Advertisement

விபீஷணன் தன் காதலை மறைமுகமாகச் சொல்லிச் சென்ற பின் நந்தனாவிற்குத் தான் என்னச் செய்வதெனப் புரியவில்லை. அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியவில்லை. அதை விட அவன் காதல் சொன்ன விதத்தில் அவள் அசந்து தான் போனாள். சரி இப்போதே எதுவும் முடிவு செய்ய வேண்டாம், சில நாட்கள் பொறுத்துப் பார்த்து முடிவு செய்யலாம் என்று அவள் முடிவெடுத்து அவளது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

நந்தனாவிடம் தன் காதலைச் சொல்லிவிட்டு வந்ததில் இருந்து விபீஷணனுக்கு மனம் படப்படப்பாக இருந்தது. காரணம் அவள் எங்குத் தன்னை நிராகரித்து விடுவாளோ என்று பயம். ஏனோ மனம் அவள் அவ்வளவுச் சீக்கிரம் ஒத்துக்கொள்ள மாட்டாள் என்றே தோன்றியது. இனி அடுத்த வாரம் தான் நந்தனாவை காண முடியும் அது வரை அவளது நினைப்பில் தான் காலம் தள்ள வேண்டும் என்பதை நினைக்கும் போது விபீஷணனுக்கு உவப்பாக இல்லை. இந்தக் கால அவகாசம் அவள் யோசிக்க உதவும் என்று நினைத்து அமைதியாகி விட்டான்.

விபீஷணன் வீட்டில் இவனது நடவடிக்கைகளைப் பார்த்து அவன் மேல் கொஞ்சம் சந்தேகம் வரத் தான் செய்தது. இருந்தும் யாரும் எதுவும் கேட்கவில்லை. சசிகலா தான் புலம்பிக் கொண்டு இருப்பார். ராஜாராம் தான் எப்போதும் போல ஏதாவது பேசி அவரைச் சமாதானப்படுத்துவார்.

அடுத்த நாள் திங்கட்கிழமை, வளமை போல் அனைவரும் வேலைக்குக் கிளம்பிச் சென்று விட வீட்டில் சசிகலாவும் ராஜாராமும் மட்டுமே இருந்தனர். அப்போது சசிகலாவின் தூரத்துச் சொந்தம் ஒருவர் அவர்கள் வீட்டிற்கு வந்தார். அவரை எதிர்பாராத சசிகலா மற்றும் ராஜாராம் இருவருக்கும் மகிழ்ச்சியே.

“வாங்க வாங்க.” என்று வரவேற்று உட்கார வைத்தனர். ராஜாராம் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க, சசிகலா விரைந்து சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தார்.

“இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். அதான் அப்படியே தங்கச்சிய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.” வந்தவர் அங்கு வந்ததற்கான காரணத்தைக் கூறினார்.

“அட என்ன மச்சான் நீங்க எங்க வீட்டுக்கு எப்போ வேணாலும் வரலாம். இதுக்கு எல்லாம் காரணம் சொல்லுவாங்க?”

“ஆமா அண்ணே இது உங்க வீடு மாதிரி. அவர் சொன்ன மாதிரி நீங்க எப்போ வேணாலும் வரலாம். சொல்லுங்க அண்ணே உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வரவா இல்லை டீ குடிக்கிறீங்களா?”

“அதெல்லாம் எதுவும் வேண்டாம் சசி. நான் இப்போ தான் கல்யாணம் வீட்டுல சாப்பிட்டேன். அதுவே வயிறு நிறையா இருக்கு.”

“சரி அப்போ கொஞ்சம் நேரம் போனதும் தரேன்.”

“விடமாட்டியே நீ சரி அப்புறம் எடுத்துட்டு வா.” என்று கூறிவிட்டு ஒரு நிமிட இடைவெளிக்குப் பிறகு,”அப்புறம் வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

“ம் எல்லாரும் நல்லா இருக்காங்க அண்ணா. வேலைக்குப் போயிருக்காங்க எல்லாரும். கொஞ்சம் முன்ன வந்திருந்தா நீங்க பார்த்துருப்பீங்க.” என்று கூறினார் சசிகலா.

“அப்படியா சரி பரவால மா, நான் இன்னொரு நாள் பார்த்துக்கிறேன். அப்புறம் உன் கடைசிப் பையனுக்குப் பொண்ணு எதுவும் பார்க்கிறீங்களா?”

“எங்க அண்ணே அவனுக்கு இருபத்தி ஒன்பது வயசாகுது ஆனால் கல்யாணம் வேண்டாம்னு சொல்றான். அவன் சொன்னாலும் நாம எப்படிப் பார்க்காமல் இருக்கிறதுனு எல்லாம் பார்த்துட்டு தான் இருக்கோம். அது அவனுக்குத் தெரியவும் தெரியாது. எல்லாம் சரினு வராங்க, கடைசியில நம்ம விபீ செஞ்சது தெரிஞ்சு முடியாதுனு சொல்றாங்க. நாம எவ்ளோ எடுத்துச் சொன்னாலும் அவங்க வேண்டாம்னு சொல்லிடுறாங்க. அதான் எதுவும் தகயமாட்டீங்குது. என்ன செய்றதுனு புரியாமல் இருக்கோம். நல்லதுக்குனு செய்ய போய் எங்க என் பையன் தனிமரமா நின்னுடுவானோனு பயமா இருக்கு.”

“அதெல்லாம் கவலைப்படாத மா. எல்லாம் தெரிஞ்சு கண்டிப்பா நம்ம பையனை ஏத்துக்கிற பொண்ணு கிடைப்பா பார்.”

“ஏன் மச்சனா ஏதாவது பொண்ணு உங்களுக்குத் தெரியுமா? அதைப் பத்திப் பேசத் தான் வந்தீங்களா?” சரியாக அவர் வந்ததன் காரணத்தை ராஜாராம் கூறினார்.

“ஆமா மாப்பிள்ளை, எங்க ஊர்ல எனக்குத் தம்பி முறை, அவனோட பொண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்கிறாங்க, அந்தப் பொண்ணும் டாக்டர் தான். அதனால டாக்டர் மாப்பிள்ளை தான் வேணும்னு கேட்குது. எனக்கு அவன் சொன்னதும் சட்டுனு உங்கப் பையன் ஞாபகம் தான் வந்துச்சு. நான் உங்க எல்லாரைப் பத்தியும் அவன்கிட்ட சொன்னேன். அவனுக்கு ரொம்ப சந்தோஷம். அதான் உங்ககிட்டயும் பேசலாம்னு வந்தேன்.” என்று அவர் கூற, சசிகலாவும் ராஜாராமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீங்க உடனே பதில் சொல்ல வேண்டாம். வீட்டுல எல்லார்கிட்டயும் பேசிட்டு பதில் சொல்லுங்க. அந்தப் பொண்ணு ரொம்ப தங்கமான பொண்ணு. நம்ம பையனுக்கு ஏத்த மாதிரி இருப்பா. அப்புறம் விபீ பத்தியும் நான் சொல்லிட்டேன் அவங்க புரிஞ்சுகிட்டாங்க. எந்தப் பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டாங்க.” என்று கூறிவிட்டு அவரது பையிலிருந்து ஜாதகத்தையும் புகைப்படத்தையும் எடுத்து அவர்களிடம் கொடுத்து விட்டு,”இது அந்தப் பொண்ணோட ஜாதகம். நம்ம பையனோட ஜாதகத்தோட ஒத்துப் போகுதுனா பாருங்க, பிடிச்சு இருந்தா மேற்கொண்டு பேசுவோம். என்ன நான் சொல்றது?” என்று அவர் கேட்க, இருவரும் அவர் கொடுத்த புகைப்படத்தைப் பார்த்தனர். அதில் பெண் நிறம் குறைவாக இருந்தாலும் இலட்சணமாகவும் அழகாகவும் இருந்தாள். அதிலே பெற்றவர்கள் இருவருக்கும் பரம திருப்தி. அதிலும் விபீஷணன் விஷயம் தெரிந்தும் அவர்கள் சரியென்று கூறுவது மனதிற்கு நிம்மதியாக இருந்தது.

“அண்ணே ரொம்ப சந்தோஷம். நான் விபீ வந்ததும் அவன்கிட்ட பேசுறேன். பேசிட்டு உங்களுக்கு நான் என்ன விஷயம்னு சொல்றேன் அண்ணே.” என்று சசிகலா கூற, அவரும் சரியென்று தலையசைத்தார். பின்னர் சிறிது நேரம் பேசிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.

அவர் கிளம்பிச் சென்றதும் சசிகலா ராஜாராமிடம்,”என்னங்க இந்தப் பொண்ணு நம்ம விபீக்கு பொருத்தமா இருப்பாள?”

“ஆமா சசி, ஆனால் நம்ம பையன் ஒத்துக்கனுமே!!”

“அதெல்லாம் ஒத்துக்க வைப்போம். அதுக்கு முன்னாடி நாம இரண்டு பேருக்கும் ஜாதகத்தைப் பொருத்தம் பார்ப்போம். அது பொருந்தி வந்தா நாம விபீகிட்ட பேசிக்கலாம்.”

“ம் சரி, நான் ஜோசியருக்கு ஃபோன் பண்ணிக் கேட்கிறேன். அவர் இருந்தார்னா நாம இப்போவே போய் பார்த்துட்டு வந்துரலாம்.” என்று கூறிவிட்டு அவரது கைப்பேசியை எடுத்து ஜோசியருக்கு அழைத்தார் ராஜாராம்.

அவரிடம் பத்து நிமிடம் பேசிவிட்டு வந்த ராஜாராம்,”சசி ஜோசியர் வெளியூர் போயிருக்காராம். வர எப்படியும் இரண்டு மாசமாவது ஆகும்னு சொல்றார்.”

“என்னது இரண்டு மாசமா? அப்போ என்னங்க பண்றது?”

“அவர் ரொம்ப அவசரம்னா இன்னொரு ஜோசியரை பார்க்கச் சொல்லிருக்கார். அவர் ரொம்ப சக்தி வாய்ந்தவராம். எல்லாரோட ஜாதகத்தை எல்லாம் பார்க்க மாட்டாராம். வெகு சிலரது ஜாதகம் மட்டும் தான் பார்ப்பாராம். அவரைப் போய் பார்க்கச் சொன்னார்.”

“அப்படியா? ரொம்ப பெரிய ஜோசியரா இருப்பாரோ? சரி யாரா இருந்தால் என்ன நான் போய் ரெடியாகிட்டு வரேன். ஒரு எட்டுப் போயி என்னன்னு பார்த்துட்டு வந்துரலாம்.” என்று கூறிவிட்டு தயாராக உள்ளே சென்றார் சசிகலா.

சசிகலா மற்றும் ராஜாராம் அவர்களது ஜோசியர் சொன்ன இடத்துக்கு வந்தனர். அங்கு இருந்தவர்களிடம் கேட்டு அந்த ஜோசியரின் வீட்டைக் கண்டுபிடித்து வந்து விட்டனர். உள்ளே நுழைந்தவர்களை அங்கிருக்கும் உதவியாள் ஒருவர் வந்து அழைத்துச் சென்று நாற்காலியில் உட்கார வைத்தார்.

பின்னர் அவர்களிடம்,”சார் எங்க ஐயா பத்திக் கேள்விப்பட்டுட்டு தான் வந்துருப்பீங்க இருந்தாலும் நான் சொல்றேன் கேட்டுக்கோங்க. அவர் எல்லார் ஜாதகத்தை எல்லாம் பார்க்க மாட்டார். குறிப்பிட்ட ஜாதகம் மட்டும் தான் பார்ப்பார். நீங்க யாருக்குப் பார்க்கனுமோ அவங்க ஜாதகத்தை என்கிட்ட கொடுங்க, நான் ஐயாகிட்ட கொடுத்துடுவேன். உங்களுக்குப் பாக்கியம் இருந்தால் ஐயா உங்க ஜாதகத்தைப் பார்க்க நேரலாம்.” என்று அவர் கூற, சசிகலா அவரது பையிலிருந்து விபீஷணனின் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார்.

உதவியாளர் சசிகலா கொடுத்த ஜாதகத்தை வாங்கிக் கொண்டு வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார். சில நிமிடங்களில் வெளியே வந்தவர்,”உங்களுக்கு இன்னைக்கு நல்ல நேரம். ஐயா நீங்கக் கொண்டு வந்த ஜாதகத்தைப் பார்க்கிறேன்னு சொல்லிட்டார். இரண்டு பேரும் உள்ள வாங்க.” என்று கூறி அழைத்துச் சென்றார் அந்த உதவியாளர்.

சசிகலாவும் ராஜாராமும் உள்ளே சென்றனர். அந்த அறை சிறியதாகத் தான் இருந்தது. ஆனால் மிகுந்த சுத்தமாக இருந்தது. ஒரு பக்கச் சுவர் முழுவதும் இருக்கும் சாமி படங்கள் அனைத்தும் மாட்டப்பட்டு இருந்தது. அந்தச் சுவருக்குக் கொஞ்சம் முன்னால் தான் தரையில் அந்த ஜோசியர் உட்கார்ந்திருந்தார். அவருக்கும் முன் ஒரு சிறிய மேஜை இருந்தது.

“வாங்க உட்காருங்க.” என்று அவர் கூற, சசிகலாவும் ராஜாராமும் அவருக்கு முன் அமர்ந்தனர்.

“இந்த ஜாதகர் உங்களுக்கு என்ன உறவு முறை வேண்டும்?”

“எங்களோட பையன் தான் ஜோசியரே!” என்று ராஜாராம் கூற, சரியென்று தலையசைத்த ஜோசியர் விபீஷணனின் ஜாதகத்தைக் கணிக்க ஆரம்பித்தார்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு,”இந்த ஜாதகம் ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பையனும் ரொம்ப அருமையான பையன். எந்தக் கெட்டப் பழக்கமும் இருக்காது இந்த ஜாதகருக்கு. ரொம்ப உன்னதமான வேலைல தான் இருப்பார். படிப்புல கெட்டி.” என்று அவர் கூறிக் கொண்டே போக, கேட்டுக் கொண்டிருந்த பெற்றோர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.

Advertisement