Advertisement

விபீஷணன் அவளைப் புரியாமல் பார்க்க, மீண்டும் அவளோ தொடங்கினாள்,”பெரியப்பா பெரியம்மாகிட்ட என்னைக் கவனிச்சுக்கிறதைப் பார்த்து பரவால உனக்கும் நந்தனா மேல அக்கறை இருக்கானு? ஒரு மாதிரி நக்கலா கேட்டார். அதுக்கு பெரியம்மா அவங்களை முறைச்சுப் பார்த்து எனக்கு அக்கறை எல்லாம் நிறையவே இருக்கு. ஆனால் உங்களுக்குத் தான் அது தெரியலை. நான் ஒன்னும் கொடுமைக்காரி கிடையாது. நீங்க அவகூட மட்டும் டைம் ஸ்பெண்ட் பண்றதைப் பார்த்து நம்ம பிள்ளைங்க எவ்ளோ ஏங்கிப் போயிருக்காங்க தெரியுமா? நீங்க எல்லாரையும் சமமா நடத்திருந்தா நம்ம பிள்ளைங்களும் அவளை எதிரி மாதிரி பார்த்திருக்க மாட்டாங்க. என்னைப் பொறுத்தவரை தானம் மட்டும் தனக்கு மிஞ்சியது கிடையாது பாசமும் முதல்ல என் பிள்ளைங்களுக்கு தான் தருவேன். அதுக்கு அப்புறம் தான் மத்தவங்களுக்கு. அது உங்களோட தம்பிப் பொண்ணாவே இருந்தாலும். என் பிள்ளைங்க அப்பா பாசம் கிடைக்காமல் ஏங்குறது மாதிரி அம்மா பாசமும் கிடைக்காமல் ஏங்க நான் விட மாட்டேன். இன்னைக்கு நாங்க அவகிட்ட விலகி இருக்கோம்னா அதுக்கு காரணம் நீங்கத் தான். அப்படினு சொன்னாங்க. அப்போ தான் எனக்குப் புரிஞ்சது, என்னோட அப்பா வேற யாருக்காவது முன்னுரிமை தந்தால் எனக்குக் கோபம் வரும் தான? அது மாதிரி தான் அவங்களுக்கும் வந்துருக்குனு புரிஞ்சது. அதுக்கு அப்புறம் நானே பெரியப்பாகிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா விலகட்டேன். அவர் நான் பெரியப் பொண்ணு ஆனதால் விலகிட்டேன்னு நினைச்சார். ஆனால் உண்மையான ரீசன் பெரியப்பா அக்காகூடவும் அண்ணாகூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணனும் தான் நான் விலகிட்டேன்.” என்றாள் நந்தனா.

அவள் கூறியதை எல்லாம் கேட்ட விபீஷணனுக்கு சிறு வயதில் அவள் எவ்வளவு பக்குவமாக இருந்திருக்கிறாள் என்று நினைக்கும் போது அவளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதே நேரம் அவள் என்ன தான் விலகியதாகக் கூறினாலும் அவளும் சாதாரண மனுஷி தான. அன்பு, பாசம் அனைத்தையும் எதிர்பார்த்திருப்பாள். ஆனால் அது உடைமைப் பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென அவளது உணர்வுகளை மனதிற்குள் பூட்டி வைத்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். அவளைத் தன் இறுதி மூச்சு உள்ளவரைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென உறுதி எடுத்தான் விபீஷணன்.

“டேய் லட்டு நீ கவலைப்படாத, உனக்கு நான் இருக்கேன். கூடிய சீக்கிரம் நான் உன்னோட பெரியப்பா பெரியம்மாகிட்ட பேசுறேன். அவங்கச் சம்மதத்தோட நம்ம கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கும் சரியா.” என்று கூறி அவளது நுனி மூக்கைப் பிடித்து ஆட்ட, நந்தானவுக்குக் கல்யாணம் என்ற வார்த்தை வெட்கத்தைக் கொடுத்தது.

“ஏய் லட்டு இப்படி எல்லாம் வெட்கப்படாத டா. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று அவன் கூற, அதைக் கேட்டவுடன் நந்தனாவுக்குப் பக்கென்று ஆகிவிட்டது.

வேகமாக அவனைத் தள்ளிவிட்டு அவள் கீழே இறங்கி,”நீங்க ரொம்ப மோசம் அத்தான். நான் வீட்டுக்குப் போறேன்.” என்று கூறி அவள் இரண்டு அடி எடுத்து வைக்க, அவளது அத்தான் என்ற அழைப்பு அவனைப் பரவசப்படுத்த அவளது கையைப் பிடித்து அவளைப் போக விடாமல் தடுத்தான் விபீஷணன்.

“ஏய் எப்படிக் கூப்பிட்ட என்னை?” என்று கேட்டான். அப்போது தான் அவளுக்கே புத்தியில் உரைத்தது அவள் அவனை அத்தான் என்று அழைத்திருக்கிறாள் என்று.

“அது…” என்று அவள் தடுமாற, பிடித்தக் கையை விடாமல் அதில் முத்தம் ஒன்றை வைத்தான் விபீஷணன்.

“என்னை அப்படியே கூப்பிடு லட்டு. எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.” என்றான் கண்கள் மின்ன. அதன் பின்பு அவளால் அங்கு இருக்க முடியவில்லை, அவளது கையை அவனது பிடியிலிருந்து எடுத்து விட்டு வெளியே ஓடி வந்து விட்டாள்.

தலையைத் தன் கைகளால் கோதிக் கொண்டு அவள் பின்னால் சென்றான் விபீஷணன். அவன் வெளியே வருவதற்குள் அவள் மின்தூக்கியினுள் நுழைந்து விட்டாள். வேகமாக ஓடி வந்த விபீஷணன் கதவு மூடுவதற்குள் உள்ளே நுழைந்து விட்டான்.

அவன் உள்ளே நுழையவும் அவளுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. அவனைக் கண்டு கொள்ளாமல் அவள் நிற்க, அவன் அவள் பக்கத்தில் உரசிக் கொண்டு நின்றான்.

“சும்மா இருங்க அத்தான்.” என்று அவள் கூறவும் கதவு அடுத்த தளத்தில் வந்து நின்று கதவுத் திறக்கவும் சரியாக இருந்தது. இரண்டு பேர் உள்ளே வரச் சற்று தள்ளி நின்று கொண்டான் விபீஷணன். அவன் தள்ளி நிற்கவும் அவனைப் பார்த்து நக்கல் சிரிப்புச் சிரித்தாள் நந்தனா.

தரைத் தளம் வந்ததும் இருவரும் வெளியே வந்தார்கள். விபீஷணன் அவளிடம் நெருங்கி,”நானும் வீட்டுக்குத் தான் போறேன் லட்டு. இரண்டு பேரும் சேர்ந்தே போகலாம். வெயிட் பண்ணு நான் கேப் புக் பண்ணுறேன்.” என்றான்.

“இல்லை அத்தான், நான் காலேஜ் போகனும்.”

“ஓகே அப்போ உன்னை காலேஜ்லயே ட்ராப் பண்ணிட்டு நான் வீட்டுக்குப் போறேன்.” என்றான். அவளுக்கும் அவனுடன் இன்னும் கொஞ்சம் நேரம் செலவழிக்க ஆசையாக இருந்ததால் சரியென்று கூறினாள்.

அவனது கைப்பேசியில் கேப் புக் செய்துவிட்டு அவளது கையுடன் தன் கையைக் கோர்த்துக் கொண்டு வெளியே வந்தான் விபீஷணன். அந்த மருத்துவமனையில் வெளியேவும் இருக்கைகள் போட்டிருப்பார்கள். கேப் வர வரைக்கும் அங்குச் சென்று அமர்ந்தார்கள்.

அப்போது அங்கு வேலைப் பார்க்கும் செவிலியர் ஒருவர் வேகமாக வந்து,”என்ன சார் அடிப்பட்டு இருக்கு? என்னாச்சு?” என்று கேட்டார்.

அவரது கேள்விக்கு அவன் எவ்வாறு அடிப்பட்டது என்று கூற, பார்த்து இருங்கள் என்று அவனுக்கு அறிவுரைக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அவர்கள் அமர்ந்திருந்த பதினைந்து நிமிடத்தில் ஐந்து பேராவது வந்து அவனிடம் நலம் விசாரித்து இருப்பார்கள். அதை எல்லாம் பார்க்கும் போது அவளுக்கு வியப்பாக இருந்தது. கடைநிலை ஊழியர் வரை வந்து விசாரித்தனர் அவனை.

“உங்களை இங்க எல்லாருக்கும் தெரியுமா?”

“ம் தெரியும் டா. நம்ம வாய் சும்மா இருக்காது. அதனால எல்லார்கிட்டயும் போய் பேசிடுவோம்.”

அதன் பின்னர் பொதுவாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கேப் வரவும் இருவரும் எழுந்து வெளியே வந்து கேப்பில் ஏறி அங்கிருந்து சென்று விட்டார்கள்.

சிறிது தூரம் சென்றவுடன் நந்தனாவின் கல்லூரி வர, அவள் இறங்குவதற்கு முன்பு விபீஷணின் கையைப் பிடித்து,”அத்தான் வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க. டேப்ளெட் அண்ட் ஆயின்மென்ட் டைமக்கு போடுங்க ஓகே வா.” என்றாள்.

“சரி டா லட்டு. நீயுமா ஃப்ரீ ஆனதும் எனக்கு கால் பண்ணு.”என்று அவன் கூறவும் அவள் கீழே இறங்கினாள். அவள் உள்ளே செல்லும் வரை அங்கிருந்து பார்த்துவிட்டுத் தான் கிளம்பச் சொன்னான் விபீஷணன்.

நந்தனாவை இறக்கி விட்டு வீடு வந்தான் விபீஷணன். வீட்டின் வெளியே ஏதோ கார் வந்து நிற்கவும் யாராக இருக்கும் என்று பார்க்க வெளியே வந்த ராஜாராம் கையிலும் தலையிலும் கட்டுடன் வரவும் பதறிவிட்டார்.

வேகமாக வெளியே வந்தவர்,”ஏய் விபீ என்னாச்சு? எப்படி இப்படி அடிப்பட்டுச்சு? உன்னோட கார் எங்கே?”என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டார் ராஜாராம்.

“அப்பா எனக்கு ஒன்னுமில்லை. சின்ன அடி தான். நீங்கப் பதறாதீங்க. முதல்ல உள்ள போகலாம் வாங்க.” என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அவர்கள் பேச்சுச் சத்தம் கேட்டு வெளியே வந்த சசிகலாவும் பதறிவிட்டார் விபீஷணனைப் பார்த்து.

“டேய் விபீ கண்ணா என்னாச்சு?”

“அம்மா எனக்கு ஒன்னுமில்லை. முதல்ல உள்ள போகலாம் வாங்க.” என்று இருவரையும் உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான் விபீஷணன்.

அவர்கள் உள்ளே வந்ததும் இருவரையும் அமர வைத்து எப்படி அடிப்பட்டது என்று கூற, பெற்றவர்களுக்கு மனம் பதறியது.

“வருதப்படாதீங்க. எனக்கு ஒன்னுமில்லை. ஜஸ்ட் ரெஸ்ட் எடுத்தால் போதும். அம்மா எனக்குக் கொஞ்சம் தலை வலிக்குது. காஃபி போட்டுக் கொண்டு வரீங்களா?” என்று கேட்க, அடுத்த நிமிடம் எழுந்து காஃபி போடச் சமையல் அறைக்குச் சென்றார்.

சிறிது நேரத்தில் அவர் காஃபி கொண்டு வந்து தரவும், அதைக் குடித்துவிட்டு,”எனக்குக் கொஞ்சம் பெயின் இருக்கு. நான் ரூம்க்கு போறேன்.” என்று கூறிவிட்டு அவனது அறைக்குச் சென்றுவிட்டான். அவன் சாதாரணமாகப் பேசியதில் தான் பெற்றவர்களுக்கு நிம்மதியாகவே இருந்தது.

Advertisement