Advertisement

வெளியே வந்த விபீ அவனது காரை எடுத்துக் கொண்டு அவர்களது தெருவிலிருந்து வெளி வரும் வரை அவனுக்கு மனம் படப்படப்பாகத் தான் இருந்தது. எங்கு அவர்கள் எதுவும் குடைந்து கேட்டு விடுவார்களோ என்று பயந்து விட்டான். அவன் தவறு எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒரு விதப் படப்படப்பு அவனுக்கு வரத் தான் செய்தது.

நேற்று போலவே இன்றும் விபீஷணன் முதலில் ஆத்விக் மற்றும் அபயை அழைத்துக் கொண்டு தீக்ஷித்தாவை அழைக்கச் சென்றான். இன்று நந்தனா எப்படி நடந்து கொள்வாள் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு அவள் வகுப்பு எடுக்கும் அறைக்கு முன் சென்றான்.

நந்தனா கீழே உட்கார்ந்து பிள்ளைகளுக்கு கை முத்திரி பத்திச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“முத்திரை பரதநாட்டியத்துக்கு ரொம்பவே முக்கியம். இதுல டூ டைப்ஸ் இருக்கு. ப்ர்ஸ்ட் ஒன் ஒன் ஹேன்ட் மட்டும் யூஸ் பண்ணுவோம். நெக்ஸ்ட் டூ ஹேன்ட்ஸ் யூஹ் பண்ணுவோம். இன்னைக்கு நாம ப்ர்ஸ்ட் ஒன்ல ஒரு ஃபோர் முத்திரை மட்டும் பார்ப்போம். ஓகே வா குட்டீஸ்?” என்று அவள் கேட்க, குழந்தைகளும் எஸ் என்று கத்தினர்.

“ஒகே ப்ர்ஸ்ட் கை முத்திரை பதாகம். அதாவது எல்லா விரல்களையும் சேர்த்து வைக்க வேண்டும். இப்படி.” என்று அவள் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை வைத்துக் காண்பிக்க, பிள்ளைகளும் தவறாமல் அவளைப் பின்பற்றிச் சொல்லிக் கொண்டே செய்தனர்.

“அடுத்தது திரிப்பதாகம். கையை மாத்தாம அப்படியே உங்க ரிங்க் ஃபிங்கரை ஹாஃப்பா மடக்குங்க இப்படி.” என்று அவள் செய்ய, அவர்களும் பின்பற்றிச் செய்தனர். அதே போல் அடுத்த இரண்டு முத்திரைகளையும் அவள் சொல்லிக் கொடுக்க, அங்கிருந்த பிள்ளைகளும் அவள் செய்வதை அப்படியே பார்த்துச் செய்தனர். பின்னர் அவர்களாகவே அந்த நான்கையும் மறுபடியும் செய்யச் சொல்ல, அவர்களும் சமத்தாகச் செய்தனர்.

இதை எல்லாம் ரசித்துப் பார்த்துக் கொண்டு கதவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தான் விபீஷணன். பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து முடியவும் அவள் எழுந்து நிற்க, தீக்ஷூ சித்து என்று அழைக்க, அவளது கண்கள் தாமாகவே விபீஷணன் பக்கம் திரும்பியது. அவனது தோற்றமும் அவனது கண்களில் தெரியும் ரசனையும் நந்தனாவிற்கு படப்படப்பைக் கொடுத்தது.

அவன் சாவகாசமாக அவள் மேல் இருந்த கண்ணை எடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டே அவனது இரு கைகளிலும் ஆத்விக் மற்றும் அபயை பிடித்துக் கொண்டே அவள் அருகில் வந்தான். மற்றப் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஒவ்வொருவராக அங்கு வந்து அவளிடம் கூறிவிட்டு அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசினாலும் அவ்வப்போது அவளது பார்வை விபீஷணனின் பார்வையோடு கலந்து கொண்டு தான் இருந்தது. அனைவரும் சென்றவுடன் அந்த அறையில் ஆத்விக், அபய், தீக்ஷூ, விபீஷணன் மற்றும் நந்தனா மட்டும் தான் இருந்தனர்.

விபீஷணன் பிள்ளைகளிடம் குனிந்து,”குட்டீஸ் நீங்க இந்த ரூம்ல விளையாடுங்க, நான் மிஸ்கிட்ட பேசிட்டு வரேன் சரியா. இந்த ரூம்ம விட்டு வெளிலயும் போகக் கூடாது சரியா.” என்று அவன் கூறவும், மூவரும் சமத்தாகச் சரியென்று தலையசைத்தனர்.

அவர்கள் விளையாட ஆரம்பித்ததும் விபீஷணன் இன்னும் நெருங்கிச் சென்றான் நந்தனாவிடம். அவளுக்கோ என்ன செய்வதெனப் புரியவில்லை. எங்கு நெருங்கி வந்துவிடுவானா என்று பயந்து பின்னால் நகர்ந்தவள் அவன் அப்படியே நிற்கவும் அவளும் நின்றுவிட்டாள்.

“டோன்ட் வொர்ரி, உன்னை எதுவும் பண்ண மாட்டேன். நாம பேசுறதை இந்தக் குட்டீஸ் கேட்டுட கூடாதுனு தான் பக்கத்தில் வந்தேன்.” என்று கூறிவிட்டு பின்னர் அவர்களுக்கு நடுவிலிருக்கும் தூரத்தைப் பார்த்து,”ம் இது போதும்.” என்றான் அவன்.

“உங்களுக்கு என்கிட்ட என்ன பேசனும்?”

“நிறைய பேசனும். ஆனால் அதுக்கு முன்னாடி உன் பேரைச் சொல்லு. அது தெரியாமல் எப்படி உன்னை நான் கூப்பிடுறது?”

“நீங்க எதுக்கு என்னைக் கூப்பிடனும்? அவசியமே இல்லை. இங்க வர பேரன்ட்ஸ் எல்லாருக்கும் நான் மிஸ் தான். அதனால நீங்களும் அப்படியே கூப்பிடுங்க.”

“ஹா ஹா அது மத்தவங்களுக்கு ஒகே. ஆனால் நான் தான் பேரேன்ட்டே கிடையாதே! எனக்குக் கல்யாணமான தானா நான் பேரேன்ட்டாவே ஆக முடியும்.” என்று அவன் கூற, அவளுக்கு இதற்கு எப்படிப் பதிலளிக்க என்று தெரியவில்லை. அப்படியே அமைதியாகவே நின்றாள் அவள்.

“ஒகே உனக்கு உன்னோட பேரைச் சொல்ல இஷ்டமில்லாட்டி நோ ப்ராப்ளம். எனக்குப் புரிஞ்சுடுச்சு நீ நான் உன்னைச் செல்லப் பேர் வைச்சு கூப்பிடனும்னு ஆசைப்படுற. உன் ஆசையை எதுக்கு தடுக்கனும்.” என்று கூறிவிட்டு அவனது தாடையில் ஆட்காட்டி விரலை வைத்து யோசிக்க ஆரம்பித்தான். அவன் கூறியதைக் கேட்ட நந்தனாவுக்கோ அதிர்ச்சி.

வேகமாக அவனிடம்,”என் பேர் யது நந்தனா.” என்றாள் அவள்.

அவன் சிரித்துக் கொண்டே,”ஹே சூப்பர். யது நந்தனா விபீஷணன். பெயர் பொருத்தம் சூப்பரா இருக்குல?” என்று கேட்டான் அவன்.

அவள் அவனை முறைத்துப் பார்க்க, அவன் வேகமாக,”அட நீ இராமாயணம் படிச்சுருக்கியா?” என்று கேட்டான்.

இல்லை என்று அவள் தலையாட்ட, மீண்டும் அவனே,”சரி டீவில போடும் போது பார்த்திருக்கியா?” என்று கேட்டான்.

“எஸ் நான் பார்த்திருக்கிறேன். எதுக்கு கேட்கிறீங்க?”

“அதுல விபீஷணன்னு ஒரு கதாபாத்திரம் வரும். தெரியுமா?”

“ம் தெரியும். அவர் தான இராவணனோட தம்பி. ராமருக்கு சப்போர்ட் பண்ணி அண்ணனுக்கு அகென்ஸ்ட்டா சண்டை போட்டவர்.”

“அண்ணனுக்கு அகென்ஸ்ட்டா இல்லை மா, அதர்மத்துக்கு அகென்ஸ்ட்டா சண்டைப் போட்டார்.”

“சரி இப்போ எதுக்கு அவர் பத்திக் கேட்டீங்க?”

“ம் ஒகே விஷயத்துக்கு வரேன். அவர் விஷ்ணுவோட தீவிரப் பக்தர். அது தெரியும்ல உனக்கு?”

“எஸ் தெரியும். இராவணன் எப்படி சிவன் பக்தரோ அதே மாதிரி இவர் விஷ்ணு பக்தர். அதுக்கு இப்போ என்ன?”

“சொல்றேன் சொல்றேன், கிருஷ்ணர் தெரியும் தான?”

“எந்த கிருஷ்ணா?” யாரையோ சொல்கிறான் என்று அவள் கேட்க, அவனோ கண்கள் இரண்டும் வெளியே தெறித்து விடும் அளவு முழித்துப் பார்த்தான்.

“எதுக்கு இப்படிப் பார்க்கிறீங்க?”

“மேடம் நான் கடவுள் கிருஷ்ணர் பத்திக் கேட்டேன்.” என்று அவன் கூற, அவளுக்கு ஐயோ என்று இருந்தது.

“தெரியும். அவரைத் தெரியாமல் யாராவது இருப்பாங்களா!! நீங்கச் சாதாரணமா கேட்டதும் யாரையோ கேட்கிறீங்கனு நினைச்சேன்.” உதட்டைச் சுளித்து அவள் கூற, விபீஷணனின் கவனம் சிதறியது. அந்த உதட்டைத் தன் கையால் வருட, அவன் கையை எடுத்துப் போக, நந்தனா சுதாரித்துப் பின்வாங்க, விபீஷணனின் மடத்தனம் அவனுக்கே புரிந்தது. தன் பின்னந்தலையில் ஒரு அடி வைத்து வேறு பக்கம் பார்த்தான்.

அவனது சூழ்நிலைப் புரிந்த நந்தனா அவளை அறியாமலே அவனைச் சரியாக்குவதற்காக,”எதுக்கு இப்போ பகவான் கிருஷ்ணர் பத்தி என்கிட்ட கேட்டீங்க?” என்று கேட்க, விபீஷணன் சற்றுத் தெளிந்தான்.

“ம் அவர் விஷ்ணுவோட அம்சம் அது உனக்குத் தெரியும் தான?”

“தெரியும். கம்சனோட அராஜகத்துக்கு ஒரு முடிவுக் கட்டவும் தர்மம் தலை தூக்கவும் தான் விஷ்ணு கிருஷ்ணரா இந்தப் பூமியில பிறந்தார். எனக்கும் எல்லாமே தெரியும். இப்போ எதுக்கு நீங்க எனக்குப் பாடம் நடத்திட்டு இருக்கீங்க?”

“பொறுமை பொறுமை ரொம்ப முக்கியம். பரவால உனக்கு இவ்ளோ தெரிஞ்சுருக்கா. சூப்பர் சூப்பர்.” என்று அவன் கூற, அவள் முறைத்துப் பார்த்தாள்.

“ஹா ஹா சரி சரி விஷயத்துக்கு வரேன். அந்தப் பகவான் கிருஷ்ணருக்கு யது நந்தன் அப்படினு ஒரு பெயர் இருக்கு. அது தெரியுமா?” என்று அவன் கேட்க, அவள் யோசித்தாள்.

“ஆமா நான் ஒரு கிருஷ்ணன் பாட்டுல இந்தப் பேரை கேட்டுருக்கேன்.”

“ம் குட். என்ன தான் கிருஷ்ணர் பூமில பிறந்தாலும் அவர் விஷ்ணுவோட அம்சம் தான். அதாவது அவரை பகவான் விஷ்ணுனே சொல்லலாமா?” என்று அவன் கேட்க, சுத்தமாக நந்தனாவுக்குப் பொறுமைப் பறந்தது. வேகமாக அவள் கதவின் பக்கம் நடக்க, இரண்டு அடியில் அவளை நெருங்கினான் விபீஷணன்.

“சரி சரி நோ டென்ஷன். இதுக்கு மட்டும் பதில் சொல்லு. கிருஷ்ணரும் விஷ்ணுவும் ஒன்னு தான?”

“ஆமா.” பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கூறினாள்.

“ம் உன்னோட நேம் என்ன யது நந்தனா அதாவது கிருஷ்ணரோட பெயர். கரெக்ட்டா?” என்று அவன் கேட்க, அவள் பதிலளிக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனே தொடர்ந்தான்,”சரி சரி நோ கோபம். ம் எப்படி அந்த விபீஷணன் அவரோட வாழ்க்கை முழுவதும் விஷ்ணுவோட பரம பக்தனா வாழ்ந்தாரோ அதே மாதிரி இந்த கலியுக விபீஷணனும்.” என்று கூறி நிறுத்தி விட்டு அவளைக் கை காம்பித்து,”இந்த யது நந்தனாவோட பரம பக்தன் தான் வாழ்க்கை முழுவதும் வாழுவான்.” என்று கூறினான் விபீஷணன்.

ஒரு நிமிடம் அவளுக்குப் புரியவில்லை. எதற்கு இவ்ளோ கதை? கடைசியில் அவன் ஏன் அந்த விபீஷணனையும் இவனையும் ஒப்பிட்டுப் பேசினான் என்று. ஆனால் யோசித்துப் பார்க்கும் போது தான் அவன் சொல்ல வந்ததே புரிந்தது. அதாவது யது நந்தன் என்று கிருஷ்ணருக்கு ஒரு பெயர் உண்டு. கிருஷ்ணர் யார்? அவர் விஷ்ணுவின் அம்சம். அப்போது இலங்கையை ஆண்ட விபீஷணன் மன்னர் கிருஷ்ணரின் பக்தன் என்றும் கூறலாம். அதைத் தான் இந்தக் கலியுக விபீஷணன் கூறியிருக்கிறான் என்று அவளுக்குப் புரிய, அவனது இந்த விளக்கத்தில் உண்மையிலுமே வாயடைத்துப் போய் விட்டாள் நந்தனா. சத்தியமாக அவர்களது பெயரை வைத்து விபீஷணன் இப்படி எல்லாம் தன் காதலைக் கூறுவான் என்று சுத்தமாகப் பாவை அவள் எதிர்பார்க்கவில்லை.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்பதைப் பார்த்த விபீஷணன் அவள் முகத்தின் முன்பு சொடக்கிட்டு,”என்ன மேடம் யோசனை?” என்று கேட்டான்.

“ஒன்னுமில்லை, எனக்கு அடுத்த க்ளாஸ்கு நேரமாச்சு.” என்று அவள் கூற, விபீஷணனுக்கு இருக்கும் சக்தியெல்லாம் வடிந்து விட்டது போல் இருந்தது. ஆனால் அடுத்த நொடியே தெளிவுப் பெற்று,”ஒகே ஒகே நல்லா யோசிச்சு உன் முடிவைச் சொல்லு நந்தனா. நான் கண்டிப்பா ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். நீ ஒகே சொன்னாலும் சொல்லலைனாலும் என்னோட வாழ்க்கைல வந்த முதல் பெண்ணும் நீ தான் கடைசிப் பொண்ணும் நீயா தான் இருப்ப. பை நான் வரேன்.” என்று கூறிவிட்டு அவனது கைப்பையை எடுத்து அதிலிருந்து ஒரு அட்டை எடுத்து அவளிடம் நீட்டி,”இது என்னோட விசிட்டிங்க் கார்ட். அதுல என் நம்பர் இருக்கு. உனக்கு யூஸ் ஆகலாம்.” என்று அவளிடம் கூறிவிட்டுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவன் அங்கிருந்து சென்று விட்டான்.

காளை அவனின் அதிரடி ஆட்டத்தில் பாவைக்குத் தான் அடுத்து என்ன செய்வதென விளங்காமல் முழித்துக் கொண்டு இருந்தாள்.

Advertisement