Advertisement

நந்தனா தன் காதலை விபீஷணனிடம் கூறியதும் அவன் வானில் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் அவனுக்கு அடிப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும் அவள் துடித்துப் போய் இங்கே வந்தது அவனது மனதிற்கு ஆனந்தமாக இருந்தது.

அடிப்படாத கையால் நந்தனாவை அப்படியே இடிப்பில் ஒரு கையை வைத்துத் தூக்கி அவனது மேஜை மேல் உட்கார வைத்தான். சடுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சற்று விதிர் விதிர்த்துப் போய் விட்டாள் நந்தனா.

“என்ன பண்ணுறீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவள் இறங்கப் போக, அவளைத் தடுத்தான் விபீஷணன்.

“ம் இறங்காத இப்படிப் பேசத் தான் வசதியா இருக்கு.” என்று அவளைக் காதலோடு பார்க்க, நந்தனாவால் தான் அவனது பார்வை வீச்சைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவள் முகத்தை அந்தப் பக்கம் திருப்பி அவனைக் காண முடியாமல் தவிர்க்க, அவளது கண்ணங்களைத் தன் இரு கரங்களால் தாங்கி அவனைக் காண வைத்தான்.

“என்ன மேடம் வெட்கமா?”

“பச் சும்மா இருங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. அதை விட இப்படி மேல தூக்கி உட்கார வைச்சுருக்கீங்க? யாராவது வந்தா என்னாகிறது? தள்ளுங்க நான் இறங்கனும்.” என்று அவனது கண்களைச் சந்திக்க முடியாமல் கீழே பார்த்துக் கூறினாள் நந்தனா.

“என் கைல அடிப்பட்டிருக்கு லட்டு அதனால நான் இன்னைக்கு லீவ் சொல்லிட்டேன். ஸோ யாரும் வந்து டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. டோண்ட் நீட் டு வொர்ரி.” என அவளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கூறினான் விபீஷணன்.

அவனது லீலைகள் எதையும் நந்தனாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளுக்கு வெட்க வெட்கமாக வந்தது. அதுவும் அவளை அவன் தூக்கி மேஜை மேல் உட்கார வைத்ததால் இப்போது அவனது முகமும் அவளது முகமும் நேருக்கு நேர் இருப்பது அவஸ்தையாக இருந்தது நந்தனாவுக்கு.

அவளது அவஸ்தை விபீஷணனுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. அதை ரசித்துப் பார்த்தான் எதுவும் பேசாமல். அமைதியாக இருப்பது நந்தனாவுக்கு ஒரு மாதிரியாக இருக்க,”நான் கிளம்புறேன்.” என்று கூறி அவள் இறங்க முற்பட, விபீஷணன் அவளைத் தடுத்தான்.

“நோ வே லட்டு. இன்னும் கொஞ்ச நேரம் இரு. அப்புறம் நானே உன்னைக் கொண்டு போய் விடுறேன்.” என்றான் காதலோடு. அப்போது தான் அவன் இன்று புதிதாகத் தன்னை லட்டு என்று அழைப்பதைக் கவனித்தாள்.

“அது என்ன என்னை புதுசா லட்டுனு கூப்பிடுறீங்க?”

“ஏன் டா பிடிக்கலையா?”

“பிடிக்கலைனு இல்லை. புதுசா இருந்துச்சு. அதான் கேட்டேன்.”

“உன்னைப் பார்த்ததும் எனக்கு அப்படித் தான் கூப்பிடப் பிடிச்சுருந்துச்சு. முதவே உன்னைக் கூப்பிட்டா நீ கண்டிப்பா என்னை அடிச்சுருப்ப. அதான் நீ எனக்கு ஓகே சொல்ற வரை வெயிட் பண்ணேன். இப்போ தான் நீ ஓகே சொல்லிட்டள அதனால இனிமேல் உன்னை நான் லட்டு, லட்டுக் குட்டினு தான் கூப்பிடப் போறேன்.” என்று நீண்டதொரு விளக்கத்தை விபீஷணன் தர, அவனது காதலில் வெல்லப் பாகாகக் கரைந்து தான் போனாள் நந்தனா.

அவளுக்கு என்ன பேசுவதெனத் தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட, அவளால் பேச முடியவில்லை. அவனது காதலைக் கண்டு அவள் வியக்கச் செய்தாள். தன்னை ஒருவன் மனம் உருகி இப்படிக் காதலிப்பான் என்று கனவிலும் கண்டிராத போது நிஜத்தில் நடப்பதை அவளால் நம்ப முடியவில்லை. ஒரு வேளை இது கனவு தானோ!! தனக்குத் தான் இது தெரியாமல் நிஜத்தில் நடக்கிறது போல் கற்பனை செய்து கொள்கிறோமோ என்று யோசித்து அவளது கையைக் கிள்ள அது வலியைக் கொடுத்தது. அப்போது தான் அது கனவில்லை நிஜம் தான் என்பதை உணர்ந்தாள்.

அவளது செயலை விபீஷணனும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அவள் கிள்ளிய இடத்தைத் தடவிக் கொடுத்து,”இது நிஜம் தான் லட்டு நிஜம் தான்.” என்றான்.

“உங்களுக்கு ஏன் என்னைப் பிடிச்சுருக்கு? அதுவும் இவ்ளோ அஃபெக்ஷனா இருக்கிறதைப் பார்க்கும் போது என்னால உங்களை மாதிரி பாசம் காட்ட முடியுமானு யோசனையா இருக்கு.”

“இங்கப் பார் லட்டு, உன்னோட கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. பிகாஸ் எனக்கே தெரியாது. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். அது மட்டும் உறுதி. ஆனால் ஏன்னு கேட்டால் எனக்குப் பதில் இல்லை. அப்புறம் உன்னோட கவலைக்கு என்னால் பதில் சொல்ல முடியும். கண்டிப்பா நீ என்னை நான் உன்னை லவ் பண்றதை விட அதிகமா பண்ணுவ. அதுல எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை.” என்று விபீஷணன் கூற, அடுத்த நிமிடம் எதையும் யோசிக்காமல் தாவி அணைத்துக் கொண்டாள் அவனை.

அவள் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் விபீஷணன். அவளைத் தடுக்காமல் அப்படியே அவளது முதுகை வருடிக் கொடுத்தான். சிறிது நேரத்தில் சுயம் உணர்ந்த நந்தனா வேகமாக அவனை விட்டு விலகினாள். அவளது நிலை அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அதைப் பற்றி எதுவும் பேசாமல்,”நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டான்.

அவனது இந்தக் கேள்வி அவளுக்குள் ஆயிரம் ஆயிரம் மாற்றங்களை ஏற்படுத்தியது. காதல் இரு மனங்களை மட்டும் பொறுத்தது. ஆனால் கல்யாணம் என்றால் இரு குடும்பங்களைப் பொறுத்தது அல்லவா. தன் குடும்பம் இதை ஏற்றுக் கொள்ளுமா? ஒரு வேளை முடியாது என்று மறுத்தால்? அவளுள் பல யோசனைகள்.

அவளது கண்ணத்தைத் தட்டிய விபீஷணன்,”என்ன டா பதில் சொல்லமா யோசனை? பயமா இருக்கா? இல்லை இப்போ தான் காதலைச் சொன்னோம் அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்னு பார்க்கிறியா?” என்று கேட்டான்.

“இல்லை நீங்கத் திடீர்னு கல்யாணம் செய்துக்கலாமானு கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. நம்ம ஃபேமலில ஒத்துக்குவாங்களா? அப்படி ஒத்தூக்காட்டி என்ன பண்றது? எனக்கு அவங்களை எதிர்த்து ஓடிப் போய் கல்யாணம் பண்றதுல இஷ்டமே இல்லை.” என்று தெளிவாகக் கூறினாள் நந்தனா.

அவன் சத்தமாகச் சிரித்து விட்டு,”லட்டுக் குட்டி, கவலைப்படாத. கண்டிப்பா நம்ம வீட்டுல ஒத்துக்குவாங்க. நானே உங்க அப்பா, அம்மாகிட்ட பேசுறேன். அண்ட் உன்னோட மாமனார், மாமியார்கிட்ட சம்மதம் வாங்க வேண்டியது என்னோட பொறுப்பு சரியா. நீ கவலைப்படாத, நம்ம கல்யாணத்துக்கு உம்னு மட்டும் நீ சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்.” என்று அவன் கூற, அதைக் கேட்ட நந்தனாவுக்கு அவள் குடும்பத்தைப் பற்றி எதையும் இவனிடம் சொல்லவில்லை என்ற ஞாபகம் வந்தது.

“நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.”

“சொல்லு டா. என்கிட்டப் பேச நீ தயங்கவே வேண்டாம் சரியா. எதுவா இருந்தாலூம் சொல்லு, நான் உன்னைத் தப்பாவே எடுத்துக்க மாட்டேன்.”

“அது வந்து… எனக்கு அப்பா அம்மா இல்லை.” என்றாள் நந்தனா. அவள் கூறியதைக் கேட்ட விபீஷணனுக்கு அதிர்ச்சி.

“என்ன சொல்ற லட்டு?”

“ஆமா எனக்குப் பத்து வயசாகும் போது இரண்டு பேரும் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அப்புறம் என்னை என்னோட பெரியப்பாவும் பெரியம்மாவும் தான் வளர்த்தாங்க. இப்போவும் நான் அவங்கக் கூடத் தான் இருக்கேன்.” என்றாள் நந்தனா.

“டேய் லட்டு என்ன டா சொல்ற? உன்னோட பெரியப்பாவும் பெரியம்மாவும் உன்னை நல்லா பார்த்துக்கிறாங்களா?”

“ம் இரண்டு பேருமே என்னை நல்லா தான் பார்த்துக்கிறாங்க. நான் அம்மாவும் அப்பாவும் இறந்ததுக்கு அப்புறம் அவங்க வீட்டுக்கு முதல்ல போகும் போது பெரியம்மாவும் அக்கா அண்ணாவும் சரியாவே பேச மாட்டாங்க. அதனால பெரியப்பா என்னை எப்போவும் அவர் கூடத் தான் வைச்சுக்குவார். அதுல இன்னும் என்னை விட்டு விலகிப் போய்ட்டாங்க அக்காவும் அண்ணாவும். அவங்க விளையாடும் போது நான் போனால் என்னைச் சேர்த்துக்கவே மாட்டாங்க. பெரியம்மாவும் என்கிட்ட அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லிடுவாங்க. அதுனால நான் தனியா தான் இருப்பேன். கொஞ்சம் கொஞ்சமா விவரம் தெரிய ஆரம்பிச்சதும் எனக்குப் புரிஞ்சது நான் இங்க வந்தது அவங்களுக்குப் பிடிக்கலைனு. 

அதனால நானும் அவங்ககிட்ட அவ்ளோக்கா பேச மாட்டேன். அப்புறம் எனக்குப் பதினாலு வயசாகும் போது நான் வயசுக்கு வந்தேன். அப்போ பெரியம்மா என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. அதை விட அக்காவுக்கு என்ன எல்லாம் அட்வைஸ் பண்ணாங்களோ அதே அட்வைஸ் எனக்கும் சொன்னாங்க. அப்போ பெரியப்பா, பெரியம்மாகிட்ட பேசிகிட்டு இருந்ததைக் கேட்டேன். அப்போ தான் புரிஞ்சது எனக்கு பெரியம்மாவுக்கு என் மேல கோபமோ வெறுப்போ இல்லைன்னு.” என்றாள் நந்நனா. 

Advertisement