Advertisement

விபீஷணன் மதிய உணவைப் பெரும்பாலும் மருத்துவமனையில் தான் உண்பான். அன்றும் எப்போதும் போல மருத்தவமனையில் உள்ள கேன்டீனிற்குச் சென்று தனக்குத் தேவையான உணவு வகைகளைக் கூறிவிட்டு அதைக் கையோடு வாங்கிக் கொண்டு ஒரு நாற்காலியில் சென்று அமர, நந்திதா வந்து விட்டாள்.

அவளை ஆச்சரியமாகப் பார்த்த விபீஷணன்,”என்ன நந்திதா ஆப்ரேஷன் முடிஞ்சதா?” என்று அவளிடம் கேட்டான்.

“எஸ் முடிஞ்சது விபீ. அவங்களுக்கு இது செகென்ட் பேபி. அதுவும் விட நார்மல் டெலிவரி தான். அதான் சீக்கிரம் முடிஞ்சது. சரி பசிக்குது சாப்பிட வரலாம்னு வந்தேன். பார்த்தால் நீங்க! அப்போ தான் காலைல பேசிட்டு இருந்ததை இப்போ தொடரலாம்னு தோனுச்சா சட்டுனு வந்துட்டேன்.” அவள் வெகு சாதாரணமாகக் கூறினாள்.

“உனக்கு அப்படி என்ன ஆர்வம் என் லட்டுவைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதுல?” என்று விபீஷணன் கேட்க, நந்திதா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்தாள்.

அவள் முழிப்பதைப் பார்த்து விபீஷணன் மூளையில் எச்சரிக்கை மணி ஒலித்தது. அவள் மேல் சந்தேகத்தையும் உண்டாக்கியது. அவன் முக மாற்றலைப் பார்த்த நந்திதா வேகமாக,”ப்ச் ஆர்வம்னே சொல்லலாம். நான் முதன் முதல்ல ஆன்ட்டிய அதாவது உங்க அம்மாவைக் கோவில்ல பார்த்தப்போ ரொம்ப வெக்ஸ் ஆகி இருந்தாங்க. எனக்குப் பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்போ அவங்க தான் என் பையன் அவனோட இறந்து போன பொண்டாட்டியவே நினைச்சுட்டு உயிரோட இருக்கிற எங்களைக் கஷ்டப்படுத்துறானு சொன்னாங்க. அப்போ எனக்கு அவங்க பையன் நீங்கத் தான்னு தெரியாது. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வைச்சு பார்க்கும் போது தான் நீங்கத் தான் அவங்க சொன்ன பையன்னு தெரிஞ்சு கொஞ்சம் ஷாக் தான். அப்படி என்ன உங்க வைஃப் உங்க அம்மா,அப்பா, கூடப் பிறந்தவங்களை விட ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்க தான் அவங்களை பத்தி நான் கேட்கிறேன்.” நீண்டதொரு விளக்கத்தை நந்திதா தர, அந்தப் பதில் ஏனோ விபீஷணனை சமாதானமாக்கியது.

“ம் விளக்கம் போதுமா? இப்போ சொல்லுங்க உங்க லட்டு பத்தி.” எனச் சிரித்த முகமாகவே நந்திதா கேட்டாள்.

“ம் போதும். நான் காலைல சொன்ன மாதிரி தான், என் லட்டு பத்தி சொல்லனும்னா நான் சொல்லிட்டே இருப்பேன். என் லட்டுவை சந்திக்கிறதுக்கு முன்னாடி யாராவது நான் காதலிப்பேன்னு சொல்லிருந்தா அவங்களை பார்த்து கேவலமா சிரிச்சுட்டு போயிருப்பேன். ஏனா நான் என் லட்டுவைப் பார்க்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் என்னோட முழு கவனம் என் வேலையில மட்டும் தான் இருந்தது. ஆனால் அவளைப் பார்த்த அடுத்த நொடில இருந்து என் கவனம் அவள் பக்கம் திரும்பிடுச்சு. அவளை நான் தான் துரத்தித் துரத்திக் காதலிச்சேன். ஆனால் இந்த ஒரு வருஷமா எனக்கே நிறைய முறை தோனினது நான் அவள் வாழ்க்கையில வராமல் இருந்திருந்தால் கண்டிப்பா இந்நேரம் அவள் நல்லா சந்தோஷமா இருந்திருப்பாளோனு தோனுது.” என்று கூறும் பொழுதே அவனது கண்கள் கலங்க, அதை நந்திதாவிடம் காட்டாமல் முகத்தை அந்தப் பக்கம் திருப்பி, அப்படியே கண்ணை மூடி கண்ணீரை உள் இழுத்துக் கொண்டான் விபீஷணன்.

“சாரி விபீ. நான் நந்தனா பத்திக் கேட்டு உங்களைக் கஷ்டப்படுத்துறேனா?”

“ச ச அதெல்லாம் இல்லை. என் லட்டுப் பத்திப் பேசுறதுனா எனக்கு அதுல எந்தக் கஷ்டமும் இல்லை. ம் நான் அவளை எப்படிச் சந்திச்சேன்னு தான்ன கேட்ட? சொல்றேன்.” என்று ஒரு நிமிடம் அவன் பேசுவதை நிப்பாட்டி விட்டு மீண்டும் அவனே தொடர்ந்தான்,”அன்னைக்கு சனிக்கிழமை. உனக்கே தெரியும் நமக்கு வார நாட்கள், வாரக் கடைசினு எதுவும் கிடையாதுனு. எல்லா நாளும் ஒரே மாதிரி தான். ஆனால் அந்தச் சனிக்கிழமை எனக்கு லீவ். நான் வீட்டுல தான் இருந்தேன். என்னோட அக்காவும் மாமாவும் எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க….

ஒன்றரை வருடங்கள் முன்பு,

நர்மதா தன் குழந்தைகளை வாரக் கடைசியில் அவளது பிறந்த வீட்டில் விட்டுச் சென்று விடுவாள். வாரத்தில் ஐந்து நாட்கள் தந்தை வழி பாட்டி மற்றும் தாத்தாவுடன் இருந்தால், இரண்டு நாட்கள் அம்மா வழி தாத்தா பாட்டியுடன் இருப்பார்கள். குழந்தைகளுக்கும் இங்கு இருக்கத் தான் பிடிக்கும். ஏனென்றால் இங்கு தான் தாத்தா, பாட்டி, இரண்டு மாமா, ஒரு அத்தை, அதை விட அவர்களை வயதையொட்டி ஒரு மாமா பையன் என்று வீடு முழுக்க ஆட்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தந்தை வீட்டில் பாட்டி மட்டுமே இருப்பர். மற்றவர்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். அதனால் வாரக் கடைசி எப்போது வரும் என்று ஆவலாகப் பிள்ளைகள் காத்திருப்பார்கள். 

எப்போதும் போல் சனிக்கிழமை நர்மதா அவளது அம்மா வீட்டிற்குத் தன் கணவனுடன் வந்திருந்தாள். விபீஷணன் முதல் நாள் இரவு வேலையை முடித்து விட்டு வந்தவன் சிறிது நேரம் தூங்கி விட்டு கீழே வந்து விட்டான். நர்மதாவும் அவளது கணவரும் வரும் நேரம் அவன் கீழே இருந்த சாய்விருக்கையில் படுத்துக் கொண்டு தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தவன் இவர்கள் வந்ததைப் பார்த்து எழுந்து உட்கார்ந்து விட்டான்.

“என்ன அக்கா பிள்ளைங்க எங்க?”

“டேய் என்ன தெரியாத மாதிரி கேட்கிற? இன்னைக்கு சேடர்டே தீக்ஷூ டேன்ஸ் க்ளாஸ் போயிருக்கா. அப்புறம் அபய் ஸ்விமிங் போயிருக்கான். ஏன் ஆத்விக்கும் போயிருப்பானே? உனக்குத் தெரியாதா?” கோபமாகக் கேட்டாள் நர்மதா.

“அதுக்கு எதுக்கு உனக்குக் கோபம்? எனக்கு நல்லாவே தெரியும். உனக்குத் தெரியுமா தெரியாதானு டெஸ்ட் பண்ணேன்.” என்று விபீஷணன் சிரித்துக் கொண்டே கூற, பட்டென்று சிரித்து விட்டான் கிஷோர்.

“மாப்பிள்ளை உனக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடலாம் போலயே! புருஷனா இருக்க வேண்டிய எல்லா தகுதியும் உனக்கு இருக்கு மாப்பிள்ளை.” என்று சீண்டினான் கிஷோர்.

“அட மாமா மெதுவா பேசுங்க. அம்மா காதுல விழுந்துச்சு இப்போவே போய் பொண்ணை பார்க்கிறேன்னு கிளம்பிடுவாங்க. நானே படாத பாடு பட்டு அம்மாவைச் சரிப் பண்ணி வைச்சுருக்கேன். நீங்க அதுல மண்ணை அள்ளிப் போட்டுருவீங்க போலயே!.” என்று விபீஷணன் சொல்லி வாயை மூடவில்லை அங்கு வந்து விட்டார் சசிகலா.

“அப்போ இப்போ பார்க்காமல் எப்போ டா நீ கல்யாணம் பண்ணிப்ப? அறுபது வயசுலயா பண்ணிப்ப? இப்போவே உனக்கு முப்பது ஆகப் போது. மறந்து போச்சா உனக்கு?” மீண்டும் பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்தார் சசிகலா.

“இதோ வந்துட்டாங்க.” என்று வாய்குள் முனங்கி விட்டு, சத்தமாக அவனது அம்மாவிடம்,”அய்யோ! அம்மா கொஞ்சம் நேரம் சும்மா இருங்க. நானே வேலை முடிஞ்சு ரொம்ப டையர்டா இருக்கேன். நீங்க வேற! பசிக்குதுனு சொன்னேன்ல? டிபன் ரெடியா?” அப்படியே பேச்சை மாற்றிவிட்டான் விபீஷணன்.

“அச்சோ இரு டா வரேன். டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு எடுத்துட்டு வரேன்.”

“ஏன் இப்போ தான் சமைக்கிறீங்களா அம்மா? ஏன் இவ்ளோ லேட்?”

“இல்லை நர்மதா நாங்க எல்லாம் சாப்பிட்டோம். அவனுக்கு இட்லி சூடா இருந்தால் எப்போவும் சாப்பிடறதை விட அதிகமா சாப்பிடுவான். இந்த மாதிரி லீவ் சமையத்துல தான் அவனால நிம்மதியா சாப்பிட முடியும். அதான் அவனுக்குச் சூடா இட்லி வைச்சுருக்கேன் அடுப்புல.”என்று கூறிக் கொண்டே சமையலறைக்குச் சென்று விட்டார் சசிகலா.

“நர்மதா நேரமாச்சு பார்.” என்று கிஷோர் கூறியதும் தான் வந்த வேலையை மறந்து விட்டு பேசிட்டு இருப்பதே தெரிந்தது.

“விபீ தீக்ஷூ, அபய் அப்புறம் ஆத்விக்க நீ தான் இன்னைக்கு கூட்டிட்டு வரனும். நான் சாயந்தரம் வந்து கூட்டிட்டு போறேன்.” என்று நர்மதா கூற, விபீஷணன் உடனே,”ப்ச் அக்கா நானே இன்னைக்கு ஒரு நாள் தான் லீவ்னு வீட்டுல இருக்கேன். அது உனக்குப் பொறுக்கலையா?”

“டேய் என்னமோ உனக்கு நீட்டி முழிக்கிற வேலை கொடுத்த மாதிரி பேசுற? சொன்னதை ஒழுங்கா செய். உனக்கு அட்ரெஸை நான் வாட்சப்ல அனுப்புறேன்.” என்று கூறிவிட்டு இவன் பதிலளிக்க நேரம் தராமலே சசிகலாவிடம் கூறிவிட்டு நர்மதாவும் கிஷோரும் அங்கிருந்து சென்றனர்.

அவர்கள் சென்றதும் எழுந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். சரியாக ஒரு அரைமணி நேரம் கழித்து எழுந்த விபீஷணன் தன் அம்மாவிடம்,”அம்மா நான் போய் குட்டீஸ கூட்டிட்டு வரேன். கதவைப் பூட்டிக்கோங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து தன் மகிழுந்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான் விபீஷணன்.

அவர்கள் வீட்டிலிருந்து சரியாக அரைமணி நேரத்தில் அபய் மற்றும் ஆத்விக் பயிற்சி பெரும் உள் நீச்சல் அரங்கத்திற்கு வந்தான். இவனை அங்குப் பார்த்த இரு குட்டீஸூம் வேகமாக ஓடி வந்து அவனது கால்களைக் கட்டிக் கொண்டு,”சித்து”, “மாமா” என்று கத்தினார்கள். அவர்கள் இருவரையும் இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.

Advertisement