Advertisement

“என்ன ஆன்ட்டி நீங்க இப்படிப் பேசுறீங்க? வாழ்க்கையில எவ்ளோ பிரச்சனை வந்தாலும் தைரியமா எதிர்த்து நிற்கனும்னு பெரியவங்க நீங்கத் தான் எங்களுக்குச் சொல்லனும். நீங்களே இப்படிப் பேசலாமா?” என்று அவள் ஆற்றாமையுடன் கேட்க,

“ப்ச் வேற எப்படி மா பேசுறது? நிறைய பேர் இந்த உலகத்துல கடவுள் ஒருத்தர் இல்லவே இல்லைனு சொல்றாங்க. சில பேர் இது கடவுள் இல்லை வெறும் கல்லுனு சொல்றாங்க. அப்படிச் சொன்ன பல பேர்கிட்ட நான் சண்டைப் போட்டிருக்கேன். ஆனால் இப்போ அவங்க சொன்னது எல்லாம் உண்மையோனு எனக்கே தோன வைச்சுட்டான்.” என்று அவர் கூற,

“ஆன்ட்டி உங்களுக்கு என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம் ஆன்ட்டி. இந்த உலகத்துல எந்த ஒரு செயலும் காரணமில்லாமல் நடக்கிறது கிடையாது. என்ன நாம சந்தோஷமா இருந்தா நல்லா சாமியை கும்பிடுறோம். அந்தச் சாமி நமக்கு ஏதாவது கஷ்டம் கொடுத்துட்டா கடவுளே இல்லைனு நாம அவனைத் திட்ட ஆரம்பிச்சுடுறோம். கடவுள் நமக்கு ஒரு கஷ்டத்தை கொடுக்கிறார்னா அந்தக் கஷ்டத்தைத் தாங்கக் கூடியப் பக்குவம் நமக்கு இருக்குனு தான். அந்தக் கஷ்டத்தை நமக்குக் கொடுக்கத் தெரிஞ்சவனுக்கு அதே மாதிரி சந்தோஷத்தையும் கண்டிப்பா நமக்குத் தருவான் ஆன்ட்டி.” என்று அவள் கூற, 

அந்தப் பெண்மணி அவளை அபூர்வமாகப் பார்த்து,”இவ்ளோ சின்ன வயசுல எவ்ளோ பக்குவமா பேசுற மா நீ. உன் பேர் என்ன?” என்று அவர் கூற,

“என் பெயர் நந்திதா ஆன்ட்டி.” அவள் சிரித்த முகத்துடன் கூற,

அந்தப் பெயரைக் கேட்டதும் ஒரு நொடி முகம் சுருங்கியவர் பின்னர் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு,”சரி மா நான் கிளம்புறேன். இன்னைக்கு உன்னை சந்திச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா.” என்று அவர் கூறிக் கொண்டு எழுந்திருக்க,

“ஆன்ட்டி நீங்கத் தனியா தான வந்துருக்கீங்க? உங்க வீடு எங்க இருக்குனு சொல்லுங்க நான் காரல் தான் வந்தேன். உங்களை ட்ராப் பண்ணிட்டு நான் வீட்டுக்குப் போறேன்.” என்று அவள் கூற,

“அதெல்லாம் வேண்டாம் மா. நான் தெரிஞ்ச ஆட்டோல தான் வந்தேன். அந்தப் பையன் எனக்காகக் காத்திருப்பான் மா. நான் போய்க்கிறேன்.” என்று அவர் கூற,

“சரி ஆன்ட்டி. நானும் கிளம்பிட்டேன். வாங்க சேர்ந்தே போவோம்.” என்று கூறி அவர் கைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

இவர் வருவதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவை இவர்கள் அருகில் நிப்பாட்ட, அந்தப் பெண்மணி உள்ளே ஏறி அமர்ந்தார். நந்திதா அவரின் கைப்பிடித்து,”ஆன்ட்டி நீங்க எதுவும் மனசு தளர்ந்து போயிடாதீங்க. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும். நீங்கக் கவலைப்படாம உங்க ஹெல்த்தை பார்த்துக்கோங்க ஆன்ட்டி. வீட்டுக்குப் போனதும் முதல்ல சாப்பிடுங்க. அதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போற வரைக்கும் தாங்கனும்ல அதனால இந்தாங்க இதை வழில சாப்பிட்டுப் போங்க.” என்று அவள் அக்கறையாகக் கூறி, கையிலிருந்த ஒரு பிரசாதத்தை அவரிடம் தர, அவர் பூரித்துப் போனார்.

“நீ யார்னு எனக்குத் தெரியாது, நான் யார்னு உனக்குத் தெரியாது. ஆனால் நம்மளோட இந்தச் சந்திப்பு அந்தக் கடவுள் ஏற்படுத்தியதுனு என் மனசுக்குப் படுது மா. திரும்பி நாம சந்திப்போம்னு என் மனசு சொல்லுது. நீயும் பார்த்து பத்திரமா வீட்டுக்குப் போ மா. உன்னை உன்னோட அம்மா அப்பா நல்லா வளர்த்துருக்காங்க.” அகம் மகிழ்ந்து அவர் கூறிவிட்டுச் செல்ல, நந்திதாவுக்கு அவர் கூறுவது போல் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் அவர்கள் சந்திப்பு நடந்திருக்குமோ என்று எண்ணிக் கொண்டே அவளது வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள்.

அந்தப் பெண்மணி ஆட்டோவிலிருந்து அவரது வீட்டிற்கு முன்பு இறங்கி ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்து விட்டு, கேட்டை திறந்து கொண்டு உள்ளே வர,

“என்ன சசி போகும் போது முகம் சோர்ந்து போயிருந்துச்சு. இப்போ அப்படியே பிரகாசமா இருக்கு? ஏதாவது நல்ல விஷயம் நடந்ததா?” வீட்டின் வாரான்டாவிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவரது கணவர் ராஜாராம் கேட்க,

“ஆமாங்க, நான் சாமி கும்பிட்டுக் கிளம்பும் போது மயக்கம் போட்டு விழுந்துட்டேன்ங்க…” என்று அவர் கூற, ராஜாராம் பதறிக் கொண்டு,

“ஏய் கவுதம் கொஞ்சம் சீக்கிரம் வெளில வா.” என்று பையனைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டு விட்டு,”நீ முதல்ல இங்க உட்கார்.” என்று அவரது கையைப் பற்றி அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியில் சசிகலாவை அமர வைத்தார்.

“நான் சொல்றது கேளுங்க, எனக்கு ஒன்னுமில்லை. இப்போ நான் நல்லா தான் இருக்கேன்.” என்று அவர் கூற, சரியாக 

“அப்பா என்னாச்சு? ஏன் கூப்பிட்டீங்க?” என்று கேட்டுக் கொண்டே கவுதம் அங்கு வர,

“உங்க அம்மா கோவில்ல மயக்கம் போட்டு விழுந்தாட்டாளாம். விபிக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லு.” என்று ராஜாராம் கூற, கவுதம் உள்ளே சென்றான் கைப்பேசியை எடுக்க,

“அவன் கூப்பிடதும் அப்படியே வந்துட்டு தான் மறு வேலைப் பார்ப்பான். ப்ச் விடுங்க, எனக்கு ஒன்னுமில்லை.” என்று கூறி சசிகலா எழ, ராஜாராம் அவரை முறைத்துப் பார்த்து,

“அமைதியா இரு சசி. நான் கூட வரேன்னு சொன்னேன். ஆனால் கேட்காமல் தனியா போயிட்ட. இப்போ பார் என்னாச்சுனு.” அவர் வருத்தமாகக் கூற,

“அத்தை என்னாச்சு?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் சுவாதி, கவுதமின் மனைவி.

“அட எனக்கு ஒன்னுமில்லை. உன் மாமா தான் தேவையில்லாம சின்ன விஷயத்தைப் பெருசு பண்ணிட்டு இருக்கார். டைம்மாச்சு நீ போய் ஆத்விக்கை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பு, நீயும் வேலைக்குப் போகனும்ல போ எனக்கு ஒன்னுமில்லை.” என்று சசிகலா கூற, சுவாதியும் வேலைக்கு நேரமாவதால் அங்கிருந்து சென்று விட்டாள்.

ராஜாராம் அவரை இன்னும் முறைத்துக் கொண்டிருக்க, சசிகலா அவரைப் பார்த்து,”அட நிஜமா எனக்கு ஒன்னுமில்லை. நான் சொல்ல வந்த விஷயமே வேற..” என்று கூறி நந்திதா பத்தி அவர் கூற,

“அந்தப் பொண்ணை நீ வீட்டுக்குக் கூப்பிட்டு வந்துருக்கலாம் சசி. உனக்கு அவ்ளோ ஹெல்ப் பண்ண பொண்ண அப்படியே விட்டுட்டு வந்துட்டியே.” என்று ராஜாராம் ஆதங்கமாகக் கூற,

“எனக்கு மனசுல தோனுதுங்க அந்தப் பொண்ணை நான் மறுபடியும் பார்ப்பேன்னு. அப்படிப் பார்த்தால் கண்டிப்பா அவளை நம்ம விபிக்கு கல்யாணம் பண்ணி வைக்காமல் விட மாட்டேன்.” என்று சசிகலா தீவிரமாகக் கூற,

“நீ தேவையில்லாத வேலை பார்க்கிறியோனு தோனுது சசி. இதுக்கு கண்டிப்பா விபி ஒத்துக்கவே மாட்டான் சசி. அதுக்கு முதல்ல அந்தப் பொண்ணு ஒத்துக்குவாளா? அதுவுமில்லாம நந்தனா இறந்து ஒரு வருஷம் தான் ஆகுது. நீ அவன்கிட்ட இன்னொரு கல்யாணம் பத்தி பேசுனா அது சரியா வராது சசி.” சிறு குழந்தைக்குக் கூறுவது போல் பொறுமையாக ராஜாராம் கூற,

“அவனை எப்படி ஒத்துக்க வைக்கிறதுனு எனக்குத் தெரியும். என் பையன் நல்லா இருக்கனும்னு நான் நினைக்கிறது தப்பா? அந்தக் கடவுளோட சந்நிதானந்துல நான் அந்தப் பொண்ணை பார்த்திருக்கேன். கண்டிப்பா நான் நினைக்கிறது நடக்கும். நீங்க வேணா பாருங்க.” என்று அவர் கூறி முடிக்க, கவுதம் வேகமாக வந்து,

“அப்பா நான் விபிகிட்ட சொல்லிட்டேன். அவன் வந்துட்டு இருக்கான். நான் ஆபிஸ்கு ஃபோன் பண்ணி ஒன் அவர் பெர்மிஷன் சொல்லிட்டு வரேன். இரண்டு பேரும் உள்ள வாங்க.” என்று அவன் கூறிவிட்டு உள்ளே சென்றான்.

சசிகலா அப்போது இருந்தே இருக்கும் எல்லா கடவுளிடமும் தன் மகன் விபீஷணனுக்கும் நந்திதாவுக்கும் திருமணம் நடக்க வேண்டுமென்றும், அதற்கு எந்தவிதத் தடங்கலும் வராமலிருக்க வேண்டுமென வேண்ட ஆரம்பித்து விட்டார்.

ராஜாராமும் சசிகலாவும் உள்ளே வர,”சசி நீ முதல்ல வந்து சாப்பிடு வா.” என்று கூறி அவரை சாப்பாடு மேஜைக்கு அழைத்துச் சென்றார்.

சுவாதி அனைத்தையும் தயாராக வைத்திருக்க, சசிகலாவும் ராஜாரமும் சாப்பிட அமர்ந்தனர். அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் விபீஷணன் அங்கு வரவும் சரியாக இருந்தது.

வேகமாக அவனது அம்மாவின் அருகில் வந்தவன்,”அம்மா என்னாச்சு? ஏன் மயக்கம் போட்டு விழுந்தீங்க? சரி வாங்க முதல்ல உங்களுக்கு ப்ளட் ப்ரெஷர் செக் பண்றேன்.” என்று கூறி அவரது கையைப் பிடிக்க, சசிகலா அவனது கையைத் தட்டி விட்டு,

“எனக்கு ஏதாவது ஆனா தான் நீ வீட்டுக்கு வருவியா விபி?” என்று அவர் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கேட்டாலும் அவரது குரலில் ஆற்றாமை இருந்தது.

“அம்மா என்ன இப்படிப் பேசுறீங்க? நான் என்ன வேணும்னேவா வீட்டுக்கு வராமல் இருக்கேன. வேலை ஜாஸ்தியா இருக்கு மா. எங்க ஹாஸ்பிட்டல்ல நாலு சர்ஜன் தான் இருந்தோம். அதுல ஒருத்தர் இப்போ வேலையை விட்டுட்டு போயிட்டார். இன்னொருத்தர் லீவ்ல போயிருக்கார். அதனால பேஷன்ட் எல்லாம் நான் தான் பார்த்துக்கனும் மா.” என்று அவன் கூற,

“சும்மா இந்தக் கதை எல்லாம் என்கிட்ட சொல்லாதா விபி. ப்ச் போனவ அவள் மட்டுமா போனா என் பையனோட நிம்மதியையும் சேர்த்து எடுத்துட்டு போயிட்டா. இதுக்கு தான் பெரியவங்க ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க. நீ ஆசைப்பட்டனு நாங்க எதுவும் பேசாமல் கல்யாணம் பண்ணி வைச்சோம்ல எங்களுக்கு இது தேவை தான். இப்படி அவள் பாதிலயே போவானு முன்னாடியே தெரிஞ்சுருந்தா அவளை உனக்குக் கல்யாணமே பண்ணி வைச்சுருக்க மாட்டேனே.” என்று சசிகலா புலம்ப ஆரம்பிக்க, 

“இப்போ உங்குக்கு ப்ளட் ப்ரெஷர் பார்த்தாலும் அது நார்மலா இருக்காது. நீங்க பேசுறதுலயே நல்லா தான் இருக்கீங்கனு புரியுது. எனக்கு வேலை இருக்கு மா நான் குளிச்சுட்டு ஹாஸ்பிட்டல் கிளம்புறேன். இப்போ என்ன நான் வீட்டுக்குச் சரியா வரனும் அவ்ளோ தான. இன்னைக்கு நைட் வீட்டுக்கு வந்துடுவேன். அப்புறம் எவ்ளோ வேலை இருந்தாலும் நான் வீட்டுக்கு வந்துடுறேன் போதுமா. நீங்க இனிமேல் நந்தனா பத்தித் தப்பா பேசாதீங்க அவ்ளோ தான் நான் சொல்வேன்.” என்று அவன் தீர்க்கமாகக் கூறிவிட்டு, அவனது அறைக்குச் சென்றான்.

ஒருவர் உயிரோடு இருக்கும் போது அவர்கள் மீது வைத்திருக்கும் காதலை விட, அவர்கள் இறந்த பின்பும் அவர்கள் மேல் வைத்திருக்கும் காதலுக்கு மதிப்பு அதிகம். நந்தனாவை தான் விபீஷணன் இழுந்துள்ளான். அவள் மீது வைத்த காதலை அல்ல.

Advertisement