Advertisement

விபீஷணன் நந்தனாவை இறக்கி விட்டு அவன் மீண்டும் மருத்துவமனை நோக்கிச் சென்று விட்டான். அவளது பயம் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அதனால் எதுவும் பேசவில்லை அவன். அந்தப் பயத்தை மட்டும் போக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டான் விபீஷணன்.

இங்கு நந்தனாவோ அவளது எண்ணங்களை நினைத்து அவளுக்கே சந்தேகமாக இருந்தது. விபீஷணனின் காதலை அவளால் உடனே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை அவள் அவனிடம் கூறியதும் அவனோ அவளை வற்புறுத்தாமல் சடுதியில் பழகிப் பார்க்கலாம் என்று கூறியது அவளுக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும் அவன் ஏன் தன் மனதை மாற்ற முயற்சி செய்யவில்லை என்ற கேள்வி அவள் மனதைக் குடைந்தது. அதை நினைக்கும் போது தன் தலையில் அடித்துக் கொண்டு,’அவர் அப்படிச் சொன்னதுக்கு சந்தோஷம் தான் படனும். அதை விட்டுட்டு இப்படிப் புலம்பிட்டு இருக்க!! அவர்கிட்ட பேசிப் பழகலாம். கண்டிப்பா அவர் நல்லவர் தான். அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அப்புறம் ஏன் நாம வேண்டாம்னு சொன்னோம்! அய்யோ ஈஸ்வரா ஏன் இந்தச் சோதனை எனக்கு? நான் பேசாமல் இருந்தேன். இவரை என் லைஃப்ல அனுப்பி ஏன் என்னை இந்தப் பாடு படுத்துற? ஒரு வேளை இவர் தான் என்னவரா? நான் தான் லூசு மாதிரி பிஹேவ் பண்றேன்னா? அய்யோ!!!’ என்று கதறினாள் நந்தனா. 

அவளுக்கே அவளது மனம் புரியவில்லை. அவளால் விபீஷணனை வேண்டாம் என்றும் சொல்ல முடியவில்லை, அவனைக் காதலிக்கவும் முடியவில்லை. தலை முடியைப் பிய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப் பட்டாள் நந்தனா.

ஆனால் கூடிய விரைவில் அவளே அவனைத் தேடிச் சென்று காதலைச் சொல்லுவாள் என்று கனவில் கூட அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்.

விபீஷணன் நந்தனாவிடம் பேசி இரண்டு நாட்களாகி விட்டது. அந்த இரண்டு நாட்களிலும் அவன் அவளுக்கு அழைக்கவோ இல்லை குறுஞ்செய்தி அனுப்பவோ இல்லை. ஏன் பார்க்கக் கூட இல்லை. அவனுக்கு வேலை அதிகமாக இருந்தது. அதை விட அவன் அவளிடம் வேண்டுமென்றே தான் பேசாமல் இருந்தான். அவள் தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் அவன் அவளிடம் பேசவே இல்லை.

அதைப் பாவையவள் புரிந்து கொள்ளாமல் அவன் மேல் கடும் கோபத்துடன் வலம் வந்து கொண்டிருந்தாள். அவன் அழைக்கவில்லை என்றால் இவள் அழைக்கலாமே!! அந்த எண்ணம் சற்றும் இல்லாமல் அவன் தன்னை அழைக்க வில்லை, அவனுக்குத் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டது அதனால் தான் அழைக்கவில்லை என்று சோக கீதம் வாசித்துக் கொண்டிருந்தாள்.

இன்னும் இரண்டு நாட்கள் கடந்து விட்டது. அன்று சனிக்கிழமை கண்டிப்பாக விபீஷணன் தீக்ஷியை அழைக்க வருவான் என்று எதிர்பார்ப்போடு அவள் காத்திருக்க, அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வந்தது கவுதம் தான். அவளுக்குப் பயங்கரக் கோபம் வந்து விட்டது. அடுத்த நிமிடம் எந்த யோசனையும் இன்றி அவளுக்கு அழைத்து விட்டான்.

விபீஷணன் அப்போது தான் ஓர் அறுவைச் சிகிச்சைச் செய்து முடித்துவிட்டு அவனது அறைக்குள் நுழைந்தான். சரியாக அவனது கைப்பேசி அப்போது தான் கத்தி முடித்திருந்தது.

அதற்குள் நந்தனா என்ன இவன் தன்னுடைய அழைப்பையும் எடுக்கவில்லை. அப்படி என்றால் கண்டிப்பாக அவன் தன்னை மறந்து விட்டான் என்று முடிவே செய்துவிட்டாள். கைப்பேசியை வைத்துவிட்டு அவள் சோர்ந்து போய் அப்படியே அமர்ந்து விட்டாள்.

உள்ளே நுழைந்த விபீஷணன் அவனது கைப்பேசியை எடுத்துப் பார்க்க, நந்தனாவின் பெயரைப் பார்த்ததும் அவனது முகம் அப்படியே பிரகாசமாக ஜொலித்தது.

“அட லட்டுக் குட்டிக்குப் புத்தியில் உறைச்சு அவளே கால் பண்ணிட்டா. இதை இதைத் தான் எதிர்பார்த்தேன்.” என்று வாய்விட்டுப் பேசிய விபீஷணன் அவளுக்கு அழைத்தான்.

சோர்ந்து போய் உட்கார்ந்து இருந்தவள் அவன் அழைக்கவும் அப்படியே முகம் பிரகாசம் ஆகிவிட்டது. ஆனால் அவள் வேண்டுமென்றே எடுக்காமல் கடைசி நொடி தான் எடுத்தாள்.

“ஹலோ யார் பேசுறா?” என்று வேண்டுமென்றே கேட்டாள் நந்தனா.

அவள் கேட்ட விதத்தில் சிரித்து விட்டான் விபீஷணன். இருந்தாலும் அதை அவளுக்குக் காட்டாமல்,”ஓ ராங் நம்பருக்குக் கால் பண்ணிட்டீங்களா? அப்போ சரி நான் வைக்கிறேன்.” என்று விபீஷணன் கூற, அவளுக்குப் பயங்கரக் கோபம் வந்து விட்டது.

“ஹலோ நான் நந்தனா பேசுறேன்.” என்று கடுப்பாகக் கூறினாள்.

“நந்நனா….எந்த நந்தனா?”

அவ்வளவு தான் பொங்கி விட்டாள் நந்தனா,”ஓ எந்த நந்தனாவா? அப்போ உங்களுக்கு எத்தனை நந்தனாவைத் தெரியும்?” என்று கோபமாகக் கேட்டாள் நந்தனா.

“எனக்கு நிறையப் பேரைத் தெரியும். அதுல நீங்க யாருனு சொன்னால் எனக்குப் பேச வசதியா இருக்கும்.” என்று அவளை வம்பிழுத்தான் விபீஷணன்.

“ஒன்னும் தேவையில்லை. நான் யாருனு தெரியாமலே இருக்கட்டும்.” என்று கூறிவிட்டுக் கைப்பேசியைக் கோபமாக அமர்த்தி விட்டாள்.

அவளது செயல் விபீஷணனுக்குக் குதூகலமாக இருந்தது. மீண்டும் அவளுக்குத் தொடர்பு கொள்ளவில்லை அவன். அவள் வைத்தவுடன் மீண்டும் அவனை அழைப்பான் அப்போது அவனை ஓட விட வேண்டுமென நினைத்துக் கொண்டு கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்த நந்தனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் அழைக்கவே இல்லை. அதிலே நொந்து விட்டாள் நந்தனா. அவனிடமிருந்து இப்படி ஒரு பிரதிபலிப்பை அவள் எதிர்பார்க்க வில்லை. எதையோ இழந்த மாதிரி அவள் மிகவும் சோர்ந்து போய் விட்டாள். அன்றைய நாளை அவள் கடனே என்று தான் கழித்தாள்.

அவளது வேலையை முடித்துக் கொண்டு நந்தனா நடன வகுப்பிலிருந்து வெளியே வந்தாள். அவள் அன்று வண்டியில் வரவில்லை. வண்டி மக்கர் பண்ணியதால் அதைச் சரி செய்யக் கொடுத்திருந்தாள். அவளது நடன வகுப்பிலிருந்து கொஞ்சம் தூரம் நடந்து சென்றாள் பேருந்து நிறுத்தம் வரும். அதனால் அவள் பொடி நடையாக நடக்க, அப்போது அவளருகில் ஒரு கார் வந்து நின்றது.

ஏதோ யோசனையில் நடந்து வந்த நந்தனா பக்கத்தில் வண்டி வந்து நிற்கவும் ஒரு நிமிடம் தூக்கிவாரிப் போட்டது. பின்னர் யாரது என்று பார்க்க, விபீஷணன் சிரித்துக் கொண்டே அவளைப் பார்க்க, ஒரு நொடி மதியம் நடந்தது அனைத்தும் மறந்து அவனைப் பார்த்துச் சிரித்தவள் அடுத்த நொடியே தன்னைச் சரிசெய்து கொண்டு அவளைக் கண்டுக்காமல் அவனது வாகனத்தைக் கடந்து வேகமாக நடந்தாள்.

அவளது செயல் விபீஷணனுக்குச் சிரிப்பைத் தான் வரவழைத்தது. வண்டியிலிருந்து இறங்கி அவளிடம் வந்தவன்,”ஹாய் நீங்கத் தான அந்த நந்தனா? எனக்கு மதியம் கூப்பிட்டது?” என்று நடந்து கொண்டே கேட்டான்.

அவள் பதில் பேசாமல் நடந்துக் கொண்டிருக்க, அவனே,”ஓ அப்போ நீங்களும் இல்லையா? ப்ச் அப்போ யாரா இருக்கும்? நானும் எனக்குத் தெரிஞ்ச எல்லா நந்தனாகிட்டயும் கேட்டுட்டேன். நீங்கத் தான் கடைசி. நீங்களும் இல்லாட்டி யாரா இருக்கும்?” என்று அவன் யோசிப்பது போல் தாடையில் கை வைத்துக் கேட்க, அவளுக்குக் கோபம் வந்து விட்டது.

நடந்து கொண்டிருந்தவள் நின்று அவனை முறைத்துப் பார்த்து அவளது கைப்பையை வைத்து அவனை மொத்து மொத்தென்று அடித்து விட்டாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத விபீஷணன் முதலில் திகைத்தாலும் பின்னர் சிரித்துக் கொண்டே அவளது கைகளைப் பிடித்து அவளை அவனது வாகனத்திற்கு அழைத்து வந்து,”நீ என்னை எவ்ளோ வேணாலும் அடிக்கலாம் மை டியர். ஆனால் எல்லாமே இந்த காருக்குள்ள பண்ணுமா!! இல்லாட்டி என் மானம் போயிடும்.” என்று கூறி காரின் கதவைத் திறந்தான் விபீஷணன்.

அவனது செயலால் சோர்ந்து போய் இருந்த நந்தனா எதுவும் பதில் பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவனும் சிரித்துக் கொண்டே மறுபக்கம் ஏறி அமர்ந்தான்.

“ம் இப்போ நீ எவ்ளோ வேணாலும் அடி.” என்று கூறி அவள் பக்கம் பார்த்து அமர்ந்தான் விபீஷணன்.

ஆனால் அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கோபம் புரிந்த விபீஷணன் அவளது கையைப் பிடிக்க, அவள் திரும்பிப் பார்தது அவனை முறைத்தாள். அப்போதும் அவன் கையை எடுக்கவில்லை.

“கையை விடுங்க. அதான் என்னை யாருனு தெரியாதுனு சொல்லிட்டீங்களா அப்புறம் என்ன?” என்று கேட்டாள் நந்தனா.

“நான் அப்படிச் சொன்னா உனக்கு ஏன் கோபம் வருது நந்தனா?” என்று விளையாட்டைக் கைவிட்டு சீரியஸாக கேட்டான் விபீஷணன்.

அந்தக் கேள்வியில் நந்தனாவால் சட்டுனு பதில் சொல்ல முடியவில்லை. அவள் அப்படியே பதில் சொல்லாமல் முழித்துக் கொண்டிருக்க, அவன் மீண்டும்,”சொல்லு நந்தனா. நான் உன்னைத் தெரியாதுனு சொன்னா உனக்கு ஏன் கோபம் அழுகை எல்லாம் வருது?” என்று கேட்டான்.

அவள் எதுவும் பதில் பேசவில்லை. அவளுக்கே புரியாத ஒன்றிற்கு அவள் எப்படிப் பதில் சொல்லுவாள்?

“நீ தான என்னை லவ் பண்ண முடியாதுனு சொன்ன!! அப்புறம் ஏன் நான் உன்னை அவாய்ட் பண்ணால் உனக்கு இவ்ளோ கோபம் வருது? நியாயமா பார்த்தால் நீ சந்தோஷம் தான படனும்?” என்று கேட்டான்.

அதற்கும் அவள் பதில் பேசாமலே இருந்தாள். விபீஷணன் கோபம் எல்லாம் படவில்லை. அவள் யோசித்தாள் தான் அவளுக்கு ஒரு தெளிவுப் பிறக்கும் என்று யோசித்தான்.

“நல்லா யோசி நந்தனா!! உன்னோட மனசு உனக்கு இப்போவாவது புரியுதானு பார்ப்போம்.” என்று கூறிவிட்டு வண்டியை இயக்கினான் விபீஷணன்.

எப்போதும் இறக்கிவிடும் இடத்தில் அவளை இறக்கி விட்டு பை என்று மட்டும் கூறிவிட்டு வேறு எதுவும் பேசாமல் அவன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். அதுவும் அவளைப் பாதித்தது. அப்படியே யோசித்துக் கொண்டே எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்றே தெரியாமல் தான் வந்து சேர்ந்தாள்.

வீட்டுக்கு வந்த விபீஷணனுக்கு மனம் சற்று கனத்தது. நந்தனாவின் அந்த முகம் அவனை வருத்தமுறச் செய்தது. வேகமாக அவனது அறைக்கு வந்த விபீஷணன் நேரம் காலம் பார்க்காமல் ராகவிக்கு அழைத்தான்.

Advertisement