Advertisement

விபீஷணன் மற்றும் நந்தனாவின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே சென்றது.

காலையில் எழுந்தவுடனே நந்தனாவை அழைத்து விடுவான் விபீஷணன். ஐந்து நிமிடம் பேசிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். பின்னர் மதியம் சாப்பிடும் நேரம் வரும் போது ஒரு பத்து நிமிடம் பேசுவார்கள். அதன் பிறகு இரவு தான். அவர்களுக்குச் சந்திக்க அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் கைப்பேசியில் பேசியே தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

நடுவில் விபீஷணன், ராகவியின் பிரசவத்திற்கு கேனடா செல்ல வேண்டுமென முடிவெடுத்து இருந்தான். அதுவும் ராகவிக்குக் குழந்தைப் பிறக்கும் போது அவன் அவளுடன் இருக்க வேண்டுமென்று தான் நினைத்து இருந்தான். ஆனால் அவனிற்கு அடிப்பட்டு இருந்ததால் அவனால் உடனே செல்ல முடியவில்லை. காயம் எல்லாம் ஆறி, ராகவிக்கும் ஆண் குழந்தைப் பிறந்து கிட்டத்தட்ட பதினைந்து நாள் கழித்து தான் அவனால் கேனடா செல்லவே முடிந்தது.

நாளை அவன் கேனடா செல்வதால், அதற்கு முன்பாக நந்தனாவைச் சந்தித்து விடலாம் என்று நினைத்து அவளை அவள் வார இறுதியில் நடனப் பயிற்சி தரும் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள பூங்காவிற்கு அழைத்தான்.

நந்தனாவிற்கும் விபீஷணனைப் பார்க்க வேண்டும் போல் இருந்ததால் அவளும் அவன் அழைத்தவுடன் உடனே வந்து விட்டாள். அவள் வந்து அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருக்க, பத்து நிமிடம் தாமதமாகத் தான் வந்தான் விபீஷணன்.

வேகமாக வந்த விபீஷணன் அவள் பக்கத்தில் அமர்ந்து,”வர வழில ட்ராபிக் லட்டு, அதான் கொஞ்சம் லேட்டாகிடுச்சு.” என்றான்.

“ப்ச் என்ன அத்து நீங்க எதுக்கு எக்ஸ்ப்ளனேஷன்லாம் கொடுத்துட்டு. நான் தான் கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டேன். நீங்க கரெக்ட் டைம்கு தான் வந்துருக்கீங்க.” என்றாள்.

“ம்” எனக் கூறிவிட்டு அவளது கையை எடுத்து அவனது கைக்குள் வைத்துக் கொண்டான் விபீஷணன்.

“டென் டேய்ஸ் உன்னைப் பார்க்க முடியாது லட்டு. ஐ வில் மிஸ் யூ அ லாட்.” என்றான் விபீஷணன்.

“ம் ஆமா அத்து. உங்களால போகமாலும் இருக்க முடியாது. பரவால டென் டேஸ் தான!! டக்குனு போயிடும்.” ஆறுதலாகக் கூறிராள் நந்தனா.

“ஆமா லட்டு, ராகவியும் நானும் சின்ன வயசுல இருந்து ப்ரண்ட்ஸ். கிட்டத்தட்ட ட்வெல்த் வரைக்கும் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து தான் படிச்சோம். அதுக்கு அப்புறம் தான் அவள் இன்ஜினியரிங் செலக்ட் பண்ணிட்டா நான் மெடிக்கல் செலக்ட் பண்ணேன். நான் அங்க போனதும் உனக்கு வீடியோ கால் பண்றேன். நீ ராகவி கூடப் பேசு. நீ எப்போ என்னை லவ் பண்றனு ஒத்துக்கிட்டியோ அதுல இருந்து அவள் உன் கூடப் பேசனும் சொல்லிட்டே இருந்தா. சரி நானும் நேரம் கிடைக்கும் போது உன்னை அவள் கூடப் பேச வைக்கலாம்னு பார்த்தேன். ஆனால் அதுக்குள்ள அவளுக்கு டெலிவரி பெயின் வந்துடுச்சு. ஸோ நான் அங்க போனதும் உனக்கு வீடியோ கால் பண்றேன் சரியா.” என்று விபீஷணன் கூற, சரியென்று தலையசைத்தாள் நந்தனா.

பின்னர் சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு நந்தனாவை அவளது வீட்டிற்குப் பக்கத்தில் இறக்கி விட்டு விபீஷணன் கிளம்பிச் சென்று விட்டான்.

அடுத்த நாள் அவனது அம்மா மற்றும் அப்பாவுடன் ராகவியைக் காண கேனடா சென்று விட்டான் விபீஷணன். அவன் அங்குச் சென்றாலும் அவனது ஞாபகம் முழுவதும் நந்தனா தான் ஆக்கிரமித்திருந்தாள்.

அதை ராகவியும் கவனித்துத் தான் இருந்தாள். தன்னுடைய நண்பனின் உடல் மட்டும் தான் இங்கு இருக்கிறது ஆனால் அவனது மனம் முழுவதும் நந்தனாவிடம் தான் இருக்கிறது என்று. அவளும் காதலித்து திருமணம் செய்தவள் தான். அதனால் அவளால் விபீஷணனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“டேய் விபீ இப்படி அவளையே நினைச்சுட்டு இருக்கிறதுக்கு இங்க எதுக்கு வந்த மேன் நீ?” என்று அவள் சாதாரணமாகக் கேட்டாலும், விபீஷணனுக்கு குற்றவுணர்ச்சி வந்து விட்டது.

“ஹேய் சாரி ராக்ஸ். என்னால முடியலை!! அங்க இருக்கும் போது அவளை நான் பார்க்காமலே இருந்திருக்கிறேன். ஆனால் இங்க வந்ததும் அவளை அப்படிப் பார்க்காமல் இருக்க முடியலை.” என்றான் விபீஷணன்.

“ஹேய் லூசு எதுக்கு சாரி எல்லாம் கேட்டுட்டு இருக்க? நான் சும்மா உன்னைக் கிண்டல் பண்ணேன். சரி அதை விடு, நீ இன்னும் உன் லட்டுவ எனக்கு இன்ட்ரட்யூஸே பண்ணலை. அது ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள் ராகவி.

“ஆமா ராக்ஸ். எங்க டைம்மே கிடைக்கலை. நான் லட்டுகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். இங்க வந்ததும் டைம் பார்த்து வீடியோ கால் பண்ணி உன்னை இன்ட்ரட்யூஸ் பண்றேன்னு. ஆனால் அம்மாவும் அப்பாவும் இருக்காங்களே!!” என்று அவன் நிறுத்த, அதற்கும் ராகவியே வழியைக் கண்டுபிடித்து விட்டாள்.

அவளது கணவன் ஹரீஷிடம் கூறி சசிகலா மற்றும் ராஜாராமை ஊர் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லக் கூறிவிட்டாள். அவனும் மனைவி சொல்லே மந்திரம் என்று அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

அவர்கள் சென்றதும் நேரத்தைப் பார்த்தான் விபீஷணன். இந்நேரம் நந்தனாவிற்கு காலை நேரம் என்று புரிய, முதலில் அவளுக்கு அழைத்தான் விபீஷணன். நந்தனாவும் அவனது அழைப்பிற்குத் தான் காத்திருந்தாள். அதனால் வேகமாக எடுத்து விட்டாள்.

“டேய் லட்டு என்ன பண்ணிட்டு இருக்க?”

“நான் காலேஜ்கு கிளம்பிட்டு இருக்கேன் அத்து. நீங்க என்ன பண்றீங்க? பேபி எப்படி இருக்கு?உங்களோட ப்ரண்ட் நல்லா இருக்காங்களா?”

“எல்லாரும் சூப்பர் லட்டு. இப்போ வீடியோ கால் பேச முடியுமா லட்டு?” என்று ஏக்கத்தோடு கேட்டான் விபீஷணன்.

“அச்சோ அத்தான் நான் வீட்டுல இருக்கேன்னே!! நான் காலேஜ் போயிட்டு உங்களுக்கு வீடியோ கால் பண்ணவா?” என்று கேட்டாள் நந்தனா.

“ம் சரிடா லட்டு. நீ போயிட்டு வீடியோ கால் பண்ணு. இங்க ராகவி உன் கூடப் பேசனுமாம்.”

“அப்போ உங்களுக்குப் பேசனும்னு தோனலையா?” கொஞ்சம் கோபமாக அவள் கேட்க, விபீஷணன் சிரித்து விட்டான்.

“அட என் லட்டுக்குக் கோபம் எல்லாம் படத் தெரியுமா? இது எனக்குத் தெரியாமல் போயிடுச்சே?” என்று நக்கலடிக்க, அவளுக்கு அங்குக் கோபம் வந்து விட்டது.

“நான் உங்களுக்கு வீடியோ கால் பண்ண மாட்டேன். போங்க ஐ ஹேட் யூ.” என்று கூறிவிட்டு அவனைப் பேச விடாமல் அவள் அலைப்பேசியை வைத்து விட்டாள்.

ஆனால் விபீஷணன் விடுவானா என்ன? அடுத்த வினாடி அவளுக்கு அழைத்து விட்டான். வீம்பிற்கென்றே நந்தனா எடுக்காமல் இருக்க, அவன் மீண்டும் அழைத்தான். அப்போது சரி போனால் போகிறது என்று அவள் எடுத்து காதில் மட்டும் வைத்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை.

“டேய் லட்டு, என்ன டா இது? சரி சாரி சொல்லட்டுமா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு டைம் ஆகிடுச்சு நான் காலேஜ் போயிட்டு கூப்பிடுறேன்.”

“சரி எங்க லவ் யூ அத்துனு சொல்லு.”

“முடியாது!! ஐ ஹேட் யூ சொன்னது சொன்னது தான்.” என்று கூறிவிட்டுச் சிரித்துக் கொண்டே அவள் வைத்து விட்டாள். அவனும் அங்குச் சிரிப்புடன் அலைப்பேசியை வைத்தான்.

ராகவி அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த விபீஷணன்,”என்ன ராக்ஸ்? எதுக்கு இப்படி அன்பா என்னைப் பார்க்கிற?” என்று கேட்டான்.

“டேய் நான் கொலை வெறில இருக்கேன். இப்போ தான் விபீ எனக்குப் புரியுது!! இந்த லவ்ர்ஸோட ப்ரண்ட்டா மட்டும் இருக்கவே கூடாதுனு. உன்னோட ஜொல்லை என்னால தாங்க முடியலை பா.”

“ஹா ஹா இப்போ புரியுதா மேடம்கு? ஹப்பா எப்படி எல்லாம் என்னைப் படுத்தி எடுத்த!! படிக்கக் கூட விடாமல் என்னை வெளில கூட்டிட்டு போய் தனியா உட்கார வைச்சுட்டு நீங்க இரண்டு பேரும் எவ்ளோ ஊர் சுத்தினீங்க ஞாபகம் இருக்கா?” என்று அவன் கேட்க, அவளிற்கும் அந்த இனிமையான ஞாபகங்கள் மனதில் வந்து போனது.

அதன் பின்னர் நந்தனா கூறியது போல் கல்லூரி சென்றதும் விபீஷணனுக்கு அழைக்க, அவன் எடுத்துப் பேசிவிட்டு ராகவியை நந்தனாவிற்கும், நந்தனாவை ராகவிக்கும் அறிமுகம் செய்தான். முதல் பார்வையிலே இருவருக்கும் இருவரையும் பிடித்து விட்டது. அதன் பின்னர் விபீஷணன் என்று ஒருவன் அங்கு இருக்கிறான் என்பதையே மறந்து இருவரும் நீண்ட நேரம் கதைப் பேசினர். நந்தனாவிற்கு வகுப்பிற்கும் செல்லும் நேரம் வந்து விட்டதால் அவர்களும் வேறு வழியின்றி அலைப்பேசியை வைத்தனர்.

ராகவிக்கும் நந்தனாவை மிகவும் பிடித்து விட, நந்தனாவுக்கும் ராகவியை மிகவும் பிடித்து விட்டது. அது அவர்கள் இருவர் முகத்திலும் அவர்கள் பேசிய பேச்சிலும் தெரிய, விபீஷணனிற்கும் சந்தோஷமாக இருந்தது. அவனது தோழியும் மனைவியாக வரப் போகிறவளும் நெருங்கி இருப்பது அவனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

Advertisement