Advertisement

“க்ளாஸ் எப்படிப் போச்சு பசங்களா?”

“சூப்பரா போச்சு. இன்னைக்கு என்னைய மாஸ்டர் தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டார். ஆனால் நான் பயப்படாமல் மேல வந்துட்டேன். அபய் தான் பயந்து அழுதுட்டான்.” என்று ஆத்விக் கூற, விபீஷணன் அபயைப் பார்த்தான்.

“அப்படியா அபய்?” என்று அவனிடம் கேட்டான்.

“ஆமா மாமா. ஆனால் முதல்ல தான் அழுதேன். நெக்ஸ்ட் டைம் நானும் மேல வந்துட்டேனே.” சிரித்துக் கொண்டே கூற, இருவரது கண்ணத்திலும் முத்தம் வைத்த விபீஷணன்,”குட் பாய்ஸ்.” என்று கூற, இருவருக்கும் குதூகலமாக இருந்தது.

பின்னர் அவர்கள் இருவரையும் அவனது வாகனத்தில் பின் சீட்டில் அமர வைத்துவிட்டு முன்னால் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.

“சித்து எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்.” என்று கேட்டான் ஆத்விக்.

“ஆமா எனக்கும் வேணும்.” என்று அபயும் ஒத்து ஊதினான்.

“அதெல்லாம் நோ. இவ்ளோ நேரம் தண்ணீல தான இருந்தீங்க. ஸோ நாட் நவ். உங்களுக்கு ஈவ்னிங் வாங்கித் தரேன் ஓகே வா.” என்று விபீஷணன் கூறவும் இரு குழந்தைகளும் சமத்தாகத் தலையசைத்தது.

அங்கிருந்து ஒரு பத்தி நிமிடப் பயணத்தில் தீக்ஷிதா நடனம் பயிலும் நாட்டியாலயா வந்திருந்தான். இரு சுட்டீஸையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் நடன வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறார் அந்த நடன வகுப்பின் உரிமையாளர்.

அந்த நடனப் பள்ளியில் பல விதமான நடனங்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். அதில் பரதநாட்டியமும் அடங்கும். தீக்ஷிதாவை பரத நாட்டியத்தில் தான் நர்மதா சேர்த்திருந்தாள். விபீஷணன் பரத நாட்டியம் எங்குக் கற்றுத் தருகிறார்கள் என்று கேட்டுக் கொண்டு அந்த அறையைத் தேடிச் சென்றான் விபீஷணன்.

அவன் அந்த அறைக்குப் பக்கத்தில் வரவும் தீக்ஷூ வெளியே வரவும் சரியாக இருந்தது. அவளும் மாமாவைக் கண்ட சந்தோஷத்தில் அப்படியே ஓடி வர, குனிந்து அவளைத் தூக்கிக் கொண்டு இரண்டு அடித் தான் எடுத்து வைத்திருப்பான்,”மாமா என் வாட்டர் பாட்டில்ல வைச்சுட்டு வந்துட்டேன்.” என்று தீக்ஷூ உதட்டைப் பிதுக்கி கூற, அவளை இறக்கி விட்டு,”இரு டா குட்டிமா, மாமா போய் எடுத்துட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அவன் சென்றான்.

பரதம் கற்பிக்கும் அறைக்கு முன் விபீஷணன் வர, உள்ளே நடந்த காட்சியில் அப்படியே மெய் மறந்து உள்ளே செல்லாமல் நின்று விட்டான் விபீஷணன்.

உள்ளே ஐந்து அடி உயரத்தில் துப்பட்டாவை இடையில் கட்டி, இடையை வளைத்து கண்களில் நவரசத்தையும் காட்டி ஆடிக் கொண்டிருந்தாள் நந்தனா, யது நந்தனா. அவளது அபிநயங்களில் விபீஷணன் அவளை ரசித்துக் கொண்டிருந்தான். தன்னை ஒருவன் வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருப்பதை அறியாமல் மெய் மறந்து ஆடிக் கொண்டிருந்தாள் நந்தனா. அந்தப் பாட்டு முடியும் ஏழு நிமிடம் வரை அவனும் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தான். நந்தனா ஆடி முடித்ததும் விபீஷணன் தன்னை மறந்து கை தட்ட, அந்தச் சத்தத்தில் தான் திரும்பி வாசல் பக்கம் பார்த்தாள். நந்தனா தன்னைப் பார்த்ததும் வேகமாக உள்ளே வந்த விபீஷணன்,”ஹை ஐ ஆம் விபீஷணன்.” என்று கூறி அவனது வலது கையை நீட்டினான்.

நந்தனா அந்தக் கையை ஒரு முறை பார்த்து விட்டு அவனை நேருக்கு நேராகப் பார்த்து,”ஸோ வாட்.” என்று கேட்டாள்.

அதில் விபீஷணனுக்கு சுவாரஸ்யமாக, இரு தோள்பட்டையையும் குலுக்கி,”நத்திங்க், நாளைக்குக் கட்டிக்கப் போற புருஷனோட நேம் தெரியாமல் நீ அவஸ்தைப்படக் கூடாதுல அதான்.” அலட்டாமல் அவன் கூற, கேட்ட நந்தனாவுக்கு தான் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ந்து நின்று விட்டாள்.

அவளது அதிர்ச்சியில் தான் விபீஷணனுக்கு என்ன பேசினானே என்று புரிந்தது. அதில் அவனுக்குமே அதிர்ச்சி தான். இது வரை காதல் என்ற ஒன்றே அவன் வாழ்க்கையில் வராமல் பார்த்துக் கொண்டவன், இன்று ஒரே ஒரு முறை மட்டும் பார்த்த அதுவும் ஐந்து நிமிடம் மட்டுமே பார்த்த பெண்ணை எப்படிக் கல்யாணம் வரை யோசித்தான் என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் அந்த எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியையே தந்தது.

அவள் இன்னும் அதிர்ச்சிப் போகாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, விபீஷணன் அவளது முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். இல்லை இல்லை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை. கண்ணில் தீட்டிய மை மற்றும் இரு புருவத்துக்கும் நடுவில் அமர்ந்திருந்த அந்தச் சிறு பொட்டு. அவ்வளவு தான் அவளது அலங்காரமே. அதிலும் அவள் ஆடிய நடனத்தால் ஆங்காங்கே இருந்த வேர்வைத் துளிகள். இருந்தும் அவள் பேரழகியாகத் தான் அவன் கண்ணுக்குக் காட்சி அளித்தாள். அவள் முகத்தில் வழிந்த வேர்வைத் துடைக்க அவனது கை பரபரத்தது. ஆனால் அவளை மேலும் அதிர்ச்சியாக்க விரும்பாததால் அவனது கைக்குட்டையை எடுத்து அவளது கையில் திணித்து,”வேர்வையை துடைச்சுக்கோ.” என்று கூறி கொடுக்க, அப்போது தான் நந்தனா அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்தாள்.

“ஹலோ மிஸ்டர் யார் நீங்க? என்னை முதல்லயே தெரியுமா உங்களுக்கு? அதுவுமில்லாம முதல் முறைப் பார்க்கிற நீங்க எப்படி என்னை மரியாதை இல்லாமல் பேசாமல்?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டாள் நந்தனா.

“நோ. இன்னைக்கு தான் முதல் முறைப் பார்க்கிறேன். ஆனால் முன்னாடியே பார்த்துருக்கலாமோனு இப்போ தோனுது. அப்புறம் நீ என்னை விடக் கண்டிப்பா வயசுல சின்னப் பொண்ணு தான? அப்புறம் எதுக்கு மரியாதை தரனும்?”

“ப்ச் முதல் முறைப் பார்க்கிற பொண்ணுகிட்டயே இப்படி flirt பண்றீங்களே!! அசிங்கமா இல்லையா? ச!!” முகத்தைச் சுளித்து நந்தனா கூற, விபீஷணனுக்கும் புரிந்தது. இருந்தாலும் அவனது மனம் அவள் பால் விழுந்துவிட்டது. அதைத் தடுக்கு அவனே நினைத்தாலும் முடியாது. இப்போது கூட அவள் முகத்தைச் சுளித்ததை கூட அவனது மனம் ரசிக்கவே செய்ததது.

“நான் தப்பா எதுவும் பேசலையே!அதிலும் கண்டிப்பா flirt பண்ணலை. நான் சொல்றதை நம்புவியானு எனக்குத் தெரியாது. இருந்தாலும் சொல்றேன். எனக்கு உன்னைப் பார்த்ததும் புடிச்சுடுச்சு. யூ நோ எனக்கே என்னை நினைச்சு ஆச்சரியமா தான் இருக்கு. நீ சொன்ன மாதிரி உன்னை இப்போ தான் முதல் முறைப் பார்த்தேன். ஆனால் நான் உன்கிட்ட ப்ளாட் ஆகிட்டேன். அது தான் உண்மை. என்ன பண்றது சொல்லு. அதே போல் நான் ஒன்னும் விடலைப் பையன் கிடையாது. எனக்கு இருபத்தி ஒன்பது வயசாகுது. அண்ட் ஐ ஆம் அ டாக்டர். பட் நானும் மனுஷன் தான! எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு. அது உன்னைப் பார்த்ததுமே அருவியா கொட்டுது. இதுல என் தப்பு எதுவுமில்லை.” என்று நீண்டதொரு விளக்கத்தை விபீஷணன் கூற, நந்தனாவுக்கு இப்போது என்ன சொல்வதெனப் புரியவில்லை. அதுவும் அவன் மருத்துவர் என்று கூறியது நந்தனாவுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஒரு பொறுப்புள்ள பதவியிலிருந்து கொண்டு இவன் இவ்வாறு செய்யலாமா என்று மனம் யோசித்தது.

அவள் பதில் பேசும் முன்,”மாமா அபயும் ஆத்விக்கும் சண்டைப் போட்டுட்டு இருக்காங்க.” என்று கூறியபடியே உள்ளே ஓடி வந்தாள் தீக்ஷிதா. அப்போது தான் விபீஷணன் தான் ஏன் இங்கு வந்தோம் என்றே ஞாபகத்திற்கு வந்தது. தீக்ஷூ உயரத்திற்கு முட்டிப் போட்டு அவளது பட்டுக் கண்ணத்தில் முத்தம் வைத்து,”சாரி டா செல்லம். இதோ மாமா வந்துட்டேன்.” என்று கொஞ்சிய படி மீண்டும் நந்தனாவை பார்த்து,”நான் சும்மா சொன்னேன் மட்டும் நினைக்க வேண்டாம். ஐ ஆம் டேம் சீரியஸ். நாளைக்கும் நான் வருவேன். அப்போ உன் பேர் என்னன்னு தெரிஞ்சுக்கிறேன். இப்போ வரேன்.” என்று கூறி அவளைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு தீக்ஷூ உடைய தண்ணீர் பாட்டில்லை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அவன் சென்றதும் நந்தனாவிற்கு மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது. அவள் கனவிலும் நினைக்கவில்லை இப்படி ஒருவன் வந்து தன்னிடம் காதலை இல்லை இல்லை அவன் நேரடியாகப் புருஷன் என்று அல்லவா கூறினான். ஏதோ கனவுப் போலவே இருந்தது. ஆனால் அவளது கையிலிருந்த கைக்குட்டை இதுக் கனவு இல்லை உண்மையிலே நடந்தது என்று உரைத்தது. அதிலும் அவன் கண்ணடித்துச் சென்றது நந்தனாவுக்குள் பல எண்ணங்களை விதைத்தது. சற்றுப் பயமாகவும் இருந்தது அவளுக்கு. அதன் பிறகு அவளால் எவ்வளவு முயன்றும் எதிலும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. அந்த நாட்டியப் பள்ளியின் உரிமையாளரிடம் உடம்புச் சரியில்லை என்று பொய் உரைத்துவிட்டு அவளது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டாள்.

வெளியே வந்த விபீஷணனுக்கும் அன்று அவன் நடந்து கொண்ட முறையை அவனாலே நம்ப முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் ஊர்ஜிதமாகியது, நந்தனா தான் அவனின் சரிபாதி என்று. சிரித்துக் கொண்டே பிள்ளைகள் பேசியது எதையும் காதில் வாங்காமல் கனவில் மிதந்து கொண்டே எந்தச் சேதாரமும் இன்றி வீடு வந்து சேர்ந்ததே பெரிய விஷயம் தான்.

வேகமாக வண்டிக் கதவைத் திறந்து கொண்டு பிள்ளைகள் வீட்டின் உள்ளே நுழைய, விபீஷணன் நந்தனா நினைப்பிலே உள்ளே வந்தவன் ராஜாராம் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் அவனது அறைக்குச் சென்று விட்டான். ராஜாராமும் சசிகலாவும் அவனது செயலைப் புரியாமல் பார்த்தனர்.

உடனே சசிகலா தன் பேரப் பிள்ளைகளிடம்,”ஏய் குட்டீஸ் ஏன் உங்க மாமா/சித்து இப்படி இருக்கிறான்?” என்று அவர்களிடம் கேட்டார்.

“தெரியலை பாட்டி.” என்று அவர்கள் கூற, ராஜாராம் சசிகலாவைப் பார்த்து,”விடு சசி, கத்திரிக்காய் முத்தினா கடைத் தெருவுக்கு வந்துத் தான ஆகனும். அவனே சொல்லுவான் விஷயம் என்னன்னு.” என்று கூற, சசிகலாவும் அதைப் பெரிது படுத்தாமல் விட்டுவிட்டார்.

அந்த நேரம் கைப்பேசி ஓசை கேட்க, விபீஷணன் நிகழ் காலத்திற்கு வந்தான். எதிரில் அமர்ந்திருந்த நந்திதா அவனைப் பார்க்க, விபீஷணன் அவனது கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அழைத்தது அவனிடம் வேலைச் செய்யும் செவிலியர் ஜான்,”டாக்டர் இப்போ நீங்க ரௌன்ட்ஸ் பார்க்கிற டைம். உங்களை உங்க ரூம்ல பார்த்தேன். நீங்க இல்லை அதான் கால் பண்ணேன்.” என்று கூற, அப்போது தான் அவன் மணியைப் பார்த்தான். அவனது அறையிலிருந்து வந்து ஒன்றரை மணிநேரமாகி விட்டது. இப்படி அமர்ந்து அவன் நிதானமாகப் பேசியே பல மாதங்களாகிறது.

வேகமாக எழுந்தவன் நந்திதாவைப் பார்த்து,”ஓகே நந்திதா எனக்கு இப்போ ரௌன்ட்ஸ் போற டைம். நான் வரேன்.” என்று கூறி அவன் இரண்டு அடித் தான் எடுத்து வைத்திருப்பான் நந்திதா அவனை அழைத்தாள்.

“ம் எஸ்.” என்று மட்டும் கூறினான் விபீஷணன்.

“இல்லை நந்தனா பத்தி மத்ததை எப்போ தெரிஞ்சுக்கிறது? அவங்க பேரை அடுத்த நாள் நீங்கப் போய் கேட்கும் போது சொன்னாங்களா? இப்படி சஸ்பென்ஸ்ல விட்டால் எப்படி?” என்று அவள் அவனிடம் கேட்டள்.

அவன் சிரித்துக் கொண்டே,”டைம் இருக்கும் போது மத்ததை சொல்றேன். இப்போ எஸ் அடுத்த நாள் நான் போகும் போது அவளோட பேரை என்கிட்ட சொன்னாள்.” என்று ஒருவித பரவசத்தோடு கூறினான் அவன்.

விபீஷணன் நந்தனா பற்றிப் பேசும் போது அவனது கண்களில் தெரியும் ரசனையும் உதடுகளில் ஜொலிக்கும் சிரிப்பும் நந்தனா மேல் அவன் வைத்த அபரிமிதமான காதலை அப்பட்டமாகக் கூறியது. அது நந்திதாவுக்கு சற்றுப் பொறாமையாகத் தான் இருந்தது. நந்தனாவைப் பார்த்தே ஆக வேண்டுமென்று போல் இருந்தது. ஆனால் முடியாதே! நேரில் பார்க்க முடியாமல் போனால் என்ன கண்டிப்பாக விபீஷணனிடம் அவளது புகைப்படம் இருக்கும். அடுத்த முறை மறக்காமல் அவனிடம் கேட்டுப் பார்க்க வேண்டுமென முடிவெடுத்தாள்.

அவள் ஒன்றை யோசிக்க மறந்துவிட்டாள். கடல் அளவு நந்தனா மேல் காதலை வைத்திருக்கும் விபீஷணன் தன் காதலை ஏற்பானா என்று?

Advertisement