Advertisement

அன்று ஞாயிற்றுக் கிழமை. எப்போதும் போல விபீஷணன் அவனது வேலைக்குத் தயாராகிக் கீழே இறங்கி வந்தான். வந்தவன் வீட்டின் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும் சந்தேகம் வந்தது. போவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு நின்றிருக்க, அவன் நிற்பதைப் பார்த்து விட்டார் சசிகலா.

“கீழே வா விபீ. அப்படியே தப்பிச்சிடலாம்னு நினைக்காத.”

அவர் பேசுவதிலே விஷயம் புரிந்து போனது விபீஷணனுக்கு. சலித்துக் கொண்டே அங்கு வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

“இப்படியே இன்னும் எத்தனை நாளுக்கு இருக்கப் போற விபீ? நாங்க சொல்றது உன் நல்லதுக்கு ஏன் உனக்குப் புரிய மாட்டீங்குது விபீ?” ஆதங்கத்துடன் கேட்டார் சசிகலா.

“அம்மா என் பதில் என்னன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்புறம் எதுக்கு தேவையில்லாத விஷயத்தைப் பேசி நேரத்தை வீணாக்கனும்?”

“என்ன தேவையில்லாதப் பேச்சு? என்னைக் கோபப்படுத்தாத விபீ! உனக்கு இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வேலையே இல்லை. ஆனால் நீ வேணும்னே எங்களை அவாய்ட் பண்ணத் தான் நீ இப்போ ஹாஸ்பிட்டல் போகுற!” என்று சசிகலா கூறவும் விபீஷணனுக்குப் பயங்கர கோபம் வந்து விட்டது.

“ப்ச் அம்மா, உங்களை அவாய்ட் பண்ணனும்னு நான் நினைச்சுருந்தா இந்த வீட்டுலயே நான் இருந்திருக்க மாட்டேன். அதை முதல்ல நீங்கப் புரிஞ்சுக்கோங்க. அப்புறம் இன்னொரு விஷயம் எனக்கு நீங்கப் பேசுறது தேவையில்லாத விஷயம் தான். அப்புறம் இந்த சீரியல்ல வர்ற மாதிரி என்னை ப்ளாக்மெயில் பண்ணிச் சம்மதிக்க வைக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க. அதுக்கு பணிஞ்சு போற ஆள் நான் கிடையாது. நீங்க நினைக்கிறது இந்த ஜென்மத்துல கண்டிப்பா நடக்காது.” என்று கூறிவிட்டு யாரையும் பார்க்காமல் அவன் எழுந்து சென்று விட, அனைவருக்கும் அவனது செயல் மனதிற்கு வருத்தத்தைத் தந்தது.

“என்ன மா இவன் இப்படிப் பேசிட்டு போறான். இப்படியே போனால் எப்படி இவனை வழிக்குக் கொண்டு வரது?” என்று சோகமாகக் கேட்டான் கவுதம்.

“எனக்கு என்ன பண்றதுனு எதுவும் தெரியலை கவுதம். இவன் இப்படிப் பேசிட்டு போறதைப் பார்த்தா எனக்கு இவன் வாழ்க்கையை நினைச்சு ரொம்ப பயமா இருக்கு.”

“சசி இப்போதைக்கு இந்த விஷயத்தைப் பத்தி எதுவும் பேச வேண்டாம். இன்னும் பத்து பதினைஞ்சு நாள்ல ராகவி இந்தியா வரா. அவள் வந்ததும் அவளை அவன்கிட்ட பேச வைப்போம். ராகவி சொன்னால் கண்டிப்பா விபீஷணன் கேட்பான்.” என்று நம்பிக்கையாகக் கூறினார் ராஜாராம்.

“ப்ச் ராகவி தான!! நல்லா பேசுவா! நீங்க வேற ஏதாவது சொல்லிட போறேன். அவள் விபீக்கு எதிரா எப்போ பேசிருக்கா? அவன் என்ன சொல்றானோ அதைத் தான் அவளும் சொல்லுவா. அவளை இந்த விஷயத்துல எல்லாம் நம்பவே முடியாது.” நொடித்துக் கொண்டே கூறினார் சசிகலா.

“இல்லை சசி எனக்கு நம்பிக்கை இருக்கு. மனசுல ஏதோ தோனுது! ராகவி வந்தால் எல்லாம் சரியாகும்னு.” என்று ராஜாராம் உறுதியாகக் கூறினார்.

“அப்படி மட்டும் நடந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம். பழனி முருகா என் மகன் வாழ்க்கையை நீ சரிப் பண்ணிக் கொடுத்துட்டா நான் உன் கோவிலுக்கு நடந்தே வரேன்.” என்று சசிகலா அப்போதே வேண்டுதல் வைத்தார் முருகனுக்கு.

ராகவியின் இந்திய வருகை, விபீஷணன் வாழ்க்கையில் ஒளியை வீசப் போகின்றது என்று இப்போதே சரியாகக் கணித்தார் ராஜாராம்.

விபீஷணன் கனத்த மனதுடன் தான் மருத்துவமனை வந்தான். அவனிற்கு நந்தனாவின் ஞாபகம் அதிகம் வந்து அவனைக் கவலை கொள்ள வைத்தது.

“ஏன் டீ என்னை விட்டுப் போன! உன்னோட இடத்துல என்னால யாரையும் வைச்சு பார்க்க முடியாதுனு உனக்குத் தெரியும் தானா! அப்புறம் ஏன் என்னை விட்டுப் போன? போனவ என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போயிருக்கலாம் லட்டு. என்னை ஏன் இப்படித் தனியா தவிக்க விட்ட?” என்று வாய் விட்டுக் கதறியே அவனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் விபீஷணன்.

சரியாக அந்த நேரம் அவனது அறைக் கதவுத் தட்டும் ஓசைக் கேட்க, முகத்தைத் துடைத்துக் கொண்டு தன்னையும் சரிப்படுத்திக் கொண்டு,”எஸ் கம் இன்.” என்றான் விபீஷணன்.

கதவைத் திறந்து கொண்டே உள்ளே நுழைந்தாள் நந்திதா. அவளைப் பார்த்து எரிச்சல் தான் ஆனது விபீஷணனுக்கு. அவள் இப்படித் தொடர்ந்து தன்னிடம் ஏதாவது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு பேச வருவது அவனுக்கு உவப்பாகவே இல்லை. ஆனால் முகத்தில் எதையும் காட்டாமல் நிர்மலாக வைத்துக் கொண்டான்.

உள்ளே வந்த நந்திதா அவனுக்கு எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்து,”விபீ தொந்தரவு பண்றேன்னு நீங்க நினைச்சாலும் பரவாலை. உங்களோட லவ் ஸ்டோரி தெரியாமல் என்னால தூங்கவே முடியலை. அதான் இன்னைக்கு எனக்கு ட்யூட்டி இல்லைன்னாலும் நான் வந்துட்டேன்.” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் நந்திதா.

அவள் அடிக்கடி வருவது உண்மையிலே அவனுக்குத் தொந்தரவாகத் தான் இருந்தது. அவனது காதல் கதையை அவள் ஏன் இத்தனை ஆர்வத்துடன் கேட்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை. இருந்தாலும் அவளது வருகையைத் தடை செய்ய, அவன் அனைத்தையும் இன்றே கூறிவிடலாம் என்று முடிவெடுத்து அவனது மற்றும் நந்தனாவின் காதல் கதையைக் கூற ஆரம்பித்தான்.

நந்தனா அவளது வீட்டிற்குச் சென்றாலும் அவளது நினைவுகள் முழுவதும் விபீஷணன் தான். எந்த ஆணிடமும் அவள் இதுவரை பேசியது கிடையாது. அவள் படித்தது பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி. அதே போல் கல்லூரியிலும் அவள் பட்டப் படிப்பாகவே நடனம் மற்றும் பாட்டைத் தான் தேர்ந்தெடுத்துப் படித்தாள். அதிலும் அவளது வகுப்பில் பெண்கள் மட்டுமே. அதனால் விபீஷணன் அன்று பேசியது அவளுக்கு வியப்பாக இருந்தது. அதே போல் எப்படிப் பதிலளிப்பது என்றும் புரியவில்லை. அவள் மனம் வேகமாக அடித்தது. அதே போல் விபீஷணனை அவளால் தவறாகவும் நினைக்க முடியவில்லை. சரி நாளைக்கு அவன் மறுபடியும் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள்.

அடுத்த நாள் காலையில் எழும் போதே விபீஷணன் மகிழ்ச்சியோடு தான் எழுந்தான். அன்று நந்தனாவைப் பார்க்கப் போகும் ஆவலிலே வேகமாக எழுந்துத் தயாராகிக் கீழே வந்தான்.

கவுதம் மற்றும் சுவாதி சாப்பாடு மேஜையில் உட்கார்ந்திருந்தனர். இவன் வருவதைப் பார்த்த கவுதம்,”வா விபீ. உனக்குத் தான் நாங்க வெயிட்டிங்.” என்றான் அவன்.

விபீஷணனும் அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். அப்போது விபீஷணன்,”அண்ணா, பசங்களை நானே போய் கூட்டிட்டு வரேன்.” என்றான் அவன்.

“என்ன திடீர்னு?” எனக் கேட்டான் கவுதம்.

“சும்மா தான் அண்ணா. ஏன் நான் போய் கூட்டிட்டு வரக் கூடாதா?”

“நான் எப்போ டா அப்படிச் சொன்னேன்? இப்போ என்ன நீ கூட்டிட்டு வரப் போற அவ்ளோ தான சரி போயிட்டு வா.” என்று கவுதம் கூற, ஒரே குதூகலமாகிப் போனது விபீஷணனுக்கு.

வேகமாகச் சாப்பிட்டு முடித்து அவனது அறைக்குச் சென்று மிகுந்த கவனத்துடன் தயாராகி வந்தான் விபீஷணன். அவனைப் பார்த்த கவுதம் மற்றும் சுவாதிக்குத் தான் சந்தேகமாக இருந்தது. இதுவரை விபீஷணன் அவனது தோற்றதிற்கு என்றுமே முக்கியத்துவம் அளித்தது இல்லை. ஆனால் இன்றோ அவன் அணிந்திருந்த டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் இரண்டுமே புதிது. அது மட்டுமன்றி ஜெல் தடவிய தலை முடி, முகத்தில் கிரீம் மற்றும் கையில் ரோலெக்ஸ் வாட்ச் எனப் பார்க்கப் பளிச்சென்று இருந்தான்.

“என்ன விபீ புதுசா ஹேர்கு ஜெல் தடவிருக்க?” என்று கேட்டுவிட்டு கவுதம் அவனுக்கு அருகில் வந்து  அவனது முகத்தைத் தன் ஆட்காட்டி விரலால் தடவ அதில் அவன் முகத்தில் போட்ட கிரீம் அவன் கையில் ஒட்ட அதை அதிர்ச்சியாகத் தான் பார்த்தான் கவுதம்.

“என்ன டா நடக்குது இங்க?” என்றான் கவுதம்.

“விபீ பசங்களைத் தான கூட்டிட்டு வரப் போறீங்க? அதுக்கு எதுக்கு இவ்ளோ அலங்காரம்?” என்று கேட்டாள் சுவாதி.

இருவருக்கும் என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. அவனால் நந்தனா தன் விருப்பத்தைக் கூறுவதற்கும் முன் வேறு யாரிடமும் அவன் மனதில் இருப்பதைக் கூற முடியாது. அதனால் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

“விபீ ஏதாவது பதில் சொல்லு.” என்று அவனைப் போட்டு கவுதம் உலுக்க, தன் நினைப்பிலிருந்து வெளி வந்தான் விபீஷணன்.

“சும்மா இதெல்லாம் போட்டா எப்படி இருக்குனு பார்த்தேன். அவ்ளோ தான். வாங்கி வைச்சதோட அப்படியே இருக்கு. அப்புறம் எக்ஸ்பைரி ஆகிடுச்சுனா காசு தான் வீண். வேற எதுவுமில்லை சரியா. இப்போ நேரமாச்சு நான் கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு சிட்டாகப் பறந்து விட்டான் விபீஷணன்.

அவனது செயல் கவுதம் மற்றும் சுவாதிக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது. சரி அவனே கூறட்டும் என்று அமைதியாக இருந்து விட்டனர்.

Advertisement