது வலது கையை எடுத்து அவளது விரல்களுடன் தன் விரல்களைச் சேர்த்துக் கோர்த்துக் கொண்டான். சரியாக அந்த நேரம் காரின் ரேடியோ,

உன் கைகள் கோர்த்து

உன்னோடு போக

என் நெஞ்சம் தான் ஏங்குதே

தினம் உயிர் வாங்குதே

உன் தோளில் சாய்ந்து

கண்மூடி வாழ

என் உள்ளம் அலைபாயுதே…

ஐயோ தடுமாறுதே…

உன் கண்ணம் மேலே

மழை நீரை போலே

முத்தக்கோலம் போட ஆசை அல்லாடுதே

நீ பேசும் பேச்சு

நாள்தோறும் கேட்டு

எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

என்ற பாட்டு ஒலிக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நல்ல சிட்டுவேஷன் சாங்க்ல?” என்று கேட்டு விட்டு அவளைப் பார்த்துக் கண் அடித்தான் விபீஷணன்.

“ம் ஆமா அத்து. கொஞ்சம் மெதுவா போறீங்களா?” என்று கேட்டாள்.

“ஏன் டா? என்னாச்சு?”

“இல்லை அத்து நீங்க போற ஸ்பீட்ல காலேஜ் பத்து நிமிஷத்துல வந்துரும். அப்புறம் நீங்களும் ஹாஸ்பிட்டல் போயிடுவீங்க. தென் எப்போ பார்ப்போம்னு தெரியாது. அதான் அத்தான்.” என்றாள் நந்தனா.

அவளைக் காதலுடன் பார்த்த விபீஷணன்,”நான் உங்க வீட்டுல வந்து பேசட்டுமா லட்டு? நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டான் விபீஷணன். நந்தனா யோசிக்க எல்லாம் இல்லை, அடுத்த நிமிடம் வேகமாகச் சரியென்று தலையசைத்தாள்.

அவளது ஆர்வத்தைப் பார்த்த விபீஷணனுக்குச் சிரிப்பு ஒரு பக்கம் அதே சமயம் அவள் தன் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் என்பதைப் பார்க்கும் போது அந்த நிமிடம் உலகிலே அவன் தான் சந்தோஷமான ஆளாகக் கருதினான். அதே போல் வாழ்க்கையில ஏதோ பெரிதாக அவன் வெற்றி பெற்றது போல் உணர்ந்தான்.

பின்பு நந்தனாவை அவளது கல்லூரியில் இறக்கி விட்டு விட்டு அவன் மருத்துவமனை நோக்கிச் சென்று விட்டான். அன்றே நந்தனா வீட்டில் பேச வேண்டுமென்று தான் முடிவெடுத்தான். ஆனால் அவனுக்கு மருத்துவமனையில் அடுத்தடுத்து வேலைகள் வர, அவனால் அன்று நந்தனாவின் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை.

அன்று இரவு அவளிடம் கைப்பேசியில் பேசும் போது,”சாரி டா லட்டு, நான் இன்னைக்கு உங்க வீட்டுக்கு வரலாம்னு தான் இருந்தேன். ஆனால் முடியலை டா. நாளைக்குக் கண்டிப்பா வரேன் சரியா!” என்றான் விபீஷணன்.

“இல்லை அத்து, நாளைக்குப் பெரியப்பாவும் பெரியம்மாவும் ஒரு கல்யாணத்துக்கு மதுரை போறாங்க. வர நைட்டாகிடும் அத்தான்.” என்றாள் நந்தனா.

“அப்படியா சரி டா, அப்போ முதல்ல நான் இங்க வீட்டுல பேசுறேன். அப்புறம் உன் பெரியப்பாவும் பெரியம்மாவும் வந்ததும் நான் அவங்ககிட்ட பேசுறேன் சரியா.” என்று கூறிவிட்டுப் பிறகு ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசிவிட்டு கைப்பேசியை வைத்தான் விபீஷணன்.

அடுத்த நாள் அவன் மருத்துவமனையில் வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை வீடு திரும்பியதும் வேகமாக அவனது அறைக்குச் சென்று சுத்தப்படுத்திக் கொண்டு கீழே வந்தான். 

ராஜாராம் உட்கார்ந்து தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருக்க, கவுதமும் அப்போது தான் வந்திருந்தவன் அவனது அறைக்குச் சென்றிருந்தான். சுவாதி அவர்களது அறையில் ஆத்விக்கிற்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். சசிகலா அனைவருக்கும் காஃபி போடச் சமையலறையில் இருந்தார்.

அங்கு வந்த விபீஷணன் நீள் சாய்விருக்கையில் சென்று அமர்ந்தான். வீட்டில் உள்ளவர்களிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் யோசித்துக் கொண்டு அவன் அமர்ந்திருக்க, கவுதம் அவனிற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து அவனது தோளில் கைபோட்டு,”என்ன டா பலத்த யோசனைல இருக்கப் போல?” என்று கேட்டான்.

“ம் ஆமா, ஒரு முக்கியமான விஷயம் பேசனும் அண்ணா. அம்மா வந்ததும் அண்ணியையும் கூப்பிடு.” என்று அவன் கூற, அவனது அண்ணன் என்ற விளிப்பிலே மிகவும் முக்கியமான விஷயம் தான் என்று புரிந்து கொண்டான் கவுதம்.

சசிகலா அனைவருக்கும் டீ மற்றும் காஃபி போட்டு எடுத்துக் கொண்டு அங்கு வர, கவுதம் சென்று சுவாதியை அழைத்துக் கொண்டு வர, ஆத்விக்கும் இது தான் சாக்கென்று அம்மாவுடனே கீழே வந்துவிட்டான். வந்தவன் அவனது சித்தப்பாவைப் பார்த்ததும் வேகமாக ஓடிச் சென்று அவனின் மடி மேல் எகிறி குதித்து உட்கார்ந்தான்.

ஆத்விக் அமர்ந்ததில் விபீஷணனின் யோசனைத் தடைப்பட்டது. ஆத்விக்கை அனைத்து முத்தம் வைத்தவன்,”ஓய் ஹோம் வொர்க் முடிச்சுட்டியா நீ?”

“எங்க அவங்க அப்பா வந்து கூப்பிட்டதும் வேகமாகப் பின்னாடியே ஓடி வந்துட்டான். ஆத்விக் போய் நோட் புக் எடுத்துட்டு கீழே வா. நீ முடிச்சா தான் உன்னை நான் நாளைக்கு தீம் பார்க் கூட்டிட்டு போவேன். இல்லாட்டி நோ தீம் பார்க்.” என்று சுவாதி விபீஷணனிடம் ஆரம்பித்து ஆத்விக்கிடம் முடிக்க, தீம் பார்க் என்ற வார்த்தையைக் கேட்டதும் குழந்தை வேகமாக ஓடிச் சென்றது.

ஆத்விக் சென்றதும் கதவுதமே ஆரம்பித்தான்,”என்ன முக்கியமான விஷயம் பேசனும் விபி?”என்று கேட்டான்.

கவுதம் கூறியதைக் கேட்ட அனைவரும் விபீஷணனையே பார்க்க, அவனே ஆரம்பித்தான்,”அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை. நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன். அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும் ஆசைப் படுறேன். அதுக்கு உங்க எல்லாருடைய சம்மதமும் வேணும்.” என்று பட்டென்று விஷயத்தை அவன் உடைக்க, அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும் என்றாலும் விபீஷணன் வாயிலிருந்தே கேட்டதும் அவர்களுக்கு அவன் கூறிய விஷயத்தை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தனர்.

அனைவரின் அமைதியும் விபீஷணனைச் சற்று பயம் கொள்ள வைத்தது. அவனால் கண்டிப்பாக நந்தனா இல்லாமல் இருக்க முடியாது. அதே போல் வீட்டில் இருப்பவர்கள் சம்மதம் இல்லாமல் அவனின் கல்யாணம் நடப்பத்தில் அவனுக்கு உடன்பாடு இல்லை. அதனால் அமைதியாக அனைவரின் முகத்தையும் அவன் பார்த்தான்.

“அந்தப் பொண்ணு யார்?” என்று மௌனத்தை உடைத்துக் கேள்வி கேட்டார் ராஜாராம்.

“அவளோட பேர் யது நந்தனா அப்பா.” என்று அவன் அவளது பெயரை உச்சரிக்கும் போது அதில் அத்தனை காதல் இருந்தது. ஒருவரால் ஒரு பெயரை இத்தனை காதலுடன் கூற முடியுமா என்று தான் அனைவரும் அசந்து பார்த்தனர். அவர்களின் பார்வை எதையும் பார்க்காமல் கனவு உலகத்தில் சஞ்சரித்தது போல நந்தனாவைப் பற்றி அனைத்தையும் கூறினான் விபீஷணன்.

கேட்டவர்களுக்குத் தான் என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை. அனைவருக்கும் ஜோசியர் அன்று, “அவன் காதலித்த பெண்ணை மட்டும் தான் திருமணம் செய்வான். அப்படி நீங்கள் சம்மதம் சொல்லாவிட்டால் கண்டிப்பாக உங்களது பையனுக்குத் திருமண வாழ்க்கை என்ற ஒன்றே கிடையாது.” என்று அவர் கூறியது தான் ஞாபகத்தில் வந்தது.

ஆனால் உடனே அவனது காதலுக்குப் பச்சைக் கொடிக் காட்டவும் அவர்களால் முடியவில்லை. என்ன தான் மக்கள் முன்னேறி விட்டார்கள் என்று மார்தட்டிக் கொண்டாலும் இன்றும் பல குடும்பங்களில் காதல் திருமணத்திற்குப் பலத்த எதிர்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது. சிலர் வாய் வார்த்தையாகத் தன்மையாகத் தங்களது குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுகின்றனர். சிலரோ ஜாதி வெறி அதிகமாகி தனக்குப் பிறந்த பிள்ளை, தனது இரத்தம் என்று கூடப் பாராமல் வெட்டிச் சாய்க்கின்றனர். அப்படி இருக்கும் போது சசிகலா மற்றும் ராஜாராமால் உடனே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

“இங்கப் பார் விபி, நீ ஒரே பிள்ளையா இருந்தால் நாங்க உன் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்னு சரினு சொல்லிடுவோம். ஆனால் உனக்கு முன்னாடி இரண்டு பிள்ளைங்க எங்களுக்கு இருக்காங்க. அவங்களுக்கு என்ன தான் கல்யாணம் முடிஞ்சு குழந்தைப் பிறந்துட்டாலும் நாளைக்கு உன் விஷயம் கேள்விப்பட்டு அதனால அவங்க குடும்ப வாழ்க்கைல எந்தப் பிரச்சனையும் வந்துர கூடாது. இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு விபி. எங்களால உடனே பதில் சொல்ல முடியாது. அதனால் கொஞ்சம் டைம் குடு. நாங்க யோசிச்சு சொல்றோம்.” என்று சசிகலா கூற, விபீஷணனிற்கு இதுவே போதுமானதாக இருந்தது.

“சரி அந்தப் பொண்ணு வீட்டுல ஒத்துக்கிட்டாங்களா?” என்று கேட்டான் கவுதம்.

“இல்லை கவுதம். அவளோட வீட்டுல இன்னும் விஷயம் தெரியாது. நம்ம வீட்டுல சம்மதம் சொல்லிட்டா நான் போய் அவங்க வீட்டுல பேசிடுவேன்.” என்று விபீஷணன் கூற, கவுதம் சரியென்று தலையசைத்தான். அத்துடன் அவரவர் அவரது வேலைகளைப் பார்க்கச் செல்ல, விபீஷணன் அவனது அறைக்கு வந்தான்.

அறைக்குள் நுழைந்தவுடன் மெத்தையில் படுத்தான் விபீஷணன். அவனது யோசனை முழுவதும் எப்படியாவது வீட்டில் சம்மதம் சொல்லி விட வேண்டும் என்பது மட்டும் தான். அவனிற்கு நம்பிக்கை இருந்தது அவனது வீட்டில் சம்மதம் சொல்லுவார்கள் என்று.

Advertisement