விபீஷணன் சந்தோஷமான மனநிலையில் தான் வீட்டிற்கு வந்தான். என்ன தான் நந்தனா தனது காதலை ஒத்துக்கொள்ள வில்லை என்றாலும் அவனுக்கு ஆயிரம் மடங்கு நம்பிக்கை இருந்தது நந்தனா கூடிய சீக்கிரம் தனது காதலை ஒத்துக்கொள்வாள் என்று. அதனால் சந்தோஷமாகவே வீடு வந்து சேர்ந்தான்.
சசிகலா அவனது நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். என்ன தான் ராஜாராம் அவரை அடக்கி வாசிக்கச் சொன்னாலும் சசிகலாவால் அப்படி இருக்க முடியவில்லை. விபீஷணன் தங்களிடம் ஏதோ மறைக்கிறான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இன்றோ அவனது முகத்தில் இருக்கும் சிரிப்பும் அவனது கண்களில் தெரிந்த ஏதோ ஓர் உணர்வு அவருக்குப் பீதியைத் தான் ஏற்படுத்தியது.
அவர்கள் சொந்தங்களில் கூட யாரும் இதுவரை காதல் திருமணம் செய்தது இல்லை. இப்போது விபீஷணன் ஜோசியர் கூறுவது போல் காதல் கீதல் என்று எதுவும் கூறிவிடுவானோ என்று மிகவும் பயந்து போய் இருந்தார். அதே போல் காலம் கடந்து யோசித்தார் விபீஷணன் கல்யாணம் வேண்டாம் என்று கூறியிருந்தாலும் நாம் சும்மா இருந்திருக்கக் கூடாதோ என்று. அவர் அப்படியே யோசனையுடனே இருக்க, அவரது தோளில் தட்டினான் விபீஷணன்.
“என்ன மா ஏதோ பலத்த யோசனையா இருக்கப் போல?” என்று கேட்டுக் கொண்டே அவர் அருகில் அமர்ந்தான்.
“அம்மாகிட்ட எதுவும் மறைக்கிறியா விபீ?” என்று அவர் நேரடியாகக் கேட்க, விபீஷணனுக்குத் தன் காதல் விவகாரம் தெரிந்து தான் அன்னை கேட்கிறார் என்று தெரியவில்லை.
அவர் அப்படிக் கேட்டதும் அங்கு ஆத்விக் உடன் விளையாடிக் கொண்டிருந்த ராஜாராமும் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த கவுதமும் அவர்களைப் பார்க்க, அவன் சிரித்துக் கொண்டே,”அம்மா இப்போ எதுக்கு இந்தக் கேள்வி? யாராவது என்னைப் பத்தி ஏதாவது சொன்னாங்களா? அதைவிட நான் என்ன உங்ககிட்ட மறைக்கப் போறேன்?” என்று கேட்டான்.
“இல்லை விபீ. அது வந்து..” என்று ஏதோ பேச வந்தவரை தடுத்தார் ராஜாராம்.
“சசி அவனே டையர்டா வந்துருக்கான். போய் சாப்பாடு ஏதாவது எடுத்துட்டு வா. விஷயம் இருந்தால் நம்மகிட்ட சொல்லாம வேற யார்கிட்ட அவன் சொல்லுவான்? வேலைய விட்டு வந்த பிள்ளைக்குச் சாப்பிட எதுவும் குடுக்காமல் அப்படி என்ன கேள்வி?” என்று கண்ணைக் காட்டி அதட்டி அவரை உள்ளே போகச் சொன்னார் ராஜாராம்.
சசிகலாவும் நொடித்துக் கொண்டே உள்ளே சென்றார். அவர் சென்றதும், ராஜராம் விபீஷணனிடம் திரும்பி,”நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா விபீ. உன் அம்மாவுக்கு வேற வேலையே இல்லை.” என்றார்.
விபீஷணனும் எதுவும் அதிகம் யோசிக்காமல் தந்தை கூறியதும் தோளைக் குலுக்கிவிட்டு அவனது அறை நோக்கிச் சென்று விட்டான்.
அவன் சென்றதும் கவுதம் தன் அப்பாவிடம்,”அப்பா இப்போ என்னாச்சு? ஏன் அம்மா இப்படிக் கேட்டாங்க விபீகிட்ட?” என்று கேட்டான் கவுதம்.
இனியும் மறைக்க முடியாது என்று மனைவியை மனதிற்குள் நிந்தித்தபடி கவுதமிடம் ஜோசியரைக் காணச் சென்றது மற்றும் அவர் கூறிய அனைத்து விஷயங்களையும் அவர் கூற, கவுதமும் யோசனைக்கு உள்ளானான்.
“அப்பா எனக்கு என்னமோ அம்மா சந்தேகப்பட்ட படி விபீ யாரையோ லவ் பண்றான்னு தான் தோனுது.” என்று கூறி, அன்று பிள்ளைகளை விபீஷணன் அழைத்து வரச் சென்றதைப் பற்றிக் கூறினான். அவன் கூறியதைக் கேட்டு ராஜாராம் யோசிக்க ஆரம்பித்தார். கண்டிப்பாக வீட்டில் பெரிய ரகளையே நடக்கும் என்று தோன்றியது அவருக்கு.
அதே போல் சமீபத்தில் தான் மகன் காதலில் விழுந்திருக்க வேண்டும் என்றும் சரியாகக் கணித்தார். இத்தனை நாள் இல்லாமல் இப்போது காதல் என்றால் கண்டிப்பாக அந்தப் பெண்ணை மிகவும் பிடித்திருக்க வேண்டும். என்ன நடந்தாலும் மகனது ஆசை முக்கியம், சசிகலாவை சம்மதிக்க வைக்க வேண்டுமென யோசித்தார்.
அவன் கீழே இறங்கி வருவதற்குள் ராஜராம் மீண்டுமொரு முறை சசிகலாவை அதட்டி அவனிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று கூறினார். சசிகலாவும் கணவரின் சொல் கேட்டு அப்போதைக்கு அமைதியாக இருந்தார். விபீஷணன் கீழே இறங்கி வந்ததும் அனைவருடனும் சாப்பிட்டு விட்டு வேகமாக மாடிக்கு அவனது அறைக்குச் சென்று விட்டான்.
விபீஷணன் அறைக்கு வந்தவன் கதவை அடைத்து விட்டு கட்டிலில் வந்து படுத்தான். பின்னர் அவனது கைப்பேசியை எடுத்து அன்று படம்பிடித்த நந்தனாவின் நடனத்தை இமை மூடாமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எத்தனை முறைப் பார்த்திருப்பானோ திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்து ரசித்தான் விபீஷணன்.
ஆசை தீர அவன் பார்த்து முடித்தபின் அதை அப்படியே ராகவிக்கு அனுப்பி வைத்தான். அவள் ஆன்லைனில் இருந்ததால் உடனே பார்த்துவிட்டாள். அடுத்த நொடி விபீஷணனை அழைத்து விட்டாள். அவள் அழைப்பாள் என்று தெரியும், அதனால் சிரிப்புடனே எடுத்தான் விபீஷணன்.
“ஏய் யார் இந்தப் பொண்ணு?” என்று எடுத்தவுடனே கேட்டாள் ராகவி.
“யது.. யது நந்தனா என் ஸ்வீட்ஹார்ட்.” என்று அவன் ரசித்துக் கூறினான்.
அவள் வீடியோ கால் தான் செய்திருந்தாள். அதனால் அவனது முகத்தில் தெரிந்த நவரசத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
“எப்போ நடந்தது இது? பொண்ணு அழகா இருக்கா. உனக்கு எப்படி ஓகே சொன்னா? ஏன் இத்தனை நாள் என்கிட்ட சொல்லவே இல்லை?” என்று தொடர்வண்டி போல் தொடர்ச்சியாக அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.
“காம்டவுன் ராக்ஸ். அவள் இன்னும் எனக்கு ஓகே சொல்லலை. பட் ஐ நோ அவள் சீக்கிரமே ஓகே சொல்லிடுவா. அவளுக்கும் என்னைப் பிடிக்கும் பட் சம்திங் இஸ் ஸ்டாப்பிங் ஹெர் அவ்ளோ தான்.” என்றான் விபீஷணன்.
“ஓஹோ!! சரி எப்படிப் பார்த்த? எங்க பார்த்த?” என்று அவள் ஆசையுடன் கேட்டாள்.
விபீஷணன் ஆதி முதல் அந்தம் வரை அதாவது சற்று முன்னர் நடந்த நிகழ்வு வரை அனைத்தையும் ஒன்று விடாமல் அவன் கூற, கேட்ட ராகவிக்குத் தான் பயங்கர ஆச்சரியம். விபீஷணன் காதல் என்றால் பத்தடி என்ன ஆயிரம் லட்சம் அடி ஒதுங்கிச் செல்பவன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் நிறையப் பேர் தங்கள் காதலை அவனிடம் சொல்லிருக்கிறார்கள். அனைவரையும் பாரபட்சமின்றி நிராகரித்திருக்கிறான். அவனைப் பொறுத்தவரை படிப்பு மட்டுமே முதன்மையானது. அப்படிப்பட்டவன் இன்று ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்பதை அவளால் சுத்தமாக நம்பமுடியவில்லை.
“விபீ நிஜமா நீயா லவ் பண்ற?” நம்ப முடியாமல் கேட்டாள் ராகவி.
“ஆமா ராக்ஸ். நானே எக்ஸ்பெக்ட் பண்ணாதது ராக்ஸ். எனக்கு யதுவை ரொம்ப பிடிச்சுருக்கு. என்னோட லைஃப் அவள் கூடத் தான்னு நான் டிசைட் பண்ணிட்டேன். மேடமும் கொஞ்சம் கருணைக் காட்டி என்னை ஓகே சொன்னால் நல்லா இருக்கும்.”
“டேய் விபீ நீ லவ் பண்றதையே என்னால நம்ப முடியலை. இப்படி எல்லாம் பேசி எனக்கு ஹார்ட் அட்டாக் வர வைச்சுடாத டா. டெலிவரி டைம் வேற நெருங்கிட்டு இருக்கு எனக்கு. மீ பாவம்.” என்று அவள் கெஞ்சுவது போல் நடிக்க, விபீஷணன் அவளை முறைத்துப் பார்த்தான்.
“நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ விளையாடிட்டு இருக்கியா?”
“நோ விபீ. ஐ ஆம் டேம் சீரியஸ். நான் ஹரீஷை லவ் பண்றேன்னு சொன்ன போது நீ எவ்ளோ அட்வைஸ் பண்ண எனக்கு? ஆனால் இப்போ நீயே லவ் பண்றது எனக்கு ஆச்சரியமா இருக்கு விபீ!!”
“ஹேய் நீ ஹரீஷ் உன்னை லவ் பண்றான்னு சொல்லும் போது இரண்டு பேரும் படிச்சுட்டு இருந்தீங்க. ஆனால் நான் அப்படியா? எனக்கு இப்போ இருபத்தி ஒன்பது வயசாகுது. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு மை டியர் ஃப்ரண்ட்.” என்று அவன் கூறவும் அவள் பழிப்புக் காட்ட, அவன் சிரித்து விட்டான்.
பின்னர் ராகவியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டுவிட்டு சிறிது நேரம் இருவரும் பேசிவிட்டு கைப்பேசியை வைத்தார்கள். வைப்பதற்கு முன்பு ராகவி,”நீ சொல்றதை வைச்சு பார்க்கும் போது உன்னோட யதுவுக்கும் உன்னைப் பிடிச்சுருக்கும்னு தான் தோனுது. சீக்கிரமே கல்யாணம் சாப்பிடு போடு மேன். ஆனால் என்னோட டெலிவரிக்கு அப்புறம் தான். அப்போ தான் என்னால அங்க வர முடியும்.” என்று கூறிவிட்டுத் தான் வைத்தாள்.
விபீஷணன் இப்போதே அவனும் நந்தனாவும் மாலை மாற்றி திருமணம் செய்வது போல் காட்சி அவன் மனத்திரையில் வந்து போனது. அதை ரசித்துக் கொண்டே உறங்கி விட்டான் விபீஷணன்.
விபீஷணன் நன்றாக உறங்கி விட்டான். ஆனால் இங்கு நந்தனாவோ தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். விபீஷணனை அவளுக்குப் பிடித்திருக்கிறது ஆனால் காதலிக்கிறாளா என்று கேட்டாள் அவளால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் அவன் சோகமாக இருந்தால் இவளுக்கு மனம் கஷ்டப்படுகிறது.